(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)

மாண்புமிகு சர் ஜெரமி ரெய்ஸ்மான்:    ஐயா “1945, மார்ச்சு 31 ஆம் நாளில் முடிவடையும் நிதியாண்டில், தொழிலாளர் நலத் துறையில், ஊதியம் வழங்கும் வகையிலான கூடுதல் செலவுகளுக்கான ரூ.2,40,000க்கு மிகாமல் செலவு செய்ய கவர்னர்-ஜெனரல் தலைமையிலுள்ள நிர்வாக சபைக்குத் துணை மானியம் அனுமதிக்கப்படலாம்”

எனும் தீர்மானத்தை அவை முன் வைக்கிறேன்.

              அவைத் தலைவர் (சையது குலாம் பீக் நைரங்): தீர்மானம் அவைமுன் வைக்கப்படுகிறது.

*            *         *       

ambedkar 480     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):

               கடந்த ஆண்டில், இந்திய அரசு நிலக்கரியின் மீது, “நிலக்கரிச் சுரங்க நலவரி’’யாக ஒரு டன் நிலக்கரிக்கு 4 அணா வீதம் வரி விதித்தது என்பதை எனது நன்பர் பேராசிரியர் ரங்கா அறிந்திருப்பார். இதன் மூலம் கிடைக்கும் ‘நிலக்கரி நிதி’யை நிருவாகம் செய்வதன் பொருட்டே ‘’நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல அலுவலர்’’ பணியமர்த்தப்பட்டுள்ளார். நிலக்கரிச் சுரங்க நலநிதியின் நிருவாகம் ஒரு குழுவினால் நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் முதலாளிகளின் சார்பாளர்களும் (நிலக்கரிச் சுரங்கத்) தொழிலாளர்களின் சார்பாளர்களும் பீகார், வங்காளம் ஆகிய மாநில அரசுகளின் சார்பாளர்களும் சம அளவில் இடம்பெற்றுள்ளனர்; தொழிலாளர் நலத்துறை செயலர் குழுவின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். குழுவுக்கு ஏறத்தாழத் தன்னாட்சிப் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதற்கென, ‘நிலக்கரி ஆணையர்’ தயாரித்து குழுமுன் வைக்கப்படும் தனியான நிதி ஒதுக்கீடு உண்டு. இந்நிதியைச் செலவிடுவதன் செயற்பொறுப்பும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல ஆணையரிடமே தரப்பட்டுள்ளது. மலேரியா, நீர் வழங்கல், மருத்துவம் போன்ற சுரங்கத் தொழிலாளர் நலப்பிரச்சினைகள் அனைத்தையும் இக்குழு கவனித்து வருகிறது.

பண்டித லட்சுமி காந்த மைத்ரா: இக்குழுவின் மீது தாங்கள் ஏதேனும் கட்டுப்பாடு செலுத்தி வருகிறீர்களா?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம், தொழிலாளர் துறைச் செயலரே குழுவின் தலைவர் என்பதால் குழு என் கட்டுப்பாட்டில் வருகிறது .அதன் நிதிநிலையும் எமது பரிசீலனைக்கு வருகிறது. அது நிறைவேற்றியனுப்பப்பட்ட பின்னரும், திருத்தங்கள் தேவையெனில் மறு பரிசீலனைக் குழுவிடமே அனுப்பி வைக்கப்படுகிறது.

           ஒவ்வொரு மாநில அரசிலும் தொழிலாளர் நல ஆணையர்கள் உள்ளனர் என்பதையும் எனது நண்பர் பேராசிரியர் ரங்கா அறிவார். அவர்களின் கீழ் நல்லிணக்க அலுவலர்களும் மேலும் பிற அலுலர்களும் பணியாற்றுகின்றர். மாநில அரசுகளன்றி மைய அரசின் கீழும் சில நிறுவனங்கள் இயங்கி வருவதால், அங்கு பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் நலனைப் பேணும் பொறுப்பை இந்திய அரசு ஏற்க வேண்டுமென்று கருதியதால் அண்மையில் இக்குழு நிறுவப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முதன்மைத் தொழிலாளர் நல ஆணையர் எனப்படும் இந்திய அரசு அலுவலரின் தலைமையில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் துணைத் தொழிலாளர் நல ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மைய (நிலக்கரி) நிறுவனங்களுடன், இருப்புப் பாதைத் துறை நல்லிணக்க அலுவலர், இருப்புபாதைத் தொழிலாளர் நல மேற்பார்வையாளர் ஆகியோரின் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மையமயமாக்கப்பட்டுள்ளன என்பதையும் பேராசிரியர் ரங்காவுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய அரசின் கீழ் நேரடியாகப் பணியாற்றி வந்த தொழிலாளர் நல அலுவலர்கள், இனி, அந்தந்தப் பகுதிகளுக்கான தொழிலாளர் நல ஆணையர்களின் கீழ் பணியாற்றுவர். அவ்வாறே, இருப்புப்பாதைத் துறையில், ஊதியச் சட்டம், வேலைநேர சட்டம் ஆகியவற்றின் செயல்பாட்டைக் கண்காணித்து வந்த ஆய்வாளர்களும், இருப்புப் பாதை நல்லிணக்க அலுவலர் கீழ் தனியே செயல்படும் நிலைக்கு மாறாகப் புதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, நிறுவன அமைப்பு வலுவாக்கப்பட்டுள்ளது.

