தீண்டத்தகாத மக்கள் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி பெற்று தங்களைச் சீர்திருத்தம் செய்து கொள்ள முந்துவார்களானால், அப்பொழுதே அவர்களை முன்னேற ஒட்டாமல் நசுக்கிப் பழைய சாக்கடையிலேயே அமிழ்த்தி வைக்க ஜாதி இந்துக்கள் தயாராகிவிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக, இப்பொழுது சேலம் ஜில்லா ராசிபுரம் தாலுக்கா, தாத்தைய்யங்கார் பட்டி கிராமத்திலிருக்கும் தீண்டத்தகாத மக்களை, அவர்கள் முன்னேற்றமடையாதபடி அடக்கி வைக்க உயர் ஜாதி மக்கள், அவர்களுக்கு விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால் விளங்கும். இதைப் பற்றி அவர்கள் சேலம் ஜில்லா கலெக்டருக்கும், போலிஸ் சூப்பரின்டெண்டுக்கும் செய்து கொண்டிருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றனர்.

“எங்களூர்க் குடியானவர்கள், நாங்கள் நாகரிகமாய் இருப்பதற்காக பொறாமைப்பட்டு – எங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அடித்தும், எங்கள் தெருப் பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டியும் கஷ்டப்படுத்துகிறார்கள். அதோடு அல்லாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகளை ஏற்படுத்தி, அதன்படி நடக்காது போனால் எங்கள் கால்களை ஒடித்து விடுவோம்'' என்று சொல்லுகிறார்கள்.

அவர்கள் விதித்திருக்கும் நிபந்தனைகள் : 1. பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது 2. பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது, படிக்கவும் கூடாது 3. வெள்ளை வேஷ்டி கட்டக்கூடாது; அழுக்கு வேஷ்டியிலிருந்தாலும் முழங்காலுக்கு மேல் கட்ட வேண்டும் 4. பெண்கள் மார் ஆடை போடக் கூடாது; மீறி மார் ஆடைப் போட்டால் மாரை அறுத்துவிடுவது 5. நாகரிகமான நகைகள் போடக் கூடாது

6. குடைகள் பிடிக்கவும் கூடாது; குடையிருந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட வேண்டும் 7. பெட்டிகள் கையில் கொண்டு வரக் கூடாது; புஸ்தகமும் கையில் பிடிக்கக் கூடாது என்பது தீண்டத்தகாதவர்களின் விண்ணப்பம். இந்தக் கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கிறோம். இந்த நிலைதான் கிராமாந்தரங்களிளெல்லாம் இருந்து வருகிறது. இதை மாற்றுவதற்கு இது வரையிலும் என்ன முயற்சியை, எந்த தேசியவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம். அந்நியர் கையில் அதிகாரமும், தாங்கள் சுதந்தரமின்றி அந்நிய நாட்டினர்க்கு அடிமையாக இருக்கும் இக்காலத்திலேயே இந்த உயர் ஜாதி இந்துக்கள் தீண்டத்தகாதவர்களுக்கு இக்கொடுமையைச் செய்வார்களாயின், இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் அவர்களைச் சித்திரவதை செய்யமாட்டார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.''

– பெரியார், 1932 ஆம் ஆண்டு "குடி அரசு' ஏட்டில் பதிவு செய்திருக்கும் ஒரு செய்தி

அந்நியர் கையில் அடிமைகளாக இருந்தபோதே சாதி இந்துக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வந்த தமது எல்லைக்குட்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவிய தீண்டாமை வன்கொடுமைகளைப் பட்டியலிட்ட பெரியார், இப்படிப்பட்ட ஜாதி இந்துக்கள் கையில் ஆட்சியும், அதிகாரமும் கிடைத்து விட்டால் அவர்களைச் சித்ரவதை செய்யமாட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதில்தான் பரளிபுதூர் வன்கொடுமை.

