“தமிழ் என்னும் அளப்பரும் சலதி;” “என்றுமுள தென்தமிழ்” என்று கம்பன் தமிழின் பரப்பையும், ஆழத்தையும், காலத்தையும் அறுதியிட்டுச் சொன்னான்.  “என்று பிறந்தனள் என் தாய்” என்று தமிழின் தோற்றத்தை, முன் எல்லையைக் காண முடியாது என்று முழங்கினான் பாரதி. தமிழ் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிப் பதுங்கியும் ஒதுங்கியும் இழந்தும் பெற்றும் மெலிந்தும் ஆயிரமாயிரம் ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து வாழும் மொழியாக இலங்கி வருகிறது. உலகில் இருந்த செம் மொழிகள் பல இறந்து போயின. ஆனால் சோதனைகள் பல கடந்து இன்றும் வாழும் மொழியில் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே என்னும் நிலையடைந்துள்ளது.

கிரேக்க, ரோமானிய, சீன நாகரிகங்கள் தொல் நாகரிகங்கள். மாந்தர் முதன்முதலில் கண்ட நாகரிகங்கள் இவை என வரலாற்றாளர்கள் எழுதிவந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த ஆராய்ச்சிமுறை இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதனால், தமிழ் என்னும் மொழி திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்தமொழி. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைவிட எவ்விதத்திலும் தாழ்ந்ததன்று. மாறாக ஒப்ப வைத்துக்கொள்ளத்தக்கது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சிந்துச் சமவெளி நாகரிக அகழ்வாய்வுகளும், அவற்றின் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாகத் தமிழகத்தின் சில பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும் சிந்துச் சமவெளி நாகரிகம் இந்திய நாடு முழுவதும் பரவியிருந்தது, அது தொல் திராவிட நாகரிகம் என்று வரலாற்றாளர்கள் உறுதி செய்தார்கள். பின்லாந்து நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக அஸ்க் பர்போலா போன்றோர், இது தொல் தமிழ் நாகரிகமன்று மொழி தொல் திராவிடமுமன்று என்பதை நிலைநாட்ட வேண்டும், குறிப்பாகத் தமிழுக்கு எந்தச் சிறப்பும் வழங்கப்படலாகாது என்று சில இந்துத்துவவாத வரலாற்று வல்லுநர்கள் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் காணும் மொழியைத் திரித்துக் கூற முற்பட்ட போதிலும், அந்நாகரிகம் ஆரியமன்று என்னும் உண்மை நிலை நாட்டப்பட்டுவிட்டது. சோவியத் தொல்லியல் ஆய்வறிஞர்களும், இதே கருத்தை வலியுறுத்தி வந்தார்கள். வடமொழிப் பேராசிரியரான பர்ரோ, எமனோவ் என்னும் இருவரும் செய்த களஆய்வின் பலனாக இந்திய நாகரிகத்தின் வேரடிமண் ஆரியமன்று என்று கண்டனர்.

கிறித்துவம் பரப்ப வந்த ஐரோப்பியப் பாதிரிமார், நல்லறிஞர் பலர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அவற்றின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றினார்கள். மாணிக்கவாசகர் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த ஜி. யு.போப் இத்தகைய சிறந்த அரிய நூலை வேற்றுமொழி எதிலும் கண்டதில்லை, தமிழர்கள் தலைநிமிர்ந்து பெருமிதம் கொள்ளத்தக்க மொழி தமிழ்மொழி என்றார். கால்டுவெல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் ஒப்பற்ற நூல் படைத்தார். வேறு எந்த மொழியின் துணையின்றி, குறிப்பாக சமஸ்கிருத மொழியிலிருந்து கடன் வாங்காமல் தமிழ்மொழி தனித்தியங்க வல்லது என்று அறுதியிட்டுச் சொன்னார். கமில் ஸ்வலபில், ஜார்ஜ் ஹார்ட் போன்ற நல்லறிஞர்கள் தமிழின் பெருமையைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லி வந்துள்ளனர். தமிழ்ச் செம்மொழி என இன்று உயர்நிலை பெறும்போது இத்தகைய நல்லறிஞர்கள் நினைத்துப் பாராட்டி வணங்கத்தக்கவர்கள்.

தமிழ் இலக்கியம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுக்கால வரலாறுடையது. சங்ககாலம் பற்றி ஆராய்ந்த நல்லறிஞர்கள் சங்ககாலம் கி.மு.500 தொடங்கி கி.பி.300 வரை இருந் திருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். எழுத்துமுறை பிராகிருதத்திலிருந்து பெறப்பட்டது என்னும் கருத்துண்டு. தொல்தமிழ் வரிவடிவத்தைத் தமிலி என்பார் நாகசாமி. ஆனால் மயிலை சீனி வேங்கடசாமி தமிழுக்கென்று தனி எழுத்துமுறை இருந்திருக்கவேண்டும் பிராகிருதம் - சமஸ்கிருதம் மொழிச் செல்வாக்கினால் அது ஒதுக்கப் பட்டதனால் அழிந்துபோயிருக்கக்கூடும் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவென்பார். சங்ககாலச் சமுதாயம் தோற்றுவித்த, கடைப்பிடித்த விழுமியங்கள் மிகப்பல. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” “வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் மெய் கூறுவல்” போன்றவை மனிதநேயப் பண்புகளுக்கும் கருத்துகளுக்கும் சங்க இலக்கியத்திலிருந்து நூற்றுக்கணக்கான எடுத்துக் காட்டுகள் தரலாம். ஓரிரு எடுத்துக்காட்டுகள் மட்டுமே இங்குத் தரப்பட்டன.

