periyar and kolathoor maniஈரோடு ரயில்வே ஸ்டேஷனானாது 25-8-31 தேதி முதல் இப்போது இருந்து வந்த ஸ்டேஷனுக்கு சுமார் ஒரு மைல் தூரம் மேற்கு புறமாகத் தள்ளி கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டு விட்டது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து கட்டடங்கள் பல கட்டப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் உள்ள பெரிய ஸ்டேஷன்களில் இதுவும் ஒரு பெரியதும் அதிக செலவிட்டு கட்டப்பட்டதுமாகும். நாளாவட்டத்தில் ஈரோடு தென் இந்திய ரயில்வே பெரிய வண்டிப் பாதைகளுக்கு ஒரு முக்கிய ஸ்தலமாக செய்யப்படக்கூடும். இதன் பயனாக சுமார் ஆயிரம் குடிகள் ஈரோட்டிற்கு அதிகமாகலாம். ஆனால் பிரயாணம் செய்கின்ற ஜனங்களுக்கு சிறிது கஷ்டம் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். என்னவெனில் ஸ்டேஷனுக்கும் ஊருக்கும் முன்னையைவிட சற்று அதிக தூரமாகி விட்டது. ஸ்டேஷனுக்கு இரவு காலங்களில் முன்போல் தைரியமாய் போக முடியாமல் பயப்பட வேண்டியதாய் விட்டது. மோட்டார் கூலி வண்டி வாடகை முதலியவைகள் அதிகமாய் விட்டன. ரயிலுக்கு போவது வருவதில் பிரயாணிகளுக்கு அரைமணி நேரம் அதிகம் செலவு செய்ய வேண்டியதாகி விட்டது. பொது ஜனங்களுக்கு இதுபோல் இன்னும் சில அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தாலும் ரயில்வே ஸ்டேஷன் மாற்றம் விஷயம் சுமார் 20 வருஷங்களாகவே யோசனையில் இருந்து வந்ததாகும். இவ்வித அசௌகரியங்கள் பிரயாண வசதிகளில் ஏற்படுவது சகஜமே யாகும்.

ஆனாலும்கூட இந்த ஸ்டேஷன் கட்டிய பணத்தைக் கொண்டு ஒரு புதிய ரயில் பாதை ஏற்பாடு செய்திருந்தால் ஈரோட்டிற்கும் மைசூருக்கும் ஒரு ரயில் பாதை போட்டிருக்கலாம். என்ன காரணத்தினாலோ அவர்களுக்கு புதிய ரயில் பாதையை விட ஈரோடு ஸ்டேஷன் பெரியதாகக் கட்ட வேண்டியது அவசியமாகி விட்டது. என்றாலும் இந்த ஸ்டேஷனால் ஈரோடு பட்டணத்திற்கு சற்று முற்போக்கேற்பட்ட தென்றே சொல்லலாம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 30.08.1931)

Pin It