1932 இல் ராசிபுரம் ஒன்றியத்தில் நடந்ததைப் போலவே, 2011இல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்தில் உள்ள பரளி என்ற ஊருக்கு அருகில் உள்ள பரளிபுதூர் கிராமத்தில் சுயமரியாதை உணர்ச்சி பெற்று, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிவரும் தலித் மக்கள் மீது – அப்பகுதியை ஆண்டாண்டு காலமாக ஆண்டுவரும் முத்தரையர்கள், மிகப்பெரிய விலங்காண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

paraliputhur_3502011 பிப்ரவரி 6 ஆம் நாள். நத்தத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ள பரளிபுதூர் இந்திரா நகர் என்ற தலித் குடியிருப்பு பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளரான அதியமான் என்பவரது திருமணத்திற்காக வைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகளின் கொடியும், "கட் அவுட்'களும் தாக்குதலுக்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன.

திருமண நாளன்று, நத்தம் – மதுரை பிரதான சாலையில் இருந்து தலித் குடியிருப்பு வரை சுமார் 1 கி.மீ. அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சிக் கொடிகளும், ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கொடிகளும், திருமாவளவன், கலைஞர், ஸ்டாலின், அழகிரி ஆகியோருக்கு சுமார் 20 கட் அவுட்களும், டிஜிட்டல் ப்ளக்ஸ்களும் வைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு தடபுடல் ஏற்பாடுகள் இந்தப் பகுதியில் இதுவரை எந்த முத்தரையர் திருமணங்களுக்கும் செய்யப்பட்டதில்லை. இந்த வரவேற்பு கட் அவுட்கள் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் அப்படியே இருந்தன. "துப்பாக்கியோடும், பிரபாகரனோடும் திருமாவளவன் இருக்கும் வண்ணம் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் ப்ளக்ஸ்கள்தான் எங்களை கோபப்படுத்தின' என்று முத்தரையர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மூன்று நாட்கள் கழித்து கட் அவுட்டுகள் அகற்றப்பட்டன என்றாலும், இந்திராநகர் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியின் மீது கட்டப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கொடி அகற்றப்படவில்லை. இக்குடிநீர்த் தொட்டியில் இருந்துதான் இன்றுவரை முத்தரையர்களுக்கு குடிநீர் செல்கிறது. எங்களுக்கு தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பொதுத் தொட்டியில் உங்கள் கொடி அகற்றப்படாமல் இருப்பதா? என ஜாதி ஆதிக்கவெறி கொண்ட முத்தரையர் தரப்பைச் சேர்ந்த சிலர் இளைஞர்கள் குடிநீர்த் தொட்டியில் முத்தரையர்களின் சிங்கக் கொடியை கட்டி வைத்துள்ளனர்.

தி.மு.க. பஞ்சாயத்து தலைவரான முத்தரையர் சாதியை சேர்ந்த நல்லியப்பன், இருதரப்புக் கொடிகளையும் அகற்றிவிடுங்கள் எனக் கூறியதை அடுத்து விடுதலைச் சிறுத்தைள் கொடி, பிப்ரவரி 13 அன்று பகல் 1 மணியளவில் அவர்களாலேயே கழற்றப்பட்டுவிட்டது. மாலை 4.30 மணியளவில் முத்தரையர்களின் கொடியை கழற்றச் சென்ற ஓர் இளைஞர், முத்தரையர் கொடியில் விடுதலைச் சிறுத்தைகள் செருப்பைக் கட்டி வைத்துள்ளதாகப் பிரச்சாரம் செய்துள்ளார். முத்தரையர்களின் கொடியில் அந்த இளைஞர்தான் செருப்பைக் கட்டி வைத்து கலவரத்தை உருவாக்கினார் என்று சிறுத்தைகள் தரப்பில் கூறுகின்றனர்.

