வரப்போகும் சட்டசபைக்குப் பிராமணர்களும் அவர்களுக்கடங்கின மற்ற வகுப்பாருமே சட்டசபையைக் கைப்பற்றத்தகுந்த மாதிரிக்குப் பிரசாரம் செய்ய நிதி வசூல் செய்ய வேண்டியதே காங்கிரஸ் தலைவர்கள் என்னும் நம் பிராமணத் தலைவர்களுக்கு முக்கிய வேலையாய்ப் போய்விட்டது. அதற்காகச் செய்யப்படும் பல தந்திரங்களில், மடாதிபதிகளை ஏய்த்துப் பணம் வாங்குவதும் முக்கிய சூழ்ச்சிகளில் ஒன்றாக இப்போது அமுலில் இருக்கிறதை வாசகர்கள் அறிந்ததே. அதற்கு ஆதாரமாகவே ஸ்ரீமான்கள் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும், சீனிவாசய்யங்காரும் அடிக்கடி மடாதிபதிகளைப் போய் பார்ப்பதும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியும், சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரும் சட்டசபைகளில் பிரயோஜனமில்லாத தத்துவங்களைக் கொண்டு தேவஸ்தான மசோதாவைத் திருத்தவும் மாற்றவும் அடிக்கடி பிரேரேபனைகள் கொண்டு வருவதும், உபயோகமற்ற கேள்விகளைக் கேட்பதுமான காரியங்களைச் செய்தும் மடாதிபதிகளையும் மகந்துக்களையும் ஏமாற்றப் பார்க்கிறதைக் கவனித்தாலே உண்மை விளங்கும்.
சட்டசபையில் பிராமணரல்லாதாருக்குள்ளாகவே, மந்திரி கக்ஷியார் என்றும் அவர்களுக்கு விரோதமாக பொறாமையின் பேரிலோ அல்லது மந்திரிகளின் நடத்தைக் குறைவினாலோ பிரிந்திருக்கும் எதிர்க்கக்ஷியாரும் இத்தேவஸ்தான விஷயம் சட்டசபையில் வரும்போது ஒற்றுமையாயிருந்து சட்டத்துக்கு அநுகூலமாய் வோட்டு கொடுப்பதும், பிராமணர்கள் எல்லாம் ஒற்றுமையாயிருந்து ³ சட்டத்தை எப்படியாவது ஒழிப்பதற்கு அநுகூலமாய் இருந்து வோட்டு கொடுப்பதும் கவனிக்கிறவர்களுக்கு தேவஸ்தான சட்ட விஷயமான கிளர்ச்சி பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற வகுப்பு வேற்றுமைக் கிளர்ச்சியில் சேர்ந்தது என்பது விளங்கும்.
இப்படி இருக்க, பிராமணரல்லாத மடாதிபதிகளும் கொஞ்சமும் தங்கள் மடத்தின் சொத்துக்கள் யாருடையது என்பதையும், யாருக்காக தாங்கள் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்காமல் தங்கள் போகத்தையும், போக்கியத்தையும் பிரதானமாகக் கருதிக்கொண்டு, அநாவசியமாய் மடத்துச் சொத்தை திருடி பிராமணர்களுக்குக் கொடுத்து பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் இச்சட்டத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள். நமது நாட்டின் தலையெழுத்துக்களில் எதற்கென்றுதான் நாம் அழ முடியும்! க்ஷயரோகம் போல் நம்நாட்டைப் பிடித்து நாளுக்கு நாள் அறித்துக் கொண்டுவரும் அரசாட்சியின் கீழ் இருப்பதற்கழுவதா? அல்லது நமது நாட்டை அந்நிய ஆட்சிக்குக் காட்டிக் கொடுத்து நமக்குள் இருந்து கொண்டே குடியைக் கெடுத்து நம்மைத் தீண்டாதாராக்கி வைத்திருக்கும் பிராமணத் தர்மத்திற்கழுவதா? அல்லது நம்மவரிலேயே சிலர் தமது சமூகத்தையே மறந்து தனது வாழ்வையும், பெருமையையும், போக போக்கியத்தையுமே பிரதானமாய்க் கருதி நமக்குள் இருந்து கொண்டே நம்மைப் பிராமணருக்குக் காட்டிக் கொடுத்தும், அவர்களுக்கு அடிமையாகச் செய்வதுமான பிராமணரல்லாத மடாதிபதிகள் என்றும், தேசீய வாதிகள் என்றும் சொல்லிக் கொண்டு வாழும் கோடாலிக் காம்புகளுக்கு அழுவதா? நம் நாட்டின் தலைவிதி யாரே அறிவார்!
(குடி அரசு - கட்டுரை - 14.02.1926)

 

Pin It