காங்கிரஸ் என்றும், சுயராஜ்யக் கக்ஷி என்றும், தேசீயக் கூட்டம் என்றும் சொல்லப்படுவனவாகிய கூட்டங்கள் மக்களின் அறியாமையாலும் கவலைக் குறைவாலும் நாட்டில் செல்வாக்குப் பெற்றதன் பயனாக நம் நாடு மிகமிகக் கேவலமான நிலைமைக்கு வந்து விட்டதோடு, அதனால் ஏற்பட்ட அரசியல் சுதந்திரங்கள் என்பவைகள் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தை தேடிக் கொடுத்துக் கொண்டு வருவதுடன், நாட்டைப் பிரித்து வைத்து ஏழை மக்களையும் பாமர மக்களையும் வதைத்துக் கொண்டு வருகின்றது. அதாவது மந்திரி பதவிகளும் நிர்வாக மெம்பர் பதவிகளும் ஐகோர்ட்டு ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜ் பதவி முதலியவைகளும், சட்டசபை மெம்பர், ஜில்லா தாலூகா போர்டு தலைமை முதலிய பதவிகளும் இந்திய மக்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தக் காலம் முதற்கொண்டே அவற்றை எப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் அனுகூலமாக நடத்துவது என்கின்ற விஷயத்தில் ஒரு சிறிதும் கவலை கொள்ள இடமில்லாமல், அந்த உத்தியோகங்களை யார் வகிப்பது என்பது பற்றியும், எந்த வகுப்பார் அதை ஏக போகமாய் அனுபவித்து வருவது என்பது பற்றியுமே கவலை கொண்டு, அதன்மூலம் அடைந்த உத்தியோகங்களை மறுபடியும் தாங்களோ அன்றி, தங்கள் பின் சந்ததியாரோ அல்லது இனத்தார்களோ நிரந்தரமாய் அனுபவிக்க மார்க்கம் செய்து கொள்ளுவ திலேயே அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டு வந்திருப்பதுடன், நீதியும் நாணயமும் பக்ஷபாதமற்ற தன்மையும் இல்லாமல் கொள்ளைக்கும் திருட்டுக்கும் புரட்டுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் தாய்வீடாக இருந்தும் வருகின்றது. மந்திரி பதவிகளால் அது ஏற்பட்ட காலம் முதல் கொண்டு இது வரை ஏழை குடியானவர்களின் வரிப் பணத்தில் மாதம் பதினாயிரக்கணக்கான ரூபாய் சம்பளமும் செலவும் ஏற்பட்டதல்லாமல் அதனால் நாட்டிற்கு ஏதாவது பலன் உண்டாயிற்று என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

periyar 347அதுபோலவே நிர்வாகசபை மெம்பர்கள் உத்தியோகம் இந்தியர்களுக்கு கிடைத்ததன் பலனாக ஏதாவது நன்மை உண்டாயிற்றா என்று பார்த்தால், சர்.சி.பி. அய்யரின் ஆக்ஷியையும் அப்பதவியில் நாட்டில் ஏற்பட்ட கோர்ட்டுகளையும் அவ்வதிகாரங்கள் ஒரு வகுப்பாருக்கு பெரும்பான்மையாக வழங்கப்பட்டு அதனால் மற்ற வகுப்பார் நசுக்கப்பட்டதையும் விவகாரத்திற்கு அதிக சிலவேற்பட்டதையும் தவிர வேறு என்ன பலன் வரி செலுத்தும் பொதுமக்கள் அடைந்தார்களென்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றபடி ஹைகோர்ட் நிர்வாகம் சந்தைக் கடை வியாபாரத்தை விடக் கேவலமாய் பொறுப்பற்று விளங்குவதும், நாளுக்கு நாள் ஜட்ஜுகளின் எண்ணிக்கையும் சம்பளமும் உயருவதும் விவகாரமாடும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து அநேக பழம்பெரும் குடும்பங்கள் தாசி, குடி, சூது இவைகளில் பாழாவதைக் காட்டிலும் எண்மடங்கு விவகாரத்தால் பாழாக்கக் கூடிய மாதிரியாகவும் இருந்து வருகின்றதேயல்லாமல் நியாயம் கிடைக்கும் முறை நாணயமாகவோ யோக்கியமாகவோ சுலபமாகவோ இருந்து வருவதாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் ஜட்ஜுகளுக்கும் வக்கீல்களுக்கும் உள்ள சம்பந்தமும் ஜட்ஜுகளுக்கும் கவர்னர் சீப் ஜட்ஜுகளுக்கும் உள்ள சம்பந்தமும் எழுதுவது வெட்கக்கேடான காரியம் என்பதே நமது அபிப்பிராயம்.

