ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்து மதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும் ஆசாரமாகவும் ஆலயத்திற்குட் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டி விட்டுப் போய் விட்டதும், பிறகு வெகுநேரம் குருக்கள் வராததால் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பி விட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டி விட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம்.
இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 297, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமீனில் விடப்பட்டது.
பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசாரணை தொடங்குவதாய் மாஜிஸ்ரேட் சொன்னதாகவும், எதிரிகள் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னது என்று தெரியக்கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை. ஆகையால் வாய்தா கொடுத்தாலொழிய விசாரணையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு மாஜிஸ்ட்ரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்பட மாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரிய வேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும், நாளையே விசாரணை செய்து கேஸ் முடிக்கப்படும் என்றும் சொன்னாராம்.
எதிரிகள் மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றதாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் எதிர்பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம். உடனே மேஜிஸ்ட்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்திருப்பதாக தாமே உத்திரவிட்டுவிட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட்டார்களாம்.
திங்கட்கிழமைய தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. ஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய்கைக்கும், அனுகூலமாகவும் குதூகலமாகவும் இருக்கின்றது. கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்த வண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியாக்கிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும் எதிர் வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா? இல்லையா? என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாக சிலரும் கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
எதற்கும் திரு. ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிலேயே இருந்திருப்பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங்களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்டபடியும் போக வேண்டியிருந்ததால் இக் காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும். எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன்ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஒரு சமயம் தாராளமாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டு விட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்களே எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும் மற்றும் சீர்திருத்தக் கொள்கைக்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரசாரம் செய்வதும் பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மையாகும்.
ஆலயப் பிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக்கின்றன. அதாவது சமய சம்மந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்மந்தமாக காங்கிரஸ்கள் சுயராஜிய கட்சி, சுதந்திர தேசிய கட்சி, பூரண சுயேச்சை கட்சி, ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென்னிந்திய நலஉரிமைக் கட்சி மற்றும் சமூக சம்மந்தமான எல்லா இயக்கங்கள் மகாநாடுகள் இந்து மகாசபை, மார்வாடி சபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக் கட்சியார் மகாநாடு என்பதும் நேரு திட்டம் என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யாதாஸ்துக்களும் மற்றும் எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் ‘பிராமணன்’ என்கின்ற பத்திரிகை தவிர மற்றபடி எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பாக பிரஸ்தாப கோவில் சம்பந்தப்பட்ட தேவஸ்தான கமிட்டியும் அனுகூலமாக இருப்பதோடு அல்லாமல் தேவஸ்தான இலாகா மந்திரியினுடையவும் என்டோமெண்ட் போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப்பிராயமும் கடைசியாக கவர்மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்து வருகின்றது.
இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வருகின்றது. எனவே இம்மாதிரியான முயற்சிக்கு இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
(குடி அரசு - கட்டுரை - 21.04.1929)