(இந்தியத் தகவல் ஏடு, 1945 மே 15, ..639-40)

“போரில் நமக்குப் பின்னடைவான நிலை தோன்றி, இந்தியா மீது படையெடுப்பு நிகழலாமென்ற அச்சுறுத்தும் சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில், நமது போர்முனைகளிலும், போர்த் தளவாடத் தொழிற்சாலைகளிலும் தொழில்நுட்பப் பணியாளர் பற்றாக்குறையினால் பெரும் இக்கட்டான சூழல் உருவாகி அவசரப் பணிகளில் முடக்க நிலை தோன்றியது. விரைந்து செயலாற்றப்பட வேண்டிய பணியாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய இயலாமல் அல்லல்பட்டோம். இந்த நெருக்கடியான அவசரக் கட்டத்தில்தான் தேசியப் பணித் தொழிலாளர் நடுவர் மன்றங்கள் நிறுவப்பட்டன. தொழில்நுட்பப் பணியாளர்களைத் திரட்டும் பணியை மிக விரைந்து செயலாற்றுவதில், அனுபவக்குறைவால் நமது திட்டங்களில் பல குறைபாடுகள் இருந்தன. இத்துணை அரிய பணி அக்கால கட்டத்தில் நன்கு நிறை வேற்றப்பட்டமையே உங்கள் முயற்சிகளின் பெருமைக்கு விளக்கமாய்த் திகழ்கிறது.”

இவ்வாறு (1945) ஏப்ரல் 19 ஆம் தேதி, தேசியப்பணி (தொழில் நுட்ப ஊழியர்கள்) அவசரச் சட்டம், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஆகியன சிக்கல்களை விவாதிப்பதற்காக சிம்லாவில் கூடிய தேசியப் பணித் தொழிலாளர் நடுவர் மன்றங்களின் தலைமை நடுவர்கள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பாராட்டினார்.

அவர் தமது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

ambedkar 313நடுவர் மன்றங்கள், 15,000 தொழில்நுட்ப ஊழியர்களைத் தேசியப் பணிக்கு அனுப்பியுள்ளன. மேலும் அவை தொழில்நுட்பப்பணியாளர்களின் இடப்பெயர்வுகளிலும் தகுந்த கட்டுப்பாட்டைச் செலுத்தி வந்துள்ளன. தொழிலாளர்களை அவசியமான பணிகளை முன்னிட்டு அவர்களது இல்லங்களிலிருந்து வெகுதொலைவில் பணியில் ஈடுபடுத்துவதுடன், அவர்கள் ஊதிய நோக்கில் பிற பணிகளை நாடிச் சென்றுவிடாமல் தடுப்பதும், அவசியத் தேவைகளாய் இருந்தன. தொழிலாளர்களின் வேலை நிலைமை, ஊதியம் ஆகியன ஏறத்தாழ நாடு முழுவதும் சீராயிருந்த இங்கிலாந்தில் இத்தகைய பணி எளிதானதே; மேலும் அங்கு தொழிலாளர் அமைச்சகத்தின் தேசியப் பணித்துறையுடன், விரிவான நலத்துறை நிறுவனங்கள் இணைக்கப்பட்டுத் தொழிலாளர் நலன்களை அக்கறையோடு பேணிவந்தன. இதற்கு நேர்மாறான நிலைமைகள் நிலவிய இந்திய நாட்டில், தொழிலாளர் நலன்களுக்கு ஊறு இல்லாமலும், தேசியப் பணி மிகச் சாதுரியமாகவும், பொறுப்புணர்வுடனும் செம்மையாக நிறைவேற்றியுள்ளன.

நடுவர் மன்றங்கள் தொழிலாளர்பால் அளவுக்கு மேல் பரிவு காட்டியதாக முதலாளிகள் குறை கூறுவதையும், அவை தொழிலாளர் மீது தேவைக்கு மேல் கடுமையாய் நடந்து கொண்டதாய் மறுசாரர் குறைகூறுவதையும் கண்டோம். எவரது குற்றச்சாட்டையும் அரசு ஒதுக்கித் தள்ளிவிடவில்லை; மாறாகக் குற்றச்சாட்டுகளைத் தீரஆய்ந்து சரியான தீர்வு காணலே அரசின் அணுகுமுறையாய் விளங்கி வந்தது. எனவே, தொழிலாளர்களின் பணிப் பெயர்ச்சி குறித்த கட்டுப்பாடுகளை உண்மையாக்குதலையே அரசு ஆதரித்தது. இது குறித்து கல்கத்தாப் பகுதியில் கடும் புகார்கள் எழுந்ததையும் அறிவீர்கள். அதேசமயத்தில் தேசியப் பணித் தொழிலாளர்களைப் பிற பணிகள் ஈர்க்காவண்ணம் பணி நிலைகளையும் ஊதியத்தையும் மேம்படுத்துவதிலும் நடுவர் மன்றங்களுக்கு அரசு மிகுந்த ஊக்கமளித்தது. 

