இத்திருமணத்தில் மணமகனாக இருக்கும் கலியமூர்த்தி, சுயமரியாதை இயக்கத்திற்குச் செல்லப்பிள்ளை ஆவார். இயக்கக் காரியங்களுக்கு நாம் சொல்லாமலே நம் காரியப் பணிகளை முன்னிலையில் நின்று காரியமாற்றக் கூறியவர். மணமகளின் தந்தை இயக்கத்திற்கு மிகத் தொண்டாற்றியவர். தொண்டாற்றுபவராவார்.
மணமகன் அரசாங்கப் பணியில் உள்ளவர் இனி அதிகமாக இயக்கக் காரியங்களில் ஈடுபடாமல் ஆதரவு தருவதோடு நிறுத்திக் கொள்வது நலமென்ற கருதுகின்றேன். ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால், எங்காவது வேறு உத்தியோகத்தில் பார்ப்பான் இருப்பான். அவன் இவர் இயக்கக் காரியத்தில் ஈடுபடுவது தெரிந்தால் எப்படியாவது எந்தக் குறையையாவது, குற்றத்தையாவது சொல்லி வேலையிலிருந்து நீக்க முயற்சிப்பான். அதற்கு இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நம் நாட்டின் திருமணமென்றால் பெண்ணாயிருந்தால் வேலைக்காரி, ஆணையிருந்தால் எஜமானன். இத்தத்துவப்படிதான உலகமெங்கும் திருமணம் நடைபெறுகிறது.
சாதாரணமாக நம் நாட்டில் கல்யாணமில்லாமல் ஆண்கள் சமாளித்துக் கொள்ளலாம். பெண்களால் முடியாது. ஏன் பெண்களால் முடியாது என்றால், என்ன இவ்வளவு வயதாச்சு? இன்னும் கல்யாணம் பண்ணமாலிருக்கிறீர்கள் என்று கண்டவரெல்லாம் கேட்பார்கள். அதற்காகவாவது கல்யாணம் செய்ய வேண்டியவர்களாகிறார்கள். பெண்கள் அடிமைகளாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான், நம் கடவுள் - மதம் - சாஸ்திரங்கள் எல்லாமாகும். அடுத்து மக்களைப் பல சடங்குகளைச் செய்ய செய்து அதன் மூலம் மடையர்களாக்குவது. மற்றும் ஜோசியம் - ஜாதகம் - பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பது எல்லாமே மனிதனை மடையனாக்கப் பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதே ஆகும். தமிழனுக்கு இந்த முறையில் எதுவுமே சம்பந்தம் கிடையாது. இதுபோன்று முறை இருந்தது என்பதற்குத் தமிழில் எந்த இலக்கியத்திலுமே சான்று இல்லை.
ஜாதி முறையை விடக் கேடு இந்தக் கணவன் மனைவி முறையாகும்.
பறையன், சக்கிலிக் கூட மேல்ஜாதிக்காரன் சொல்வதைக் கேட்காமல், "நீ போ சாமி என்னால் முடியாது" என்று சொல்லி விட்டுப் போய் விடலாம். ஆனால் ஒருத்தன் மனைவி அதுபோலச் சொல்ல முடியாது. சொன்னால் கணவன் அவளைக் கொலை கூடச் செய்வான். இதுபோல் நடக்கின்றன. தினசரி பத்திரிகையில் நாள் தவறாமல் எங்காவது ஒரு நிகழ்ச்சி பெண் - ஆனால் கொலை செய்யப்படும் செய்தி வந்த வண்ணமிருக்கிறது. இதுவரை பழைய முறையில் செய்யப்பட்டதால் என்ன பலனடைந்து விட்டார்கள். மற்ற மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எடுத்துக்காட்டாக நடந்து கொண்டவர்கள் என்று சொல்லப்படும் சீதை, கண்ணகி, திரவுபதை இவர்கள் கதைகளைப் பார்த்தாலே தெரியுமே. பெரிய ஜோசியனை எல்லாம் வைத்து நேரம் காலம் பொருத்தம் பார்த்துச் செய்யப்பட்டது தானே இவர்கள் திருமணம். இவர்கள் என்ன சிறந்த வாழ்வு வாழ்ந்து விட்டனர். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.
