என்னிடம் சில பேர் வந்து உபதேசம் பண்ணுவார்கள். "ஏதோ கடவுளுக்குப் பயந்துதான் கொஞ்சம் பேராவது தப்புத் தண்டா பண்ணாமல் இருக்கிறார்கள். நீ அந்தக் கடவுள் பயந்தையும் போக்கிவிட்டால் நாட்டிலே அப்புறம் எவனும் எந்த அக்கிரமத்தையும் செய்யத் தயங்கமாட்டான்களே" என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு நான் பதில சொல்வதுண்டு. "உண்மையிலே கடவுளிடம் பயம் இருக்கிறது, அதனாலே அக்கிரமம் பண்ணாமல் இருக்கின்றார்கள் சிலர் என்றால், எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. ஆனால், உலகத்திலே எவனாவது கடவுளுக்குப் பயந்து கடவுள் நம்பிக்கைக்காரன் அக்கிரமம் செய்யாமல் இருக்கிறானா? சாமி இருக்கிறது என்று சொல்லி விபூதிப் பூச்சும், நாமமும் போட்டுக்கொண்டு, சிவசிவா என்பவன் - இராமா, இராமா என்று சொல்லுகிறவர்கள் - பெட்டியிலேதான் உலகத்திலே எத்தனை அயோக்கியத்தனம் இருக்க முடியுமோ அத்தனை அயோக்கியத்தனங்களும் இருக்கின்றன. மற்றபடி கடவுள், கடவுள் என்று சொல்லிக் கெட்டுப் போகிறவன் சுத்த வெறும் முட்டாள்கள். அதனால்தான் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகிறேன்" என்று நான் பதில் கூறுவது வழக்கம்

---------------

தந்தை பெரியார்- “விடுதலை” 21-8-1960

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It