periyar karunanidhi veeramani 2திரு காந்திஜீ அவர்களோ உலகம் தோன்றியது முதல் காணப்படாத வேடிக்கை மனிதராக இருந்து வருகின்றார். அதாவது தான் அரை வேஷ்டி கட்டி இருப்பதற்குக் காரணம் உலக மக்களுக்குத் தேவையான துணி கிடையாதாம்! ஆதலால் சிக்கனத்தை உத்தேசித்து அரை வேஷ்டியுடன் இருக்கின்றாராம்!! இதை உலகம் ஒப்புக் கொண்டு அவரை சபர்மதி ரிஷி என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் நமது அரசியல் பாகவதர்கள். ஆனால் நம் நாட்டு மக்களில் அநேகருக்குக் கஞ்சிக்கே மார்க்கம் இல்லாமலிருக்கும்போது ஆட்டுப்பாலும், ஆரஞ்சிப் பழரசமும் சாப்பிடுவது கவலைப்படக் கூடியதல்லவாம்!

அது எப்படியோ போகட்டும். இதற்காக நாம் அவரை அவருக்குப் பிடிக்காத உணவை சாப்பிடச் சொல்லவில்லை. காந்திஜீ அவர்கள் தனது காலுக்குச் செருப்பு போட்டுக் கொள்ள வேண்டியதற்காக தானாகவே செத்த மாட்டுத் தோலொன்றை கையில் கொண்டு போகின்றாராம்! ‘என்ன ஜீவகாருன்யம்!’ என்பதை நினைத்துப் பாருங்கள். உலகிலுள்ள 175 கோடி மக்களில் வேறு யாருக்காவது இந்த எண்ணம் தோன்றுமா? என்று பாருங்கள். சமணர்களுக்குக் கூட இவ்வளவு ஜீவகாருண்யம் இருந்ததாகக் காணமுடியவில்லை. திரு காந்தியைத் தவிர மற்ற மனிதன் எல்லாம் கொலை பாதகர்கள் என்றும் திரு காந்தி ஒருவரே அஹிம்சா தரும மூர்த்தியென்றும் கருத வேண்டுமென்பது தானே இந்தச் செய்கையினுடையவும் இதன் விளம்பரத்தினுடையவும் தன்மையாகின்றது. அஹிம்சா தர்மம் எப்படியோ போகட்டும் அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லையென்று வைத்துக் கொள்ளலாம்.

இனி அவரது வருணதருமம் என்னவென்பதை யோசித்தால் அதாவது ‘வருணாச்சிரம தர்மம் சரிவர நடந்து வராததாலேயே இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் இல்லாமல் போய்விட்டது’ என்று அவர் சொல்வதை யோசித்தால் அவர் நமக்கெல்லாம் எப்படி - எந்த முறையில் பிரதிநிதி என்பது விளங்கவில்லை.

இது மாத்திரமல்லாமல் “சுயராஜியம் கிடைத்தாலும் கடவுள் செயல், கிடைக்காவிட்டாலும் கடவுள் செயல்” என்று சொல்லிக்கொண்டு போகின்றார். ஆகவே எவ்வளவு பொறுப்புடன் போகின்றார் என்பதும், எவ்வளவு தன்நம்பிகையுடன் போகின்றார் என்பதும் இதிலிருந்தே அறியலாம். பொறுப்பும் இல்லாமல், தன்நம்பிக்கையும் இல்லாமல் இருக்கும் ஒருவரே இந்தியப் பிரதிநிதியாய் போகின்றார் என்றால் இதை ஒப்புக் கொள்ளுபவர்கள் எவ்வளவு ஞானமுள்ளவர்கள் என்பதையும் கவனித்தால் விளங்காமல் போகாது.

எந்த இந்தியன் வாய் திறந்தாலும் ‘மகாத்மா அவதார புருஷர், ரிஷி, முனிவர்’ என்பவைகளான “தெய்வீக”த் தன்மைகளை அவர் மீது ஏற்றிச் சொல்லுவதாலேயே மத சம்பந்தமான மூடநம்பிக்கைக் கண்ணைக் கொண்டே திரு காந்தியைப் பார்க்கின்றார்களேயொழிய பகுத்தறிவுக் கண்ணைக் கொண்டு ஒருவராவது பார்க்கவில்லை என்பதும் மத சம்பந்தமான மூடநம்பிக்கைப் பிரசார முறையிலேயே மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்பதும் வெளிப்படையாய் விளங்கவில்லையா ? என்று கேட்கின்றோம். இந்தப்படி இன்று எந்த நாட்டிலாவது ஒரு அரசியல் மனிதரை அவதார மூர்த்தி மகாத்மா என்பது போன்ற தன்மைகளால் கருதுகின்றார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே நமது நாட்டுக்கு இன்னமும் எத்தனை காலத்திற்குத் தான் ரிஷிகளும், அவதாரங்களும், மகாத்மாக்களும் தோன்றிக் கொண்டிருப்பது என்பதும் அவர்களது “தெய்வீகத் தன்மை”க்கு ஆளாய்க் கொண்டிருப்பதென்பதும் நமக்கு விளங்கவில்லை.

(இஸ்லாம் மதக் கொள்கைப்படியாவது ‘இனிமேல் நபிகள் கிடையாது’ என்பதுபோல் நமக்கும் ‘இனிமேல் மகாத்மா கிடையாது. அவதார புருஷர் கிடையாது’ என்று ஏற்பட்டாலொழிய இந்தியர்களுக்கு ஒரு நாளும் பகுத்தறிவு உண்டாகப் போவதில்லை.)

இவைகளெல்லாம் மத சம்பந்தமான எண்ணங்கள் அல்லவா ? என்று தான் கேட்கின்றோம். இதற்காக நம்மீது கோபித்து என்ன செய்வது? வெட்டுவதாகவும், குத்துவதாகவும் - மிரட்டுவதால் என்ன பயன்?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1931)

Pin It