            தொழிலாளர் நல ஆய்வுக்குழுவைப் பொறுத்தமட்டில்,கடந்த 1943 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொழிலாளர் நல முத்தரப்பு மாநாட்டில், “இந்திய அரசு, பெவரிட்ஜ் அறிக்கையின் அடிப்படையில், தொழிலாளர்களுக்கான சமுதாயப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகு நடவடிக்கைகளை யெடுக்குமுன்னர், தொழிலாளர்களின் நலன் சார்ந்த குடியிருப்பு, ஊதியம், சுற்றுப்புறத் தூய்மை முதலானவற்றின் தற்போதைய நிலைமைகளை ஆய்வு செய்ய, உண்மையறி குழு ஒன்று நிறுவப்பட்டு, குழு கண்டறியும் உண்மை நிலைகளின் அடிப்படையில் தொழிலாளர் நல மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதற்கான மற்றொரு குழுவை நியமித்தல் உகந்ததென்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாய்வுக்குழு கடந்த ஆறேழு மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது; குழுவின் அறிக்கை அடுத்த ஜூன்/ஜூலைக்குள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை கிடைத்தவுடன், முத்தரப்பு மாநாட்டின் முடிவுப்படி, இரண்டாவது கட்ட ஆய்வுக்குழுவின் முன் அறிக்கை வைக்கப்படும். இரண்டாம் கட்ட ஆய்வுக்குழுவில், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், மாகாண அரசுகள் ஆகிய தரப்பினரின் சார்பாளர்கள் இடம் பெறுவர்.

                பயிற்சி பெறாத தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், பற்றாக்குறை காரணமாக ஒப்பந்தக்காரர்களே ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு; நிர்ணயித்த ஊதியத்தை விடக் கூடுதலாவே அளித்து ஈர்க்கும் போட்டிநிலைதான் நிலவுகிறது. இதன் விளைவாகச் சில துறைகளில் கூலித் தொழிலாளர்கள் கிடைக்கும் நிலையும் பிற பகுதிகளில் தொழிலாளர் பற்றாக்குறையும் நிலவிவரக் காண்கிறோம். .குறிப்பாகப் போர்ப்படைப் பணிகளுக்குக் கூலியாட்கள் கிடைப்பது மிக அரிதாகவேயிருக்கிறது. எனவே பயிற்சி பெற்ற சாதாரண கூலியாட்களின் பணி பவ்வேறு துறைகளுக்கும் பங்கீடு செய்யப்படுதல் அவசியமென இந்திய அரசு முடிவு செய்து, முதல் கட்டமாக “பயிற்சி பெறாத கூலியாட்கள் வழங்கல் குழு” எனும் குழுவினை நியமித்துள்ளது. ஒப்பந்தக்காரர்கள் ஒவ்வொருவரும், தமது பணிகள் நடைபெறும் இடம் தவிரப் பிற பகுதிகளிலிருந்து தமக்கு எவ்வளவு கூலியாட்கள் தேவையென்பதைக் குறித்து “வழங்கல் குழு” விடம் விண்ணப்பிக்க வேண்டும்; வழங்கல் குழுவின் சான்றிதழ் பெற்றே பிற பகுதிகளிருந்து கூலியாட்களை வேலையமர்த்த இயலும். பல்வேறு இடங்களில் கூலியாள் வழங்கு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையங்கள் ஒவ்வொன்றின் பணிகளையும் நிருவகிக்கும் தலைமைப் பொறுப்பு ஒரு ஒப்பந்தக்காரருக்குத் தரப்பட்டுள்ளது. தற்போதைக்கு, எனது நண்பருக்கு இத்திட்டத்தைப் பற்றிய விவரங்கள் இவ்வளவே தர இயலுகிறது. அவருக்கு இதில் மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பின், குறுகியகால அறிவிப்பினை ஒன்றை எழுப்புவாரெனில், கூடுதல் விபரங்களைத் திரட்டியனுப்பத் தயாராக உள்ளேன்.

