தனிப்பார்வைக்கு
பி.ஆர். அம்பேத்கர்
தாமோதர் ஹால்
பரேல், பம்பாய்
9-12-1924
அன்பார்ந்த திரு. பண்டிட்,

இம்மாதம் 6 அன்று எழுதிய தங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. இக்கடிதத்தின் உள்ளடக்கத்தை நான் மிகக் கவனமாகப் படித்தேன். பரோடா அரசுடனான எனது முந்தைய கடிதப் போக்குவரத்தை தாங்கள் பார்த்திருந்தால், அரசுக்கான என் கடமையை நினைவுபடுத்த வேண்டிய அவசியத்தை தாங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். எனக்கும் பரோடா அரசுக்கும் இடையிலான சட்ட ரீதியான உறவுகள் என்னவாக இருந்தாலும், எனக்காக அரசு செலவழித்த பணத்தைக் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்பது குறித்து அவர்களுக்குப் பல முறை எழுதியுள்ளேன்.

என்னை நம்புங்கள், என்னிடம் பணமிருந்தால், இப்பொழுதே ஒரு நிமிடமும் தாமதிக்காமல் எனது கடமையை நிறைவேற்றி இருப்பேன்... ஆனால், நான் இன்றுள்ள நிலையில் வாழ்வதற்கே போதுமான பணம் என்னிடமில்லை. இந்நிலையில் என் கடன்களைத் திருப்பித் தர எப்படிப் பணம் ஒதுக்க முடியும்?

... இத்தகைய சூழலில், நான் எவ்வளவுதான் விரும்பினாலும், இப்போதைக்கு பணத்தைத் திருப்பித்தர என்னால் இயலாது. கொடுக்க முடியாத எனது இயலாமையை நான் திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை என்று பரோடா அரசு பொருள்படுத்திக் கொண்டால் அவர்களுக்குள்ள ஒரே வழி, அது அவர்களுக்கு உண்மையில் ஏற்புடையதாக இருக்கும் என்று கருதினால் நீதிமன்றத்திற்குப் போய் தீர்ப்பைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவதுதான். விஷயம் நீதிமன்றத்திற்குச் சென்றால், சமூகத்தின் பெயர் பாதிக்கப்படும். மாறாக, நான் என்ன நினைக்கிறேன் என்றால், வழக்கு நடைபெறும்போது பரோடா அரசிடம் நான் எப்படி நடந்து கொண்டேன் என்று சமூகம் தெரிந்து கொண்டால், என் பக்கம் நான் வெட்கப்பட வேண்டியது எதுவும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாறாக, இவ்வழக்கு நடைபெறும்போது சேறு வாரி இறைக்கப்படும். அதில் சற்று, மேன்மை தாங்கிய பரோடா மன்னர் மீதும் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது இருவருமே வெட்கப்பட வேண்டும்.

இவையெல்லாம் தவிர்க்கப்பட்டால் நிச்சயமாக நல்லது. இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, திருப்பிக் கொடுக்கும் நிலைக்கு நான் வரும்வரை, பரோடா அரசு எனக்கு அவகாசம் அளிப்பதுதான். பரோடா அரசு என்னைப் போதுமான அளவு புரிந்து கொள்ளவில்லை. நான் ஒரு பண்புள்ள மனிதன் என்பதை ஒரு முறை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். என்னிடம் போதுமான பண்பு இல்லையெனில், நான் பரோடாவுக்கு திரும்பி வந்திருக்க மாட்டேன். பிரிட்டிஷ் பணியில் நுழைய எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு பண்புள்ள மனிதனைத் தவிர, வேறு யாரால் இவற்றைத் தூக்கி எறிந்திருக்க முடியும்? நான் சுதந்திரமானவன் என்று மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், பண்புள்ள ஒருவன்தான் சுதந்திரமாக இருக்க முடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.

அரசுக்கான கடமையை செய்ய நான் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறேன் என்றும், நான் கஷ்டப்படுவதால்தான் உடனே அதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். எப்பொழுது நான் லகுவான நிலையில் இருப்பேனா, அப்பொழுதே பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்குவேன் என்பதைத் தாங்கள் நம்பலாம். இதற்கு மேல் இப்பொழுது எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாது.

நான் வெளிப்படுத்தியுள்ள உண்மையான நோக்கம் என்னவெனில், அந்தத் தொகையை பம்பாய் பல்கலைக்கழகத்திற்கு திருப்பிக் கொடுத்து, அந்தத் தொகையில் பரோடா அரசு பெயரில், தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்ய பல்கலைக் கழகத்தை கேட்டுக் கொள்ளத்தான் இந்தத் தொகை தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையில் எனக்காக செலவிடப்பட்டது. எனவே, அரசின் தனிப்பட்ட முறையிலான செலவுக்கு அந்தப் பணம் செலவழிக்கப்படக் கூடாது என்பதும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலனுக்காகவே அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். ஆனால், இத்தகைய ஒரு வியாபார முறையில் அரசு செயல்பட்டு வருவதால், எனது திட்டம் பாராட்டப்படும் என்று நான் கருதவில்லை.

எனக்கும் பரோடா அரசுக்கும் இடையே தீர்மானிக்கும் முடிவை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
(பி.ஆர். அம்பேத்கர்)

(டாக்டர் அம்பேத்கர் அயல்நாடு சென்று படிப்பதற்காக, பரோடா மன்னர் சயாஜிராவ் கெய்க்வாட் அரசு, அவருக்கு 20,434 ரூபாய் கல்வி உதவித் தொகை அளித்தது. இத்தொகையை திருப்பித்தர வலியுறத்தி பரோடா அரசு அதிகாரிகள், மன்னருக்குத் தெரிவிக்காமலேயே (நீதிமன்றத்திற்குச் செல்வது உள்ளிட்ட) நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1); பக்கம் 215)

(நன்றி : தலித் முரசு டிசம்பர் 2008)
Pin It