தேவையான பொருட்கள்:

கோழி இறைச்சி - 4 மார்பு துண்டுகள்
எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
துருவிய எலுமிச்சைத் தோல் ஒரு தேக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
கார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி
பச்சை குடை மிளகாய் - 1
சிகப்பு குடை மிளகாய் - அரை மிளகாய்
மஞ்சள் குடை மிளகாய் - அரை மிளகாய்
வெள்ளை மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
சீனி - 3 மேசைக்கரண்டி
ஜாதிக்காய் - 1
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு


செய்முறை:

கோழி மார்புத் துண்டுகளை எலும்புகள் நீக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தின் தோலினைத் துருவி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கோழித் துண்டங்கள் மீது தடவி ஊறவிட வேண்டும். இரண்டு மேசைக்கரண்டி கார்ன்ஸ்டார்சினை அரை கோப்பை நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். குடை மிளகாய்களின் விதைகளை நீக்கி விட்டு நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும் ஊற வைத்துள்ள கோழித் துண்டங்களை கார்ன்ஸ்டார்சில் புரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு எண்ணெய்யை வடிக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய் துண்டங்களைப் போட்டு லேசாக வதக்க வேண்டும்.

அத்துடன் வெள்ளை மிளகுத் தூள், அஜினோமோட்டோ, சீனி, தேவையான உப்பு, ஜாதிக்காய், துருவிய எலுமிச்சைத் தோல், சிக்கன் ஸ்டாக் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டாச்சினை ஊற்றிக் கலந்து மிதமான தீயில் வேகவிட வேண்டும். குழம்பு கெட்டியானவுடன் பொரித்து வைத்துள்ள கோழித் துண்டுகளைப் போட்டு மேலும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட வேண்டும். மீதமுள்ள எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கலந்து இறக்கி சூடாகப் பரிமாற வேண்டும்.

Pin It