பட்டேலின் "ஸ்ரீ முகம்"

தோழர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சென்னை மாகாண காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் முனைந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், சென்னை மாகாணக்காரர்கள் காங்கிரஸ்காரருக்கே ஓட்டு செய்ய வேண்டும் என்றும் அதற்கு காரணம் அடக்கு முறையைக் கண்டிக்க வேண்டியும், வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டியும் காங்கிரஸ்காரர்களே தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லுகிறார். மற்றும் காங்கிரஸ்வாதி அல்லாத மற்றவருக்குக் கொடுக்கும் ஓட்டு சர்க்காருக்கு கொடுத்தது போல் ஆகுமென்றும் சொல்லுகிறார். முதல் விஷயத்தை ஒப்புக்கொண்டாலும் இரண்டாவது விஷயம் ஒப்புக் கொள்ளப்படாதது என்பதுடன், அதில் நாணையமும் நியாயமும் இல்லை என்றும் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.

ஏனெனில் இந்த நாட்டிலுள்ள சுமார் 35 கோடி மக்களில் காங்கிரசில் அங்கத்தினர்களாய் இருக்கிற சுமார் ஒரு பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் மக்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சர்க்காரைச் சேர்ந்தவர்கள், தேசத்துரோகிகள் என்பது தோழர் பட்டேல் அவர்களின் ஸ்ரீமுகத்தின் கருத்தாகிறது.

periyar 345தோழர் ஷண்முகம் அவர்கள் விருதுநகரில் தெரிவித்தது போல் தேசபக்தி என்பது தோழர்கள் பட்டேல், ஆச்சாரியார் ஆகியவர்களின் பிதுரார்ஜ்ஜித சொத்துப் போலவும் அந்தக் கூட்டத்தில் இவர்களுடைய சிஷ்யர்களும், அடிமைகளும் தவிர மற்றவர்களுக்கு இடம் கிடையாது போலவும் இவர்களுடைய ஆதிக்கம் இருந்து வருகிறது.

அந்த சிஷ்யர்களும், அடிமைகளும் கூட தங்கள் தேசபக்தியைக் காட்டவேண்டுமானால் ஒரு முறைக்கு நாலுமுறை சிறை சென்று இருந்தாலும் போராது. பத்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொண்ட தங்கள் வரும்படிகளையும் துறந்து கை முதல்களையும் இழந்து ராஜபோகத்தையும் விடுத்து, சன்னியாசியாய் கடன்காரனாய் தெருவில் நின்று தவிப்பவனாய் இருந்தாலும் போராது. மற்றபடி எவ்வளவு அயோக்கியனாய், குடிகாரனாய், ஜாதி ஆணவம் பிடித்தவனாய், தாசி லோலனாய், ஊரை ஏமாற்றி கொள்ளையடிப்பவனாய், சர்க்காருக்கு சி.ஐ.டீ.யாய் ஒரு மணி நேர வேலைக்கு 100 ரூபாய், 500 ரூபாய், 1000ரூபாய் வீதம் மக்களிடம் இருந்து கறந்து போகபோக்கியங்கள் அனுபவிப்பவனாய் இருந்து கொண்டு, கதர் துணியை கட்டுபவனாகவும், ராட்டினத்தில் நூற்பவனாகவும் காந்திக்கும், பட்டேலுக்கும், ஆச்சாரிக்கும் ஜே போட்டு மகாத்மா என்று கூப்பிடுபவனாகவும் இருந்தால், பெரிதும் அவன்தான் தேசபக்தன், சர்க்கார் மனிதன் அல்லாதவன், பாமர மக்கள் ஓட்டைப் பெறத் தகுதி உடையவன் என்றால் இது யோக்கியமா என்று கேட்கின்றோம்.

மத விஷயத்தில் "பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார்" என்றும் "சாதியால் ஒழுக்கத்தால் தக்கோரேனும் பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார்" என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரியாரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத்துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவைகளின் பேரால் ஏராளமான பணங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைக்க சோம்பேரித்தனம் கொண்ட மக்களை கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டு கூலிப் பிரசாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டுவிட்டது.

1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்கு சங்கராச்சாரி போலவும், ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்குப் பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் 10 ஆயிரக் கணக்காக காசு பணம் செலவு செய்தும் தேசியம் தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரையே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதின் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் ஸ்தோத்திரம் தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிரவும் "காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப்படும்" என்று அடிக்கடி பல்லவி பாடுவதின் யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம்.

இன்றைய தினம் காங்கிரசைவிட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை.

சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால், சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோபாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு ஸ்தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள். சர்க்கார் அடக்குமுறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்குமுறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணையக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம், வாக்குத்தத்தம் தவறுதல் ஆகியவைகள் காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச்சாதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும் எதேச்சாதிகாரம் இருந்துதான் வருகிறது.

சர்க்காரில் இருக்கும் பொய் ஜனநாயகத் தத்துவமே ஏன்? அதைவிட மோசமான ஜனநாயகத் தத்துவமே காங்கிரசிலும் இருந்து வருகின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாதவர்களை தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிரஸ் தங்களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத் துரோகி என்று விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம்.

ஆகவே பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத்தறிவுக்கு சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 30.09.1934)

Pin It