periyaar 350தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு நமது பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் பொறாமை என்னும் போதையில் பட்டு கண்டபடி உளறுகிறார்கள்.  இத்தேர்தலில் நடந்த தப்பிதம் என்ன என்பதையும், இதனால் யாராவது பிரசிடெண்டு ஸ்தானத்திற்கு நிற்பது ஞாய விரோதமாய்த் தடைப்பட்டு விட்டதா என்பதையும் ஒருவராவது எழுதவேயில்லை.  தலைவர் பதவி காலியாவதற்கு முன்னாலேயே தேர்தல் நடத்தி விட்டார் என்று ஒரே மூச்சாக சத்தம் போடுகிறார்கள்.  இது ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தானாகவே நடத்திய தேர்தலா, கவர்ன்மெண்டாரே இந்தப்படி தேர்தல்  போடும்படி உத்திரவு அனுப்பினார்களா என்பதை தெரிவிக்காமல் வீணாய்க் கத்துவதின் ரகசியம் என்ன?  எப்படியாவது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தின்  பேரில் பாமர ஜனங்களுக்கு ஒரு கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும் என்கிற அயோக்கியத்தனமே அல்லாமல் இதில் வேறு ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கிறதா?  இம்மாதிரியே ஒரு பார்ப்பனப் பிரசிடெண்டும் கொஞ்ச காலத்திற்கு முன் செய்து கொண்டதைப் பற்றி இப்பார்ப்பனப் பத்திரிகைகள் ஏன் கேட்டிருக்கக்கூடாது?  இதற்கு நியாயமிருக்கிறது என்று சொன்ன பார்ப்பன அட்வொகேட் ஜெனரலை ஏன் கண்டிக்கக்கூடாது?  காலாவதிக்கு முன்னால் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்புக் கொடுத்த பார்ப்பன முனிசீபு, பார்ப்பன ஜட்ஜு ஆகியவர்களை ஏன் கண்டிக்கக்கூடாது?  அன்றியும் இதனால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டது.  யார் வீட்டுப் பெரியவாள் தேடிய சொத்தை யார் எடுத்துக்கொண்டார்கள்?  

ஜில்லா போர்டு என்பது எல்லாருக்கும் பொதுவே ஒழிய பார்ப்பனர்களுக்கு பழைய  காலத்திய முட்டாள் அரசர்கள் விட்டது போன்ற மானியமும் அல்ல,  அக்கிரஹாரமுமல்ல. அப்படிக்கிருக்க ஸ்ரீமான் பன்னீர்செல்வம் மாத்திரம் வரக்கூடாது என்பதற்கு காரணம் என்ன?  இதற்கு முன் பிரசிடெண்டாயிருந்த வி.கே. ராமா நுஜாச்சாரியார் யோக்கியதையை விட எந்த விதத்தில் பன்னீர்செல்வத்தின் யோக்கியதை கெட்டுப்போய்விட்டது?  ஸ்ரீமான் ராமாநுஜாச்சாரியார் காலத்தில் சத்திரம், சாவடி, பள்ளிக்கூடம், உத்தியோகம் எல்லாம் பார்ப்பன மயமாயும், முக்கியமாய் அய்யங்கார்கள் சாப்பிடும் அன்ன சத்திரமாயும் இருந்து வந்தது யாருக்கும் தெரியாதா?  இப்போது ஸ்ரீமான் பன்னீர்செல்வம் அந்த ஸ்தானத்துக்கு வந்ததும் ஸ்ரீமான் ராமாநுஜாச்சாரியாரைப் போல் இருந்திருப்பாரேயானால் பிராமணர்களை எல்லாம் வெளியில் துரத்திவிட்டு வெறும் கிறிஸ்துவமயமாகவே ஜில்லா போர்டை செய்திருக்க வேண்டும்.  அப்படிக்கில்லாமல், ஸ்ரீமான் பன்னீர்செல்வம் யோக்கியரானதால் அம்மாதிரி செய்யாமல் எல்லோரும் பொறுக்கித்தின்னும் படியாகவும், கணக்குப் பார்த்தால் பார்ப்பனர்களே தங்கள் அளவைவிட எண் மடங்கு அதிகமாய் பொறுக்கித் தின்னும் படியாகவும் வைத்துக்கொண்டிருக்கிறார்.  இதற்கு பிரதி உபகாரம் தான் இப்பார்ப்பனர்கள் போடும் சத்தம் போலும். பாம்புக்கு பால் வார்த்தால் கடிக்காமல் இருக்கும் என்று நம்புவதுபோல் இருக்கிறது பார்ப்பனருக்கு உதவி செய்தால்  அவர்கள் அதை அறிவார்கள் என்று எண்ணுவது!  இனி, இது முதலாவது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு நியாய உணர்ச்சி ஏற்பட்டு பார்ப்பனர்களுக்கு மாத்திரம் நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மறந்து எல்லா சமூகத்தாருக்கும் அவரவர்கள் அளவுக்குத் தகுந்தபடி நியாயம் வழங்கி வருவார் என்று நினைக்கிறோம்.  