உடனே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். யார் கட்டியிருந்தாலும் நாங்களே அகற்றி விடுகிறோம்; பிரச்சனை வேண்டாம் என தலித் தரப்பு கவுன்சிலர் பஞ்சு கூறியிருக்கிறார். ஆனால், அதை எவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில் தலித் பகுதியில் இருந்து முத்தரையர் தரப்பில் ஒரு கல் விழுந்து, ஒரு முத்தரையர் இளைஞர் காயம் பட்டார் என்றும், அவரை 108 வாகனத்தில் ஏற்றி சிகிச்சை அளித்தோம் என்றும், அதனால்தான் பதில் தாக்குதலில் இறங்கினோம் என்றும் முத்தரையர் தரப்பில் நம்மிடம் கூறினர். ஆனால், இந்த 108 வாகன சம்பவத்தை காவல் துறையிடம் முத்தரையர் தரப்பு இதுவரை தெரிவிக்கவில்லை.

எங்கள் ஊரில் எந்தக் கட்சியின் கொடியையும் நாங்கள் ஏற்ற விடுவதில்லை. அந்த அடிப்படையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கொடியையும் அகற்றச் சொன்னோம் என்று முத்தரையர் தரப்பில் சொல்லப்பட்டது என்றாலும், அவர்கள் பகுதியில் முத்தரையர் இளைஞர் சங்கத்தின் கொடி யும், தே.மு.தி.க.வின் கொடியும் பறந்து கொண்டுதான் இருக்கின்றன.

முத்தரையர் கொடியில் செருப்பு கட்டப்பட்டுவிட்டதாக மாலை 6 மணியிலிருந்து அக்கம்பக்க கிராமங்களுக்குத் தகவல்கள் பறந்திருக்கின்றன. நத்தத்திலிருந்து மதுரை வரையுள்ள முத்தரையர் கிராமங்கள் பலவற்றிலுமிருந்து பரளிபுதூருக்கு சாதி இந்துக்கள் அரிவாள், கடப்பாறைகளோடு குவியத் தொடங்கினர். நத்தம் மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலை மறியல் நடந்துள்ளது. நேரம் ஆக ஆக முத்தரையர்களின் எண்ணிக்கை உயர உயர, அக்கும்பல் நெடுஞ்சாலையில் இருந்து இந்திரா நகர் வரையுள்ள தலித் மக்களின் வீடுகளைத் தாக்கத் தொடங்கியது.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள் முற்றிலும் உடைக்கப்பட்டு, வானம் பார்த்த வீடுகளாகியுள்ளன. சுமார் 30 கூரை வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன. ஆடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சிமெண்ட் கான்க்ரீட் ரூப் போடப்பட்ட இரண்டு வீடுகளின் கதவு ஜன்னல்கள் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளன. 6 மாதக் குழந்தைகளை தூக்கிப் பிடித்து ஆணா? பெண்ணா? எனப் பார்த்துள்ளனர். பெண் என்றால் விட்டுவிடு, பின்னால் நமக்குப் பயன்படும்; ஆண் என்றால் நெருப்பில் போடு என கூச்சலிட்டு அடையாளம் பார்த்துள்ளனர். அப்படி சில பெண் குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர்.

dalit_bike_270வீடுகளுக்குள் புகுந்து தொலைக் காட்சிப் பெட்டிகளை உடைத்தெறிந்துள்ளனர். பீரோக்களை உடைத்து நொறுக்கியுள்ளனர். டி.வி. டிஷ் ஆண்டெனாக்களை கல்வீசி தாக்கியுள்ளனர். ஒரு தி.மு.க. உறுப்பினரின் வீடும், இரண்டு சக்கர வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயுள்ளன. சிறு பல சரக்குக்கடை ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. விடுதலைச் சிறுத்தைகளின் நிரந்தரக் கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. கொடியின் பீடமும், தகவல் பலகையும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. நாம் நேரில் இந்திரா நகர் பகுதிக்குச் சென்றபோது – சேதம் குறித்தோ, இந்தத் தாக்குதல் குறித்தோ முழுமையான தகவல்களைத் தர எவரும் தயாராக இல்லை.

இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற ஒரு கட்சியின் கொடி மட்டுமே காரணம் என்று சொல்வதை யாரும் நம்ப முடியாது. கடந்த 60 ஆண்டுகளில் நத்தம் ஒன்றியப் பகுதிகள் எங்குமே இதுபோல தலித் – முத்தரையர் மோதல்களோ, சிறு சிறு பிரச்சனைகளோ வந்ததில்லை. அதுபோன்ற எந்தப் புகாரும் நத்தம் காவல் நிலைய வரலாற்றிலேயே இல்லை என்று காவல் துறையிலும், இரு தரப்பிலும் சொல்லப்படுகிறது.

இந்திரா நகர் தலித்துகளில் நன்கு படித்தவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்கள், கட்டட காண்ட்ராக்டர்கள், விமான நிலைய அலுவலர், வங்கி மேலாளர் போன்ற முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், நில உடைமையாளர்கள் என ஓரளவு முன்னேறியவர்கள் அதிகம் உள்ளனர். நில உடைமையில் முத்தரையர்களுக்கு இணையாக தலித்துகள் உள்ளனர். குட்டை புறம்போக்கு, கண்மாய் புறம்போக்கு ஆகிய பொது இடங்களைப் பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொள்வதில் முத்தரையர்களைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தலித்துகள் உள்ளனர். முத்தரையர் பகுதிகளில் சாவு மற்றும் திருவிழாக் காலங்களில் தலித்துகள் தமுக்கு அடித்து செய்தி அறிவிப்பதோ, பறையடித்து ஆடுவதோ கிடையாது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வகையான அடிமை வேலைகளுக்கும் தலித்துகள் செல்வதில்லை. முத்தரையர் நிலங்களில் தலித் கூலி வேலைக்காகச் செல்வதைவிட, தலித் நிலங்களில் முத்தரையர்கள் கூலி வேலை பார்க்கும் நிலைதான் அதிகமாக உள்ளது. முத்தரையர் பகுதியைவிட அதிகமாக தலித் பகுதிகளில் டி.வி. டிஷ் ஆண்டெனாக்களும், டிஜிட்டல் ஹெச்.டி. ரிசீவர்களும் உதித்துள்ளன. பதிலுக்கு முத்தரையர் தரப்பினரின் ஒரு வீடும் 3 மின்சார மோட்டார்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இப்படி கல்வி, பொருளாதார ரீதியில் தலித்துகள் முன்னேறி வந்தாலும் சமூக அடிப்படையில் இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆதிக்க சாதியினரான முத்தரையர்கள் – அவர்களின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளாமல் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியாமலும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு நீறுபூத்த நெருப்பாக ஜாதித் தீயை மனதில் வளர்த்துக் கொண்டே வந்துள்ளனர். கட் அவுட்களும், கட்சிக் கொடிகளும் கனன்று கொண்டிருந்த கங்குகளைப் பற்ற வைத்துவிட்டன.

“பல ஆண்டுகளாக பறை அடிக்கக்கூட அவர்கள் வருவதில்லை, தோட்டி வேலைக்குகூட வருவதில்லை, தமுக்கு அடிக்கக்கூட வருவதில்லை, எழவு காரியங்களுக்கு வருவதில்லை, அதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம்'' என்று தலித்துகளின் சுயமரியாதைச் செயல்களை ஏதேõ செய்யக்கூடாத காரியங்களைப் போலவும் அவற்றை தாங்கள் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் முத்தரையர் தரப்பில் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக அப்பகுதியில் இரு தரப்பினருக்குமிடையே எந்த மோதலும் இல்லை என்று இரு தரப்பினராலுமே சொல்லப்பட்டாலும், ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தையும் கவனிக்க வேண்டும். தலித்துகள் வணங்கும் கல்லம்பட்டி கருப்புச்சாமி என்ற தெய்வத்தின் கோயிலுக்குச் சொந்தமான இடம் முத்தரையர் தரப்பு வசிக்கும் பகுதியில் உள்ளது. தலித்துகளுக்கு சொந்தமான அந்த இடத்தை முத்தரையர் தரப்பினர் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அக்கோயில் இடத்துக்குச் சொந்தமான சில தலித்துகள் 6 மாதத்திற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் போன்ற அலுவலர்களின் முன்னிலையில் நில அளவைப் பணியை மேற்கொண்டுள்ளனர். கோயில் இடத்தை ஆக்கிரமித்திருந்த முத்தரையர் தரப்பினர், அரசு அலுவர்களையும் கோயிலின் சொந்தக்காரர்களான தலித்துகளையும் மிரட்டி, நில அளவைப் பணியை நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