கலெக்டர் பதவியின் யோக்கியதை சொல்லவே வேண்டியதில்லை என்போம். உதாரணமாக ஒரு தண்டுவப் பார்ப்பனக் கலெக்டரின் நடத்தை சகிக்க முடியாததாயிருந்தும் கேள்வி கேட்பாடு இல்லாமல் பெரிய தர்பாராய் இருந்து வருகின்றது. தினமும் ஒரு பெண் வீதம் கீழ் அதிகாரியோ குமாஸ்தாவோ, கட்சிக்காரனோ சப்ளை செய்து தீர வேண்டும். அவர் ஆசைப்பட்ட குமாஸ்தா பெண்ஜாதி அவசியம் சப்ளை செய்தாக வேண்டும். இல்லா விட்டால் குமாஸ்தா வீட்டில் கல்லு போடுவதும் காலித்தனம் செய்வது மாகிவிடும். ஜில்லா சூப்ரண்டுக்கு விண்ணப்பம் போட்டால் அவரும் அடக்கி விடுகின்றார். நிருவாக சபை மெம்பருக்கு விண்ணப்பம் மகஜர் முதலியவைகள் அனுப்பினால் அவரும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுகின்றார். இவரைப் பற்றிய கதை மற்றும் அநேகம் உண்டு. இதுபோல் இன்னும் சில கலகங்கள் ஐரோப்பியர்களிலும் உண்டு. அவர்கள் மாற்றப்படும் ஊர்களுக்கு எல்லாம் (சுற்றுப்பிரயாணம்) சர்க்யூட் போகும் இடங்களுக்கெல்லாம் கீழ் அதிகாரியையோ குமாஸ்தாவையோ சம்சார சகிதம் கூட்டிக் கொண்டு போகின்றவர்களும் உண்டு. அவர் கூட சம்சார சகிதம் போகக் கூடியவர்களுக்கே சீக்கிரம் மேலுத்தியோகங்கள் கிடைப்பதும் அதற்கு சம்மதிக்காதவர்கள் எவ்வளவு யோக்கியர்களானாலும் அப்படியே இருப்பதுமான விஷயங்கள் எவ்வளவோ பார்க்கின்றோம்.

சட்டசபை மெம்பர்கள் யோக்கியதை அறியாதவர்கள் இருக்க முடியாதென்றே சொல்லுவோம். ஒவ்வொருவரும் தேர்தலுக்கு 1000, 10000, 50000 வரை ரூபாய்களை லஞ்சமாகவும் கூலியாகவும் செலவாகவும் செலவு செய்து பாமர ஓட்டர்களுக்குப் பணமும் கள்ளு சாராயமும் கொடுத்து உபாத்தியாயர்கள் கிராமாதிகாரிகள் முதலிய தரகர்கள் மூலம் ஓட்டுப் பெற்று மெம்பராகி சிலர் கட்சிகளை உண்டாக்கியும் சிலர் கட்சிகளில் சேர்ந்தும் அங்கத்தின் பதவியை தங்களுக்குப் பதவியும் உத்தியோகமும் கிடைக்கும் வகைகளுக்கு ஒரு சிறிதும் நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இல்லாமல் உபயோகித்து மக்களின் நலத்தில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் எவ்வெவ் வழிகளில் மக்களுக்கு விரோதமாகவும் வெள்ளைக்காரர்களுக்கு அனுகூலமாகவும் நடக்கக் கூடுமோ அவ்வளவு வகையிலும் நடந்து சுயநலத்தை கவனிப்பதல்லாமல் வேறுண்டோ? என்று கேட்கின்றோம்.