வடபுலத்திலிருந்து வந்த பௌத்தமும் சமணமும் வைதிகமும் தமிழ் மண்ணில் செம்புலப் பெயல்நீர் போலக் கலந்தன. ஐம்பெரும்காப்பியங்களையும் பக்தி இயக்கம் கண்ட சமய இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற வண்ணமிகு இலக்கியங்களையும் தமிழ்மொழி பெற்றது. கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலஉடைமைச் சமுதாயம் வளர்ந்தமைந்த காலத்தில் இவை தோன்றிச் சிறந்தோங்கி வளர்ந்தன. பௌத்த தர்க்கவியலும், சமண அனேகாந்த வாத விளக்கமும், தமிழறிஞர்களால் வழங்கப்பெற்றன. அதே போது பிற்காலச் சோழர் ஆட்சியில் சைவ சித்தாந்தமும் விசிஷ்டாத்வைதமும் தோன்றின.

இவை தமிழ்மண் கண்ட அனுபவ உண்மைகளை அடித்தளமாகக் கொண்டவை. இதற்குமுன் சங்கரரின் அத்வைதம் வடமொழி அடிப் படையை மட்டும் கொண்டெழுந்தது. இருப்பினும் சங்கரரின் அத்வைதம் தமிழ்மண் “வாசம்” அற்றது என்று சொல்லிவிட முடியாது.  இதைப் பற்றிய ஆராய்ச்சி தேவை. பின்னர் தமிழகம் வந்தடைந்த இஸ்லாமும் கிறித்துவமும் தத்தம் மதங்களுக்குத் தேவையான இலக்கியம் படைத்துக் கொண்டன. சமய இலக்கியங்கள் பற்றிக் கூறும்போது நாம் சமயங்களை ஆதரிக்கிறோம் என்பது பொருளன்று, தமிழ்மொழி இலக்கிய வரலாற்றில் மதங்கள் ஆற்றிய பணியைப் பற்றிக் குறிப்பிடுவதற்காகவே இது கூறினோம். கிறித்துவ மதம் பரப்பப் போப்பும் கால்டுவெல்லும் பெஸ்கியும் தமிழகம் வந்திராவிட்டால் அவர்கள் பிறந்த அந்த நாட்டு மக்கள் தமிழின் சிறப்பை அறியும் வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டார்கள்.

தமிழகம் கண்ட சைவ சித்தாந்தத்துக்கும் விசிஷ்டாத் வைதத்துக்கும் தமிழில் பேருரைகளும், சிற்றுரைகளும் பாஷ்யங்களும் ஆயிரப்படிகளும் வரையப் பெற்றுள்ளன. இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழகம் வழங்கிய பெரும் பங்கு இது. சித்தர்கள் பிறந்து இலக்கியங்கள் படைத்து மருத்துவம் கண்ட நாடும் தமிழ்நாடே. சித்த இலக்கியமும் மருத்துவமும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. இத்தகைய மாண்பு பெற்ற தமிழ் தகைமை இழந்து கி.பி.11ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதம், பாலி, வடமொழி, உருது, பாரசீகம், ஆங்கிலம் என்னும் மொழிகள் செலுத்திய ஆதிக்கத்தினால் அலைப்புண்டு நலிவுற்றது. இந்திய இசைக்கலை வரலாற்றாசிரியர்கள் சிலப்பதிகாரமே இந்திய இசைக்கு ஊற்று. சிலப்பதிகாரத்தில் “தொன்ப தொழிந்த பன்னீராயிரம்”, “தொன்றுபடுமுறை” என வழங்கப் படுகிறது, வடமொழியில் எழுதப்பெற்ற “சங்கீதரத்னாகரம்” தமிழுக்குக் கடன்பட்டது. இந்திய இசை மரபே தமிழ் இசையை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி பெற்றது என்று அறிஞர் கருதுகின்றனர்.