கல்லம்பட்டி கருப்புச்சாமி கோயில் விவகாரத்தை முழுமையாக விசாரித்தால், ஜாதிவெறியின் அண்மைக்கால காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். தேர்தல் காலம் நெருங்குவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அடக்கி வாசிக்கின்றன. பரளிபுதூர் வன்முறையைக் கண்டித்து திருமாவளவன் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தாலும், இப்பகுதிக்கு இன்னும் வரவில்லை. அழகிரி தலையிட்டு திருமாளவனிடம் பேசி, தலித் தரப்பினரை அடக்கி வைத்திருப்பதாக முத்தரையர்கள் கூறுகின்றனர்.

இருதரப்பு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இன்னும் காவல் துறை குவிக்கப்பட்டுள்ளது. கலவர சூழல் மாறி வருகிறது. இதுவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி எவரும் கைது செய்யப்படவில்லை. முத்தரையர் தரப்பில் 60 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். வேடசந்தூர் காவல் நிலையத்தில் 30 பேரும், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் 30 பேரும் கையெழுத்துப் போட்டு வருகின்றனர். மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து கொண்டிருந்த இருதரப்பு ஆண்களும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

பரளிபுதூரில் இரட்டைக் குவளை முறை இல்லை. கோயில் நுழைவுக்கும் தடை இல்லை. அடிமைப் பணிகள் எதிலும் தலித்துகள் ஈடுபடுத்தப்படுவதில்லை. முத்தரையர் பெண்கள் இருவரை, இந்திரா நகர் தலித் இளைஞர்கள் சாதி மறுப்புத் திருமணம் புரிந்துள்ளனர். அப்படி வேற்று சாதி தலித் இளைஞர்களை திருமணம் செய்ததற்காக அந்தப் பெண்களோ, அந்தப் பெண்களின் குடும்பங்களோ இதுவரை ஊர்விலக்கம் செய்யப்படவில்லை. அந்த சாதி மறுப்புத் தம்பதியினரும் அதே இந்திரா நகரில் இன்றும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை முத்தரையர்களால் எந்தத் தொல்லையும் கொடுக்கப்படவில்லை. இந்திரா நகர் காலனிக்குள்தான் இரு தரப்புக்குமான தொடக்கப் பள்ளி இயங்குகிறது. இன்று வரை இருதரப்பு குழந்தைகளும் 5 ஆம் வகுப்புவரை அங்குதான் பயில்கின்றனர். தாக்குதலுக்குப் பிறகு 10 நாட்களுக்குள் பள்ளிகளுக்கு இரு தரப்பினரும் இயல்பாக வருகின்றனர்.