             திருமதி கே. இராதா பாய் சுப்பராயன் (மதுரை, இராமநாதபுரம், திருநேல்வேலி மாவட்டங்களின், முகமதியரல்லாக் கிராமிய மக்கள் சார்பாளர்):

  ஐயா, பேராசிரியர் ரங்காவும் அவரது கட்சியினரும், கேட்ட வினாக்களுக்கு நீண்ட அறிக்கையாக விடையளித்த நமது மாண்புமிகு நண்பருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அவரது அறிக்கையில் மிக முக்கியமான வினாவொன்றுக்கான விடை இடம் பெறவில்லை; அஃதாவது, நிலத்தடிச் சுரங்கப்பணிகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்தல் மீதான தடையை, நிலக்கரி ஆணையர் மீண்டும் விதிப்பாரா?

                மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அஃது, அவரது பணியல்லவென்பது உறுதி.

திருமதி கே.இராதாபாய் சுப்பராயன்: நிலத்தடிச் சுரங்கங்களின் இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டு, இனியும் அத்தகைய பணிகளில் பெண்களை ஈடுபடுத்தலாமா என்பது குறித்தும், சுரங்க நிலைமைகள் பெண்களின் உடல் நலத்துக்கு ஊறுவிளைவிக்குமா என்பதையும், ஆணையரோ குழுவோ ஆய்ந்து நோக்குவார்களா?

மண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்: இஃது அவர்களது பணியில் தொடர்புடைய பொருள் அன்று.

திரு.அப்துல் கையூம்: அவ்வாறாயின், அவர்களால் என்ன பயன்?

திரு. என்.எம்.ஜோஷி (அலுவல்சாரா நியமன உறுப்பினர்): என் கருத்தில் தோன்றுவதென்னவென்றால், குழு நியமிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கியபின், நிலத்தடி சுரங்கங்களில் பெண்களைப் பணியமர்த்தல் குறித்த சிக்கல்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டி ஆய்வு செய்யும்……

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: திருமதி இராதாபாய் சுப்பராயன் அவர்கள் நிலக்கரி ஆணையர் பணிகளைப் பற்றியே குறிப்பிட்டாரென நினைக்கிறேன்.

திருமதி கே.இராதாபாய் சுப்பராயன்: நண்பர் குறிப்பிட்டவாறு, குழுவைப் பற்றிதான் எனது வினாவை எழுப்பினேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்: ஆம், அவர்களும் (குழுவும்) இப்பணியில் ஈடுபடலாம்.

திரு.என். எம்.ஜோஷி: எல்லாச் சிக்கல்களையும் குறித்து குழு ஆய்வு செய்ய வேண்டுமென்பதே எனது கருத்து.

மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர்: நிலக்கரி ஆணையாளரைப் பற்றி மட்டுமே அம்மையார் குறிப்பிட்டாரெனக் கருதினேன்.

திரு.என். எம்.ஜோஷி: நிலத்தடிச் சுரங்கங்களில் பெண்களைப் பணியமர்த்தல் மீதான தடையை நீக்குதல் உள்ளிட்ட, சுரங்கத் தொழிலாளர் சிக்கல்கள் அனைத்தும் கருதப்பட வேண்டும். எனவே, தேவையான நிதிக் கோரிக்கையை அனுமதித்துத் தீர்மாளம் நிறைவேற்றலாம்.

         அவைத்தலைவர் (சையது குலாம் பீக் நைரங்):

                (அவை முன்வைக்கப்படும்) தீர்மானமாவது:

                 “1945, மார்ச்சு 31இல் முடியும் நிதியாண்டில், ஊதியம் வழங்குதற் பொருட்டு தேவைப்படும் செலவுகளுக்காக, தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.2,40,000க்கு மிகாமல் துணை மானியமாக அனுமதிக்கலாம்.’’

அவை தீர்மானத்தை நிறைவேற்றியது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It