தமிழ் இலக்கியம் ஒருபுறமிருக்க தமிழ் இலக்கண மரபு மிகச் செழுமையானது. தொல்காப்பியம், பிறந்த காலம் பற்றிய பல்வேறு கருத்துகள் இருப்பினும் தொல் காப்பியத்தைப் போன்றதொரு இலக்கணம் வேறு எந்த மொழியிலும் எழவில்லை என்று அறுதியிட்டுச் சொல்லப் படுகிறது. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவும் அதுவே. இந்தப் பின்புலத்தில்தான் தனித்தமிழியக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தனித்தமிழ் இயக்கத்தை முதன்முதலில் தொடங்கி வைத்தவர் சூரிய நாரயண சாஸ்திரி என வடமொழிப் பெயர் தாங்கிய பரிதிமாற் கலைஞர் ஆவார். இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள் மறைமலையடிகள் போன்ற நல்லறிஞர்கள். முதன்முதலில் சுப்ரமணிய பாரதியார் தனித்தமிழியக்கம் கண்டார் என்பவர் உளர். ஆனால் அவர் ஆங்கிலம் கலவாத தமிழ் என்ற அளவில் நின்றதாகத் தெரிகிறது. ஆனால் பிற் காலத்தில் உருவான தனித்தமிழ் இயக்கம் தமிழையே சமஸ்கிருதத்துக்கு இருந்த செல்வாக்கை அறவே நீக்கித் தமிழ்ச் சொற்களை மட்டுமே கையாள வேண்டும் என வாதித்தது. இந்தப் பின்புலத்தில் பாண்டித்துரைத் தேவர் கண்ட மதுரைத் தமிழ்ச் சங்கமும் உமா மகேஸ்வரனார் கண்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும்

வைச சித்தாந்த மகா சமாஜமும் பிறந்தன. இத்தகைய பங்களிப்புகள் தமிழை தமிழரின் நிலையை உயர்த்திய போதிலும் “நுபேடiளா நுஎநச ழiனேi சூநஎநச” என்னும் முழக்கம் தமிழைத் தனக்குரித்தான நன்னிலை பெறுவதற்குத் தடையாக உள்ளது. இருப்பினும் இந்தியப் பொது உடைமை இயக்கம் தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்றது. எனவே தமிழ்நாட்டில் தமிழ் மொழியே அரசு மொழியாகவும் கல்வி பயிற்றுமொழி யாகவும் நீதிமன்றமொழியாகவும் ஏற்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய நாடு விடுதலை பெற்ற நாள் முதல் எழுப்பி வருகிறது தமிழகப் பொதுஉடைமை இயக்கம். ஆனால் கடந்த இருபதாண்டுக் காலமாகப் புற்றீசல்போல மழலையர் பள்ளிகளும், உயர்கல்வி நிலையங்களும் கல்லூரிகளும் தொழிற்கல்வி நிலையங் களும் ஆங்கிலமொழி வழிக்கல்வி வழங்கக் கல்வியையே வாணிபமயமாக்கிவிட்ட அவலநிலையைத் தமிழகம் அனுபவித்து வருகிறது. இதனைச் சீர் செய்ய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்க் கல்விக்காக மக்கள் மத்தியில் இயக்கம் காணவேண்டியது கட்டாயத் தேவையாகிறது.

எங்கள் தமிழ்மொழி “வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே” “வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே” என்று பாடினார் பாரதியார். எனவே கடந்த நூற்றாண்டில் பல்வேறு வகைப் பட்டதான விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்பவியல் பிரிவுகள் வளர்ச்சி பெற்று வந்திருப்பது காணலாம். இதன் விளைவாக மக்களின் வாழ்வு புரட்டிப் போடப்பட்டு விட்டது என்பது உண்மை. கணினி இல்லாத இல்லமோ கைப்பேசி இல்லாத மனிதனோ இன்று காண்பது அரிதாகிவிட்டது. இந்த வளர்ச்சிப் போக்கு மக்களிடையே சென்றடையவேண்டுமானால் அவர்கள் அறிவியல் நுண்அறிவியல், பொறியியல், மருத்துவம் எல்லாம் தமிழில் தரப்பட வேண்டும்; கற்பிக்கப்பட வேண்டும்.

இப்பிரச்சினைகள் பற்றியெல்லாம் சிந்தித்து விவாதித்து தக்க முடிவு எடுப்பதற்காக கலைஞர் கருணாநிதி அவர்களை முதல்வராகக் கொண்ட தமிழரசு முதல் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கோவையில் இத்திங்கள்(சூன்) 23முதல் 27வரை நடத்தவிருக்கிறது. தமிழ் செம்மொழி யாவதற்கு உழைத்த நல்லறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், படைப்பாளிகள், நல்ல உள்ளங்கள், எல்லோரையும் உளமாரப் பாராட்டுகிறது நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம். குறிப்பாக முதல்வர் கருணாநிதியின் பங்களிப்பு வரலாற்றில் நிலைத்து நிற்கும் சிறப்புப் பெற்றது உங்கள் நூலகம். மாநாட்டை வாழ்த்தி தமிழ்மொழி இலக்கியத்தையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடுத்த உயர்கட்டத்துக்கு உந்திச் செலுத்த மாநாடு தக்க நடவடிக்கை எடுக்கும் - எடுக்க வேண்டும் என நியூ செஞ்சுரி ‘உங்கள் நூலகம்’ விழைகிறது.

Pin It