சில தினங்களுக்குமுன் கோயமுத்தூர் சேர்மெனின் சில பிராமண விரோதிகளும், அவர்கள் வாலைப்பிடித்துக்கொண்டு வயிறுவளர்க்கும் சில பிராமணரல்லாதாரும் சேர்ந்து காங்கிரஸ் மீட்டிங்கு என்பதாக பெயர் வைத்து காங்கிரஸ் கொடியுடன் டவுன்ஹாலில், ஒரு கூட்டம் கூடினார்கள். அக்கூட்டத்தில் ஒரு பிராமணர் அக்ராசனம் வகிக்கவும், மற்றொரு பிராமணர் பேசவும் சில பிராமணர்கள் உட்கார்ந்து கொண்டு சிரிக்கவுமாய் இருந்தது. இந்நிலைமையில் பேசிய பிராமணர், சேர்மெனையும், மற்றும் சில பிராமணரல்லாத கவுன்சிலர்களையும், வைதுகொண்டே வரும்போது, மற்ற பிராமணர்கள் சிரிக்கும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்க உபந்யாசகர் முனிசிபல் கவுன்சில்களில் சேர்மெனுக்கு அனுகூலமாயிருக்கும் கவுன்சிலர்களெல்லாம் கைதூக்கும் கழுதைகள் என்று சொன்னார்.

கூட்டத்திலிருந்த ஒருவர், உடனே அடங்காக்கோபப்பட்டு, உபந்யாசகரை அவமானப்படுத்தவும், துன்புறுத்தவும் பிரயத்தனப்பட்டார். அவர் பக்கத்திலிருந்த ஒருவர், அதை தடுத்துப்பக்கத்தில் தேசியக்கொடியும் மகாத்மா காந்தியின் படமும் இருக்கிறது போலிருக்கிறது, உபந்யாசகர் மேல்படுவதினால் நமக்குக் கவலையொன்றுமில்லை; தேசீயக்கொடியின் மீது விழுந்தால் பெரிய தோசமல்லவா, ஆதலால் மீட்டிங்கு கலைந்து வெளியில் வந்த பிறகு நீங்கள் அவரை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லித் தடுத்துவிட்டார். மீட்டிங்கு கலைந்தபிறகு, உபந்யாசகர்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டுமென்று தயாராகயிருந்தார்கள். இது விசயத்தை கூட்டத்து அக்ராசனாதிபதி அறிந்து, உபந்யாசகர் இம்மாதிரி இழிதன்மையாய் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதின் பேரிலும், மற்றும் சில பெரியவர்கள் பிரயத்தனப்பூர்வமாய் இதை அடக்கியதன் பேரிலும், விசயம் அவ்வளவோடு நின்றுவிட்டதாய்த் தெரிகிறது.

இதிலிருந்து மகாத்மாவின் பெயரும் அவருடைய கொடியும் எவ்வளவு யோக்கியப் பொருப்பில்லாமல் உபயோகப்படுகின்றதென்றும், காங்கிரஸ் கூட்டமும், காங்கிரஸ் செல்வாக்கும் எவ்வளவு அல்பத்தனமும், நீச்சத்தனமுமான காரியங்களுக்கு உபயோகப்படுகின்றதென்பதையும், கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, பதினாயிரக்கணக்கான பேர் ஜெயிலுக்குபோய், நூற்றுக்கணக்கான பேர்கள் பிராணனை விட்டு, செல்வாக்கும், பெருமையும் சம்பாதித்த நமது இந்திய தேசீய காங்கிரஸானது, இழிமக்கள் கையிலும், காங்கிரசிற்காக யாதொரு விதமான உதவியும் செய்யாத சுயநலக்காரர்கள் கையிலும் சிக்கிக்கொண்டு, தங்கள் வயிற்று பிழைப்புக்கு பணங் கொடுக்காதவர்களையும் வையவும் பிராமணர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பிராமணரல்லாதாரைத் தூற்றவும் உபயோகப்படுகிறது. இம்மாதிரி ஜனங்கள் உள்ளவரை நமது நாட்டுக்கு விடுதலையென்பது கனவேயாகும்.

ஒரு நிருபர்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 14.03.1926)

Pin It