ஸ்தல நிர்வாகம்

ஜில்லா போர்டுகளின் நிலை மிக மிக பரிதபிக்கத் தகுந்தது. ஒரு மெம்பருக்காவது ஜில்லா போர்ட்டு எதற்கு ஆக ஏற்பட்ட தென்பதே தெரியாது. ஜில்லா போர்டு மெம்பர்களில் பெரும்பான்மையோர் இப்பதவிகளை தங்களுக்கு ஒரு பெருமைக்காக விரும்புகிறார்களே ஒழிய தங்கள் கடமையை அறிந்தவர்களாகவாவது அதில் கவலை உள்ளவர்களாகவாவது இருக்கின்றார்களா?

ஜில்லா போர்டு தலைவர்களும் தாங்கள் எப்படி இந்த உத்தியோகத்தில் நிரந்தரமாய் இருப்பது என்று அஸ்திவாரம் போடுபவர்களும் சட்டசபை மெம்பர் பதவி பெற இதை உபயோகித்துக் கொள்ளலாம் என்று இருப்பவர்களுமல்லாமல் ஜில்லா போர்டு வேலையை கவனிக்க வேண்டியவர்கள் மிகவும் அருமையாகவே இருக்கின்றார்கள். அனேக போர்டுகளில் பிரசிடெண்டோ அல்லது மெம்பர்களோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களோ தான் கன்றாக்டராயிருந்து வருகிறார்கள்.

தாலூக்கா போர்டுகளின் நிலைமையும் கேவலமாகவேதான் இருந்து வருகின்றது. அங்கு நடக்கும் தேர்தல்களும் கன்றாக்ட்களும் உபாத்தியாயர்களின் மாற்றங்களும் மெம்பர்களின் சுயநலங்களும் சிறிதாவது யோக்கியமானதென்று சொல்ல முடியாததாகவே பெரும்பான்மை இருந்து வருகின்றது.

முனிசிபல் சேர்மென்களோ இவர்கள் எல்லாரையும் விட மோசமானவர்களாகவே இருந்து வருகின்றனர். தேர்தல் அதிகாரத்தில் சேர்மென்கள் செய்யும் அயோக்கியத்தனங்கள் கணக்கிலடங்காது என்போம். தமக்கு வேண்டாத பேர்களை ஓட்டர் லிஸ்டில் சேர்ப்பது கிடையாது.

தனக்கு வேண்டிய அன்னக் காவடிகள் எல்லோரையும் கையில் இருந்து பத்துப் பத்தணா கொடுத்து ஓட்டர்களாக்கிக் கொள்வது.

தேர்தல் நியமனச் சீட்டை வாங்கி கிழித்து எரிந்து விடுவது.

தேர்தல் நியமனத்தை (நாமினேஷன் ஸ்லிப்பை) வித்திட்றா செய்து கொண்டதாக போர்ஜரி காகிதம் எழுதி வைத்துக் கொண்டு தள்ளி விடுவது, அனாவசியமான காரணத்தால் தேர்தல் நாமினேஷன் சிலிப் (நியமன விண்ணப்பத்தை) செல்லுபடியற்றதென்று சொல்லித் தள்ளிவிடுவது.

கட்டாயப்படுத்தி பயமுறுத்தி ஓட்டு வாங்குவது.

ராத்திரியில் பெட்டியை உடைத்து ஓட்டுகளைத் திருத்துவது.

அனாவசியமாக ஓட்டுகளை செல்லுபடி அற்றவை (இன்வாலிட்)களாக்குவது.

அதிக எண்ணிக்கை பெற்றவனை விட்டு விட்டு குறைந்த எண்ணிக்கை உள்ளவனை (டிக்ளேர்) கவுன்சிலராக்குவது.

இவ்வளவுக்கும் பரிகாரம் கோர்ட்டுக்கு போயாக வேண்டும். அப்படி கோர்ட்டுக்கு போனாலும் முனிசீப்புக்கு லஞ்சம் கொடுத்தலில் ஏறிய கை தான் ஜெயிக்கும்.

