குடிஅரசு பத்திரிகை தோன்றி இன்றைக்கு மூன்றாவது ஆண்டு கழிந்து நான்காவது ஆண்டு தொடங்கிவிட்டது. 

periyar_330அது தோன்றிய நாள்முதல் இதுவரை செய்து வந்த தொண்டைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட பலனைப்பற்றியும் பொது ஜனங்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம். 

குடிஅரசின் கொள்கையை அதன் முதல் மலர் முதலிதழில் தலையங்கத்தில் தெரிவித்தபடி, அதாவது:- 

மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும்... 

உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும்.

இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியர் இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு வெறுப்புகள் இன்றி... நண்பரே ஆயினும் ஆகுக.

அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும். 

என்று நாம் உலகத்தாருக்கு ஆதியில் வாக்குக்கொடுத்தது போலவே இதுகாறும் ஒரு சிறிதும் மாறுதல் இன்றியும் கள்ளங்கபடின்றியும் தயவு தாட்சண்யம் இன்றியும் அது, தனக்கு சரி என்று பட்டதை எவருக்கும் அஞ்சாது எப்பழிக்கும் பின் வாங்காது உண்மையுடன் உழைத்து வந்திருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

எனவே இப்பத்திரிகையின் கொள்கை இன்னது என்பதையும், அது ஆரம்பித்த நாள் முதல் இதுவரை அதையே கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தவே இக் குறிப்பை வெளியிட்டோம். 

அன்றியும் குடிஅரசின் இக் கொள்கை கொண்ட உழைப்பானது மற்ற பெரும்பான்மையான பத்திரிகைகளின் உழைப்பைப் போல் பத்திராதிபரின் வாழ்வுக்கும், ஜீவனத்திற்கும் மாத்திரம் அனுகூலமாக்கிக் கொண்டு நாட்டை பாழ்படுத்திக்கொண்டோ அல்லது ஒரு பயனும் இல்லாமல் மக்களை மூட பக்தியிலும், குருட்டு நம்பிக்கையிலும் அழுத்திக் கொண்டோ அல்லது சோம்பேறி வேதாந்தம் கற்பித்துக்கொண்டோ அல்லது அர்த்தமற்ற சுயராஜ்ய பேச்சோ, தேசியப் பேச்சோ பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டோ இருந்துவராமல் மக்களுக்குள் ஒருவித உணர்ச்சியையும், எழுச்சியையும் கொடுத்து அறிவை விளக்கி வந்திருக்கின்றது என்பதை பல நண்பர்கள் நமக்கு எடுத்துக் காட்டி இருப்பதையே நாம் இங்கு இது சமயம் சுட்டிக் காட்டுகின்றோம். 

குடிஅரசினால் தேசிய வாழ்வுக்காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும், புராணபிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக்கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம். ஆனாலும் அக்கூட்டத்தையும் அவர்களது கூச்சலையும் ஒரு கடுகளவும் லட்சியம் செய்யாமல் நாம் முனைந்து நிற்பதால் அவர்களால் நேரிடும் இடையூறுகள் யாவும் தூள் தூளாய் சின்னாபின்னப்பட்டு காற்றில் பறப்பதும் வாசகர்கள் நித்தமும் உணர்ந்ததேயாதலால் அதைப்பற்றி நாம் அதிகம் எழுத வரவில்லை. 

உதாரணமாக, மோட்டார் வண்டிகள் தெருக்களில் வேகமாகச் செல்லும்போது தெருப்பொறுக்கும் சுணங்கன்கள் அவ்வண்டியின் நிலையறியாது அதை வழிமறித்து தடுத்து கடித்தெறிந்து விடலாம் என்கின்ற ஆவலுடன் குரைத்துக் கொண்டு சிறிதுதூரம் வண்டியைத் தொடர்ந்து ஓடி காலும் வாயும் வலித்த உடன் எப்படி முணுமுணுத்துக்கொண்டு திரும்பிப்போய் விடுகின்றனவோ அதுபோல் குடிஅரசின் வேகத்தினிடம் அநேகப் பத்திரிகைகளும் தனி நபர்களும் வெகு ஆத்திரமாக அதைத் தடுத்து நிறுத்திவிடுவது போல் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்துவிட்டு அடங்கிப் போனவைகளும், சில மறைமுகமாய் விஷமம் செய்து கொண்டிருப்பதும் சில மானம் வெட்கமில்லாமல் நின்ற நிலையில் இருந்தே குரைத்துக் கொண்டிருப்பதுமான நிலையை தினமும் உணருகின்றவர்களுக்கு குடிஅரசின் வேகத்தைப் பற்றியோ தத்துவத்தைப்பற்றியோ அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதைப் பற்றியோ அறிவிக்க வேண்டியதில்லை. 

