ஆரியத் தோழர்கள் ஒவ்வொருவராகப் பூணூலை அறுத்து அனுப்பிக் கொண்டிருக்கும்போது, இதென்ன ‘பூணூல் வேணுமப்பா’ என்று கூறுகிறாரே, குத்தூசி என்று சிலர் கேட்கலாம். அவசரப்படாதீர்கள்! ‘விடுதலை’ ஆசிரியர் மேஜை ‘ட்ராயரில்’ அரை டஜன் பூணூல் வைத்திருக்கின்றார் என்பதை நானே போன மாதம் பார்த்திருக்கிறேன். ஆகையால் பூணூல் போட்டுக்க வேணும் என்று யாருக்கும் நான் கூறவில்லை. ஆசிரியரைக் கேட்டேன், எதற்கு இந்த அழுக்குப் பூணூல்களைச் சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்று.

kuthoosi gurusamy“என்றைக்காவது ஒரு நாளைக்கு மனுதர்ம சாஸ்திரத்தை கடற்கரைக் கூட்டத்தில் கொளுத்த நேரிடும்; அப்போது ஆரியத் தோழன் ஒருவனைக் கொண்டே, இந்த அழுக்குப் பூணூல்களையும் அந்தத் தீயில் போடச் சொல்லப் போகிறேன். அந்தச் சமயத்தில் ‘இமிடேஷன்’ ஆரியர்களும் தங்கள் பூணூல்களை அறுத்துப் போடுவார்கள்! அருமையான காட்சியாயிருக்கும்! அதற்காகத்தான் வைத்திருக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில் நான் “பூணூல் வேணுமப்பா” என்று ஏன் கூறுகிறேன் தெரியுமா?

எந்தக் காரியத்திற்கும் பூணூல் இருந்தால்தான் முடிகிறது; அதாவது பார்ப்பனனாய்ப் பிறந்தால்தான் முடிகிறது, என்பதை அறிந்து தான் இப்படிச் சொல்கிறேன்.

“எட்டையபுரம் பாரதியார் விழாவுக்கு வெள்ளிக் குத்துவிளக்கு இரண்டு அனுப்பிய சைவ மடாதிபதியானவர், கா. சுப்பிரமணிய பிள்ளை நினைவு நாள் விழாவுக்கு ஒரு ஆசிச் செய்திகூட எழுதவில்லை. பிள்ளை சைவத்திற்கு எத்தனையோ உதவியவர். ஆரிய வேதத்தின் புரட்டை எடுத்துக் காட்டி, அதைத் திருப்பி தமிழ் வேதமாகவும் எழுதினவர். அவர் அன்று எழுதியதை இனப்பற்றும் உணர்ச்சியுமில்லாத சைவர்களே எதிர்த்தார்கள். அப்பொழுது சுயமரியாதைப் பத்திரிகை ‘குடிஅரசே’ பிள்ளையவர்களைத் தாக்கி எழுதிற்று. சிஷ்யர்கள் பேரில் மடாதிபதிகளுக்குள்ள அன்பும் நன்றியும் பார்த்தீர்களா? சைவர்களும் பண்டிதர்களும் பாருங்கள்!” என்று ஆத்திரத்தோடு எழுதுகிறார், அன்பர் கைவல்யம்.

விஷயத்தை அலசிக் காட்டுகிறேன் பாருங்கள். ஒரு புலவர் நினைவு நாளைக்கு வெள்ளிக் குத்து விளக்கு அதுவும் தம்பிரான்களைக் கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தவருக்கு! மற்றொரு புலவர் நினைவு நாளைப் பற்றிக் கவலையே இல்லை. அதுவும் சைவத்துக்கும் தமிழுக்குமாகவே உழைத்து ஓட்டாண்டியாக உயிர் நீத்த ஒருவருக்கு!

