கவன ஈர்ப்புக்கு தரும் முக்கியத்துவத்தை கவனக் குவியலுக்கு தர வேண்டிய தருணங்கள் நிறைய இருக்கின்றன. பொதுவாகவே கவனமாய் இருக்க வேண்டிய வாழ்க்கை இது. பிசகினால் சாவு சிதறிக் கிடக்கும் பயணமும் இது.
மின்சாரம் இன்றி இந்த வாழ்க்கை ஏது. ஆனால் ஸ்விச்- ஐ கையாள்வதில் கவனம் வேண்டும். வாகனம் இன்றி அன்றாடத்தை நகர்த்த முடியுமா. ஆனால் அதை எதிர் கொள்வதில் கவனம் வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டே போகலாம். அளவுக்கு மிஞ்சினால்.. எல்லாமே நஞ்சு தான். செல்போன்.. செல்பி... உணவு.. உள்ளம்.. தனிமை.. தவிப்பு என எல்லாமே.. எல்லைக்குப் பிறகு தொல்லை.
கவனக் குறைதல் வீட்டுக்குள் நடந்தாலும்... விபத்து நடந்தேற வாய்ப்பிருக்கிறதுதானே.
குளியலறையில் வழுக்கி விழுந்த கதைகள் ஏராளம் கேட்டிருக்கிறோம். கண்டிருக்கிறோம். எடுத்து வைக்கும் காலடியில் கவனம் இல்லாத சிறு நொடி பிசகு.. இழுத்து விட்டு சரித்து விடும். சரிந்த உடல் நிலை தடுமாறி சுவற்றில் தலை மோதி... உயிர் போயிருக்கிறதே. தலை என்ன பாறாங்கல்லா. வெறும் மண்டையோடு. பலத்த கை... முட்டியை மடக்கி ஓர் இறுக்கு இறக்கினால்.. உள்ளெலும்பு நொறுங்கி போகும். சுவர் கேட்கவா வேண்டும். குளியலறை பாசத்தை அவ்வப்போது தேய்த்து கழுவி... சொர சொரப்போடு வைத்துக் கொள்ளல் வீட்டு விதி.
சுடு தண்ணியைத் தூக்கிக் கொண்டு திரும்புகையில்... அல்லது ஓர் அறையில் இருந்து இன்னொரு அறை வருகையில்.. கவனம் அதிகபட்சம் வேண்டும். இல்லையெனில்.. எதிரே வருபவர் மீது மோதி.. தண்ணீர் கொட்டினால் என்னாகும். என் நண்பனின் குழந்தைக்கு அப்படி ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. நினைக்கவே பதறும் சம்பவம் அது. புவி ஈர்ப்புக்கு முன் புத்தி மட்டு ஒன்றுமே செய்ய முடியாது. விழித்துக் கொண்டே இருத்தல்தான் ஒரே வழி. என்ன செய்கிறாயோ அதை செய் என்பது தான் அடிப்படை நிதானம்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். கையில் எந்த பொருளும் நமது இடுப்புயரத்துக்கு தூக்கி வருவதை தவிர்க்க. எதிரே அதே உயரத்துக்கு ஓடி வரும் குழந்தைகள் இருந்தால்.. கதை கந்தல். சுடு தண்ணியோ சுடு ரசமோ... சுட சுட எது ஒன்று உடம்பில் கொட்டினாலும்... என்னாகும். பொசுக்கி விடும்.
அழகுக்கோ ஆடம்பரத்துக்கோ... நவீனத்துக்கோ நாகரீகத்துக்கோ பதிக்கப்படும் டைல்ஸ்... பார்க்க பளபளவென இருக்கலாம். உள்ளே பதுங்கி இருக்கும் எமனை நினைவில் கொள்க. டைல்ஸில் வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது தானே. வைக்கும் காலடிகளை ஆழமாய் அழுத்தமாய் வைத்து பழகுதல் தேவை. கால் டைல்ஸில் இருக்கிறது என்ற கவனமே அதற்கான தீர்வு. அதுவும் தண்ணீர் சிந்தி இருப்பது தெரியாமல் வழுக்கிக் கொண்டு விழும் காட்சிகளை அடிக்கடி பார்க்கிறோம். இழுத்துக் கொண்டு போகும் காலில் முறிவு... சுளுக்கு.. தசைப்பிடிப்பு... இதெல்லாம் ஆறு மாச அவஸ்தை. பின் மண்டை தரையில் வந்து அடித்தால்... சோலி முடிஞ்சது.
தண்ணீர் பிடிக்கும் போது எண்ணத்தில் வேலையே கண்ணாய் குவிந்திருக்க வேண்டும். சீரியலில் கவனம் இருந்தால்... சீக்குக்கு தண்ணீர் திறந்து விடுகிறவன் பொறுப்பு அல்ல.
சூடு பாத்திரத்தை தொட்டு கீழே போட்டு அடிக்கடி களேபரம் நடத்தும் அம்மணிகளுக்கு அமைதி கிட்டட்டும். யாரும் வாசல் முற்றத்தில் உங்களுக்கு சிலை வைக்கப் போவதில்லை. பொறுமையாக கையாளுங்கள்.