நீதியோடியைந்த கட்டுப்பாடு

நமது அடுத்த கூட்டத்தில் கருதப்படுதற்குறிய கருத்துரைகளைப் பற்றி இப்போது எதுவும் கூறுவதற்கு நான் விரும்பவில்லை; அதே சமயம் போரினால் ஏற்பட்டுள்ள கடும் சுமைகள் காரணமாகத் தொழிலாளர்கள் முன்வந்து செய்ய வேண்டிய தியாகங்கள் பல உண்டு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இதை நாம் நேர்மையாகவும் சீர்மையாகவும் செய்ய வேண்டும். முதலாளிகளிடமிருந்து எவ்வித நிர்ப்பந்தங்கள் வந்தாலும் அவசர நிலையின் பெயரால் தொழிலாளார் பணி நிலைக்கோ கண்ணியத்திற்கோ ஊறு நேர அனுமதிக்க மாட்டோம்.

பிரிட்டனில் தொழிலாளார் நலத்துறை அமைச்சகத்திடமும் தேசிய பணி நிறுவனத்திடமும் ஏராளமான அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அவை தொழிலாளிகள் மீதும் முதலாளிகள் மீதும் சம வலிமையோடு செலுத்தப்படக் கூடியவையேயாகும். இந்த அதிகாரங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பைத் தோற்றவிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இத்தகைய ஒத்துழைப்பு உணர்வு பெருக வேண்டும்; அற்காகவே இக்கட்டுப்பாடுகள் உறுதியுடனும் நீதியுடனும் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

 தேசிய பணித் தொழிலாளார் நடுவர் மன்றங்களின் பணியில் நாம் பாராட்டத்தக்க சிறப்புக்கூறு மற்றொன்றும் உண்டு. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நமது பயிற்சித் திட்டங்களுக்கு ஆள்சேர்த்தல் போன்ற பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு இந்நிறுவனம் சிறப்பாகவும் நிறைவேற்றியுள்ளதையும் நான் மனமாரப் பாராட்ட விரும்புகிறேன். உங்களுடைய அந்த நல்லுழைப்பு. இல்லையென்றால் பயிற்சித் திட்டத்தின் வெற்றியை பெற்றிருக்க முடியாது.

குறிப்பாக, பெவின் பயிற்சித் திட்டத்தின் கீழ் இங்கிலாந்துக்கு அனுப்புவதற்கு பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்த்தி தொழிலாளர் அமைச்சகத்தையும் தேசியப் பணி நிறுவனத்தையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. பெவின் திட்டப் பயிற்சியாளர்களில் கருங்காலிகள் சிலரும் இருந்தனர் என்பது மெய்யே; ஆனால் சிறப்பாகச் பணியாற்றியோர் எண்ணிக்கையாடு ஒப்பிடுங்கால் இது மிகச்சொற்ப எண்ணிக்கையே என்பதைக் கருதி நாம் மனநிறைவு கொள்ளலாம்; பயிற்சிக்காகச் செலவிடப்பட்ட பணமோ காலமோ வீணல்ல என்பதை உறுதியாய் உரைக்கலாம். மாறாக, பணியாற்றித் திரும்பியுள்ள பெவின் பயிற்சியார்கள். நமது நாட்டில் தொழில் நுட்பத் தொழிலாளர்களின் பணித்தரத்தை உயர்த்துவதற்கு மிக உதவியாக இருப்பவர்கள் .மேலும் அவர்கள் ஒட்டுமொத்தப் போரில் ஒரு நாடே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் அனுபவத்தை நேரடியாகப் பெற்றுத் திரும்பியுள்ளார்கள் ஒரு நாடே முழுமையாக ஒருங்கு திரண்டெழும்போது எதையும் சாதிக்கஇயலும் என்னும் உண்மை போர்ப் பணிகளுக்கு மட்டுமன்றி அமைதிப் பணிகளுக்கும் பொருந்துமென்பதை நிலைநாட்டுவதில் நமக்கு இப்பணியாளர்கள் உதவுர்; இந்த நம்பிக்கை விரைவில் நனவாகக் காண்போம் என்று உறுதியாய் நம்பலாம்.

மறுகுடியமர்வு ஏற்பாடு

              போர்காலச் சிக்கல்களை விடவும், போர்ப் பிற்காலச் சிக்கல்கள் எவ்வளவு கடுமையாய் விளங்குகின்றன என்பதையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்தகு சிக்கல்களில் முதன்மையானது போர்க்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்த போர் பணியாளர்கள், தளவாட உற்பத்தித் தொழிலாளர்கள் ஆகியோர் மறுகுடியமர்வு எனலாம். போர் முடிந்து அமைதி திரும்பும் காலகட்டத்தில், போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த படைஞர், தொழிலாளர் ஆகியோர் எப்படியோ போகட்டும் என்று எந்த அரசும் விட்டுவிட முடியது. மறுகுடியமர்வு என்பது அரசின் குடிமைப் பொறுப்பு என்பதுடன் அதைத் தொழிலாளர் நலத்துறையே ஏற்க வேண்டுமென்பதையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது .எமது மறுகுடியமர்வு திட்டங்கள் எங்களோடு கலந்தாலோசிக்கப்படும். இதற்காக நிறுவப்படவுள்ள அமைப்பில் தேசியப் பணித் தொழிலாளர் நடுவர் மன்றங்களின் தலைவருக்கு முக்கியப் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