நிற்க, தமிழ்நாட்டின் நிலைமைகளும் வயிற்றுப் பிழைப்புத் தேசிய வாழ்வுக்காரர்களின் யோக்கியதைகளும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வேறுபாடுகளும் வெளிமாகாணத்தாருக்கும், வெளி தேசத்தாருக்கும் தெரியப்படுத்த சுமார் 10,12 வருஷங்களாக பார்ப்பனரல்லாதார் இயக்கமும் ஜஸ்டிஸ் திராவிடன் பத்திரிகைகளும் எவ்வளவோ பாடுபட்டும் பார்ப்பனருடையவும் அவர்களது கூலிகளுடையவும் பலவித சூழ்ச்சிகளால் அதன்குரல் வெளியில் போகாமல் தடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்த விஷயமாகும். அவ்விதத் தடைகளை எல்லாம் தாண்டி இப்பொழுது வெளி மாகாணங்களுக்கும் மேல் நாடுகளுக்கும் கூட அவைகள் எட்டி இருப்பதற்கு நம்நாட்டு தேசியப் புரட்டும் பார்ப்பன சூழ்ச்சியும் பாமரர்கள் யாவரும் அறிந்திருப்பதற்கும் குடிஅரசின் தொண்டு ஒரு சிறிதாவது காரணமென்று சொல்வது மிகையாகாது. 

குடிஅரசு முதல் வருஷத்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும் இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர்களையும் மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பை பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு, தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் குடிஅரசே அதிகமான சந்தாதாரர் களையும் வாசகர் களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானா லும் இனியும் அது அடைய வேண்டிய உயர்ந்த எண்ணிக்கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை. 

சற்றேறக்குறைய, 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில் குடிஅரசு 7000 பிரதிகள் மாத்திரம் உலவுவதானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம்.

ஏனெனில் குடிஅரசு மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும் அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும்படியான தெய்வத்தின் பேராலும், மோட்சத்தின் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப்பட்டிருக்கின்றதாலும், இந்த கேட்டைப் பரப்புவதையும், நிலை நிறுத்துவதையும் பார்ப்பனரல்லாதாரிலும் பலர் பக்தியாகவும் ஜீவனோ பாயமாகவும் கொண்டிருக்கிறதினாலும், இப்புரட்டுகளும் சூழ்ச்சிகளும் உலகத்தில் நூற்றுக்கணக்கான வருஷங்களில் கூட அழிக்க முடியாதபடி கோவில்களாகவும், தெய்வங்களாகவும், வேதங்களாகவும், புராணங்களாகவும், படங்களாகவும், பஜனை பாட்டுக்களாகவும், இலக்கணங்களாகவும், இலக்கியங்களாகவும் நாடெல்லாம் நிறைந்து அரசன், செல்வந்தன், படித்தவன், பிச்சைக்காரன் ஆகிய எல்லோர் வாயிலும், மனத்திலும் குடிகொண்டதாலும் இப்படிப்பட்ட விஷயத்தை எவ்வளவு புரட்டானதானாலும், மோசமானதானாலும் மக்களுக்கு எவ்வளவு இழிவும் கேடும் சூழ்வதானாலும் அதை ஒழித்து உண்மையை வெளியாக்கி மக்களை சீர்படுத்துவதென்றால் அதை சில வருஷங்களில் வாரம் ஒரு 7000 பிரதி வெளியீட்டில் முடியக்கூடிய காரியம் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனமேயாகும். ஆதலால்தான் ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம். 

மற்றபடி இதற்கு ஏற்படும் எதிரிகளைப்பற்றியோ எதிர்ப்பிரசாரத்தைப்பற்றியோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இதுவரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும் தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத்தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டார்கள். இவைகளினாலெல்லாம் குடிஅரசின் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிநிதிகள் உயர்வதிலும் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே உறுதி கூறலாம். 

அன்றியும் குடிஅரசையும் அதன் கொள்கைகளையும் எதிர்ப்பதாகவோ வெளியில் எதிர்த்து பிரசாரம் செய்வதாகவோ வெளியில் வந்த யாரும் இதுவரை குடிஅரசில் கண்ட விஷயங்களில் எதற்காகவாவது ஒன்றுக்கு யோக்கியமான சமாதானம் சொல்லவும் முன்வரவில்லை என்பதினாலும் உணரலாம். 

