ஆயிரம் லிங்கங்களையும், அவற்றின் மேல் பாய்ந்த ஆற்றையும் பார்த்த திருப்தியுடன் மற்ற கோயில்களைப் பார்க்கப் புறப்பட்டோம்.

அங்கே மன்னர்கள் மட்டுமல்ல, மக்களும் பல கோயில்கள் கட்டியிருக்கின்றனர். அவற்றில் 10ஆம் நூற்றாண்டில் அந்தணர் ஒருவரால் கட்டப்பட்ட ஒரு கோயிலை வழியில் பார்த்தோம். அக்கோயில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. மூன்று கருவறைகள் இருந்தன. அவற்றில் ஒன்றில், புடைப்புச்சிற்பமாக, சிவன் நெற்றிக் கண்ணுடன் நின்ற நிலையில் இருந்தார். ஒருபுறம் சங்கு சக்கரத்துடன் திருமால் நிற்க, எதிர்ப்புறம் ஒரு பெண் தெய்வம் நின்ற நிலையில் இருந்தனர். லட்சுமி என்று வழிகாட்டி சொன்னார். அந்தக் கோயிலின் முன்புறம் சமஸ்கிருதக் கல்வெட்டு என்று காட்டினர். ஆனால் அந்த எழுத்துக்கள் பழைய தமிழ் எழுத்துக்கள் போல் எங்களுக்குத் தோன்றியது.

Bayon temple

பொதுப்படையாக இந்தியா என்றும், சமஸ்கிருதம் என்றும் சொல்லி விடுகிறார்களோ, குறிப்பாகத் தமிழ், தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லையோ என்று தோன்றியது. ஆராய்ச்சியாளர்கள் தான் அறிந்து சொல்ல வேண்டும்.

அதன்பின் நாங்கள் பார்த்தது அமைதியான புன்னகைக்கும் முகங்களைக் கொண்ட பேயான் கோயில் (Bayon temple).

அங்கோர் வாட் நகரத்தை நிறுவிய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 12, 13ம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மன் என்ற மன்னன் தனது வெற்றியின் அடையாளமாக "அங்கோர் தாம்" (angkor thom) என்ற நகரத்தையும், நடுவில் ஒரு புத்தக் கோயிலையும் நிறுவியிருக்கிறான். நகரத்தின் நான்கு வாயில்களிலிருந்தும் நடுவில் இருக்கும் கோயிலுக்குள் செல்லும் வகையில் அமைக்கப் பட்டிருக்கிறது.

கிழக்கு வாசலின் முன்புறம் பாதையின் இருபுறமும், ஒருபுறம் தேவர்களும், மறுபுறம் அசுரர்களும் பாம்பைப் பிடித்துக் கொண்டு நிற்கும் பெரிய பெரிய சிலைகள் உள்ளன.

இவற்றைத் தாண்டி மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சென்றால் கோவிலை அடையலாம். அகழியோ, மதிற் சுவரோ, முதற் பகுதிகளுக்கு மேற்கூரையோ இல்லை. நேராக கோபுரங்களும் அவற்றின் மேல் பக்கத்திற்கு ஒன்றாகப் பெரிய முகங்கள் நம்மைப் பார்த்து அமைதியாகப் புன்னகைப்பதைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.

உயரமான முதல் நிலையில் சுவர் முழுவதுமாக நீண்ட, பெரிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் குதிரைப்படை, யானைப்படைகளுடன் அரசர் படையெடுத்துச் செல்வது, கடற்போர், கடைத்தெருக் காட்சிகள், வீடுகள், சீனத்து வணிகர்கள், படகுகள், மீனவர்கள், கோழிச் சண்டை போன்ற அன்றாட நிகழ்ச்சிகள் பலப்பல சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அங்கோர் வாட் சிற்பங்களை விடச் சற்று ஆழமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன.

