periyar 322சென்னை கார்ப்பொரேஷனில் திரு.ஏ.ராசசாமி முதலியார் தலைவ ராயிருக்கும் காலத்தில், தலைவர் தேர்தலுக்குப் போட்டி போட்டுக் கொண்டு அதனால் வகுப்புச் சண்டையை வளர்க்கும் தொல்லையை நீக்குவதற்காக ஒரு சமரசமான முடிவு செய்து கொண்டனர். அந்த முடிவின்படி ஒவ்வொரு வருஷமும், தலைவர் தேர்தல் கஷ்டமில்லாமல் நடக்க ஏதுவாயிற்று. அவ்வொப்பந்தம் சென்னையில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்கள் தங்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு கார்ப்பொரேஷனில் தலைமைப்பதவி பெற வழிசெய்தது. அவ்வொப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் அனேகமாக எல்லோரும் அதை நியாயமான ஒப்பந்தம் என்று பாராட்டினர். அவ்வொப்பந்தமாவது,

  1. பிராமணரல்லாதார்
  2. பிராமணர்
  3. பிராமணரல்லாதார்
  4. கிருஸ்தவர்
  5. பிராமணரல்லாதார்
  6. முஸ்லீம்
  7. பிராமணரல்லாதார்
  8. தாழ்த்தப்பட்டவர்கள்

               என்று இவ்வாறு குறிப்பிட்டபடி அந்தந்த வகுப்பிலிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டியது என்பதாகும். இவ்வொப்பந்தப் படியே முதலில் திரு.பி.டி.குமாரசாமி செட்டியார் அவர்கள் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். அவருடைய உத்தியோக காலமாகிய ஒரு வருஷம் முடிந்தபின், அடுத்த தலைவர் தேர்தல் சென்ற 12-11-31ல் நடைபெற்றது. இத்தேர்தலில் முன் ஏற்படுத்திய திட்டப்படி ஒரு பிராமணர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவராவார். ஆகையால் பிராமணரல்லாத வகுப்பினரும் மற்ற வகுப்பினரில் யாரும் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடவில்லை. ஆனால் பிராமணர்களுக்குள்ளேயே போட்டி உண்டாயிற்று திரு.ஜி.ஏ.நடேசன் அவர்களும் திரு.டி.எஸ்.ராமசாமி அய்யர் அவர்களும் போட்டி இட்டனர். இப்போட்டியில் திரு.டி.எஸ். ராமசாமி அய்யரே வெற்றி பெற்றார். திரு.ஜி.ஏ.நடேசன் தோல்வியுற்றார். பார்ப்பனரல்லாத கார்ப்பொரேஷன் அங்கத்தினர்கள் திரு.டி.எஸ்.ராமசாமி அய்யருக்கு ஓட்டுச் செய்தனர். பார்ப்பன அங்கத்தினர்களும், ஐரோப்பிய அங்கத்தினர்களும் திரு.ஜி.ஏ.நடேசனுக்கு ஓட்டுச் செய்தனர்.

திரு.நடேசன் தோற்றதும், திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியார் முதலிய பார்ப்பனரும் மற்றும் பார்ப்பன தாசர்களும் ஐரோப்பியரும் “ஒப்பந்தம் முறிந்து விட்டது” “முறிந்து விட்டது” என்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில் ஒப்பந்தம் முறிந்து விட்டதா என்றால் முறியவில்லை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எப்படி எனில் இது வகுப்புவாத சம்பந்தமான ஒப்பந்தமே யொழிய வேறில்லை. உண்மையிலேயே ஒப்பந்தம் முறிந்து விட்டதென்றால், பிராமணருக்குப் பதிலாக மற்றொரு பிராமண ரல்லாதாரோ, கிறிஸ்தவரோ, தாழ்த்தப்பட்டவரோ தலைவராக வந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி ஒரு பிராமணரே தலைவராக வந்திருக்கும் போது, ஏன் ஒப்பந்தம் முறிந்து விட்டதென்று கூச்சலிடவேண்டும் என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் அதில் உள்ள இரகசியம் விளங்கும்.

முதற் காரணம் பார்ப்பனர்களின் மனத்திற் கிசைந்த ஒரு பார்ப்பனர் தெரிந்தெடுக்கப்படாததாகும். திரு.ஜி.ஏ. நடேசன் அவர்கள் பிராமணீயத்தையும், பிராமணர்களையும் அனுசரிக்கும் முழு வகுப்புவாதியாக இருக்கலாம். இக் காரணத்தைக் கொண்டுதான், பார்ப்பனர்கள் அவரை ஆதரித்தனர். ஐரோப்பியர்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. அதுவும் சென்னையில் உள்ள ஐரோப்பியர்களும், பார்ப்பனர்களும் சகோதரர்களாகவோ, சம்பந்திகளாகவோ ஒருவரோடு ஒருவர் சேர்ந்திருப்பவர்கள் என்பது நாடறிந்த விஷயமாகும்.

