நமது நாட்டுப்பத்திரிகைகளில் ஒன்றுகூடத் தவறாமல் அதாவது பிராமணப் பத்திரிகைகள், பிராமணரல்லாத பத்திரிகைகள், மகமதியப் பத்திரிகைகள் ஆகிய அனைத்தும் சுயராஜ்யக் கட்சியினர் சட்டசபைகளை விட்டு வெளியேறினதை மெச்சியும், ஆதரித்தும் வெளியேறினதற்கு பண்டிதநேரு சொல்லிய காரணங்களை “பண்டிதரின் வீர மொழிகள்” என மகுடமிட்டும் பிரசுரிக்கின்றன. பிராமணப்பத்திரிகைகளைப் பற்றியோ, அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட பத்திரிகைகளைப் பற்றியோ கவலைப்படாது தள்ளிவிடினும் மற்றைய சுயேச்சை பத்திரிகைகளுக்காவது ஆத்மா உண்டா? இல்லையா? என்பதும் உண்மையை அறிய ஆற்றலுண்டா? இல்லையா? என்பதும் அல்லது எல்லாமிருந்தும் தன் காலில் நிற்கச் சக்தியற்று கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டுகாலங்கடத்துகிறார்களாவென்பதும், அல்லது முரட்டு வெள்ளத்தில் நாம் எப்படி எதிர்நீச்சல் நீந்துவது என்று பயந்து பொறுப்பு இழந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டுவருகிறார் களாவென்பதும், அல்லது ராஜதந்திரம் என்றால் சிலர் எதுவேண்டுமானாலும், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதுபோல நினைத்து அதைப் பின்பற்றுகிறார்களாவென்பதும், அல்லது நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டுகிறவன் பயித்தியக்காரன் ஆவது போல், பித்தலாட்ட அரசியல் கூட்டத்திலிருந்து கொண்டு நாம் ஒருவன் மாத்திரம் உண்மை பேசி ஏன் பயித்தியக்காரனாக வேண்டும் என்று பயந்து கொண்டிருக்கிறார்களாவென்பதும் நமக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

இவர்களில் சுயநலத்திற்காகவும், ராஜ தந்திரத்திற்காகவும், எழுதுபவர்களைப் பற்றி நாம் ஒரு சிறிதுகூட கவலைப்படவே இல்லை. தமிழ்நாட்டுப்பத்திரிகைகளில் இரண்டொரு பத்திரிகைகளை அதாவது சுயநலத்திற்கோ, சுயவாழ்விற்கோ அல்லாமல் பொதுநலத்திற்கென்றும் உண்மை வெளியீட்டிற்கென்றும் உழைத்து வருகிறதென்று நாம் கருதியிருக்கும் பத்திரிகைகளுக்கு மறுபடியும் ஒரு முறை “வெளியேறி” யதைப் பற்றியும் “வீரமொழி” யைப் பற்றியும் ஞாபகப்படுத்துகிறோம். அதாவது, வெளியேறியிருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் ராஜிநாமா செய்யாமல் சட்டசபை அங்கத்தினர் என்னும் பதவியை வைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும், இப்பதவியின் செல்வாக்கையும், வெளியில் வந்துவிட்டோம் என்று சொல்லும் தந்திரத்தையும், புரட்டையும் ஆதாரமாய் வைத்துப் பொதுஜனங்களை ஏமாற்றி வோட்டு வாங்கி மறுபடியும் சட்டசபைக்குள் நுழைவதற்காகவே வெளியில் வந்திருக்கிறார்கள் என்பதையும், இதற்காதாரமாக வெளியில் வந்தவர்களில் அநேகம் பேர் சுயராஜ்யக்கட்சியின் கொள்கைகள் என்று சொல்லப்படுவதையும், காங்கிரஸ் கொள்கை என்று சொல்லப்படுவதையும், நிர்மாணத்திட்டத்தின் தத்துவங்களையும் கொஞ்சங்கூட ஒப்புக் கொள்ளாதவர்கள் என்பதையும், அதாவது சிலர் பட்டதாரிகளாகவும், சிலர் சர்க்காரின் பல நியமனப்பதவி பெற்றவர்களாகவும், சிலர் கதரில் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், சிலர் தீண்டாமையில் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், சிலர் மதுவிலக்கில் கவலையுள்ளவர்கள் போல் வாயால் மட்டும் பேசிவிட்டு மது உற்பத்தியிலும், மது விற்பனையிலும், மதுபானத்திலும் வாழ்கிறவர்களாகவும் இருப்பதை ஒவ்வொருவரும் நடுநிலைமையிலிருந்து கவனித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது.

“நேருவின் வீர மொழி” என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்துகிறோம். பண்டித நேரு கடைசியாய்ச் சொன்னதாவது:-

1. சர்க்காரை நாங்கள் பயமுறுத்தவில்லை.

2. சர்க்காருக்கு மகத்தான அதிகாரங்களுண்டு.

3. சர்க்காரை எதிர்க்கும் பலம் எங்களுக்கு இல்லை.

4. தேசத்தில் சமூக வேற்றுமையால் ஒற்றுமையில்லை.

5. ஆதலால் சட்டமறுப்புச் செய்ய எங்களால் ஆகாது.

6. இந்த நிலைமையில் நாங்கள் சட்டசபையில் இருப்பது பிரயோஜனம் இல்லை.

