தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது சமணர் மலை. இப்பகுதிமக்கள் மொட்டை மலை அல்லது சமணர் மலை என அழைக்கிறார்கள். சமணர்கள் பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளும், சமணர்கள் சிலைகளும் பல இங்கு உள்ளன. உத்தமபாளையம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் என்றால் தான் இப்பகுதி மக்களே அடையாளம் காட்டுகின்றனர். இப்பகுதி தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டாலும் தொல்லியல்துறை கோமாநிலையில் உள்ளது போல இங்கும் அப்படித்தான் உள்ளது. மதுபான பாட்டில்கள், ஆணுறைகள், காதல் பற்றிய கிறுக்கல்கள், பாலித்தீன் பைகள், நாசியைத் துளைக்கும் மதுபான வாடைகள் எல்லாம் வரலாற்று சிறப்பிடத்தின் அவலம்.

uthamapalaiyam_601

சமணமும்-இஸ்லாமும்

  கி.பி.8 ஆம் நூற்றாண்டில் சமணர்கள் அதிக அளவில் ;இங்கு இருந்துள்ளனர். மேலூர், யானைமலை ஒத்தக்கடை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஏராளமான சமண படுகைகள் உள்ளன. உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிக்கு மேற்கே சாயபுமலை எனப்படும் சமணமலை இன்றும் உள்ளது. சமணர்களின் கற்படுகைகள், நீர்நிலைகள், குகைள், மருந்துகள் தயாரித்த கற்கள் என பல உள்ளன. கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் சமண-சைவ மதப்போரில் சமணர்கள் 8000 பேர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கழுமரத்தில் சாவதை விரும்பாத பல சமணர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டனர்.

  சமணர்கள் மொட்டை அடித்து இருப்பார்கள். முஸ்லிம்களாகி மாறியபின் மொட்டைத் தலை அடையாள மாற்றத்திற்கு உதவியது. ரா.பி.சேதுபிள்ளை, எ.கே.ரிபாயி போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கிடைய சமண சொற்கள் பல இருப்பதை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.

 கூன்பாண்டிய மன்னரின் அதிதீவிர சைவமத ஈடுபாட்டிற்கு பயந்து பல சமணர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டதால்தான் உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் அதிக அளவில் முஸ்லீம்கள் இருக்க காரணம் என வரலாறுகள் கூறுகிறது.

தமிழகத்தில் இதுவரை 50 இடங்களுக்குமேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரின் முயற்சியால் மல்லப்பாடி என்ற இடத்தில்தான் தமிழகத்தின் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முத்துப்பட்டி என்ற இடத்தில் சிறிய மலையில் சில குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று சமணக்குகையாகும். சமணர்களின் படுக்கைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இக்குகையில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

 தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ஊர் அணைப்பட்டியாகும். இவ்வூரின் அருகே அமைந்த மலை சித்தர் மலை ஆகும். இங்கு சமணக் குகை ஒன்று உள்ளது. இக்குகையின் கிழக்குப் பக்கத்தில் ஒரு ஓவியம் செந்நிறத்தில் வரையப்பட்டுள்ளது. குதிரைமீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க குதிரையானது செல்வது போன்று காணப்படுகிறது. (தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவு பவுன்துரை)

 பல குகை ஓவியங்களில் படகு வடிவம் இடம் பெறுகின்றது. இது கட்டுமரம் போன்ற வடிவமைப்பைக் கொண்டு திகழ்கின்றது. அவற்றுள் துடுப்புடன் பயணம் செய்யும் காட்சி சிறப்புடைய ஒன்று. காமயகவுண்டன்பட்டியில் படகின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.(தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 234-டாக்டர் ராவு பவுன்துரை).

 பாறை ஓவியங்கள், சமணக்குகைளில் படகு, குதிரையின் மீது தொப்பி அணிந்துள்ள மனிதன் போன்றவற்றைப் பார்க்கும்போதும் தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் சமணர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என அறியப்படுகிறது.

ஆதார நூல்கள்:

1.தமிழகப்பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவ பவுன்துறை
2.தமிழகத்தில் இஸ்லாமியர்கள், ஏ.கே.ரிபாயி
3.மறைக்கப்பட்ட வரலாறும், மறுக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்,அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி.

- வைகை அனிஷ் மற்றும் பூஞ்சாரல் கி.சாந்தகுமார்

Pin It