என் கணவரும், நானும் தென் கொரியா சென்ற பொழுது, அதன் தலைநகரான சியோல் மட்டுமே பார்க்க முடிந்தது. சியோல் ஒரு முன்னேறிய நாட்டின் தலைநகர் எப்படி இருக்குமோ, அப்படி பெரிய கட்டடங்களுடனும், பெரிய சாலைகளுடனும், எல்லா வசதிகளுடனும் இருக்கிறது.

சியோல் மலைப்பாங்கான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சென்ற நேரம் கோடை முடிந்து, இலையுதிர் காலத்தின் துவக்கம். ஆதலால், மிதமான குளிர், வெப்பத்துடன் நம் கொடைக்கானல் ஊடடி போல் நன்றாக இருந்தது.

சியோலில் பழைமையான, புராதனமான இடங்கள் அதிகம் ஒன்றும் இல்லை. நம் இந்தியா மாதிரி கலை நுணுக்கங்களுடனோ, பிரம்மாண்டமானதாகவோ இல்லை. ஆனால் இருக்கும் இடத்தை அவர்கள் வைத்திருக்கும் முறை தான் சிறப்பைத் தருகிறது.

ஜோகேஸா கோயில் (Jogyesa temple)

ஜோகே ஆர்டர் புத்தக் கோயில் ( Jogye order of korean Buddhism) ஜோகேஸா சென்றோம். மலை மேல் எங்கோ இருந்த கோயிலை எடுத்து வந்து, சியோலில் புதுப்பித்திருக்கிறார்கள். ஒரு பெரிய செவ்வக வடிவ மண்டபம். மேல் பகுதி முழுவதும் மரத்தால் ஆனது. பக்கங்களில் அழகிய பலகணிகள். இவை முழுவதும் நல்ல பச்சை, மஞ்சள், நீலம்,சிவப்பு வண்ணங்கள் கொண்ட புத்தக் கோயிலுக்கே உரிய ஓவியஙகள் உள்ளன.

jogyesa

கோயிலின் முன்புறம் மேற்பகுதியில் நூற்றுக்கணக்கான, காகிதத்தால் ஆன தாமரைப்பூ, மீன் மற்றும் பலவிதமான விளக்குகள் தொங்க விடப்பட்டிருக்கின்றன. மக்கள் தங்கள் வேண்டுதல்களை தாமரைப்பூ விளக்குகளில் எழுதித் தொங்க விடுகிறார்கள். அங்கே நடக்கும் விளக்குத் திருவிழாவின் போது விளக்குகள் நிறைய ஏற்றி வைத்து மிகவும் அழகாக இருக்குமாம்.

கோயில் மண்டபத்தின் ஒரு பகுதி முழுவதும் இருக்குமாறு மூன்று பிரமாண்டமான, கூரை வரையிலான புத்தர் சிலைகள். நடுவில் இருப்பவர் புத்த மதத்தைத் தோற்றுவித்த சாக்கிய முனி புத்தர். இடது கையைத் தொடையிலும் வலது கை லேசாகத் தரையைத் தொட்ட விதத்தில் "பூமியைத் தொட்ட முத்திரை"யுடன் இருக்கிறார். புத்தர் ஆன்மீக ஒளி பெற்ற பின் பூமியைத் தொட்டதாகவும், பூமி அவரது வெற்றிக்குச் சாட்சியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சாக்கியமுனி புத்தரின் இடப்பக்கத்தில் மருந்துக் குடுவையுடன் மருத்துவ புத்தர். இவர் உயிர்களின் உடல், மன நலத்தைக் காப்பவர். வலப்புறம் இருக்கும் அமிதாப புத்தர் தூய்மையான சொர்க்கத்துக்கு வழி காட்டுபவராக வணங்கப்படுகிறார். புத்தர் என்றால் ஒருவரே என்று நினைத்து இருந்த எனக்கு மூன்று புத்தர்கள் இருந்தது புதிதாக இருந்தது.

அந்தக் கோயிலுக்கு முன்பு "கோயில் உணவு"( temple food)என்ற பெயரில் சுத்த சைவமாக, புத்தக் கோயில்களில் வழங்கப்படும் முறையில் உணவுகளைத் தரும் உணவகம் ஒன்று இருக்கிறது. அதில் சாப்பிட்டுப் பார்த்தோம். சூப, சாதம, கிம்ச்சி, அவர்களின் ஊறுகாய் போன்ற பதப்படுத்திய காய்கறிகள், வேகவைத்த கீரைகள், காளான்கள், கொழுக்கட்டை கிரேவியுடன் பழங்கள் என்று சுத்த சைவமாக இருந்தது.