7. இவ்வளவு பலமுள்ள பெரிய சர்க்காரை ஒழித்துவிடும் நோக்கத்துடன் நாங்கள் வெளியேறவில்லை.

8. நாங்கள் ஆசைப்பட்டாலும் அது ஆகிற காரியமும் அல்ல.

9. சர்க்காரை நாங்கள் எவ்வளவு அடிபணிந்து கெஞ்சியும் எங்கள் நோக்கங்களை அடைய முடியவில்லை.

10. அதனாலேயே வெளியே போகிறோம்.

11. வெகுநாளைக்கு முன்னரே நாங்கள் வெளியே போய் இருக்கவேண்டும்.

12. சர்க்காரின் தந்திரத்தால் நாங்கள் ஏமாந்து போய்விட்டோம்.

13. இனி நாங்கள் இங்கு இருப்பதில் யாதொரு பிரயோஜனமும் இல்லை.

14. இந்த பொம்மை சபைகளில் இனி எங்களுக்கு வேலை இல்லை.

15. தேசத்தின் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் வெளியே போகிறோம்.

என்று சொல்லி இருக்கிறார்.

இந்த தத்துவம் கொண்ட வாக்கியங்களில் எந்த வரியிலாவது எந்த வார்த்தையிலாவது வீரமிருக்கிறதா? வென்பதை கவனித்துப் பார்க்கும்படியும், கோழைத்தனமும் முதுகு காட்டி ஓடுந்தன்மையுமாவது இல்லாமல் இருக்கிறதா? என்பதை மனதறியச் சொல்லும்படி வணக்கத்துடன் கேட்டுக்கொள்ளுகிறோம். பத்திராதிபர்களாக இருப்பவர்கள் தேசத்திற்கு நன்மை செய்யா விட்டாலும், தேசமக்களை நல்வழிப்படுத்தாவிட்டாலும், தேசத் துரோகமும் கொலைபாதகமுமாவது செய்யாமல் இருக்க வேண்டாமா என்றுதான் ஆசைப்படுகிறோம். மகாத்மா காந்தியைப் பின்பற்று கிறோம் என்று தப்பித்துக் கொள்ளுகிறவர்களை உண்மையில் மகாத்மாகாந்தியையே பின்பற்றுகிறார்களா என்று மனதில் கை வைத்துப்பார்க்கும் படிக்கும் பிரார்த்திக்கிறோம்.

நிற்க, மேற்கூறிய பல வாக்கியங்களால் பண்டிதநேருவால் வர்ணிக்கப்பட்ட சட்டசபைகளுக்கு சுயராஜ்யக் கட்சியார் மறுபடியும் எதற்காகப் போகவேண்டும்? பொது ஜனங்களும் எதற்காக இவர்களுக்கு வோட்டுச் செய்யவேண்டும்? முதலாவது சுயராஜ்யக்கட்சி என்பது எதற்காக நமது நாட்டிலிருக்க வேண்டும்? சட்டசபையாலேயே ஒரு காரியமும் செய்யமுடியாது; சட்டமறுப்புக்கும் தேசம் தயாராயில்லை; தாங்கள் சட்டசபையில் பெரும் பான்மையோராக இருந்து பல தீர்மானங்கள் செய்தும் யாதொரு பலனும் இல்லை என்று ஆகிவிட்டால் மறுபடியும் சட்டசபையில் புகுவதில் பயன் என்ன? வெளிவருவதில் பயன் என்ன? மெஜாரிட்டியாராயிருப்பதில் பயனென்ன? ஆகிய இவைகளைக் கவனித்துப் பார்ப்பார்களானால் உண்மை விளங்காமல் போகாது.

பத்திரிகைகள் விஷயம் இப்படி இருந்தாலும் ஆங்காங்கு நடக்கும் பிரசாரங்களின் தன்மையோ வெளியில் எடுத்துச்சொல்வதற்குக்கூட வெட்கமாயிருக்கிறது. தேசத்தின் பெயரால் தியாகம் செய்ததாயும், சிறைக்குச் சென்றதாயும் சொல்லப்பட்டவர்களில் பலர் தங்கள் அறியாமையாலும், வயிற்றுக் கொடுமையாலும், சுயநலத்தினாலும், பலஹீனத் தினாலும் கட்டுண்டு இப் போலித் தொண்டு பிரசாரத்தில் இறங்கி தேசம் பாழாகும் வண்ணம் பாமர ஜனங்களிடையே பிரசாரம் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி நாம் மிகுதியும் வருத்தப்பட வேண்டியதாயிருந்தாலும், பாமர ஜனங்கள் அடியோடு மூடர்கள் என்று நம்புவதற்கில்லாமல், இப்போலிப்பிரசாரங்கள் நடக்கும் கூட்டங்களிலெல்லாம் கூட்டத்திற்கு வரும் ஜனங்கள் ஏமாந்து கேட்டுக் கொண்டிருக்காமல் பிரசாரர்களின் சூழ்ச்சிகளை அறிந்திருப்பதற்கு ஆதாரமாய் பல கேள்விகள் கேட்பதும், அதற்குப் பதில் சொல்ல முடியாமல் பிரசாரகர்கள் கூட்டத்தை அவசரத்தில் முடித்துக்கொண்டு ஓடுவதும், கேள்வி கேட்பவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாயடக்குவதுமான காரியங்களால் பொது ஜனங்கள் இன்னமும் சரியானபடி ஏமாறவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

(குடி அரசு - தலையங்கம் - 21.03.1926)

 

Pin It