ஹைகோர்ட்டுக்கு போய்விட்டாலோ ஒரு குமாஸ்தாவுக்கு 10ரூ. கொடுத்து விட்டால் தப்பாக கவுன்சிலரானவரின் காலாவதி முடிவுவரை கேசு வெளிவருவதில்லை. சேர்மெனின் நிர்வாகமோ, குமாஸ்தாக்கள் உபாத்தியாயர்கள் முதலியவர்களின் சம்பளத்தில் பங்கு. கண்ட்ராக்டில் முதலிலேயே அட்வான்ஸ் என்று செக் எழுதி தானே பணம் எடுத்துக் கொள்வது. கண்ட்ராக்டர் கொடுத்த டெண்டருக்குமேல், தான் ரேட்டை உயர்த்தி டெண்டரை திருத்தி பணம் கொள்ளை அடிப்பது.

கவுன்சிலர்களுக்கு பங்கு கொடுப்பது, கலக்டர்களுக்கு சப்ளை செய்வது.

கலெக்டருக்கும் கவர்னருக்கும் வேண்டிய பாதிரிகளுக்கு குலாமாய் இருந்து முனிசிபாலிட்டி பணத்தையும் மிஷின்களுக்கு அள்ளிக் கொடுப்பதும், பல பெண் உபாத்தியாயர்களை சேர்மெனும் கவுன்சிலர்களும் படிப்பு நிர்வாக அதிகாரியும் குமாஸ்தாக்களும் பஞ்ச பாண்டவர்கள் போல் முறை வைத்துக் கொள்வது. தனக்கு 1000ரூ. கிடைப்பதற்கு முனிசிபாலிட்டியில் 5000ரூ. வேலைகளை இடித்து குமாஸ்தாக்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் 100ரூபா கண்ட்ராக்ட் விட்டு விட்டு புதிதாக 7000 ரூபாயுக்கு கட்டிடம் கட்டுவது. கட்டிடங்களையும், இடங்களையும் முனிசிபாலிட்டியின் அவசியத்திற்கு என்று 1000 ரூபாய் பெறுமானதை 8000க்கு விலை பேசி சேர்மென் 5000ரூ. எடுத்துக் கொண்டு இடக்காரனுக்கு 3000 கொடுப்பது.

இடக்காரன் அந்தப் பணத்தில் மானேஜருக்கும் சர்வேயருக்கும் ஓவர்சியருக்கும் ஆளுக்கு ரூ.100 கொடுப்பது.

பொய் பில் எழுதி பணம் எடுத்துக் கொள்வது. ரிகார்ட்டுகளை திருத்துவது. தனது ஆள்களுக்கு வேலை கொடுக்க புது உத்தியோகங்களை உண்டாக்குவது.

ஆறுமாதம் ஏழுமாதம் மீட்டிங்கு போடாமல் இருப்பது. தனக்கு வேண்டாத கவுன்சிலரை மூன்று மாதம் வரவில்லை என்று தள்ளிவிடுவது.

கடிகாரத்தை திருப்பி வைத்து முன்னால் வந்து தனக்கு வேண்டியவர்களை வைத்து வேண்டியபடி எழுதிக் கொண்டு போய்விடுவது.

தீர்மான புஸ்தகங்களில் வரி பிளந்தும் திருத்தியும் புது தீர்மானங்களையும் அதிகப் பணத்தையும் சாங்ஷன் செய்ததாக செய்து கொள்வது.

இவைகளை கலெக்டரிடம் சொன்னால் மந்திரிகளை கேட்கச் சொல்லுவது.

மந்திரிகளிடம் சொன்னால் கோர்ட்டுக்குப் போகச் சொல்லுவது. கோர்ட்டுக்குப் போனால் முன் லஞ்சம் கேட்பது.           

இன்னமும் இது போல் நடக்கும் அக்கிரமங்கள் எண்ணத் தொலையாது என்றே சொல்லுவோம்.

இந்நிலையில் சர்க்கார் ஸ்தல ஸ்தாபன சட்டத்தை திருத்தப் போவதாக பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது.

