இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக் கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது. 

கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. 

மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 

நீரின் அளவு: மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. 

இதயம்: இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. 

பிட்யூட்டரி சுரப்பி: மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 

உடலின் வளர்ச்சி: ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 

இதயத் துடிப்பு: ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 

சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 

ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 

எலும்புகள்: குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It