ஓர் அறையில் இருந்து இன்னொரு அறைக்கு வேகமாய் போகும் போது எதிரே ஆள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் இருக்க. இல்லையெனில் மண்டை மண்டை முட்டி... முறைத்து நிற்க வேண்டியது தான். கால் முட்டியில் இடித்துக் கொண்டு சேர் இடிச்சிருச்சு என்பார்கள். எந்த சேர் வந்து இடிக்கும். எது ஒன்றுக்கும் எதிரே கை காட்டும் ஆதி புத்தி வேலைக்காகாது. முதலில் ஏற்றுக் கொள்ள பழகு. அதுவே பிறகு மாற்றிக் கொள்ள உதவும்.
திறந்திருக்கும் ஜன்னலுக்கு கீழே அமர்ந்து.. பிறகு மறந்தபடியே மடாரென எழுந்து தலையில் முட்டிக்கொண்டு ஆ ஆவென தலையைத் தேய்க்கும் காட்சிக்கு மன்னிப்பே கிடையாது. வலியே தண்டனை.
விசுக்கென்று காலை ஊன்றி விடுதல்.. கையை ஊன்றி எந்திரிப்பது... எல்லாமே பிசகுக்கு தான் வழி செய்யும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்யும் அளவுக்கு கவனக் குவிதல் இருந்தால் சரி. இல்லையெனில் ஒன்றின் மீது கவனத்தை குவிக்க பழகுங்கள். ஏதாவது பொருள் கையில் இருந்து தவறினால்... உடனே படபடப்பும் பதற்றமும் கூடி அதை பிடிக்க தாறுமாறாக அசைந்து தள்ளாடி.. எதிலாவது முட்டிக்கொள்ள நேரிடுகிறது. அப்படி விழும் பொருளை உடனே எடுக்க படக்கென்று குனிந்தால்... பக்கத்தில் இருக்கும் நாற்காலியிலோ... மேசையிலோ.. சிலேபிலோ தலை முட்ட வாய்ப்பிருக்கிறது. விழுந்தது விழுந்து விட்டது.. சரி என்ற தெளிவை அந்த நிமிடமே கொள்ள வேண்டும். தலையைக் குனிவதற்கு பதிலாக நின்றவாக்கிலேயே காலை மடக்கி குத்தவைத்து அமர்ந்து... விழுந்த பொருளை எடுத்து மேலெழலாம். எல்லா வகையிலும் பாதுகாப்பு இது.
வீடுகளில் பல்லி இருப்பது இயல்பு. ஆனால் அது சமையலறைக்குள் வருகிறதா என்பதை கவனிப்பது அடிப்படை இயல்பு.
அதே போல கீரை ஆய்வதில் கவனம் வேண்டும். கீரையோடு களையும் சேர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கவனமாய் பிரித்தெடுக்க கற்றிருக்க வேண்டும்.
கதவு சந்துக்குள் விரலை விட்டு விட்டு வீல் வீல் என கத்தும் குரலுக்கு சொல்லிக்கொள்வது... கவனக் கண்களை திறந்தே வை. பாலை கேஸ் அடுப்பில் வைத்து விட்டு பராக்கு பார்த்துக் கொண்டு நின்றால்... பால் பொங்கி... அடுப்பில் வழிந்து நெருப்பை அணைத்து... பிறகு வீட்டுக்கே பால் ஊற்ற நேரிடும். தினமும் தூங்க போகும் போது ஒருமுறைக்கு இருமுறை கேஸ்- ஐ அணைத்து விட்டோமா என்பதை உறுதிப் படுத்துதல் பாதுகாப்பு மற்றும் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. கேஸ் கசிந்து விபத்து ஏற்பட்டால்.. பக்கத்து வீடும் சேர்ந்து பற்றிக் கொண்டெரியும். கவனம்.
எங்கு நின்றாலும் சுற்றி ஒரு பார்வை பார்த்துக் கொள்ளல் அவசியம். மழைக்கு ஒதுங்கி நின்ற மனிதன் கிளையில் தொங்கிய பாம்பை கவனிக்காமல்... கடி பட்டு மரித்த சம்பவம் உண்டு. முதலில் மழைக்கு ஒதுங்க மரத்தை நாடக் கூடாது என்பது அடிப்படை. இடி இறங்க வாய்ப்பிருக்கிறது.
புரை ஏறிவிட்டால்... யாராவது நினைக்கிறார்கள் என்பது.. விக்கல் வந்தால் யாராவது திட்டுகிறார்கள் என்பது. அதெல்லாம் ஒன்னும் இல்ல. முன்னது கவனக்குறைவு. பின்னது குடல் பொருமல்.
மழை வருகிற அறிகுறி தெரிந்தால் போதும்... இந்த பூமியே மடங்கி உதிர்வது போல.. ஓடோடி.. மொட்டைமாடி அல்லது முற்றத்துக்கு சென்று காய்ந்து கொண்டிருக்கும் துணிகளை போர்க்கால வேகத்தில் இழுத்து சுருட்டுவது... பார்க்கவே படுபயங்கரமாக இருக்கும். நனைந்தால் தான் நனையட்டுமே. என்ன இப்போ. நனைவது எல்லாம் காய்ந்து விடும் என்ற மெய்ஞ்ஞானம் பழகுவோம்.
நிதானம் கொண்ட நடையோ... ஓட்டமோ.. திருப்பமோ ஒன்றும் செய்யாது. அதுவற்ற எதுவும் முட்டிக்கொண்டு நிற்கும்.
ஆகவே கவனம் கண்மணிகளா.
- கவிஜி