ஏன் இப்படி? அவர் சுப்பிரமணிய அய்யர்! இவர் சுப்பிரமணியப் பிள்ளை! அவர் பூணூல் அணியும் ஜாதியைச் சேர்ந்தவர். இவர் பூணூல் அறுக்க வேண்டுமென்று சொல்லும் இனத்தைச் சேர்ந்தவர். அவரைப் பாராட்டினால் ஆட்சியாளர் முதுகைச் சொரிந்து கொடுத்த மாதிரி! (அதுவும் இனாம்தாரி, நஷ்ட ஈடு, மதப் பிரசார அவசியம்; சு. ம. ஒழிப்பு முதலிய பிரச்னைகள் அடிபட்டுவரும் இவ்வேளையில்) பாரதி இனத்தைத் திருப்திப்படுத்தினால் பண்டார சந்நிதியின் பஞ்சேந்திரியங்களுக்கும் சுகமுண்டு; இன்பமுண்டு; சுவையுண்டு; எல்லாமுண்டு! எம். எல். பிள்ளையின் இனத்தைத் திருப்திப்படுத்த வேண்டுமானால் பல்லக்கை விட்டு இறங்க வேண்டும்; பாடுபட்டு உழைக்க வேண்டும். இது தெரியாதா, எங்கள் சைவத் திருமேனியாம் பண்டார சந்நிதிகளுக்கு! பகலில் பஞ்சாக்ஷர உச்சரிப்பும், இரவில் இன்பக் கடல் நீச்சும் தவிர வேறொன்றும் அறியாத பரப்பிரமம் பண்டார சந்நிதி கிடக்கட்டும்! உலகமறியாத உல்லாச பிண்டங்கள்!

உலகத்தையே தங்கள் கைக்குள் அடக்கிக் கொண்டிருப்பதாகக் கூறும் சர்வதேச நிபுணர்களைப் பாருங்களேன்!

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,” என்று முழக்கமிட்டான் எங்கள் பாரதி! என்ன தீவிரம்! என்ன புரட்சி! அவனன்றோ தமிழ் நாட்டு லெனின்! காங்கிரஸ் இயக்கத்தின் கார்ல் மார்க்ஸ்!” என்று பாடிப்பாடி, பேசிப் பேசி, பரவசப்படும் தோழர்களைக் கேட்டுப் பாருங்கள்!

‘ஏனய்யா! தமிழ் நாட்டின் முதல் பொது உடமைக்காரரான காம்ரேட் சிங்காரவேலுவைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்வதில்லை? ஏன் இவரைப் பற்றி நீங்கள் எழுதுவதில்லை? நினைப்பது கூட இல்லை? பாரதியாரை விட சிங்காரவேலு அறிவில் குறைந்தவரா? செயலாற்றலில் குறைந்தவரா? ஒழுக்கத்தில் குறைந்தவரா? அவர்தானே தமிழ்நாட்டில் பொதுவுடமை விதை ஊன்றியவர்?” என்று கேட்டுப் பாருங்கள்!

ஹீ! ஹீ! என்று இளிப்பதைத் தவிர வேறு ஏதாவது பதில் வருமா?

அந்த “ஹீ! ஹீ!” இளிப்புக்கு வியாக்யானம் நான் கூறட்டுமா?

பாரதி பூணூல் தரிக்கும் ஜாதி! சிங்காரவேலு மீன் பிடிக்கும் ஜாதி. அதிலும் அவர் பூணூலை வெறுக்கும் பேர்வழி! அவ்வளவே தான்!

“எதற்கும் பூணூல் வேணுமப்பா” என்று ஆரம்பத்தில் கூறியது இதற்காகத்தான்! ‘பூணூல் அறுப்புக் கழகம்’ என்று ஒரு புதுக் கழகம் ஆரம்பித்தால்கூட அதன் தலைவர் பூணூல் போட்டிருந்தால்தான் முடியும் போலிருக்கிறது! அப்படியிருக்குதய்யா நம் சமூகம்!

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It