வரும் வெளிநாட்டவர்கள் புத்த மதத்தைப் பற்றியும், வழிபாட்டு முறை, புத்த துறவிகளின் வாழ்க்கை முறை இவற்றைப் பற்றியும் அறிந்து கொள்வதற்காக temple stay என்ற நிகழ்ச்சிகள் பல கோயில்களிலும் உண்டு. அங்கே போய் இருந்து தியானம், வழிபாடு, மனதை ஒருமைப் படுத்தும் தேநீர் நிகழ்வு மற்றும் பல நிகழ்ச்சிகளிலும் சில மணி நேரம் முதல் சில நாட்ககள் வரை இருந்து கலந்து கொள்ளலாம். அனைத்திற்கும் கட்டணம் உண்டு.

ஹான் ஆறு பவுண்டன்

han river

ஹான் ஆறு சியோலின் நடுவில் நிறையத் தண்ணீருடன் கரையைத் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. ஆற்றுன் இருபுறமும் மரங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மக்கள் வந்து பொழுது போக்கும் இடமாக இருக்கிறது. ஆறும், நீரும் சுத்தமோ சுத்தம். உல்லாசமாக பெரிய படகுகளிலும் செல்லலாம்.

ஆற்றைக் கடப்பதறகாகக் கட்டப்பட்ட பாலத்தின் பக்கவாட்டில், ஆற்று நீரை விதவிதமாகப் பாய்ச்சி அடிக்கும் நீர் ஊற்றுகள்(fountain) அமைத்திருக்கினறனர். பாலத்தின் நீளம் முழுவதும் பெரிய அளவில் பலப்பல வண்ண விளக்குகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரத்தில் அங்கிருக்கும் பூங்காவில் காற்று வாங்கிக் கொண்டு, வண்ண மயமான விளக்குகளுடன் நீர் பீச்சி அடிப்பதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

 rainbow fountain seoul

கொரிய மக்கள் சாப்பாட்டுடன் வந்து, சிலர் டெண்ட் எல்லாம் போட்டுக் கொண்டு பொழுதைக் கழிக்கிறார்கள். பீட்ஸா, சிக்கன் வறுவல் முதலியவற்றையும் ஆர்டர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். இப்படி ஒரு பாலத்தைக்கூட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அழகான பார்க்க வேண்டிய ஓர் இடமாக ஆக்கியிருக்கிறார்கள்.

கியான்பாக்ஹாங் அரண்மனை

1395 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கியான்பாக்ஹாங் அரண்மனையைப் (Gyeongbokgung palace) பார்த்தோம். அதுவும் வாஸ்து முறைப்படி அமைக்கப் பட்டு, மிகப் பெரிய இடத்தில் பரந்து இருக்கிறது. ஆனால் அரசவை, அந்தப்புரம், தங்குமிடங்கள் எல்லாம் தனித்தனியாக செவ்வக வடிவ கூடங்களாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேற்பகுதி முழுவதும் மரத்தினால் செய்யப்பட்டிருக்கிறது. பெரிய குளத்திற்கு நடுவே இருக்கும் பல நாட்டுப் பிரதானிகளைச் சந்திக்கும் இடம், குளத்திின் நடுவே அரசர் ஓய்வெடுக்கும் இடம் எல்லாம் உண்டு. ஜப்பான் ஆக்கிரமித்த போது, அநேகப் பகுதி பாழ்படுத்தப்பட்டாலும், பழைய ஆவணங்களின் துணை கொண்டு புதுப்பித்து இருக்கிறார்கள். காவலர்கள் மாறும் அணிவகுப்பையும் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படி நுணுக்கமான வேலைப்பாடுகள் ஒன்றும் இல்லையென்றாலும், பராமரிக்கும் முறை சிறப்பாக இருந்தது.

Gyeongbokgung palace

கோயில், அரண்மனை எல்லா இடங்களிலும் அதைப் பற்றிய மியூசியம், நினைவுப் பொருட்கள் வாங்குமிடம், உணவகம் எல்லாம் உண்டு. தரையின் கீழ் செல்லும் ரயில் மிக முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் செல்லும் படி அமைத்திருப்பதால் எங்கும் செல்வது வசதியாக இருக்கிறது.

