[குறிப்பு கீழே உள்ள பகுதி ம.பொ.சி. தான் நடத்தி வந்த தமிழன்குரல் இதழில் 1954இல் எழுதியது. பிரித்தானி ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணம் என்பதிலிருந்து தமிழ் பேசும் பகுதிகளை மட்டும் கொண்ட தமிழ்நாடு அதாவது மொழிவாரி மமாநிலம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழகத்தின் வடக்கு, மேற்கு, தெற்கு எல்லைகளில் தமிழ்ப் பேசும் மக்கள் பெருமளவில் கொண்ட பகுதிகளைத் தமிழகத்தோடு இணைக்கக் கோரிப் போராடிய மக்கள்மீது மேற்குப் பகுதியில் அப்போது திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தின் முதல்வராயிருந்த பிரஜா சோசலிஸ்டுக் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை மேற்கொண்ட தமிழர் படுகொலைகளையும், தமிழின விரோத நடவடிக்கைகளையும் கண்டித்து ம பொ சி இதை எழுதியிருக்கிறார். 1954 இல் நடைபெற்ற இந்த ஆகஸ்டு 11, கடந்த 2009 ஆண்டு மே 17இல் தமிழீழத்தில் நிகழ்த்தப்பபட்ட கொடுமைகளை நினைவூட்டுவது போல் இருக்கிறது. தமிழ் மக்கள் மலையாளிகளிடம் பட்ட துன்பம், தமிழீழ மக்கள் சிங்களவெறியர்களிடம், தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பற்படையிடம் படும் துன்பங்களை யத்ததாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் நமக்கு கேள்வி, 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறி 1926இல் சுயமரியாதை இயக்கம் கண்டு அதன்பின் 1944இல் திராவிடர் கழகமும். 1949இல் திராவிடர் முன்னேற்றக் கழகமும் கண்ட திராவிடப் பாரம்பரியம், 1954இல் தமிழர்களுக்கு நேர்ந்த இந்த அவலங்களுக்காக என்ன செய்தது என்பதை இருபத்தியோராம் நூற்றாண்டின் இளைய தலைமுறை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். மூத்த தலைவர்கள் விளக்கம் தந்தால் நல்லது. தருவார்களா?]

கடந்த ஆகஸ்டு 11ந் தேதி, தமிழருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்த நாளாகும். அன்று, திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகளில் மனிதவேட்டை நடத்தியிருக்கின்றனர் மலையாளப் போலீசார். தாய்த் தமிழகத்தோடு சேர விரும் பிய ஒரே ‘பாவ’த்திற்காகப் பத்துத் தமிழர்கள் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கின்றனர்!

இதுபோன்ற கொடுமை - கொலைபாதகச் சம்பவம், தமிழினத்தாரின் வாழ்வில், தமிழகத்தின் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை.

நாற்பத்தைந்து லட்சம் மலலயாளிகளைக் கொண்டது திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யம். அதன் அண்டையிலுள்ள சென்னை ராஜ்யமோ மூன்று கோடித் தமிழர்களைக் கொண்டது. இருந்தும் சென்னை ராஜ்யத்தோடு கலாச்சாரத் தொடர்புள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றி ருக்கிறது, அண்டையிலுள்ள சுண்டைக்காய் ராஜ்யம். எவ்வளவு துணிச்சல்!

மாபாவி ஜார் மன்னன் ‘இரணியன் போல்’ அர சாண்டான் என்கின்றார் பாரதியார். இரணியன் போல் என்ன? இரணியனாகவே கொடுங்கோல் நடத்துகின்றார் பட்டம் தாணுப்பிள்ளை. “ஏன்” என்றால் வனவாசம் என்ற நிலையில் தென் திருவிதாங்கூரில் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகின்றது. இது கற்பனையல்ல; அங்கு தமிழ் மக்கள் அன்றாடம் கண்டுவரும் காட்சி அனுபவித்து வரும் வேதனை!

