தேவையானவை:

வெள்ளை கிழங்கான் மீன்...  1 /2 கிலோ
மிளகாய்......................................10
மல்லி............................................50 கிராம்
மிளகாய், மல்லி, சீரகம்+சோம்பு
சீரகம் ......................................1 தேக்கரண்டி
சோம்பு......................................1 /2 தேக்கரண்டி
பட்டை.....................................சிறு துண்டு
இஞ்சி.........................................1   இன்ச்
பூண்டு.................................... 10  பல்
வெங்காயம்.............................. கைப்பிடி
எலுமிச்சை சாறு................... ஒரு மூடி
தயிர்............................................1 .தேக்கரண்டி
உப்பு........................................... தேவையான அளவு
எண்ணெய்................................. பொரிக்க
சோள மாவு.(தேவையானால்).......1 .தேக்கரண்டி

செய்முறை:

மீனை செதில், வழுவழுப்பு போக நன்றாக கழுவவும். மீனை நறுக்க வேண்டாம். முழு மீனாவே போடவும். நன்கு மசாலா சார்ந்து இருக்க, மீனை இருபக்கமும் கத்தியால் லேசாகக் கீறவும்.

பொதுவாக கடல் மீனை கழுவியவுடன் குழம்பு வைக்க/பொரிக்க வேண்டும். கொஞ்ச நேரம் வைத்திருப்பதாகத் தெரிந்தால், கழுவி்ய மீனில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி + எலுமிச்சை சாறு விட்டு பிசைந்து வைத்தால், சுமார் 5  மணி நேரம் வரை, குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமலே பாதுகாக்கலாம்.  மிளகாய்,மல்லி,  சீரகம், சோம்பு, பட்டை + பாதி வெங்காயம் இவற்றை வறுக்காமல் பச்சையாக அரைக்கவும்.

இஞ்சி பூண்டையும் நைசாக அரைக்கவும். வெங்காயத்தில் பாதியை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகாய், மல்லி சாந்து , இஞ்சி, பூண்டு விழுது,உப்பு, நறுக்கிய வெங்காயம்,சோளமாவு, எலுமிச்சை சாறு , தயிர் +ஒரு தேக்கரண்டி எண்ணெய் போட்டு நீர் ஊற்றாமல் நன்கு பிசைந்து வைக்கவும். இதனை அப்படியே குளிர் சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். (நீங்கள் உப்பு, எலுமிச்சை +மஞ்சள் போட்டு பிசைந்து வைத்திருந்தால், அதனை மீண்டும் ஒரு முறை நீரில் கழுவிய பின் மசாலாவைப் போட்டு பிசையவும்.)

சோள மாவு மீன் உடையாமல் காப்பாற்றும். வேண்டாமென்றால் சேர்க்க வேண்டாம். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், அதில் மிளகாய், மசாலா தடவிய மீனை ஒவ்வொன்றாய் போடவும். தீயை சீராக எரிய விடவும்.

மீன் ஒரு பக்கம் நன்கு வெந்ததும், அவற்றை உடைந்து விடாமல் மறுபக்கம் திருப்பி விடவும். மீன் இரு பக்கமும் முழுமையாக வெந்த பின், நன்கு சிவந்ததும் வறுத்த மீனை எடுத்து விடலாம். 

வறுத்த கிழங்கான் மீன் சுவையைப் பற்றி கேட்கவே வேண்டாம்..! கம்ப ராமாயணத்தில் வரும் கண்டவர் விண்டிலர் கதைதான். வறுத்த மீனை அப்படியே.. வெறுமனே சாப்பிடலாம். எதனோடும் இதனை துணை சேர்க்க வேண்டியதில்லை. அவ்வளவு அருமையான சுவை...!! சும்மா.. தூள் டக்கர் போங்க..!

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It