நமது பார்ப்பனர்கள் தமிழ்நாடு கான்பரன்ஸ் என்பதாக பெயர் வைத்து தமிழ்நாட்டுப் பொது மக்களின் பேரால் ஒரு மகாநாடு என்று ஒரு சிறு கூட்டம் கூட்டி அதன் மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவோ தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்தும் கடைசியாக மகாநாட்டின் உண்மை வேஷம் வெளியாகி விட்டது. மகாநாட்டுக்கு உபசரணைக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் கோவிந்தராஜுலு முதலியார் அவர்கள் அவசரத்தில் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் கொண்டு வந்து வைக்கப்பட்டவராவார். அவர் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் நல்ல சுபாவமுள்ளவர் என்பதும், பெஸன்டம்மையார் காலம் முதல் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கமென்னும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மருவிய காங்கிரஸ் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்பட்டது முதல் கொண்டும் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாய் நடந்து பார்ப்பனர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அன்னவரைப் பிடித்து உபசரணை அக்கிராசனர் வேஷம் போட்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை நன்றாய் வையும்படி ஏவினர்.

ஸ்ரீமான் முதலியாரும் தன்னை நம்பி அக்கிராசனராக்கியவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் ஆசை தீர ஒரு மூச்சு பார்ப்பனரல்லாதார் புத்திசாலித்தனத்தை இகழ்ந்தும், பார்ப்பனரின் புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்தும் பேசி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும் குறை கூறி தனது நடனத்தை முடித்துக் கொண்டார். மகாநாட்டுத் தலைவரோ சொல்ல வேண்டியதில்லை. பெரிய வருணாசிரம தர்மப் பார்ப்பனர்.

நமது நாட்டுப் பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளில் சிலதுக்கு கொள்கையும் இல்லை, சில சமயங்களில் மானமும் இல்லை என்று சொல்லி விடலாம். எப்படியாவது பொழுது விழுந்து பொழுது புலர்ந்தால் போதும் மற்றபடி உண்மையைப் பற்றிக் கவலையில்லை. ஒரு சமயத்தில் பார்ப்பனர்கள் அயோக்கியர்கள் என்பார்கள். ஆனால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் இவர்கள் மூவர் மாத்திரம் யோக்கியர்கள் என்பார்கள். மற்றொரு சமயம் ராஜகோபாலாச்சாரியார் மாத்திரம் யோக்கியர் என்பார்கள். மற்றொரு சமயம் சதாசிவய்யர் மாத்திரம் யோக்கியர் என்பார்கள். மற்றொரு சமயம் அரசியல் பார்ப்பனர்கள் மாத்திரம் அயோக்கியர்கள் ஸ்ரீமான் மு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் யோக்கியர் என்பார்கள். ஸ்ரீமான் மு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் எந்தப் பார்ப்பனர்? பஞ்சாங்கப் பார்ப்பனரா? அல்லது வருணாசிரம பார்ப்பனரா? அல்லது அரசியல் பார்ப்பனரா? என்பதைச் சொல்லமாட்டார்கள். இந்த நிலைமையில் ஸ்ரீமான் மு.ஏ. ரங்கசாமி அய்யங்காருக்கு யோக்கியர் பட்டம் எப்படிக் கட்டினார்கள்? எதற்காக அவரை ‘அரசியல் பார்ப்பனர்கள் எல்லாம் அயோக்கியர்’ என்று ஒப்புக் கொள்ளப்பட்டவராலேயே “முதல் முதல்” தெரிந்தெடுக்கப்பட்டாரோ தெரியவில்லை.