ஆகஸ்டு 11ந் தேதி பத்துப் பேரைச் சுட்டுக்கொன்ற பின்னரும் மலையாளப் போலீஸாருக்கு ரத்த வெறி அடங்கவில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கல்குளம் - விளவங்கோடு தாலூக்காக்களில் தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்; கண்ணகி மரபில் வந்த தமிழ்ப் பெண்ணரசிகள் மானபங்கப்படுத்தப் படுகின்றனர்; தமிழ் இளம் காளையர்கள் அங்கங்கள் பழுதாகும்படி அடிக்கப் படுகின்றனர். “சோதனை” என்ற பெயரால், நள்ளிரவில் வீடு களின் கதவுகள் உடைக்கப்பட்டுப் பொருள்கள் நாசமாக் கப்படுகின்றன.

மக்கள் பலாத்காரத்தில் இறங்கியதால்தான் போலீ ஸார் சுட்டனர் என்று சமாதானம் கூறுகிறார் பட்டம் தாணுப்பிள்ளை. அமைதியாகச் சென்று கொண்டிருந்த மாண வர் ஊர்வலத்தைப் போலீஸார் தடியாலடித்த பிறகே அமளி ஆரம்பித்ததாக நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

முதலில் பலாத்காரத்தில் இறங்கியது ஜனஙகள்தான் என்றாலும் அதனால் போலீசாரில் எவரும் காயமடைந் ததாகத் தகவல் இல்லையே! அப்படியிருக்க, போலீசார் சுட்டதற்குக் காரணமென்ன?

அப்படியே, ஜனஙகள் திரண்டெழுந்து போலீசார் மீது பாய்ந்திருப்பினும், கண்ணீர்ப்புகை விட்டுக் கலைத்திருக் கலாம்; ஆகாயத்தில் சுட்டுப் பயமுறுத்தியிருக்கலாம். இத்தகைய எச்சரிக்கை எதுவுமின்றி, பத்துப்பேர் சாகு மளவுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது மிருகத் தனமாகும். மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பிறகும் தொடர்ந்து அடக்குமுறையை அமுல் நடத்தி வருவது தமிழரைப் பழிவாங்கும் செயலாகவன்றி வேறுவிதமாக எண்ணுவதற்கில்லை.

ஹிட்லர் ஜெர்மனியில், அவனால் வெறுக்கப்பட்ட யூதர்களைக்கூட போலீசார் இவ்வளவு மோசமாகக் கொடுமைப் படுத்தவில்லை. ஆம், ஹிட்லரையும் மிஞ்சி விட்டார் ‘இடதுசாரி’க் கட்சியின் முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை.

துப்பாக்கிப் பிரயோகத்தால் மாண்டவர்களின் பிரேதங்களை உறவினர்களிடம் கொடுக்க மறுத்த ‘புனிச்சமூடு’ என்ற இடத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத் திச் சாம்பலாக்கினராம் போலீசார். மற்றும், பட்டம் தாணுவின் கொடுங்கோலாட்சியில் குடியிருக்க அஞ்சி, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரவோடு இரவாக திருநெல்வேலிக்கு ஓடி வந்து விட்டனவாம்.

இதெல்லாம் உண்மையென்றால், பாஞ்சாலப் படுகொலையின் போது கூட இத்தகைய கோரச் சம்பவங்கள் நிகழ்ந்ததில்லையென்று கூறலாம். ஜெனரல் டயரையும் மிஞ்சிவிட்டார் பட்டம்.

பட்டம் தாணுப்பிள்ளை வேண்டுமென்று திட்ட மிட்டே திருவிதாங்கூர்த் தமிழரைப் பழி வாங்கி வரு கின்றார். ஆக 11 கலவரத்திற்குக் காரணம் மலையாளப் போலீசாரே அன்றித் தமிழ்ப் பொது மக்கள் அல்ல. அன்று நடந்த சம்பவம் பற்றிப் பகிரங்க விசாரணை நடத்தப் படுமாயின் இந்த உண்மை வெளிப்படுவது திண்ணம்.