படைகள் இல்லாத இடம் (Demilitarised zone)

ஒரு நாள், வட கொரியாவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையில் இருக்கும் DMZ என்னும் இரு படைகளும் இல்லாத இடத்தைப் பார்க்கச் சென்றோம். பெயர் தான் அப்படி என்றாலும் அங்கே தான் பாதுகாப்பு மிகப் பலமாக இருக்கிறது. அமெரிக்கப் படையும் அங்கிருக்கிறது. அதையே ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்கியிருக்கிறார்கள்.

வட கொரியா, தென் கொரியாவில் புகுவதற்காகத் தோண்டிய சுரங்க வழி கண்டு பிடிக்கப்பட்டு, அதைப் பார்ப்பதற்கு ஒரு வசதியான சுரங்க வழி அமைத்திருக்கறார்கள். சரிவான பாதையில் அரை கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இறங்கும் போது ஒன்றும் தெரியவில்லை. திரும்பும் போது சற்று சிரமமாக இருந்தது.

சில வருடங்களுக்கு முன், இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பின், மறுபடியும் சிக்கல் ஏற்பட்டு, நிறுத்தப் பட்டிருக்கிறது. அந்த ரயில் நிலையம், போருக்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே ஓடிய பழைய, குண்டு பாய்ந்த ரயில் இஞ்சின் எல்லாவற்றையும் காட்டுகிறார்கள்.

Seoul DMZ Train

அங்கிருந்து பார்த்தால் வட கொரியப் பகுதியைப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் மரங்களே இல்லை. ஏழ்மையில் வாடும் வட கொரிய மக்கள் மரங்களையெல்லாம் வெட்டி விட்டனர் என்று கூறுகின்றனர். வட கொரியாவில் செய்யப் படும் சோயாவினால் செய்யப்பட்ட சாக்லேட் உலகத்திலேயே இங்கு மட்டும் தான் கிடைக்கும் என்று ஒரு நினைவுப் பொருள் கடையும் உண்டு.

அவற்றைப் பார்த்து விட்டுத் திரும்பும் போது, "ஜென்ஜிங்" என்ற மனிதனைப் போல் உருவ அமைப்பிலிருக்கும் வேர்,(ஆண் பெண் இரு உருவ அமைப்பும் உண்டு) அதிலிருந்து டீ, மற்றும் மருத்துவ குணமுள்ள பல பொருட்கள் செய்யப்படும் இடத்தையும் பார்த்தோம்.

போர் நினைவகம் ( War memorial of korea)

கொரியாவில் பார்த்த இடங்களில் முக்கியமானது கொரியாவின் போர் நினைவகம். அங்கு ஆதி காலத்தில் நடந்த போர்களிலிருந்து, ஜப்பானுடன் நடந்த போர், வட கொரிய ஆக்கிரமிப்புப் போர் வரைத் தனித் தனியாக வைத்திருக்கிறார்கள். பழைய, நவீன போர்க் கருவிகள், கப்பல், விமானம், போரைப் பற்றிய விவரங்கள் எல்லாம் விளக்கமாக வைத்துள்ளார்கள். அவர்கள் ஜப்பானியப் போரில் பயன்படுத்திய "ஆமை கப்பல்" (turtle ship) என்னும் மேற்பகுதி மூடப்பட்ட ஒரு கப்பலைப் பிரதானமாக வைத்திருக்கிறார்கள் .

இந்த நினைவகத்தின் சிறப்பு என்னவென்றால்,"போர் என்றால் என்ன?" என்று சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளும் பயிற்சிநேரம் உண்டு. "அனுபவ அறை" (experience room) பல வைத்து போரின் போது, நாம் கப்பலிலோ, விமானத்திலோ ஹெலிகாப்டரிலோ இருந்தால், எப்படி இருக்குமோ அதை உணரும் படி 3டி, 4 டிஎன்று ஏதேதோ தொழில் நுட்பத்தில் தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். நடைபெற்ற குறிப்பிட்ட சில போர்களில் எப்படி அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அப்படியே வடிவமைத்துக் காட்டுகிறார்கள்.

ரஷ்ய, வட கொரிய ஆக்கிரமிப்பு போர் நடந்த போது, ஐக்கிய நாடுகள் சபை மூலம் பல நாட்டுப் படைகள் அங்கு சென்றிருக்கின்றன. ஐநா பாதுகாப்பு சபையில் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர்ப் படைகள் அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்றிய போது, எடுக்கப்பட்ட புகைப் படத்தை ஆளுயர நிலையில் மிகப் பெரிய படமாக வைத்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானம் நிறைவேற்றும்போது, பாதுகாப்பு சபையில் இந்தியாவும் உறுப்பினராக இருந்திருக்கிறது. அமெரிக்க சார்பு நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்க, இந்தியாவும், எகிப்தும் தங்கள் நாட்டின் முடிவை எதிர்பார்த்து இருப்பதாகவும், யூகோஸ்லோவாக்யோ எதிராக இருந்ததாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். அச்சமயம் சோவியத் ரஷ்யா அவையில் இல்லை.

