புதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு சட்டசபையின் மூலம் நிகழ்ந்த நன்மைகள் என்னவென்று பார்ப்போமானால் ஒன்றும் இல்லையென்று சொல்ல வேண்டியதுடன் பல கெடுதிகள் நடந்திருப்பதாகவும் சொல்லாமலிருக்க முடியாது.

periyar MGRபுது சட்டசபை கூடிய உடன் முதன் முதல் நடந்த சங்கதி பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தில் இருந்த தாலூக்கா ஜில்லா போர்டுகளை பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அதிலும் பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள்.

அடுத்தபடியாக ‘ஜஸ்டிஸ்’ மந்திரிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சர்வகலாசாலை - யுனிவர்சிட்டி சட்டத்தை திருத்தி அந்த இலாக்கா முழுவதும் பார்ப்பனமயமாக்க ஸ்ரீ சத்தியமூர்த்தியால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் இருக்கிறது.

மூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க பெரிதும் போராடி பாடுபட்டு வருவதாகிய வருணாசிரம தர்மத்திற்கு சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாகப் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகுபாடுகளுக்கு ஆதாரம் கற்பிக்கப்பட்டது. இன்னும் இதுபோன்ற மற்றும் பல காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதும் பார்ப்பனரல்லாதார்களுக்கு பிரதிகூலமும் கொடுமையும் இழிவுமானது என்பதில் சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாதார் யாருக்கும் சந்தேகமிருக்காது.

இது நிற்க! பார்ப்பனரல்லாதார்களுக்கு அனுகூலமாய் ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாளால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது கோவில்களின் பேரால் சில பெண்களுக்கு பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடும் வழக்கத்தை நிறுத்த ஒரு சட்டம் கொண்டு வரும்படி சர்க்காரை கேட்டுக் கொள்ளுகின்றது என்கின்ற தீர்மானம். இது நிறைவேறி இருந்தாலும் காரியத்தில் ஒரு பலனையும் கொடுக்கத்தக்கதல்ல என்றே சொல்லுவோம். சர்க்காரைக் கேட்டுக் கொள்ளும் காரியம் என்ன பலனடையும் என்பது யாவருக்கும் தெரிந்ததுதான். அதுவும் பார்ப்பனர் சட்ட மெம்பராய் இருக்கும் காலத்தில் என்ன காரியம் நடைபெறக்கூடும் என்பதும் நன்றாய் தெரிந்த விஷயம்தான். இத்தீர்மானம் கூடாது என்பதற்கு பார்ப்பன சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர வேறு எவ்வித முக்கிய தீர்மானமும் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவில்லை.

4, 5 தடவை சட்டசபை கூடியாய்விட்டது. இதற்குள் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படவில்லை. பார்ப்பனர்கள் சுமார் 15 பேர் தான் சட்டசபையில் உண்டு. பார்ப்பனரல்லாதார் புற்றீசல் போல் பலபேர் இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்காவே சட்டசபைக்கு போவதாக பறை சாற்றி பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனரல்லாதாரின் ஓட்டுகளைப் பெற்றுப் போனவர்கள். இதுவரை என்ன செய்தார்கள்? எத்தனை தீர்மானங்கள் கொண்டு போனார்கள் என்று கேட்கின்றோம். மந்திரி வேலைக்கு பிரயத்தனப்பட்டதும், முடியாமல்போன பிறகு மந்திரிகளுடன் சண்டைப் போட்டதும் மந்திரிகளை மிரட்டி நியமனங்கள் பெற்றதும் அல்லாமல் வேறு என்ன காரியம் செய்ய முடிந்தது என்று பாமர மக்கள் நினைக்கும்படியாகத்தானே இருக்கின்றது. அதே காரியங்களைத்தானே பார்ப்பனர்களும் செய்து வருகின்றார்கள். பார்ப்பன சூழ்ச்சிகளை எதிர்த்து வருவதை ஒரு வெற்றியாக சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் இதுவேதானா நமது லக்ஷியம் என்று கேட்கின்றோம்.

எத்தனை மகாநாடுகளில் நமது நலத்தைக் குறித்து எவ்வளவு தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவைகளுக்கு சட்டசபை மெம்பர்கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா? ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா? பார்ப்பனரல்லாதார்களுக்கு சரியான பிரதிநிதித்துவமில்லாத இலாக்காக்களில் பிரதிநிதித்துவம் கிடைக்க முயற்சித்தார்களா என்று கேட்கின்றோம். ஒரு சமூகத்திற்கே பிரதிநிதிகளாகப் போய் தங்கள் காரியங்களை மாத்திரம் பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்லும்படி நடந்து கொள்வது யோக்கிய பொறுப்பாகுமா?

பார்ப்பன மெம்பர்கள் வெகு சொற்பமாயிருந்தாலும் அவர்களது சமூக முன்னேற்றத்திற்கும் நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து இழிவுபடுத்தவும் எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றார்கள்? அந்த உணர்ச்சி ஏன் பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கக் கூடாதென்று கேட்கின்றோம். ‘காங்கிரஸ்’, ‘தேசீயம்’ என்பவைகள் எப்படி பார்ப்பனர்கள் உத்தியோகம் சம்பாதிக்கும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ பார்ப்பன ஆதிக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ அது போலவே பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களை பார்ப்பனரல்லாதார்களில் யாரோ சிலர் கைப்பற்ற கூடியதாக மாத்திரம் இருக்கின்றது என்று நமது எதிரிகள் கருதும்படியாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் பாடுபடும் கருத்தும் வரவர மறைந்து வருகிறது.

எவ்வளவோ ஊக்கமும், எழுச்சியும் உள்ள இந்தக் காலத்தில் கூட ஒரு காரியமும் செய்ய முடியவில்லையானால் இனி எப்போதுதான் சாதிக்க முடியும். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் ஒரு கூட்டம் கூட்டி மீதி உள்ள காலத்திற்குள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக என்னென்ன மசோதா கொண்டு போக வேண்டியதென்று ஒரு முடிவுக்கு வந்து அவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இதுவரை செய்த வேலைகள் கண்டிப்பாய் திருப்தியற்றதென்றும் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்வது மாத்திரம் ஓட்டுப் பெறக்கூடிய யோக்கியதாபத்திரமாகாதென்றும் செய்த வேலையை காட்ட வேண்டிய நிலைமை முதலியவைகள் கண்டிப்பாய் நேரிடும் என்றும் இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)

Pin It