அன்றியும் பார்ப்பனர்களால் ஆதரிக்கப்படுகிறவர் பார்ப்பன ரல்லாதார்களுக்கு விரோதியாய் இருப்பார்கள். அப்படியிருப்பவர்களைத் தான் பார்ப்பனர்களும் ஆதரிப்பார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. பார்ப்பனர்களில் வகுப்புவாதம் இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது உண்மையானாலும் இரண்டு பிராமணர்கள் போட்டி போடும் போது அவர்களில் அதிக மோசமில்லாத ஒருவரை ஆதரிப்பதால் பிராமணரல்லாதார் செய்கையில் குற்றமாகாது. இந்த உத்தேசத்தின் பேரிலேயே பார்ப்பனரல்லாதார் திரு.டி.எஸ்.ராமசாமி அய்யரைத் தேர்தலில் ஆதரித்தனர். அன்றியும் பார்ப்பனரல்லாதாருடன் நெருங்கிப் பழகுபவர்களிடம் பார்ப்பனர்களுக்கு எப்படி விருப்பம் இருக்கக் கூடும்?. ஆகையால்தான் ஒப்பந்தம் முறிந்து விட்டது என்று அவர்கள் வீண் புரளி செய்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க இதை விட முக்கியமான இரகசியம் என்னவென்றால் இவ் வொப்பந்தத்தை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்னும் நோக்கமும் ஆகும். ஏனெனில், இன்னொருமுறை பிராமணர் தலைவராய் வர 7 வருஷங்கள் ஆகும். அதுவரையிலும் பிராமணரல்லாதாரும், கிறிஸ்தவரும், மகமதியரும், தாழ்த்தப்பட்டவருமே தலைவரா யிருக்க முடியும். இவ்வாறு மற்ற வகுப்பினர்கள் நீண்ட காலம் பதவி வகிப்பது பார்ப்பனர்களுக்குப் பொறுக்குமா? அன்றியும் ஒவ்வொரு தேர்தல்களிலும் பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து கலகம் செய்து கக்ஷி சேர்க்கவும் இவ்வொப்பந்தத்தால் இடமில்லாமல் போய்விட்டது. இந்தக் காரணங்களால் பார்ப்பனர்கள் ஒப்பந்தத்தை ஒழித்து விட வேண்டிய அவசியத்தில் வந்து விட்டார்கள்.

வெள்ளைகாரரும் பார்ப்பனர்களுடைய தாயாதிகளேயானதால் இந்த ஒப்பந்தத்தால் வெள்ளைக்காரருடைய தயவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆதலால் அவர்களுக்கும் தங்கள் தயவு தலைவர் அபேக்ஷகர்களுக்கு இல்லாமல் போய் விட்டதே என்கின்றதைக் கொண்டு தங்களை யாரும் இனி லக்ஷியம் செய்ய மாட்டார்கள் என்று பயந்து கொண்டதுடன், இனித்தேர்தலிலும் தங்கள் தாசர்களைக் கொண்டு வர முடியாமல் போய்விடுமே என்ற ஆத்திரத்தினாலும் ஒப்பந்தம் முறிந்து விட்டது என்றும் புரளி செய்கின்றனர். பார்ப்பன பத்திரிகைகளாகிய சுதேசமித்திரனும், இந்துவும் இவ்வெண்ணத்தோடு தான், ஒப்பந்தம் முறிந்து விட்டது என்று எழுதியிருக்க வேண்டும்.

திரு.ஜி.ஏ. நடேசன் தோற்றதனால் வருத்தமடைந்தவர்கள் சீனியர் அங்கத்தாராகிய திரு.நடேசன் அவர்களையே பார்ப்பனரல்லாதார் ஆதரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். சீனியருக்கும் ஒப்பந்தத்திற்கும் சம்பந்தமில்லை. சென்ற வருஷத் தேர்தலில் திரு.டாக்டர் நடேசன் அவர்களைத் தேர்ந்தெடுக்காமல் திரு.பி.டி.குமாரசாமி செட்டியாரைத் தெரிந்தெடுக்க வில்லையா? அப்பொழுது ஒப்பந்தம் முறிந்து போயிற்று என்று ஒருவரும் சொல்லவில்லையே. இப்பொழுது பார்ப்பனர்களுடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவரும், பார்ப்பனரல்லாதார் நம்பிக் கைக்குப் பாத்திரமில்லாதவரும் ஆகிய ஒருவர் வெற்றி பெறமல் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தான் இந்தக் கூச்சல் உண்டாயிற்று என்பதை யோசிக்கும் போது பார்ப்பனர்கள் சத்தம் போடுவதின் ரகசியம் விளங்குகிறது. ஆகவே இதன் ரகசியம் எந்த வகையிலாவது ஒப்பந்தத்தை முறியச் செய்ய வேண்டும் என்னும் சூழ்ச்சியேயாகும் என்று கூறி முடிக்கிறோம்.

('தேசீயத்துரோகி' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 22.11.1931)

Pin It