இதைத் தாண்டி உள்ளே செல்லும் வழியில் தாமரையின் மேல் நடனமாடுவது போன்ற பல நிலைகளில் அப்சரா சிற்பங்கள் உள்ளன. நூலகங்களும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளே அமைந்துள்ள உயரமான மூன்றாவது நிலையில்தான் சுமார் 50 கோபுரங்களும் அதில் சுமார் 200முகங்களும் உள்ளன. முகங்கள் போதிசத்துவரையும், அவரது பிரதிநிதியான அரசரையும் குறிப்பதாக இருக்கிறது. அரசரின் முகத்தை ஒட்டியே புத்தரின் முகமும் அமைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

அகலமான நெற்றி, நெற்றியின் மேல் கிரீடம், கீழ்நோக்கிய கண்களுடன் அகலமான மூக்கு, தடித்த உதடுகள் மேல் நோக்கி மடிந்து, அமைதி நிறைந்த புன்னகைக்கும் முகமாக உள்ளது. இது போல சுற்றிச் சுற்றி முகங்கள்தான்.

Bayon temple

நடுவில் உள்ள கோபுரத்தின் கீழ் நாகக் குடையுடன் தியான நிலையில் புத்தர் சீலை இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏழாம் ஜெயவர்மனுக்குப் பின் வந்த எட்டாம் ஜெயவர்மன் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருந்ததால் கோவிலில் புத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்துச் சின்னங்கள் சேர்க்கப் பட்டன.

கருவறையிலிருந்த புத்தர் சிலையும் உடைக்கப்பட்டு அருகிலிருந்த கிணற்றில் போடப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நடந்த சீரமைப்புப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோயிலின் கற்கள் கிடந்த பகுதியில், கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சிறிய சிறிய கோபுரங்களைப் போல் வைக்கப்பட்டு இருந்தன. அவை என்னவென்று கேட்ட பொழுது உள்ளூர் மக்களின் பிரார்த்தனை, வேண்டுதல்கள் என்று கூறினார். எல்லா இடங்களிலும் வேண்டுதல்கள் விதவிதமாக இருக்கத்தான் செய்கின்றன.

இந்தப் பகுதிகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து முற்றிலும் கைவிடப்பட்டு மரங்கள் அடர்ந்து இருந்தது. 20ம் நூற்றாண்டில் தான் பிரஞ்சுக்காரர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு வருகிறது.

பேயான் கோயிலை அடுத்து, சற்று தூரத்தில் அந்தக் கோயிலைக் கட்டிய அரசனுடைய அரண்மனை மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. அதன் முன்னால் "எலிபெண்ட் டெரஸ் "(elephant terrace) எனப்படும் படைகளை, பொது நிகழ்ச்சிகளைப் பார்வையிடும் இடம் உள்ளது. இது சுமார் பத்து அடி உயர மேடையில் அமைந்துள்ளது. அவற்றின் பக்கவாட்டில் பெரிய யானைகள், கருடன்கள் இவற்றின் புடைப்புச் சிற்பங்கள் மேடையைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய இடம் இது. ஒரு கருடன் காலின் அடிப் பகுதியில் ஐந்து தலைப் பாம்பின் தலை இருக்க வாலைக் கையால் தலைக்கு மேல் பிடித்திருப்பதைப் போல் அமைக்கப் பட்டுள்ளது.

மேடையின் முன்புறம் மிகப் பரந்த இடம் உள்ளது. அதைத் தாண்டி தூரத்தில் சிதிலமடைந்த கோபுரங்கள் போன்ற அமைப்பு மருத்துவ மனைகள் என்று கூறப்பட்டது.

இந்த இடங்கள் முழுவதும் மரங்கள் அடர்ந்து மறைந்து இருந்தது. தற்போது சீரமைத்து வருகிறார்கள்.

இதையடுத்து 'டா ப்ராம்' பகுதியைப் பார்த்தோம். அது அடுத்த பகுதியில்...

Pin It