ஆனாலும் குடிஅரசு தமிழ்நாட்டில் 50,000 பிரதிகள் உலவி அதில் காணும் முக்கிய விஷயங்களை ஜில்லாதோறும் பதினாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வெளியாக்கி வினியோகித்து வந்தால் மாத்திரம் சரியானபடி பரவக்கூடுமேயல்லாமல் இந்த 7000 பிரதியோ அல்லது 17000 பிரதியோ ஒரு காரியமும் செய்து விடாது என்றே சொல்லுவோம். 

தவிர, குடிஅரசு இனி ஈரோட்டிலிருந்து வெளிவருவது சற்று கஷ்டமாகவே தான் காணப்படுகிறது. ஏனெனில் யந்திரங்கள் போதுமானதாயில்லாததோடு, போதிய சவுகரியமும் இல்லை. இன்னும் ஒரு மிஷின் வாங்க வேண்டியதாகவும் இருக்கின்றது. இதல்லாமல் இனி குடிஅரசு ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆதிக்கத்தில் இருப்பதும் சரியல்ல வென்றே நினைக்கின்றோம். என்னவெனில் இப்படி ஒருவராலேயே நடத்தப்படுவதாயிருத்தல் இது இனி வெகு காலத்திற்கு நடந்து வர முடியுமா என்பதுதான். ஆதலால் குடிஅரசை ஒரு லிமிடெட் கம்பெனியாக்கி இந்த கொள்கை கொண்ட ஒரு நிருவாக கம்பெனியிடம் ஒப்படைத்து இன்னமும் கொஞ்சம் குறைந்த விலையில் அதாவது வருஷம் 2 ரூபாய் சந்தாவில் இனியும் அதிகமான பிரதிகள் வெளியாக்கத்தக்க மாதிரியிலும் இனியும் அதிகம் பேர் படிக்கத்தக்க மாதிரியிலும் செய்ய வேண்டுமென்றே ஆசைப்படுகின்றோம். 

சாதாரணமாக 20,000 பிரதிகள் வாராவாரம் வெளியானால் வருட சந்தா 2 ரூபாயாக ஆக்கினாலும் நஷ்டம் வராது என்பது நமது துணிவு. பக்கங்களை வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளலாம். லிமிடெட் கம்பெனி ஆக்க வேண்டுமென்பது பொறுப்பை உண்டாக்கவே ஒழிய பணம் அதிகம் தேவை என்பதாகவல்ல என்றும் சொல்லுவோம். இனி ஒரு மிஷினைத் தவிர வேறு ஒன்றும் வேண்டியதில்லை. தவிர நமக்கு எவ்வளவு மனஉறுதி இருந்தாலும் சற்று உடல் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. என்னவெனில் 2 அல்லது 3,4 மணிநேரமானாலும் பேசுவது சுலபமாயிருக்கின்றதேயல்லாமல் எழுதுவது அரைமணி நேரமானாலும் தலைவலி வந்து விடுகின்றது. கையும் வலி எடுத்துக் கொள்ளுகின்றது. அடிக்கடி மயக்கம் வருகின்றது. இது தவிர இங்கிலீஷ் வாரப் பத்திரிகையும் (ரிவோல்ட்) நடத்த வேண்டியிருப்பதாலும் அடிக்கடி பிரச்சாரத்திற்காக வெளியில் போகவேண்டியிருப்பதாலும் திராவிடன் பத்திரிகையின் பொறுப்பையும் ஒப்புக்கொண்டிருப்பதாலும் இவ்வளவு காரியமும் ஒரு மனிதன் தலையிலேயே போடக்கூடிய காரியம் ஆகுமா என்பதும் யோசிக்கவேண்டிய காரியமாகும். அன்றியும் இக்கொள்கைக்கு ஒரு கட்டுப்படான இயக்கம் ஏற்படுத்தி அதற்கு ஜில்லா தாலுகா பிரசாரக்காரர்களையும் ஏற்படுத்தி அவ்வியக்கத்தின் சார்பாய் இப்பத்திரிகைகள் நடைபெறுவது நலமளிக்குமாதலால் அம்மாதிரி இயக்கம் ஒன்று வேண்டியிருப்பதோடு அதற்காக வேறு பல பிரயத்தனங்களும் செய்யவேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றோம். 

தந்தை பெரியார்- "குடிஅரசு" - தலையங்கம், 29-04-1928

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It