திருவிதாங்கூர்த் தமிழ்ப்பகுதிகள் தமிழகத்தோடு சேருவதை எத்தகைய பாதகத்தைச் செய்தும் தடுத்து விடுவதென்று பட்டம் தாணு கங்கணம் கட்டிக் கொண்டு விட்டார். அதன் விளைவுதான் தென் திருவிதாங்கூரில் நடந்து வரும் அடக்குமுறைப் போராட்டம்.

மற்றும், பட்டம் தாணுப்பிள்ளை 118 பேர் கொண்ட தி.கொ. அசெம்பிளியில் 18 பேர் பலத்துடன் ஆட்சி நடத்துகின்றார். ஆகவே, எந்த நேரத்திலும் பனம்பள்ளியின் காங்கிரஸ் கட்சியார் அவரைப் பதவியினின்று விலக்கி விடக்கூடிய அபாயமிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து தமது ஆவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தமிழருக்கு எதிராகப் போர்க்கோலம் கொண்டிருக்கிறார் தாணுப் பிள்ளை. அதன்மூலம் பி.சோ.கட்சி அல்லாத பிற கட்சி மலையாளிகளின் ஆதரவையும் பெற்றுவிட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை.

திருவிதாங்கூர்த் தமிழரின் பிரதேச உரிமைக் கோரிக்கை, ஜனநாயகப்படி நேர்மையானது. ஆகவே, நியாயத்தை ஒட்டியது. தமிழர்களைச் சுட்டுக் கொல்வதால், தமிழ்ப்பகுதிகளை ஜீரணித்து விடலாம் என்று பட்டம் தாணுப்பிள்ளை கருதுவாராயின் அது பலிக்கப் போவ தில்லை. தென்திருவிதாங்கூர் முழுவதையுமே சுடுகாடாக்கி விட்டாலும் அந்தப்பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட மலையாளிகள் அடைய முடியாது. இது திண்ணம்.

கல்குளம், விளவங்கோடு தாலூக்காக்களில் போலீ ஸார் செய்துள்ள கொடுமைகள் பற்றிப் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக் குழுவை மத்திய அரசினரே நியமிக்க வேண்டும். திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத் தோடு சேர்ப்பதற்குச் சாதகமாக மாகாண புனரமைப்புக் கமிஷன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்சொன்ன இரண்டு கோரிக்கைகளும் உடனடி யாக நிறைவேற்றப்படாவிடில், தமிழகத்தில் மலையாளிகளை வெறுக்கும் உணர்ச்சி பரவுவதைத் தடுக்க முடியாது. இது இன வெறியல்ல; இனவெறிக்கு எதிர் நடவடிக்கை! அந்நிலை ஏற்படாமலிருப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் கையிலிருக்கிறது.

திருவிதாங்கூர்த் தமிழரின் அறப்போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படருக்கிறது; அடியோடு கைவிடப்பட வில்லை. மீண்டும் எந்த நேரத்திலும் முன்னிலும் வேகத்தோடு போர் மூண்டுவிடலாம். அது திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகளில்தான் நடக்குமென்றும் சொல்ல முடியாது. திரு - கொச்சித் தமிழருக்கு நீதி வழங்கும்படி மத்திய அரசினரை வற்புறுத்தும் கிளர்ச்சியாகச் சென்னை ராஜ்யத்திலேயே நடைபெறலாம்.

திரு - கொச்சி அரசினருக்கு பிரதமர் நேரு ஏதோ ஆலோசனை கூறியுள்ளாராம். அவர் கூறியுள்ள ஆலோசனை என்னவென்று தெரியவில்லை. என்னாவயிருப்பினும், திரு - கொச்சி தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்குக் குறைவான எதையும் தமிழர் ஏற்பதற்கில்லை.