periyar 524

அந்த மகானுக்கு தெய்வானுகூலத்தால் ஒரு சவுகரியம் உண்டு. அதாவது “அங்கு என்ன நடந்தது. எனக்கு ஒன்றும் கேட்க வில்லையே” என்று சொல்லி தப்பித்துக் கொள்ளக் கூடும். இதைத் தவிர வேறு எந்த வழியில் தமிழ் மாகாண மகாநாட்டுக்கு தலைவர் யோக்கியதை பெற்றவர் என்பதும் தெரியவில்லை. தேசத்திற்காக, நாட்டிற்காக, சமத்துவத்திற்காக, ஒத்துழையாமைக்காக, முட்டுக்கட்டைக்காக என்ன செய்தார். ராஜாங்க சபைக்குப் போனார், சட்டசபைக்குப் போனார் என்பதைத் தவிர செய்ததென்ன? ஒன்றும் செய்ய வேண்டாம் என்றாலும், யோக்கியமாகவாவது நடந்து கொண்டாரா என்று பார்த்தால் அயோக்கியத்தனமாக ஒரு உதாரணக்கதை சொல்லியிருக்கிறார். ஒரு பார்ப்பனரல்லாதாருக்காவது இக் கதையின் இழிவு தெரியவில்லை. அதோடு மாத்திரமல்ல அவரைப் புகழ்ந்துமிருக்கிறார்கள். ஐயோ! நமது மானங்கெட்டத் தன்மையை என்ன வென்று சொல்லுவது.

அவர் உதாரணமாகச் சொன்ன கதை என்னவென்றால் கூண்டில் அடைபட்டுக் கிடந்த புலியை ஒரு பிராமணர் விடுவித்து விட்டாராம். அந்தப் புலி வெளியே வந்து அவனையே தின்னப் பிரயத்தனப்பட்டதாம். இந்த விசுவாசத் துரோகத்தை வேறு யாவரும் கேட்கவில்லையாம். கடைசியாக ஒரு நரியிடம் போய் பிராமணர் அழுதாராம். நரி வந்து பஞ்சாயத்து செய்யும் போது புலி எப்படியிருந்தது, பிராமணன் எப்படித் திறந்து விட்டான் என்பதை நேரில் பார்க்க ஆசைப்பட்டதால் பழையபடி புலி உள்ளே போய் தான் இருந்த மாதிரியை காட்டிற்றாம். பிராமணரை கதவை இருகப் பூட்டி விட்டு தன் வேலைக்குப் போகும்படி நரி சொல்லிக் கொடுத்ததாம்.” அது போல் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாராகிய புலிகள் கூண்டுக்குள் அடைபட்டிருந்ததை வெளியாக்கினதாகவும், விசுவாசங் கெட்டப் பார்ப்பனரல்லாதார் வெளியாக்கிய பார்ப்பனர்களை வைததாகவும், சூசனை காட்டியிருக்கிறார். இதில் நரிகள் யாரோ தெரியவில்லை. ஸ்ரீமான்கள் குழந்தை, குப்புசாமி முதலியார், ஷாபி மகம்மது சாயபு, அமீத்கான் சாயபு, பாவலர், கோவிந்தராஜுலு முதலியார், சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆகியவர்களோ அல்லது ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு, சு.மு. ஷண்முகம் செட்டியார், வெங்கிடபதி ராஜு, முத்தையா முதலியார் போன்றவர்களோ அல்லது பணம் கொடுத்த மடாதிபதிகள் மகந்துகள் முதலியவர்களோ அல்லது ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரி, ரங்கசாமி அய்யங்காரோ அல்லது எஸ்.சீனிவாசய்யங்காரோ அல்லது வெள்ளைக்காரர்கள்தானோ இன்னாரைத் தான் ஸ்ரீமான் மு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் மனதில் குறித்துச் சொன்னார் என்பது விளங்கவில்லை. அது எப்படியானாலும் பார்ப்பனரல்லாதாருக்கு இக்கதை எவ்வளவு இழிவைக் கொடுக்கிறது என்பதை மாத்திரம் குறிப்பிடுகிறோம்.

