இந்தியாவை, தமிழகத்தை இருளில் தள்ளிய மின் தடைக்கு, மின் பற்றாக்குறைக்கு கூடங்குளம் போராட்டம்தான் காரணம், தி.மு.க. அரசுதான் காரணம், அ.தி.மு.க. அரசுதான் காரணம், நெய்வேலி மின்சாரம் கர்நாடகா கொண்டு செல்லப்படுவதுதான் காரணம் என்று அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கின்றோம்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் இருந்து சுமார் 200 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்தாலே அது உலக அதிசயம்தான்.

காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் ஒப்பந்தகாரர்களாக இருந்து, பார்த்துப் பார்த்து உருவாக்கிய அந்த அணு உலை இயங்கத் துவங்கினால் என்ன ஆகுமோ என்பது வேறு கதை.

தி.மு.க. ஆட்சியிலும் சரி, அ.தி.மு.க.ஆட்சியிலும் சரி மத்திய அரசிடம் போராடி தங்களது சுய தேவைகளைத் தீர்த்துக் கொண்டார்களே தவிர மின் உற்பத்தி குறித்த தீவிர நடவடிக்கைகள் எதுவுமில்லை.

முன்பெல்லாம் மாநில அரசின் மின் உற்பத்தி திட்டங்கள் பற்றி ஆய்வு செய்து அனுமதி வழங்குவதோடு, அதற்கான திட்டத்தொகையில் ஒரு பகுதியை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த நடைமுறைக்கு 1992-ல் மன்மோகன் சிங் (அப்போது நிதித்துறை அமைச்சர்) மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா (அப்போதைய நிதித்துறைச் செயலாளர்) ஆகியோரின் பரிந்துரையில் காங்கிரஸ் அரசு தடை போட்டது.

மாநில அரசுகளுக்கு, மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளும் மின் திட்டங்களுக்கு அனுமதியில்லை என்றும் தனியார் மின்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவித்தனர்.

ஒவ்வொரு மாநிலமும் தங்களது மின் தேவையில் 65 சதவிகிதத்தை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும், மீதி 35 சதவிகிதம் விழுக்காடுகளை மத்திய அரசு தனது மின் தொகுப்பிலிருந்து வழங்கும் என்ற நிலை மாறத் துவங்கியது.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் எந்தவொரு மின் திட்டங்களையும் புதியதாக உருவாக்கவில்லை என்று மாறி, மாறி குற்றம் சாட்டலாம்; அதற்கு உருப்படியான முயற்சி எடுக்காமல் இருக்கலாம். இதன் பின்னணி, அதாவது உண்மைக் காரணம் என்னவென்றால் மத்தியில் காங்கிரஸ் கட்சி தனியார்மயத்தின் மீது கொண்ட பாசம்தான்.

தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களை ஊக்கப்படுத்தி அரசின் வரிப்பணத்தில் தனியாரிடம் இருந்து தான் மின்சாரம் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு மாநில அரசுகளை கொண்டு சென்றது காங்கிரஸ் அரசு.

புரட்சியாளர் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட 1948 மின்சாரச் சட்டத்தின்படி விவசாயம், தொழில், வீட்டு உபயோகம், அத்தியாவசியத் தேவை என லாப நோக்கமின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவையாகவும் மின்சாரம் இருந்து வந்தது.

உலக வங்கியின் வேலையாட்களாக பயிற்சி பெற்று வந்த காங்கிரஸ் கமிட்டியின் மன்மோகன், சிதம்பரம், அலுவாலியா கும்பலோ உலக வங்கிக்கு கட்டுப்பட்டு மின்சார பகிர்மானத்தை வரையறை செய்தார்கள். பின்னால் வந்த பாரதிய ஜனதா அரசோ மின்சார சட்டம் 2003 என புதிய சட்டத்தை உருவாக்கினார்கள். அதாவது மின்சாரம் அத்தியாவாசியப் பொருள் அல்ல, சேவை சார்ந்த விசயம் கிடையாது. அது விலை கொடுத்து வாங்க வேண்டிய விற்பனைச் சரக்கு என்ற நிலையை அரசே உருவாக்கியது. அதனை காங்கிரஸ் அரசும் தீவிரமாக அமல்படுத்த தொடங்கினார்கள்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் அரசின் சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, நமது மண்ணின் வளத்தையும், நீரையும், உழைப்பையும் சுரண்டி, சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி மின்சாரம் தயாரிப்பார்கள். அந்த மின்சாரத்தை யார் அதிகம் விலை கொடுத்து வாங்குகிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்வார்கள்.

அது பாகிஸ்தானாகவோ, பங்களாதேசமாகவோ, இலங்கையாகவோ அல்லது வெளி மாநிலங்களாவோ இருக்கலாம். நமது ஊரில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளாகவும் இருக்கலாம். இதனை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கின்றது ”2003ம் ஆண்டு மின்சார சட்டம்”.

சேவையாக வழங்க வேண்டிய மின்சாரம் சட்டப் பூர்வமாக விலை பேசப்படுகின்றது.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, யார் செத்தாலும் பரவாயில்லை எனக்கு மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற சுயநலப் போக்கோடு நாம் வாழ்கின்றோமே, அதற்கு வழிகாட்டியது காங்கிரஸ் அரசு.

மின்சார வாரியத்தை நஷ்டத்தில் தள்ளியது, வெளி நாடுகளுக்கு மின்சாரத்தை கொண்டு செல்வது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரத்தைக் கொடுப்பது, அரசின் மின் திட்டங்களுக்கு தடை போட்டு தனியார் மின் திட்டங்களை ஊக்கப்படுத்தியது என எல்லா விதத்திலும் இன்றைய மின் தடைக்கும், நாளைய மின் தடைக்கும் மூலக் காரணமாக இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சினர்.

இந்தியா ஒளிர்கிறது என்று கோசமிட்ட பாரதிய ஜனதா கட்சியினரும் இதற்கு சற்றும் சளைக்காதவர்கள்தான். சுதேசி என்ற முகமூடியோடு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயத்திற்கு தாரைவார்த்து மக்களைத் தவிக்கவிடுவதில் அவர்களும் கில்லாடிகள் தான்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இயக்கம் என்ற ஒரே தகுதியோடு இந்தியாவை விலை பேசி வருகின்றது காங்கிரஸ். அதற்கு மின் தட்டுப்பாடு மட்டுமில்லை; இழக்கவேண்டியது அதிகம் இருக்கின்றது. அதற்குள் விழித்துக் கொண்டால், பிழைத்துக் கொண்டோம்!.

- ஜெ.பிரபாகர்

Pin It