எதில் செய்தாலும் செய்யாவிட்டாலும் முக்கியமாய் பள்ளிக்கூட உபாத்தியாயர் இலாகாவில் மாத்திரம் கண்டிப்பாய் 100 - க்கு 90 - க்கு குறையாத பார்ப்பனரல்லாத உபாத்தியாயரையே நியமிக்க வேண்டும்.  யோக்கியதாம்சம் பெற்ற உபாத்தியாயர்கள் இல்லையானால் பார்ப்பனரல்லாதாரிலேயே உபாத்தியாயர் படிப்புக்காக பணம் கொடுத்து ஒரு வருஷம் உபாத்தியாயர் தொழிலுக்கு படிக்கச் செய்து அவர்களையே நியமிக்க வேண்டும்.  முக்கியமாய் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிப்பதில்லை என்று சொல்லப்படுவதற்கும் போதுமான படித்த பிள்ளைகள் கிடைக்காமல் போவதற்கும் அநேகமாய் பார்ப்பன உபாத்தியாயர்களே காரணம் என்பதை அநேக வழிகளில் கண்டு பிடித்தாய்விட்டது. ஜில்லா தாலூகா போர்டுகளும் முனிசிபாலிட்டிகளும் படிப்புக்கு படிப்புக்கு என்பதாகச் செலவு செய்யும் பணங்கள் எல்லாம் ஒரு கூட்டத்தார் படிப்புக்கே பிரயோஜனப்படுகிறதே அல்லாமல் பொது மக்களுக்கு உதவுவதே கிடையாது. ஆகையால் இவைகள்  எல்லோருக்கும் உதவ வேண்டுமானால் பார்ப்பனரல்லாதாரைப் பிடித்து நூற்றுக்கணக்காக உபாத்தியாயர் வேலைக்கு அனுப்ப வேண்டும்.  அந்த ஸ்தாபனங்களில் நூற்றுக்கு இத்தனை உபாத்தியாயர்கள்தான் பார்ப்பனர்களாயிருக்கலாமென்றோ அல்லது நூற்றுக்கு இத்தனை உபாத்தியாயர்கள் பார்ப்பனரல்லாதார்களாயிருக்க வேண்டுமென்றோ தீர்மானம் செய்து கொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும்.  இதனால் கொஞ்ச காலத்திற்கு படிப்பு பாதிக்கப்படும் என்பதாக பார்ப்பனர்கள் கூச்சல் போட்டாலும் பிறகு நமக்கு அபரிதமான லாபத்தைக் கொடுக்கும். கூடுமான வரையில் தலைமை உபாத்தியாயர்கள் வேலையில் பார்ப்பனரல்லாதாரையே நியமிக்க வேண்டும்.  

யோக்கியமான பார்ப்பன உபாத்தியாயர் என்று சொல்லப்படுபவரை விட அயோக்கியமான பார்ப்பனரல்லாத உபாத்தியாயர் என்று சொல்லப்படுபவரே பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் லாபகரமுள்ளவராயிருப்பார்.  ஏனெனில் யோக்கியமான பார்ப்பனன் என்பவனின் இயற்கை குணமே பார்ப்பனரல்லாதாரை இழிவாயும் தாழ்மையாயும் கருதுவதுதான். பார்ப்பனனுக்கு பிறவியிலேயும் பழக்கத்திலேயும், வழக்கத்திலேயும் பார்ப்பனரல்லாதாரிடத்தில் அருவருப்பு ரத்தத்தில் ஊறி கலந்திருக்கிறது. இதை எவ்வழியிலும் அவர்கள் மறைக்க முடியாது.  அநேகமாய் மறைப்பதுமில்லை.  பள்ளியில் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயரே தான் உயர்ந்த ஜாதியான் என்றும் படிப்பிக்கப்படும் பிள்ளை தாழ்ந்த ஜாதியான் என்றும் உணர்ச்சி உள்ளவராயிருந்தால் அவனிடம் படிக்கும் குழந்தைப் பிள்ளைகளுக்கு எப்படி சுயமரியாதை, ஆண்மை, சமத்துவம் இவைகள் உண்டாகும் என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.  பார்ப்பனப் பிள்ளைகளுக்கு பார்ப்பன உபாத்தியாயர்களே வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லுவார்களேயானால் அவர்களுக்கென்று இவ்வளவு பணம் என்பதாக ஒதுக்கி வைத்து அதை அவர்களிடமே ஒப்புவித்து அவர்கள் இஷ்டம்போல் தனியாக பார்ப்பனப் பிள்ளைகளுக்கு என்பதாக பள்ளிக்கூடம் வைத்து நடத்திக் கொள்ளுவதானாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.  சுயமரியாதை இல்லாமல் செய்யும் மந்திரி உத்தியோகத்தை விட சுயமரியாதையுடன் செய்யும் தோட்டி உத்தியோகமே பெரிதானது.  ஆதலால் நமது பிள்ளைகள் மந்திரி உத்தியோகப் படிப்பு படிப்பதை விட சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படியான படிப்பு படிப்பதுதான் தேசத்திற்கும், சமூகத்திற்கும் முற்போக்கைக் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 06.02.1927)

Pin It