மனித சமுதாய வாழ்வே முட்டாள்தனத்தை அடிப்படையாகக் கொண்டது தான். ஆடு, மாடு, நாய், மலம் இவற்றை விட இழிவானதாகக் கருதப்படுகிறது மனித சமுதாயம். நாயைத் தொடலாம் - ஆடு, மாடு, நாய், மலம் இவற்றை தொடலாம். ஆனால் ஒரு மனிதனைத் தொட்டால், அவன் கட்டியத் துணியோடு குளிக்க வேண்டுமென்பது ஜாதித் தன்மையாக இருக்கிறது. இதை விடக் கொடுமை ஒரு பெண் ஓர் ஆணைத் தொட்டால் அவளைக் கொல்ல வேண்டும் என்கிறான். கொல்கிறான். பெண்ணை அவ்வளவு இழிவாக்கி, அடிமையாக்கி ஆண் தனக்கே உரிமைப் பொருளாக்கி வைத்திருப்பதே காரணமாகும். அதன் அறிகுறி தான் இந்தத் தாலியாகும். இது பெண்ணை அடிமையாக்குவதன் சின்னமாகவும், முண்டச்சியாக்கும் சின்னமாகவும் அணியப்படுவதே யாகும். அந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட தாலி அணிவதைத் தவிர்த்தது அறிவுடைமையாகும். இதனால் எந்தக் கேடும் ஏற்படாது. ஏற்படவுமில்லை. பலர் தாலி அணியாமலே நல்வாழ்வு வாழ்கின்றனர்.
வாழ்த்துக் கூறுவதால் எந்தப் பலனும் கிடையாது. ஒரு சந்தோஷத்தைத் தெரிவிப்பதற்கான முறையே தவிர, வேறில்லை. வெள்ளைக்காரன் நான் ஆசைப்படுகிறேன் - விரும்புகிறேன் என்று தான் சொல்வான். இந்த வாழ்த்துக் கூறுவதே பார்ப்பான் நம்மை ஏமாற்றப் பயன்படுத்தியதே தவிர, பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதே தவிர மற்றப்படி அதனால் எந்தப் பயனும் இல்லை.
மணமக்கள் நண்பர்களைப் போலப் பழக வேண்டும். வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. பட்டினிக் கிடந்தாலும், கடன்காரனாகக் கூடாது. ஆடம்பரமாகத் தங்களைத் காட்டிக் கொள்ளாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். சினிமா, கோயில் இவற்றிற்குச் செல்லக் கூடாது. நெய்வேலி - பம்பாய் போன்ற தொழில் நகரங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளைப் பார்க்க வேண்டும்.
பிள்ளை பெறாமலே பார்த்ததுக் கொள்ள வேண்டும். மீறினால் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். குறவனுக்கு எப்படித் திருடுவதில் அவமானமில்லையோ, அதுபோல பிள்ளைக் குட்டிக்காரன் இலஞ்சம் வாங்குவதிலும் - பல்லைக் காட்டிக் கெஞ்சுவதிலும் அவமானப்படுவது கிடையாது. நீ பணக்காரனாக வேண்டும் என்று சொல்வதற்குப் பதில், நீ நாசமாகப் போ என்று சொல்வதற்குப் பதில் பத்து பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள் என்று சொன்னாலே போதும். அப்பிள்ளைகளே அவனை நாசமாக்கி விடும்.
--------------------------
14.07.1968 அன்று மாயவரத்தில் நடைபெற்ற கலியமூர்த்தி - வெற்றிச் செல்வி திருணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 13.08.1968
அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா(