கடந்த 1876ம் ஆண்டு இந்தியாவின் வைசிராயாக இருந்த லிட்டன் பிரபு, விக்டோரியா மகாராணி இந்தியாவின் அரசியாக முடிசூடுவதை கொண்டாடும் விதத்தில் விருந்து ஒன்றை நடத்த முடிவு செய்தார். அனைத்து மகாராஜாக்களும், ராஜாக்களும் கலந்து கொண்ட அந்த விருந்து ஒரு வார காலம் நடந்ததாகவும், மனித குல வரலாற்றில் நடந்த பிரமாண்டமான விருந்து அது என்றும் வரலாற்று ஆசிரியர் ஒருவர் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்தியாவில் கொடுமையான வறட்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதே 1876ம் ஆண்டிலும் நீடித்துக் கொண்டிருந்தது. அப்போது இந்தியாவில் உணவுத் தானியங்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமாக இருந்தது.

முன் குறிப்பு: மக்கள் சார்பற்ற அரசின் ஒவ்வொரு செயல்பாடும், அப்பட்டமான கடமை மீறல்களும்தான் அரசுக்கு எதிராக வன்முறையை கையிலேந்த மக்களைத் தூண்டுகிறது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தும் சில குழுக்கள், அப்பாவி மக்களைக் கொல்வதை “பூவுலகு” எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கட்டுரையில் அந்தத் தொனி இல்லை என்ற போதிலும், “பூவுலகி”ன் நிலைப்பாட்டை உணர்த்துவதற்காக இந்தக் குறிப்பு தரப்பட்டுள்ளது.

உணவுத் தானிய வியாபாரிகள் அறிவியல் - தொழில் நுட்பத்தின் விளைவுகளை முழுமையாக பயன் படுத்திக் கொண்டனர். ரயிலின் மூலமாக உணவுத் தானியங்களை அதிக அளவில் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும், தந்தியின் மூலமாக தொலைதூர பகுதிகளில் உணவு தானியங்களின் விற்பனை விலையை அறிந்து கொள்ளவும் செய்தனர். உள்ளூர் சந்தையில் உணவுத் தானியங்களை விற்பனை செய்வதற்கு பதிலாக ரயில், தந்தி போன்ற நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி (தேவை அதிகம் உள்ள தூர தேசப் பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விற்பதன் மூலம்) கொள்ளை லாபம் ஈட்டுவதிலேயே வணிகர்கள் ஈடுபட்டனர். சென்னையில் ஓடும் கால்வாய்க்கு யாருடைய நினைவாக பெயர் இடப்பட்டுள்ளதோ, அந்த பக்கிங்ஹாம் அப்போது சென்னையின் கவர்னராக இருந்தார்.

அவர்  உணவுப் பஞ்சத்தை சமாளிப்பதற்காக உள்ளூர் வணிகர்களிடம் இருந்த உணவுப் பொருட்களை கட்டாயமாக உள்ளூரிலேயே விநியோகம் செய்ய திட்டமிட்டார். ஆனால், சந்தைப் பொருளாதார கொள்கையின் முன்னோடியான பாதிரியார் தாமஸ் மால்தூஸ் வழி நடக்கும் லிட்டன் பிரபு, உணவுப் பஞ்சத்தை சமாளிக்கும் கவர்னர் பக்கிங்ஹாமின் திட்டத்தை தடுத்து நிறுத்தினார். லிட்டன் பிரபு மாபெரும் விருந்து நடத்திய அந்த ஒரு வார காலத்திற்குள் சென்னையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தெருக்களில் இறந்து கிடந்தனர். வேலூரைச் சேர்ந்த ஐடா ஸ்கட்டர் என்ற ஆறு வயது சிறுமி இந்த பஞ்சத்தின் போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சில சிறுவர்களுக்கு ரொட்டித் துண்டுகளை கொடுக்க முயற்சித்தார். பின்னர் அவர் வளர்ந்து மருத்துவரான பின்னர், அந்த ரொட்டித் துண்டுகளை உண்பதற்குக்கூட அந்த குழந்தைகளுக்கு சக்தியின்றி இறந்து போனதை பதிவு செய்துள்ளார்.

