தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப்படுத்தி வெகுநாள் ஆகி விட்டதால் இதுசமயம் இரண்டொரு சரக்குகளுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.

பெண்கள்

செட்டிநாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது இப்போது சவுத்துப்போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 ம் விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராளமாய் கிடைக்கும் நிலைமைக்கு வந்து விட்டது. காரணம் சுயமரியாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டுச் சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளிநாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய் செட்டிமார்களுள் சர்க்காருக்கு (சமூகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமூகத்தார்) வரி போடுவார்களானால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய் விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமூகத்தாருக்கு) தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது.mr radha and periyarஓட்டுகள்

முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம். பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனிசிபல் ஓட்டுகளுக்குக் கிராக்கியற்று சில இடங்களில் அவ்வளவையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாய் அந்த உத்திரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டிகளுக்கும் தேர்தல் இந்த வருஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.

ஈரோடு

குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் சிலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேக்ஷகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது.

சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப்பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்று 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை. சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.

சில வார்டில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப்படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷயத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.

சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேக்ஷகர் 3000ரூ எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேக்ஷகர் 5000 ரூ எடுத்து வைத்து எலக்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்கு பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும்.

ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஓட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய்? மார்க்கண்டன், அனுமார், விபூஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் கல்லும், காவேரியைப் போல் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறார்கள்.

சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவிப் பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திரமல்லாமல் கோவில் கட்ட, மசூதி கட்ட, சர்ச் கட்ட என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டி யிருப்பதால், அந்த அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப் பட்டிருக்கின்றன.

நல்ல வேளையாக ஈரோட்டைப் பொறுத்தவரை ஓட்டுகளுக்கு ஜாதி சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மெனுக்கே சேர வேண்டியது.

('சித்திரபுத்திரன்', பகுத்தறிவு கட்டுரை 23.09.1934)

Pin It