உலகெங்கும் உள்ள ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு சவரப் பசை (Shaving Cream) மற்றும் நோய்த் தடுப்பு திரவம் (Antiseptic liquid) ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றிலுள்ள வேதிப்பொருட்களினால் இளமையில் தலைமுடி நரைப்பதற்கு முன்பே முகத்திலுள்ள முடிகள் நரைத்து விடுகின்றன. மேலும் வியர்வை வெளியேற்றம் தடைபடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. இந்த வேதிப்பொருட்களினால் பல்வேறு உடல் உபாதைகளும், நோய்களும் ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காக புதிய முகச்சவர திரவம் கண்டுபிடித்து, அதனை பல ஆண்டுகளாக பயன்படுத்தி நல்ல பலன் பெற்றுள்ளேன். இந்த திரவம் நாம் உணவிற்கு பயன்படுத்தும் தாவர எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்த கலவையே ஆகும். இந்த கலவை உராய்வு நீக்கியாக செயல்படுவதால் முகத்தசைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த திரவத்திற்கு கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பதால் முகச்சவரத்திற்குப் பின்னர் நோய்த் தடுப்பு திரவம் (Antiseptic liquid) பயன்படுத்த தேவையில்லை. இந்த திரவத்தை பயன்படுத்துவதால் முகச்சவரத்திற்கு பயன்படுத்துகிற சவர அலகின் (Blade) செயல்திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது. மேலும் பொருளாதார வகையில் மிகவும் மலிவானது. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.

நடைமுறையில் இருக்கின்ற முகச்சவர முறையினால் ஏற்படும் பாதிப்புகள் 

நடைமுறையில் இருக்கின்ற முகச்சவர முறையினால் முகத்தின் அழகு, முகத் தசை, முகத்திலுள்ள முடி மற்றும் உடல்நலம் ஆகியவை பாதிப்படைகின்றன. இதற்கு காரணம் முகச்சவர பசையில் இருக்கின்ற கீழ்க்கண்ட வேதிப் பொருட்களே ஆகும்.

1. ஸ்டீரிக் அமிலம் (8.2சதவிகிதம்)     தோல் அரிப்பை ஏற்படுத்தும்

2. டிரைஎத்தனாலமீன் (3.7சதவிகிதம்) தோல் மற்றும் உடல் உள்உறுப்புகளை பாதிக்கும்

3. கிளிசரின் (5சதவிகிதம்)

4. லனோலின் (2சதவிகிதம்)

5. பாலி ஆக்ஸிஎத்திலீன்சார்பிட்டன்மோனோஸ்டீரெட் (6சதவிகிதம்) தோல் மற்றும் உடல் உள் உறுப்புகளை பாதிக்கும்

6. நீர் (74.6சதவிகிதம்)

7. நறுமணமேற்றி (0.5சதவிகிதம்) ஒவ்வாமை மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்

மேற்கண்ட வேதிப் பொருட்களுடன் மேலும் சில உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. அவையாவன

1. டை எத்தனால் அமீன் - இது நைட்ரசோடை எத்தனால் அமீனாக எளிதில் மாற்றமடைகிறது. இது உடலினுள் எளிதாக ஊடுருவும் தன்மை கொண்டது. இதனால் வயிறு, உணவுக் குழாய், கல்லீரல், பித்தப்பை மற்றும் சிறுநீரகப்பை போன்றவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

2. புரொப்பலீன் கிளைக்கால்

3. ஐசோ பியுட்டேன் - நரம்பு மண்டலத்தை பாதிக்கும்

4. அசிட்டிக் அமிலம் - தோலில் பாதிப்பை ஏற்படுத்தும்

இளமையில் முகத்திலுள்ள முடி நரைத்தல்

முடியானது கெரட்டின் என்னும் புரத கற்றைகளால் ஆனது. இது வெண்மை நிறமுடையது. ஆனால் மெலனின் என்ற கருமையான நிறமுடைய பொருளானது, கெரட்டின் புரத கற்றைகளுக்கு இடையில், ஈர்த்துக் கொள்ளப்படுவதால் முடி கருமை நிறமாக தெரிகிறது.