அத் திருத்தங்களில் ஏதாவது பலன் ஏற்படும் என்பதாக நாம் சொல்வதற்கில்லை. சர்க்கார் ஸ்தல ஸ்தாபனங்களில் யோக்கியமான திருத்தம் செய்ய நினைப்பார்களானால் முனிசிபாலிட்டி, தாலூக்கா போர்டு, ஜில்லா போர்டு இம் மூன்றையும் உடனே எடுத்துவிட்டு ரிவினியூ அதிகாரிகள் வசம் ஒப்படைத்து விட வேண்டும். அப்படிச் செய்வதில் வரி கொடுப்போர்களுக்கு அநேக நன்மைகள் உண்டு. ஆனால் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளத்தக்க பக்குவம் இது சமயம் நமது மக்களுக்கு போதாது. ஆதலால் இது சமயம் எதையும் கலைக்க வேண்டியதில்லை.

மற்றபடி நிர்வாகத்திற்கு சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து விட வேண்டும்.

ஜில்லா போர்டுக்கு ஒரு சப் கலெக்ட்டரும் தாலூக்கா போர்டுக்கு ஒரு தாசில்தாரும் முனிசிபாலிட்டிக்கு ஒரு டிப்டி கலெக்ட்டரும் ஆக 35 வயது முதல் 45 வயதுக்கு மேல் படாத உத்தியோகஸ்தர்களை சம்பளம் கொடுத்து நிர்வாக உத்தியோகஸ்தராக நியமித்து விடவேண்டும்.

இரண்டு வருஷத்திற்கு மேல் ஒருவர் அதில் இருக்கக் கூடாது. கவுன்சிலர்களும் சேர்மேனும் பிரசிடெண்டும் தீர்மானம் நிறைவேற்றிவிட்டுப் போய்விடவேண்டும். சிப்பந்திகள் நியமிப்பதோ வேலைகள் கண்ட்ராக்ட் கொடுத்து நடத்துவிப்பதோ ஆபீசு நிர்வாகமோ எக்ஸிக்யூடிவ் ஆபீசர் என்கின்ற மேற்படி நிர்வாக உத்தியோகஸ்தருடைய பொறுப்பாய் இருக்க வேண்டும். நாமிநேஷன்கள் இருக்கக் கூடாது. ஆறு வருஷத்திற்கு ஒரு முறை தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

காலி ஏற்பட்டால் கவுன்சிலர்களே நியமித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தேர்தல்கள் அடிக்கடி ஏற்பட்டு ஊருக்குள் அடிக்கடி கலவரங்கள் ஏற்படக் கூடாது என்பதுதான். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படும் வரையில் மகமதியர், கிறிஸ்துவர், ஆதிதிராவிடர், பார்ப்பனர் ஆகிய தனிப்பட்ட வகுப்புக்கு தனித் தொகுதி ஏற்படுத்திவிட வேண்டும்.

தேர்தல்களில் எந்தக் காரணத்தைக் கொண்டும் சேர்மேனோ தலைவரோ பிரவேசிக்க இடம் கொடுக்கக் கூடாது. ஓட்டர்களை குறைப்பதானாலும் குறைத்துக் கொள்ளலாம். அல்லது வரி கொடுக்க லாயக்குள்ளவர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை கொடுக்கலாம். ஆனால் வரி பாக்கி உள்ளவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்கிற முறை கூடாது.

ஏனென்றால் சமயத்துக்கு பணம் கையில் இல்லாத காரணத்தால் உரிமை இழக்க இடம் கொடுக்கக் கூடாது. இம் மாதிரி ஸ்தல ஸ்தாபனங்கள் ஜனப் பிரதிநிதித்துவம் பொருந்தியதல்ல என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதன் இலாக்கா நிர்வாகம் ஜனப் பிரதிநிதி என்று சொல்லப்பட்ட மந்திரியின் ஆட்சியின் கீழ் இருப்பதாலும் நிர்வாக உத்தியோகஸ்தர்களை ஸ்தல ஸ்தாபனங்கள் தங்கள் பொறுப்பில் கடன் வாங்கிக் கொள்வதாலும் ஜனப் பிரதிநிதித்துவம் மாறுவதில்லை.

நிர்வாக உத்தியோகஸ்தர்கள் சம்பளமானது வருஷம் ஒன்றுக்கு ஜில்லா போர்டுக்கு ரூ.12000 தாலூக்கா போர்டுக்கு ரூ.5000 முனிசிபாலிட்டிக்கு ரூ.6000 ஆகக் கூடும். இந்த செலவுகள் இந்த ஸ்தாபனங்களின் யோக்கியதைக்கு அதிகம் என்று சொல்ல முடியாது.