இன்றைய நிலைக்குத் திரும்பினால், கடந்த ஆறு ஆண்டுகளில், உலகம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைவாலும், எளிதில் தடுக்கக் கூடிய நோய்களாலும் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இரண்டாம் உலகப்போர் நடந்த ஆறு ஆண்டுகளில் போர் நடவடிக்கைகளால் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆறு ஆண்டுகளில் மேற்கூறிய காரணங்களால் இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். தற்போதைய நிலையில் ஒவ்வொரு மூன்று விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது. இந்த மரணத்துக்கான காரணம்: ஊட்டச் சத்துணவு கிடைக்காதது மற்றும் மிக எளிதில் தீர்க்கக்கூடிய நோய்களுக்கான மருந்து கிடைக்காதது ஆகியவையே. ஆனால் இதே மூன்று விநாடிகளுக்குள் உலகம் முழுவதும் 1,20,000 அமெரிக்க டாலர்களுக்கு ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் உலகெங்கும் சமத்துவத்திற்காக போராடும் சாமானிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.

சமூக அநீதி என்பது புறக்கணிக்கக்கூடிய எளிதான அம்சம் அல்ல. நீதிக்கான அரசியல் உறுதியும் பொறுப்புடைமையும் இருந்தால் மட்டுமே அநீதிக்கும், நீதிக்கும் இடையிலான அம்சங்ளை நாம் பரிசீலிக்க முடியும். சமூக அநீதியை உலக அரசியல் அமைப்பின் முக்கியமான அங்கமாக பார்க்காதவர்கள், அவ்வாறு பார்க்க விரும்பாதவர்கள் யாரும் பார்வையற்றவர்கள் அல்ல. சமூக அநீதி என்பது இயல்பானது அல்ல: ஆனால் சமூக அநீதியை நிலைநாட்ட சர்வதேச சமூகம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது: தேவைப்படும் இடங்களில் ராணுவத் தலையீடு மூலமாகவும்! நான் பணியாற்றிய சத்தீஸ்கர் மாநிலம் இதற்கான மிகச்சிறந்த உதாரணம்.

சத்தீஸ்கர் மற்றும் பாஸ்தார் பகுதிகளின் துன்பியல் கதைக்கு காரணம், அங்கு  நிறைந்துள்ள கனிம வளங்களே! இந்தியாவின் மொத்த இரும்புத்தாது வளத்தில் ஐந்தில் ஒரு பங்கு, சுமார் 2336 மில்லியன் டன் இரும்புத்தாது அப்பகுதியில் உள்ளது. தந்தேவடா, கான்கர், ராஜ்நந்த்கான், பாஸ்தார், துர்க் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் இரும்புத்தாதுவில் அதிகபட்ச அளவான 68% இரும்பு உற்பத்தி செய்ய முடியும்.  பாஸ்தார் பகுதியில் இரும்புத்தாதுவுடன், சுண்ணாம்புக்கல், பாக்ஸைட், (அணுசக்தி தயாரிக்க பயன்படும்) யுரேனியம், வைரம் ஆகிய கனிம வளங்களும் ஏராளமாக உள்ளன.  சத்தீஸ்கர் என்ற மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டபோது அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பதவி ஏற்ற அஜித் ஜோகி, ‘செல்வ வளமுள்ள அந்த நிலப்பகுதியில் வறுமையில் வாடும் மக்கள் வசிப்பதாக குறிப்பிட்டார். ‘செல்வ வளம்’ மிக்க இந்தப் பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்தது. இந்தப் பகுதிகளுக்கு செல்வதற்கான வழிகள் அமைக்கப்படாதிருந்த அந்த சமயத்தில் ‘செல்வ வளம்’ மிக்க அந்தப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏழை மக்களுக்கு எந்த சவாலும், பிரச்சினையும் இல்லை. ஆனால் உலகமயச்சூழலில் பெருகி வரும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயனாக, நடைமுறையில் உள்ள காலனியாதிக்க போக்கின் விளைவாக ‘செல்வ வளம்’ மிக்க அந்த பகுதி மீது, அப்பகுதியில் வசித்த ஏழை மக்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டிற்கு பெரும் சவால் ஏற்பட்டது.

சத்தீஸ்கரின் வனப்பகுதியில் இருந்த வன வளமும், கனிம வளமும், அவற்றின் மதிப்பும் தெரியவந்த பின்னர், இப்பகுதி மீதான இறையாண்மையை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசு அமைப்புகளின் மிக முக்கியமான கடமையானது. அப் பகுதியில் ஏராளமான வன வளமும், கனிம வளமும் இருப்பதை கண்டறியாதவரை செயலற்று இருந்த இந்த அரசு அமைப்புகள், அப்பகுதியில் இருந்த வளத்தை கண்டறிந்த பின்னர் தங்கள் அதிகாரங்களை அப்பகுதியில் நிறுவத் தொடங்கின. மேலும் வளம் மிகுந்த அந்த நிலப்பகுதிகளை பன்னாட்டு நிதி மூலதன அமைப்புகளான டாடா, எஸ்ஸார், லாஃபார்ஜ், ஹோல்சிம் உள்ளிட்ட தொழில் கழகங்களிடம் ஒப்படைப்பதில் இந்திய அரசு அமைப்புகள் தீவிர ஆர்வம் காட்டின. சாமானிய மக்களிடம் இருந்து கையகப்படுத்திய வளம் மிக்க நிலம் தொழிற்கழகங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்காக கிராம சபை உள்ளிட்ட அமைப்புகள் போலியாக செயல்படுத்தப்பட்டன. சட்டங்கள் மீறப்பட்டன.

ஆனால் இந்தப் பணி அரசு நினைத்தது போல எளிதானது அல்ல என்பது விரைவில் விளங்கியது. எஸ்ஸார் மற்றும் டாடா நிறுவனங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்வதற்கு பாஸ்தாரின் தெற்குப் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பான்சி பகுதியில் ஆயுதப்படையினரின் துப்பாக்கி முனையில் நிலம் கையகப்படுத்தல் பணி நடைபெற்றபோது, லோகண்டிகுடா பகுதியின் பல கிராமங்களிலும் டாடா நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தலுக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. பல கிராம சபைகள் நிலத்தை கையளிக்க ஒப்புதல் அளிக்கவில்லை.

மாநிலத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களை மிகுந்த ஆயுத பலத்தோடு அரசு ஒடுக்க முயற்சித்தாலும், மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பையும், பரவலாகி வரும் போராட்டங்களையும் அடக்குவது அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதில் பாஸ்தார் பகுதிக்கு என்று ஒரு வரலாறு உண்டு. சொத்துரிமையை வரையறை செய்வதிலும், உருவாக்குவதிலும் பாஸ்தார் பகுதியில் நிலவிய நடைமுறைக்கும், இந்தியாவின் மற்றப் பகுதியில் நிலவிய நடைமுறைக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. இப்பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்தவர்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும், அரசின் அதிகாரங்களை வரையறை செய்வதில் காலனியாதிக்க மனநிலையிலேயே இருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்ட தோல்வி, லஞ்ச-ஊழல், மிக மோசமாக உருவெடுத்த "வளர்ச்சி“ ஆகியவை இந்தப் பகுதியில் ஆயுதங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்தன. பாஸ்தார் பகுதியில் மாவோயிஸ்ட் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பல ஆண்டுகள் முன்னதாக பாஸ்தார் பகுதியை ஆட்சி செய்து வந்த மக்களின் அபிமானத்திற்கு உரிய தலைவரான ப்ரவீர் சந்திர பான்ஜ் டியோ, மத்திய பிரதேசத்தின் தலைநகரிலிருந்து வந்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த நேரத்தில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்றின் மூலமாக கொல்லப்பட்டார். நக்சலைட் வன்முறைக்கு எதிரான ஆதிவாசி மக்களின் தன்னெழுச்சியான எதிர்வினையே சல்வா ஜுடும் என்ற ஆயுதம் தாங்கிய படை என்று அப்போதைய சத்தீஸ்கார் மாநில அரசும், அதன் ஊதுகுழல்களாக விளங்கிய ஊடகங்களும் சித்தரித்தன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் பெரும் அரசியல் சக்தியாக இருந்தபோதிலும், பாஸ்தார் பகுதியில் அரசின் போக்கிற்கு எதிரான இயக்கங்கள் பரவலாக இருந்ததை குறிப்பிட வேண்டும். அப்பகுதியில் நாடாளுமன்ற, தேர்தல் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு தொழிற்சங்கம், விவசாயிகள், ஆதிவாசிகள், பெண்கள், மாணவர்கள் ஆகியோருக்கான போராட்டங்களை நடத்துவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஒரு நீண்ட வரலாறு இருந்தது. சத்தீஸ்கரில் அரசின் நிலைப்பாடுகளை விமர்சிக்கும் காந்தியவாதியான ஹிமான்ஷ§ குமார் (வனவாசி சேத்னா ஆசிரமம்), மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்ற மனித உரிமை அமைப்புகள், பொது நல வழக்குகளில் ஆர்வம் காட்டும் கல்வியாளர்கள் போன்ற அனைவரையும் மாவோயிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்துவது வழக்கமாக இருந்தது. அரசு அமைப்பை ஆயுதப்புரட்சி மூலமாக தூக்கி எறிய முடியும் என்று நம்புபவர்கள், மாநில அரசின் போக்கை விமர்சிக்கும் பல தரப்பினரில் ஒரு தரப்பினர் மட்டுமே.

இவ்வாறு பல்வேறு கொள்கைகளோடு இந்த அமைப்புகள் இயங்கினாலும், அரசு கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் தீவிரமாக இயங்கின. குறிப்பாக அரசுப்படைகளால் அரங்கேற்றப்பட்ட ஆட்கடத்தல், சித்தரவதைக்கூட வன்கொடுமைகள், பாலியல் வன்முறைகள், சொத்தழிப்பு, என்கவுன்டர் படுகொலைகள் குறித்து மேற்கூறப்பட்ட அமைப்புகள் மிகுந்த கவனத்தோடு கூடிய அறிக்கைகள் தயாரித்து  வெளியிட்டன. மேலும் இப்பகுதியில் ஏற்படும் பட்டினிச் சாவுகள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகளையும் மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டன. இந்த சமூக அநீதிகள் அனைத்திற்கும் அரசே பொறுப்பு என்று அனைத்துத் தரப்பினரும்  சுட்டிக் காட்டினர்.

கடந்த சில மாதங்களாக "பசுமை வேட்டை" (ஆபரேஷன் க்ரீன் ஹன்ட்) என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாஸ்தார் பகுதி யுத்த முனையாக காட்சி அளிக்கிறது. அப்பகுதி மக்கள் உரிமை இழந்து, தனிமைப்படுத்தப்பட்டு, பீதியில் உறைய வைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாலியல் வன்முறைகளும், கொடூரமான ராணுவ என்கவுன்டர்களும் அப்பகுதியின் அமைதியை முற்றிலும் குலைத்து வருகின்றன.

இதைப் போன்றதொரு நிலையில் அரசியல் சட்ட நிபுணரான பிரசாந்த் பூஷண் கூறியது, தற்போது நினைவு கூரத்தக்கது:

"வளர்ச்சி என்று கூறப்படும் இத்தகைய நடவடிக்கைகளில் வீடிழந்து, வாழும் இடத்திலிருந்து துரத்தியடிக்கப்படும் மக்கள் இனம், அவர்களது நிலமும், வளங்களும் கொள்ளையடிக்கப்படுவதை வன்முறையற்ற - ஜனநாயக வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது என்ற கசப்பான உண்மைகளை புரிந்து கொள்கிறார்கள். இது மிகவும் மோசமான சூழலாகும்! ஏராளமான கல்வியாளர்களையும், படிப்பாளிகளையும் கொண்ட நர்மதா பச்சாவ் அந்தோலன் போன்ற மக்கள் போராட்டக்குழுக்களும்கூட நிர்வாக மற்றும் நீதித்துறை அமைப்புகள் மூலமாக பூர்வீக குடிமக்களின் நிலங்களும், இயற்கை வளங்களும் கொள்ளை போவதை தடுக்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர்.  தற்போதைய நிலையில் மக்கள் ஒற்றுமை மற்றும் பலப்பிரயோகத்தின் மூலமாக மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். இதன் காரணமாகவே கலிங்கா நகர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் செய் அல்லது செத்துமடி என்ற நிலைக்கு மக்கள் செல்கின்றனர். இயற்கை வளங்களும், நிலமும் கொள்ளை போவதை தடுப்பதில் இந்த போராட்டங்களே முன்மாதிரியாக திகழ்கின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், எதை விலையாக கொடுத்தாலும் சரி: தங்கள் பகுதியில் அரசு அதிகாரிகளின் கால் படக்கூடாது என்று நினைக்கின்றனர். இந்தச் சூழலில் அரசுத் தரப்பில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் வன்முறைகள் வெடிக்கலாம்.“

இப்போது நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்:

இனப்படுகொலை என்பது பெருவாரியான மக்களை நேரடியாக கொலை செய்வது என்று பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையால் 1948 டிசம்பர் 9ம் தேதி பிரகடனம் செய்யப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான பிரகடனம், கொலைகளுக்கு அடுத்த படியாக, குறிப்பிட்ட ஒரு மனித இனத்தை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கக்கூடிய ஆபத்தான நிலையில் வாழுமாறு நிர்பந்தம் செய்வதும் இனப்படுகொலையே என்று உறுதியாக சொல்கிறது. இந்தியாவின் மத்தியப் பகுதியில் நடைபெறுவதை இனப் படுகொலை என உறுதியாக கூறுவதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இதை உரத்துப் பேசுவதற்கான தலைமைகள் நம்மிடம் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

விநாயக் சென் - உண்மைப் போராளி 

மருத்துவர் விநாயக் சென் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவம் பயின்றவர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூக மருத்துவத் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காக அந்தப் பணியை துறந்த விநாயக் சென், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்று சுரங்கத் தொழிலாளிகளுக்கு மருத்துவச் சேவை புரிந்தார். அம்மக்களின் மனித உரிமைகள்  பன்னாட்டு நிறுவனங்களாலும், அரசு அமைப்புகளாலும் பறிக்கப்படுவதை, மக்கள் சிவில் உரிமைக்கழகம் போன்ற மனித உரிமை அமைப்புகளின் மூலம் அம்பலப்படுத்தினார். இதன் பயனாக 2007ம் ஆண்டு மே மாதம் சத்தீஸ்கர் மாநில அரசால் தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றஞ் சாட்டப்பட்டு சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டார். மருத்துவர் விநாயக் சென் மீது புனையப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் எனில் உலகெங்கிலும் இருந்து குரல்கள் எழுந்தன. இதையடுத்து அவர் இரண்டாண்டு சிறை வாசத்துக்கு பிறகு 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். தற்போது வேலூரில் தங்கி இருக்கும் அவர், மருத்துவ மாணவர்களுக்கு சமூக மருத்துவம், மனித உரிமைகள் உள்ளிட்ட பாடங்களை பயிற்றுவித்து வருகிறார். சென்னையில் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் விநாயக் சென் ஆற்றிய ஆங்கில உரையின் ஒரு பகுதி இங்கு தமிழில் எளிமையாக்கப்பட்டுள்ளது. 

தமிழில்: வழக்குரைஞர் சுந்தரராஜன்

போபால் : கற்றுக் கொள்ளாத மற்றொரு பாடம் 

சத்தீஸ்கர் பகுதியில் நிலவும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்வதற்கோ, பதிவு செய்வதற்கோ அரசு அமைப்புகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு முன் உதாரணமாக போபாலைக் கூறலாம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக போபாலில் ஏற்பட்ட தொழிற்சாலை விபத்தில் மெத்தில் ஐசோ சயனேட் என்ற நச்சு வாயு வெளியானது. இதில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானவர்கள் கண் பார்வை இழந்தனர். இத்துடன் பலவிதமான ஆபத்தான உடல்நோய்கள், மன நோய்கள், குழந்தைப் பிறப்பில் பிரச்சினைகள் உட்பட பல்வேறு தீய விளைவுகள் ஏற்பட்டன.  அப்பகுதியில் உள்ள நிலத்தடி குடிநீர் மிக மோசமாக மாசுபட்டது. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு நிறுவனமோ, அதன் வழி வந்த டௌ கெமிக்கல்ஸ் நிறுவனமோ அந்த ஆலையிலிருந்து வெளியான நச்சு ரசாயனங்களின் விவரங்களை இன்றுவரை சரியாக தெரிவிக்கவில்லை.

இந்திய அரசின் நிறுவனமான இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் இப்பகுதியில் இதுவரை சுமார் 34 ஆய்வுகளைத் தொடங்கியது. ஆனால் இந்த 34 ஆய்வுகளிலும் ஒன்றுகூட முழுமையாக நடந்து முடிந்ததாக தெரியவில்லை. அதற்கு பதிலாக அதிகார வர்க்கத்தால் இந்த ஆய்வுகள் திட்டமிட்டு தடை செய்யப்பட்டன. அரைகுறையாக நடந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாக வில்லை.  போபாலில் தொழிற்சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது என்பதைக்கூட இந்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. இறுதியாக தில்லியைச் சேர்ந்த (டவுன் டு எர்த் இதழ் நடத்தும்) அறிவியல் மற்றும் சூழலுக்கான மையம் இப்பகுதியின் நிலத்தடி நீரை ஆய்வு செய்ய முன் வந்தது. இந்த ஆய்வில் போபால் பகுதியில் இருக்கும் நிலத்தடி நீர் ஆபத்தான ரசாயனப் பொருட்களால் மிகவும் மோசமாக மாசுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

Pin It