தேவையான பொருட்கள்:

கோழி - 1
நறுக்கிய தக்காளி - அரை கப்
இஞ்சி - ஒரு அங்குலதுண்டு
பூண்டு - 8
உலர்ந்த மிளகாய் - 5
கிராம்பு - 4
பட்டை - இரண்டு அங்குலத் துண்டு
கொண்டைக்கடலை - அரை கப்
முந்திரி - 18
தேங்காய்ப்பால் - ஒரு கப்
புளிக்கரைசல் - ஒரு கப்
ஏலக்காய் - 5
மல்லி - ஒரு மேசைக்கரண்டி
கசகசா - அரை மேசைக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை 3 அல்லது 4 மணி நேரம் நன்கு ஊற வைத்து, பிறகு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி ஒரு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து, மிதமான வெந்நீரில் கரைத்து ஒரு கப் அளவிற்கு நீரினை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டினை தோலுரித்து மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை தனியே விழுதாக அரைத்து வைக்க வேண்டும்.

கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, கசகசா ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மிக்ஸியில் இட்டு தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதினையும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கோழித்துண்டங்களைச் சேர்த்து, குறைந்த தீயில் கோழி இறைச்சியில் உள்ள நீர் வற்றும் வரை வேகவிட வேண்டும்.

இப்போது நறுக்கின தக்காளி மற்றும் பொடியாக அரைத்து வைத்துள்ள கிராம்பு, ஏலம், மல்லி மசாலாவினையும் சேர்த்து நன்கு கிளறி தீயை சற்று அதிகப்படுத்தி வேக விட வேண்டும். மசாலா தக்காளியுடன் நன்கு கலந்து வெந்தவுடன், மசித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, முந்திரி விழுது, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து வேகவிட வேண்டும். இறுதியாக புளிக்கரைசலை சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை வேகவிட்டு இறக்க வேண்டும்
.

 

 

Pin It