இப்போதைய கவுரவ தலைவர்கள் தாக்ஷணியத்தாலும் போதிய சாவகாசம் இல்லாததாலும் மற்றும் பல காரணங்களாலும் அந்தந்த ஸ்தாபனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் இதைப் போல இரண்டு மடங்கு மூன்று மடங்கு சில இடங்களில் நான்கு மடங்கும் ஆகின்றன.

தலைவர்கள் நாணயக் குறைவில் நஷ்டமாவது கணக்கே இல்லை. தவிர ஜில்லா தாலூக்கா, முனிசிபாலிட்டி தலைவர்கள் சட்டசபைக்கு நிற்கக் கூடாது என்கின்ற நிபந்தனை இருப்பது நலமாகும். ஏனெனில் இதை உத்தேசித்து எவ்வளவோ ஒழுங்குத்தவறுதல் ஏற்படுவதோடு தனக்குத் தானே எஜமானனாகியும் ஆகிவிடுகிறார்கள். கீழே அக்கிரமங்கள் செய்து விட்டு மேலே (சட்டசபையில்) தாங்களே இருந்தால் அதனால் நியாயம் கிடைக்காமல் போய்விடும்.

எனவே, தற்கால ஸ்தல ஸ்தாபனங்களில் இவ்வளவாவது சீர்திருத்தம் ஏற்பட்டாலொழிய அவை ஒழுங்காக நடைபெறும் என்றாவது மக்களை யோக்கியமாக இருக்கும்படி செய்யும் என்றாவது சொல்வதற்கில்லை.

தாலூகா போர்டை எடுத்து விடுவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. மற்ற ஸ்தாபனங்களையும் எடுத்து விடுவதிலும் நமக்குக் கவலை இல்லை. கொஞ்ச காலத்திற்கு சட்டசபையை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்ற ஜனப்பிரதிநிதி ஸ்தாபனங்களை எடுத்துவிட்டு சட்டசபையிலுள்ள ஜனப்பிரதிநிதி மந்திரிகளுக்கு அதன் தணிக்கையை விட்டுவிட்டால் நாட்டிற்கு எவ்வளவோ நன்மையும் ஒற்றுமையும் உண்டாகுமென்பதே நமது முடிவு.

ஏனெனில் இப்போதைய நிலையில் தேர்தல் முறையானது நமது நாட்டிற்கு எமனாய் இருக்கின்றதுடன், நாட்டு நலத்தின் பொறுப்பை. அரசாங்கத்தார் நமது தலையில் போட்டு நாட்டைச் சுரண்டும் வேலையை மாத்திரம் அவர்கள் வைத்துக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்கள். நாம் சரியானபடி வேலை செய்தாக வேண்டுமானால் அப்பொறுப்பு அவர்கள் தலையிலேயே இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை.

அதாவது இப்பொழுது அவ்வளவு வரிகளைக் கொடுத்துவிட்டு ஏதாவது காரியங்கள் கேட்டுப் போனால் நாம்தான் ஒருவரை ஒருவர் குடுமியைப் பிடித்துக் கொள்ளும் மாதிரியில் அரசாங்க முறை இருக்கின்றதே தவிர ஆட்சி புரிபவர் நேரில் ஜவாப்தாரியாயிருப்பதற்கில்லாமல் இருக்கின்றார்கள்.

நம்மவர்கள் செய்யும் அக்கிரமங்களை கவனிக்க ஆரம்பித்தால் ஜாதியும், கட்சியும், சுயநலமும் குறுக்கிட்டு காரியங்களை அதிகமாகக் கெடுத்து விடுகின்றதைத் தினமும் பார்த்து வருகின்றோம். எனவே நமக்குத் தணிக்கை செய்யும் அதிகாரமும், வெள்ளையருக்கு வேலை செய்யும் கடமையுமுடையதாக நமது சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் மேல்கண்ட நமது அபிப்பிராயத்தின் தத்துவமாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 20.05.1928)

Pin It