தமிழகத்தில் அயலவர் ஆதிக்கம்

மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்டபோது தமிழகத் தலைநகர் சென்னையை ஆந்திரர்கள் தங்களோடு கொண்டு செல்ல முயன்றபோது ம.பொ.சி., ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் போராடி சென்னையைத் தமிழகத்தோடு சேர்த்து தமிழகத் தலைநகரைப் பாதுகாத்தனர். இப்படித் தலைநகர் பாதுகாக்கப் பட்டாலும் அது தற்போது படிப்படியாக அந்நியர் வசமாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரில் பார்த்தால் பொது இடங்கள், முக்கிய கடைத் தெருக்கள், தொலைபேசிச் சாவடிகள் எங்கும் தெலுங்கு, மலையாளக் குரலாகக் கேட்டுக் கொண்டிருக்கும். அப்போதே இது என்ன தமிழ்நாடா, இல்லை அண்டை நாடா என்பது போன்ற கேள்வி எழும்.

ஆனால் தற்போதோ நகரின் மையப்பகுதி, வணிகங்கள், நிறுவனங்கள் பலவற்றிலும் மார்வாரி, குஜராத்தி சேட்டுகள் ஆக்கிரமித்து இந்திமொழி முழங்க, இது போதாதென்று தற்போது தார்ச்சாலை விரிவாக்கப் பணிகள், நாற்கரச் சாலைகள், பாலம் கட்டும் பணிகள், மாநகர் ரயில் திட்டம், அடுக்கு மாடிக் கட்டிடப் பணிகள் எனப் பல்வேறு பணிகள் நிமித்தம் இந்திக் காரர்கள் ஆயிரக் கணக்கில் சென்னையை ஆக்கிரமித்துள்ளார்கள். தற்போது பார்த்தால் பேருந்துகளில், கடைத்தெருக்களில், தொடர் வண்டி நிலையங்களில், வணிகத் தளங்களில் கூட்டம் கூட்டமாக இந்திக்காரர்கள், குறிப்பாக பதின் பருவத்தினர் இளைஞர்கள் மிகுந்திருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் தமிழகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த வில்லை. தமிழர்கள் யாரையும் சுரண்ட வில்லை. எல்லாம் உழைக்கும் மக்கள்தான் என்றாலும், அவர்கள் வருகைக்கும் ஓர் அளவு எல்லை வேண்டும் அல்லவா? அப்படியில்லாமல் அளவுக்கு மீறுவது, இவர்கள் நாளை தலைநகரையே தங்களுக்கு சொந்தம்போல் தங்களது ஆதிக்கத்திற்குரியதாக ஆக்கிக்கொள்ள வாய்ப்புண்டுதானே.

இப்போதே இந்த இளைஞர்கள் கும்பல் கும்பலாகத் திரிவது, தனித்து அல்லது குடும்பத்தோடு செல்லும் தமிழர்களுக்கு அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. இப்படியே போனால் நாளை நிலைமை என்னவாகும்?

தமிழகத்துக்கு உள்ள தலையெழுத்து தாழ்வு மனப்பான்மை. இவன் சொந்த மண்ணிலேயே தமிழ் பேசுவதில்லை. வடக்கே போனால் இந்தி தெரிய வில்லையே என்று வருத்தப்படுவான். இப்போது சொந்த மண்ணிலேயே இந்தி தெரியவில்லையே என்று வருத்தப்படுகிறான். காரணம் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்பதால் அந்த மிதப்பில் இந்திக்காரன், தான் வேற்று மண்ணிலே இருக்கிறோம் என்கிற அச்சமோ தயக்கமோ இல்லாமல் அவன் பாட்டுக்கு இந்தியில் பொளந்து கட்டுகிறான். தமிழன் தத்தளிக்கிறான்.

இந்த லட்சணத்தில் இது இப்படியே நீடித்தால் நாளை தமிழகத்தின் தலைநகரின் கதி என்னாகும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். ஏற்கெனவே திராவிட தேசியத்தால் ஆந்திரர்கள், மலையாளிகள் ஆதிக்கம். இப்போது இந்திய தேசியத்தால் இந்திக்காரர்கள் ஆதிக்கம். எனவே மக்கள் இந்த மாய்மால தேசியங்களிலிருந்து விடுபட்டுத் தமிழகத் தேசியத்தை முன்னிறுத்துவதொன்றே தமிழகத்தைக் காக்க ஒரே வழி என்பதை உணர்ந்து, விழிப்புற்று அதற்குரியவாறு செயல்பட வேண்டும்

Pin It