தவிர ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றி புகழ்ந்திருப்பதை நோக்கும்போது ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்கார் யோக்கியதை மண்டுகளுக்கும் விளங்காமல் போகாது. அவர் புகழ்வதாவது: “தீர்க்க தரிசனமுடைய தலைவர் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மக்களின் அறியாமையை போக்கி, ஜாதி பேதத்தை ஒழிக்க அவரது முயற்சியே பயனளித்தது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய எல்லா குணமும் அவரிடம் இருக்கின்றன. அவரது அறிவின் திறமையும், தியாக உணர்ச்சியும், தேசாபிமானமும், பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது. அவரில்லாதிருந்தால் நமது கட்சி என்னவாயிருக்கும்?” என்று பேசியிருக்கிறார். இதிலிருந்து ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்காரின் மன உணர்ச்சி இப்படிப்பட்டதென யாரும் சுலபத்தில் அறியலாம். இவரை சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகள் வானமளாவப் புகழ்ந்ததின் இரகசியம் நமக்கு விளங்கவில்லை. அக்கிராசனர், தலைவர் ஆகியவர்களின் குணங்கள் இப்படி என்றால் நடந்த தீர்மானங்களின் கதி என்னவென்று பார்ப்போம்.

ஒன்பது தீர்மானங்கள். அதாவது:

1. இறந்து போனவர்களுக்கு அனுதாபம்.(இது வழக்கப் பிரகாரம்)

2. சர்க்கா சங்கத்தார் வேலையைப் பாராட்டியும் காங்கிரஸ்காரர் கதர் கட்ட கோரியும் ஒரு தீர்மானம். (இதற்காக தங்களுக்குள் ஒரு திட்டமும் இல்லை; பிரசாரமும் இல்லை. பேருக்கு மாத்திரம் தீர்மானம் போட்டதாக பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யத் தந்திரமே ஒழிய இதில் காரியம் ஏதாவது இருக்கிறதா.)

3. தீண்டாமையை ஒழிக்க காங்கிரசுக்கு சிபார்சு செய்வதாக ஒரு தீர்மானம். (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இதில் ஒரு வேலையும் இல்லை; ஒரு பிரசாரமும் இல்லை; காங்கிரசிலும் தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் ஏற்படலாம். இதில் தீண்டாமை ஒழிய வழி உண்டா? ஏதாவது திட்டமோ பிரசாரமோ செய்ய இடமிருக்கிறதா? ஆதலால் இதுவும் பாமர ஜனங்களை ஏய்க்கச் செய்த சூழ்ச்சி.)

4. அந்தமான் தீவிலுள்ள மாப்பிள்ளைமார்களைப் பற்றி ஒரு தீர்மானம். (இது பழய காலத்து காங்கிரஸ்படி ஒரு விண்ணப்பம். தவிரவும் மகம்மதியர்களை ஏமாற்றுவதற்கென்று ஏற்படுத்தின எழுத்து தீர்மானம். இதற்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு திட்டமோ வழியோ கிடையாது.)

5. ஸ்தல ஸ்தாபனங்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். (இதற்கு மாத்திரம் காங்கிரஸ் பிரசாரம், காங்கிரஸ் பணம் செலவு எல்லாம் உண்டு. எப்படி என்றால் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டுவதற்கு செலவும் பிரசாரமும் செய்யலாம். இது பார்ப்பனரல்லாதார் பெருவாரியாய் ஸ்தல ஸ்தாபனத்தில் இருப்பதை ஒழித்துப் பார்ப்பனர் கைப்பற்றச் செய்யும் சூழ்ச்சி. அடுத்த வருஷம் பூராவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த வேலையில்தான் இருக்கப் போகிறது என்பது உறுதி.)

6. இந்தியா பூரண சுதந்திரமடைவதே லக்ஷியமாய்க் கொள்ள வேண்டும் என்பது. (இது பெரிய புரட்டான தீர்மானம் என்று தான் சொல்ல வேண்டும். பூரண சுதந்திரமென்றால் அர்த்தம் என்ன என்று சொல்லவில்லை. சுயராஜ்யம் என்றால் அருத்தம் சொல்லாமல் ஏய்ப்பது போலவே இதுவும் ஒரு புரட்டான வார்த்தை. பாமர ஜனங்களை ஏய்ப்பதற்கு செய்யப்பட்ட தீர்மானமே அல்லாமல் பலனுள்ளதல்ல.)

7. தஞ்சை ஜில்லா போர்டு ரயில்களைக் குறித்தது. (இது தஞ்சாவூர் ஜில்லா போர்டை பார்ப்பனமயமாக்க ஏற்படுத்திக் கொண்ட ஆரம்ப சூழ்ச்சி.)

8. தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் மகாசபை பிரசாரம் செய்து தீவிரமாய் உழைக்க வேண்டும் என்பது. (இதற்கு மாத்திரம் காங்கிரஸ் பிரசாரம் செய்ய வேண்டுமென்று தீர்மானம் போட்டுக் கொள்வது. தொழிலாளர்களை சுவாதீனம் செய்து ஓட்டுப் பெறவே அல்லாமல் வேறல்ல. கதருக்கும் தீண்டாமைக்கும் காங்கிரஸ் பிரசாரம் செய்ய தீர்மானம் போடாமல் சும்மா வேண்டுதலையும், சிபார்சும் மாத்திரம் செய்திருக்கிறது. ஆனால் ஸ்தல சுயாட்சியைக் கைப்பற்றவும் தொழிலாளர்கள் ஓட்டுப் பெறவும் மாத்திரம் காங்கிரஸ் பணம் செலவு செய்ய வேண்டுமாம்.)

9. தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய மக்கள் சம உரிமை பெற ஒரு தீர்மானம். (இதைப்போல் மானங் கெட்டதும் திருட்டுத் தனமானதுமான தீர்மானம் வேறு எதுவுமே இல்லையென்று சொல்லலாம். ஏனென்றால் இந்தியாவில் இருக்கும் இந்திய மக்கள் குழந்தைகள் சாப்பிடுவதை கண்ணில் பார்க்கும் சமத்துவம் அடைவதானால் ஒரு மாதம் பட்டினி கிடக்கும் யோக்கியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள மக்களுடைய சமத்துவத்திற்கு தீர்மானம் போடுவதில் எவ்வளவு யோக்கியதை இருக்கும். )

இந்தியாவில் உள்ள இந்திய மக்கள் தெருவில் நடக்க வேண்டுமானால் வேலை இருந்தால்தான் போகலாம் என்று வியாக்யானம் செய்து மறுக்கும் பிரபுக்கள் தென்னாப்பிரிக்கா மக்கள் சமத்துவத்திற்கு தீர்மானம் போடுவது உண்மையானதாயிருக்குமா?

இந்தியாவில் இருக்கும் இந்திய மக்கள் தங்கள் கடவுளைப் பார்க்கக் கூடாது; அவர் அவர்கள் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று சொல்லுகிற யோக்கியர்கள் தென்னாப்பிரிக்கா மக்களுக்கு சமத்துவம் கொடுக்கத் தீர்மானம் போடுவதில் ஏதாவது நாணயம் இருக்குமா?)

ஆக 9 தீர்மானங்களும் எவ்வளவு மோசமானது என்பதும் பாமர மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றக் கூடியது என்பதும் வாசகர்களே யோசித்துப் பார்க்க வேண்டியது. இதையெல்லாம்விட ஒரு இரகசியம் என்ன வென்றால் மகாத்மா காந்தியின் தலைமையில் இம் மகாநாட்டிற்கு நம்பிக்கை இருக்கிறது” என்று ஒருவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வெளியிலேயே விவகரிக்க கொண்டு வராமல், விலை கொடுத்து அடக்கி விட்டதுதான். இதிலிருந்து மகாத்மாவிடம் மகாநாட்டுக்கு உள்ள பக்தியும் மகாத்மா கொள்கைகளை ஒப்புக் கொள்ளும் யோக்கியதையும் விளங்காமல் போகாது. மற்றபடி மகாநாட்டிற்குப் போன உண்மையான தேசபக்தர்களிடமும் உண்மையான தியாகிகளிடமும் மகாநாட்டில் இருந்த ஆள்களுக்கு எவ்வளவு அன்பு இருந்தது என்பதும் அங்குள்ள மற்ற ஆள்களுக்கு யோக்கியதை இன்னது என்பதையும் ஸ்ரீமான் தண்டபாணிபிள்ளை அவர்கள் விஷயத்தில் இருந்து தெரிந்து கொண்டிருக்கலாம்.

(குடி அரசு - கட்டுரை - 26.12.1926)

Pin It