தலித்துகளின் காவல் தெய்வமான கல்லம்பட்டி கருப்புச்சாமியின் சிலை நத்தம் அருகேயுள்ள வத்திப்பட்டி என்ற கிராமத்தில்தான் இருக்கும். திருவிழாக் காலங்களில் மட்டும் அச்சிலை பரளிபுதூருக்கு கொண்டு வரப்படும். அப்படி தலித்துகளின் காவல் தெய்வத்தை வத்திப்பட்டியிலிருந்து 8 கி.மீ. தூரம் நடந்தே தூக்கிச் சுமந்து வருபவர்கள் முத்தரையர்களே. திருவிழா முடிந்ததும் மீண்டும் வத்திப்பட்டிக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு முத்தரையர்களுக்கே உள்ளது. இதே போல பரளிபுதூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பொடுகம்பட்டி என்ற ஊரில் உள்ள தலித் மக்களுக்கும், இந்தக் கல்லம்பட்டி கருப்புச்சாமியை முத்தரையர்களே தூக்கிச் சுமந்து செல்கின்றனர். சென்ற ஆண்டு வரை இம்முறை நடைமுறையில் இருந்தது. அடுத்த ஆண்டும் இந்தச் சடங்கை நாங்கள் செய்வோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பரளிபுதூர் தாக்குதலில் முத்தரையர்களின் ஜாதிச் சங்கங்களான திருச்சி ஆர்.வி. தலைமையிலான சங்கமோ, குழ. செல்லையா தலைமையிலான சங்கமோ, வேறு எந்த மாநிலம் தழுவிய சங்கமோ ஈடுபடவில்லை. சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சொந்தக்காரர்கள், பெண் எடுத்தவர், கொடுத்தவர்களே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, நீதிமன்ற, காவல்துறை நடவடிக்கைகளுக்கு எந்த சங்கத்தினரும் வரவில்லை. இவர்கள் சங்கத்தினரை நாடவும் இல்லை. அதே ஊரைச் சேர்ந்த அய்ந்து பேர் கொண்ட குழுதான் இந்த வேலைகளை கவனிக்கிறது.

முத்தரையர் பகுதியில் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகட்டித் தரும் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்பவர்கள் இந்திரா நகர் தலித்துகளே. தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு 7 ஆவது நாளிலேயே கான்ட்ராக்ட் பணிகள் இயல்பாக நடைபெறுகின்றன. போடி, மீனாட்சிபுரம், ராஜபாளையம், கொடியங்குளம், காளப்பட்டி போன்ற ஜாதிக் கலவரப் பகுதிகளைவிட, நத்தம் ஒன்றியத்தில் வெகுவிரைவாக இயல்புநிலை திரும்பியுள்ளது.

1932 ராசிபுரம் ஒன்றியம் தாத்தய்யங்கார்பேட்டை வன்கொடுமையைத் தனது "குடி அரசு' ஏட்டில் பதிவு செய்த பெரியார், அதற்கு தீர்வாகக் கூறியதைப் பார்ப்போம் : “இம்மாதிரி வலுத்தவர்கள் இளைத்தவர்களுக்கு கொடுமை செய்வதை பொருட்படுத்தாத ஒரு தேசியம் அல்லது ராஜியம் எதற்குப் பயன்படும்? இவ்வாறு தீண்டத்தகாதவர்களைக் கொடுமைப்படுத்தும் எண்ணத்தை உயர் ஜாதி இந்துக்களின் மனத்தில் பதிய வைத்திருப்பதற்கு காரணம் – பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ?

ஆகையால் இந்தப் பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்க மூடநம்பிக்கையும் தொலைந்தாலொழிய உயர் ஜாதி இந்துக்களின் மனதில் மாறுதல் ஏற்படுமா? ஒருக்காலும் முடியாது. ஆகவே, இனியும் தீண்டாதவர்கள் கடவுளையோ, மதத்தையோ நம்பிக் கொண்டிருந்தால், ஒரு சிறிதும் முன்னேற்றமடையப் போவதில்லை. தம்மையே நம்பி இடைவிடாது கிளர்ச்சி செய்வதன் மூலமும், வைதீகர்களாகிய அரசியல் கிளர்ச்சிகாரர்கள் எல்லாம் "சுயராஜ்யம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறும் வார்த்தைக்கு ஏமாறாமல் முயற்சி செய்வதன் மூலமும்தான் – தாங்கள் விடுதலை பெற்று மனிதர்களாக வாழ முடியுமென்று எச்சரிக்கிறோம்.

Pin It