கொரிய தேசிய அருங்காட்சியகம் (National Museum of Korea)

அங்கு பார்த்த மற்றொரு முக்கியமான இடம் இது. காட்சியகம் மிகப் பெரியதாக, பல பிரிவுகளுடன் இருக்கிறது. அவர்கள் நாட்டு வரலாற்றுடன், கலைப் பொருட்களும் வைத்திருக்கிறார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் அங்கு மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் வைக்கப் பட்டிருந்தது. அவைகளைப் பார்த்த போது, தமிழகத்தின் தென் பகுதியில் சாயர்புரத்தருகில், தமிழக ஹெரிட்டேஜ் கழகத்துடன் சென்றபோது கண்ட கற்கருவிகள், அவை செய்யப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான கற்கள் நினைவுக்கு வந்தன. நிலத்தில் அகழ்வாராய்ச்சி செய்வதை, நிலத்தின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்துடன், பொருட்கள் புதைந்திருப்பதையும் அழகாகக் காட்டியிருந்தனர். கொரிய அரண்மனையின் படங்கள், அரச அணிகலன்கள், கலைப் பொருட்கள் எல்லாம் இருந்தன. நம் நாட்டுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது அவை மிகக்குறைந்த அளவே என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

National Museum of Korea

மியூசியத்தில் வெளிநாட்டவரைக் கவர்வதற்காகத் தனி பயிலரங்கம் இலவசமாக நடத்துகிறார்கள். எங்கள் மகள் அங்கே இருப்பதால் முன்னமே பதிவு செய்து, நாங்களும் கலந்து கொண்டோம். கொரியாவில் முத்துச்சிப்பியைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட அலன்காரப் பொருட்கள், அவை செய்யப் படும் விதத்தையும் படமாகக் காட்டினர். பின் மிக மெல்லியதாக, வட்டம், நீள் வட்டம் மற்றும் பல வடிவுகளில் வெட்டப்பட்ட சிப்பித் துண்டுகள், அவற்றை ஒட்டுவதற்கு ஓர் அழகான மர ஸ்டாண்ட், பசை எல்லாம் கொடுத்து, எங்களையே டிசைன் செய்து ஒட்டச் செய்தனர். இறுதியில் அவற்றிற்கு அழகாக வார்னீஷ் கொடுத்து அது காய்வதற்காக ஓர் அட்டைப் பையில் போட்டுக் கொடுத்ததை மறக்கவே முடியாது.

சியோல் விமான நிலையத்திலும் அவர்கள் கலாச்சாரத்தைக் காட்டும் சிறு வளாகம் ஏற்படுத்தியிருந்தனர். அதிலும் விமானத்திற்காகக் காத்திருக்கும் பயணிகள் சிறிது நேரத்திற்குள் செய்யும் படியாக, கீசெயினில் தொங்குவது போன்ற சிறு வட்டத்தில் ஒட்டும் வகையில், முத்துச் சிப்பியில் செய்த மிகச் சிறிய அன்னம், சிறிய டிசைன் துகள்கள் கொடுத்து நம்மை ஒட்டச் செய்கின்றனர். பின் அதற்கு வார்னீஷ் கொடுத்து, ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் அடியில் ஒட்டி மூடி, அவை காய்வதற்காக மேலே சிறு முடிகள் போட்ட அழகிய கயிற்றையும் (தொங்க விடுவதற்காக)ஒட்டிக் கொடுத்து விடுகிறார்கள். நாமே செய்தது, அதுவும் வெளிநாட்டில், பார்க்கும் போதே இன்னமும் புல்லரிப்பாக இருக்கிறது.

பாடலால் புகழ் பெற்ற கங்ணம், பெரிய மால்கள் கடைத் தெருக்களுக்குச் சென்றோம். இப்படியாக எங்கள் கொரியப் பயணம் வெறும் சுற்றுலாவாக மட்டும் அல்லாமல் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மறக்க முடியாத பயணமாகவும் அமைந்தது. கொரியாவிலிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பார்ப்பதற்கு சயாம்ரீப் செல்ல எங்கள் பயணத்தைத் துவங்கினோம்.

Pin It