  மறுகுடியமர்வு என்பது மத்திய அரசும் மாகாண அரசுகளும் நெருங்கி ஒத்தழைத்து தீர்வு காணவேண்டிய சிக்கல் ஆகும். மாகாண அமைப்புகளின் தலைவருக்கு அளிக்கப்படும். உங்கள் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற நிறைந்த சாதுரியமும், ஆற்றலும், முன்முயற்சியும். தேவைப்படும். இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதில் போர்க்காலப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நீங்கள் காட்டிய ஈடுபாடுகளுக்குச் சற்றும் ஆர்வத்தைக் காட்டுவீர்களெனப் பெரிதும் நம்புகிறேன்.

     திறமையான வேலை வாய்ப்பு பணி 

 மறுகுடியமர்வு நிறுவனம் பற்றிய விரிவாக விவரங்களை நான் எடுத்துரைத்தல் தேவையில்லை. ஆனால் முன்னாள் பணியாளர் நலன்களுக்கு இன்றியமையாத தேவையான இப்பணியுடன், அவர்களுக்கேற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் பணிகளுக்கு ஒரு திறமையான அடித்தளம் அமைப்பது திட்டத்தின் நோக்கமாகும். இத்தகைய பணியின் முக்கியக்கூறு நாடு தழுவிய ஒருங்கிணைவு பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அமைத்தலே. நாம் ஏற்கெனவே சிறு எண்ணிக்கையில் அமைத்துள்ள வேலை வாய்ப்பு நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு வருகின்றன: எனினும் இத்திட்டத்தை மேலும் பரவலான முறையில் விரிவுபடுத்தல் தேவையென்பது தெளிவு எல்லாவற்றிற்க்கும் மேலாக வேலை வாய்ப்பு நிறவனங்களைத் திறம்பட நடத்துவதற்கேற்ற பயிற்சி பெற்ற அறுவலர்களுக்கு, தொழிலாளர்களும், முதலாளிகளும் அலுவலகத்துடன் தக்கவாறு வசதிகள் கொண்டு பயன்பெறத் தக்கவாறு வசதிகள் கெண்ட அலுவலகக் கட்டடங்களும் தேவையென்பதை உணர்கிறோம். இவ்விரண்டு கூறுகளைப் பொருத்தமட்டில் தற்போது இயங்கிவரும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் குறைபாடுள்ளவை என்பதை மறுப்பதற்கில்லை. அலுவலர்களைப் பொறுத்தமட்டில் மோலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சித் திட்டத்தை மிக விரைவில் தொடங்கக் கருதியுள்ளோம்; புதிய வேலைவாய்ப்பு நிலையங்கள் சரியான பாதையில் செயல்பட இப்பயிற்சித் திட்டம் உதவுமென நம்புகிறோம். மறுகுடியமர்வுத் திட்டத்தில் இடம்பெயர்ந்த பணியாளர்களைப் புதிய பணிகளில் ஈடுபடுத்த தேவையான பயிற்சித் திட்டங்களுடன், புதிய தொழில்களில் அவர்கள் நலன்களைக் தொடர்ந்து பேணுதற்குரிய கண்காணிப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் .புதிய நிலையங்களின் அமைப்பு விவரங்கள் உங்களுடைய ஆலோசனை வேண்டி முன்வைக்கப்படும் என்பதுடன், மாகாண அரசுகளின் ஆலோசனை கோரியும் அனுப்பி வைக்கப்படும்.

     மலைக்க வைக்கும் பெரும்பணி

                      இந்த கட்டத்தில் முக்கியமாக உங்களிடம் வேண்டப்படுவது என்னவென்றால், நீங்கள் மாகாண அரசுச் சார்பாளர்களுடன் விரிவான கலந்தாலோசனை நிகழ்த்தி, நமது திட்டங்களில் மாகாண அரசுகளுக்கு நல்ல ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்பதே. திட்டத்தின் நோக்கம் குறித்துத் தவறான கருத்துகள் தோன்றுவதைத் தவிர்த்தல் அவசியம் .உங்களால் தீர்வு காணவியலாச் சிக்கல்களை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் சிக்கலைத் தீர்ப்பதற்கான உங்கள் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்வீர்களென நம்புகிறோம். நாம் மேற்கொள்ளவிருப்பது மலைப்பூட்டக் கூடியதோர் பெரும்பணி என்பதை எண்ணி அதனைச் செம்மையாக நிறைவேற்றுதற் பொருட்டு அனைவரும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டிய தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  நான் உங்கள் நேரத்தை மிகுதியாக எடுத்துக் கொண்டு விட்டேன். உங்கள் பணிகளில் உங்களை ஈடுபடவிடுவதற்கு முன்னர், விரைந்து செம்மையாய் உங்கள் பணிகளை நிறைவேற்ற வாழ்த்தி விடைபெறுகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It