நடைமுறையில் உள்ள முகச்சவர பசையை தொடர்ந்து பயன்படுத்துவதால், மேற்கண்ட வேதிப் பொருட்களினால், வியர்வைத் துளையில் உள்ள மெலனினை உற்பத்தி செய்யும் மொனோசைட்டுகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மெலனின் உற்பத்தி குறைந்துவிடுகிறது. எனவே இளவயதில் முகத்திலுள்ள முடிகள் நரைத்து விடுகின்றன

உடல் வெப்பம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேதிப்பொருட்கள், வியர்வைத் துளையை அடைத்து விடுவதால், வியர்வை வெளியேற்றம் தடைபடுகிறது. இதனால் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான உடல் வெப்பத்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை மற்றும் உடல் உபாதைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது

சவர அலகு (Blade)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் சவர அலகின் கூர்மையான அலகை அரிக்கும் தன்மை உடையவை. இதனால் சவர அலகின் செயல்திறன் வெகுவாக குறைகிறது.

நோய்த் தடுப்பு திரவம்

நோய்த் தடுப்பு திரவத்தில் இருக்கின்ற வேதிப்பொருட்களான குளோரோசைலினால் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை உருவாக்கும்

சுற்றுச்சூழல் பாதிப்பு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் அனைத்தும் முகச்சவரத்திற்கு பின்னர், கழிவு நீரில் கலப்பதால் நீர் வாழ் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் குடிநீரின் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

புதிய முகச்சவர முறை

மேற்கண்ட அனைத்து பிரச்னைகளுக்கு (சூரியகாந்தி போன்ற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட என்ற) தீர்வு காணும் வகையில் புதிய முகச்சவர திரவம் கண்டறியப்பட்டுள்ளது. இது தாவர எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்த கலவை ஆகும். இந்த கலவை ஒரு கூழ்மமாகும். இந்த கூழ்மத்திற்கு அதிகமான உராய்வு நீக்கும் தன்மை உள்ளது. எனவே, இதனை பயன்படுத்துவதன் மூலம் முகச்சவரம் மிகத் தெளிவாகவும், எளிதாகவும் செய்து கொள்ளலாம்.

இந்த கூழ்மமானது மெலனினை உற்பத்தி செய்கின்ற மெலனோசைட்டுகளை பாதிப்பதில்லை. எனவே, மெலனின் உற்பத்தி சீராக இருப்பதால் இளமையில் முகத்திலுள்ள முடி நரைப்பதில்லை.

மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் எதுவும் இல்லாததால், மேலே குறிப்பிடப்பட்ட உடல் நோய்கள் எதுவும் ஏற்படுவதில்லை. இத்திரவம் வியர்வை துளைகளை சுத்தம் செய்து விடுவதால் வியர்வை வெளியேற்றம் எளிதாகி, உடல் வெப்பம் சமநிலைப்படுத்தப்படுகிறது. இதனால் நல்ல தூக்கம் வருவதுடன் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கிணங்க அகத்தின் அழகும் முகத்தின் அழகும் கூடுகிறது இந்த புதிய சவர கூழ்மத்தை பயன்படுத்துவதால்.

இந்த புதிய முகச்சவர கூழ்மத்திற்கு சவர அலகின் கூர்முனைகளை அரிக்கும் தன்மை இல்லாததால், சவர அலகின் செயல்திறன் கூடுகிறது. மேலும் இந்த கூழ்மத்திற்கு நுண்கிருமிகளை எதிர்க்கும் சக்தி இருப்பதால், முகச்சவரத்திற்கு பின் நோய்த்தடுப்புத் திரவம் எதுவும் பயன்படுத்தத் தேவையில்லை. இந்த புதிய முகச்சவர கூழ்மத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடாது. இப்புதிய முறையை பயன்படுத்துவதால் தனி நபர் சேமிப்பு அதிகரிப்பதால் நாட்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் (ஓராண்டிற்கு) இலாபம் கிடைப்பதன் மூலம் நம் நாடு பொருளாதார வளர்ச்சி அடையும்.

***

கட்டுரையாளர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்

(இளைஞர் முழக்கம் ஜூன் 2011 இதழில் வெளியானது)

Pin It