sankarankovil temple

(சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில்)

இந்துக் கடவுளர்களில் பெரும்பாலோனோர் தங்களது கிளைகளை சங்கரன்கோவிலில் வைத்திருக்கிறார்கள். இக்கோயிலின் முதல் சந்நிதியில் மூலவராக சங்கரலிங்க வடிவிலும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், அதாவது ஒரே உருவில் வலப்பக்கம் சிவனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் காட்சி தருகிறார். மூன்றாவது சந்நிதியில் கோமதி அம்மன் இருக்கிறார். இந்த மூன்று பேர்தான் முக்கிய பாத்திரங்கள் என்றாலும், துணைப் பாத்திரங்களாக மகாவிஷ்ணு, முருகன், வள்ளி, தெய்வானை, தக்ஷிணாமூர்த்தி, நரஸிம்மமூர்த்தி, பிரம்மா, வன்மீகநாதர், நடராஜர், சண்டிகேஸ்வரர், சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், ரிஷபாரூடர், ருத்ர மூர்த்தி, ஸிம்ஹவாஹன கணபதி, மன்மதன், வெங்கடாசலபதி, செண்பக வில்வவாரகி, ஸிம்ஹாசனேஸ்வரி, மகிஷாசுர மர்த்தினி, கபாலி, ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, உச்சிட்ட கணபதி, ராமர், லட்சுமணர், பரமேஸ்வரர், மயூராரூடர், வீரபத்திரர், த்ரிவிக்கிரமர், வாமனாவதாரம், ஹம்சாரூடர், துவாரபாலகர், யோக நரசிம்மம், கார்த்த வீரியன், தசகண்ட இராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, சந்திர சூரியர்கள், அதிகார நந்தி, சுயஜா தேவி, நாகர்கள், சைவ சமய குரவர்கள், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி, சேக்கிழார் சுவாமிகள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி ஆகியோர் பிரகாரம், சுற்றுச்சுவர் என கிடைத்த இடத்தில் எல்லாம் துண்டு விரித்து ‘எழுந்தருளி’ இருக்கிறார்கள்.

முந்தைய பகுதிகள்:

 

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

 

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

 

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3

மேற்கூறிய வரிசையைப் படித்துப் பாருங்கள்.. ஒண்ணு, ரெண்டு இந்துக் கடவுள்கள்தான் விடுபட்டிருக்கும்… அதுவும் கோயிலில் இடம் இல்லாததால்தான்… கோயிலில் பக்தர்களின் கூட்டம்தானே அதிகம் இருக்கும். இக்கோயிலில் கடவுளர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கி.பி.1022ம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கீழ்ப் பிரகாரம் வலதுபுறத் தூணில் மன்னனின் உருவச் சிலை இருக்கிறது.

கோயிலின் தல புராணமாகக் கூறப்படுவது யாதெனில், சங்கன் என்ற நாக மன்னன் தன்னுடைய கடவுளான சிவனே பெரிய அப்பாடக்கர் என்று கூற, மற்றொரு நாக மன்னனான பதுமன் தன்னுடைய கடவுளான திருமாலே பெரிய அப்பாடக்கர் என்று கூறியிருக்கிறான். வாக்குவாதத்தில் முடிவு ஏற்படாமல், அம்மனிடம்  பஞ்சாயத்து சென்றது. இந்த இரண்டு பேருக்காக மட்டுமல்லாமல், உலக மக்கள் அனைவரும் உண்மையை உணரும் வகையில் தீர்ப்பு கூறுமாறு அம்மன் சிவனிடம் அப்பீல் செய்தார். எவ்வளவு பெரிய கடவுளாக இருந்தாலும், பொண்டாட்டி பேச்சை மீற முடியுமா? மனையாளின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன், திருமால் இருவரும் சரிசமமான அப்பாடக்கர்கள் என்பதை உணர்த்தும் வகையில், சங்கர நாராயணராக (சங்கரன் - சிவன்; நாராயணன் - திருமால்) ஒரே உருவத்தில் சிவன் காட்சியளித்தார். தீர்ப்பில் திருப்தி அடைந்த நாக மன்னர்கள் இருவரும் சங்கர நாராயணனைக் கும்பிட்டு, அம்மனுடன் அங்கேயே தங்கி விட்டனர்.

அம்மனுடன் நாகங்கள் குடியிருப்பதால், நாகதோஷ நிவர்த்திக்கு எல்லோரும் இங்கு வருகிறார்கள். இக்கோயில் புற்றுமண்ணை நெற்றியில் பூசிக்கொண்டால், எந்தப் பாம்பும் ஒன்றும் செய்யாது என்கிறார்கள். அனகோண்டாவைப் பிடிக்கப் போகும் அமெரிக்கர்கள் அடுத்த முறை இங்கு வந்து, ஒரு கும்பிடு போட்டுவிட்டுச் சென்றால், ஒரு பிரச்சினையும் இல்லாமல் அனகோண்டாவைப் பிடித்து விட்டு வரலாம்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி சங்கரலிங்கம் மீது விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சில சமயம் நான்கு நாட்கள் கூட விழும் என்கிறார்கள்.

இந்தக் கோயிலில் வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை குரு சாமி பட்டியலிட்டார். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்; தீராத நோய்கள் எல்லாம் தீரும்; செல்வம் பெருகும்; தொழில் விருத்தியாகும்; குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் விலகும்; நீண்ட ஆயுள் உண்டாகும்; மனக்கஷ்டங்கள் நீங்கும்.

அய்யப்பன் கோயிலுக்கு செல்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ அத்தனை பலன்களும், இந்தக் கோயிலில் இருக்கும் கடவுள்களை வணங்குவதன் மூலம் கிடைக்கும் என்று குரு சாமி சொன்னார். ‘அப்படின்னா சபரிமலைக்கு எதுக்குப் போகணும்? இங்கேயே கும்பிட்டுட்டு ஊருக்குத் திரும்பலாம்’ என்று ஏதாவது ஒரு சாமி விவரமாகக் கேட்டு, பயணத்தை முடித்து வைத்து விடுவாரோ என்று பயந்தேன். அப்படியெல்லாம் நடக்கவில்லை.

கோயிலின் உள்ளே ஏராளமான கடைகள் இருக்கின்றன. பூஜைக்குத் தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகள் வரிசையாக அணிவகுத்து இருக்கின்றன. தென்தமிழகத்தில் திராவிடர் இயக்கங்களின் வலிமை குறைவாக இருப்பதைப் பறைசாற்றும் வகையில், உள்ளேயே ஒரு ‘பிராமணாள் ஹோட்டலும்’ இருக்கிறது.

sankarankovil brahmins hotel

கோயில் பெரியது என்பதாலும், கடவுளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஒவ்வொருவரையும் கும்பிட்டு வெளியே வருவதற்கு நேரம் ஆகிவிட்டது. இக்கோயில் குறித்த அனைத்து விவரங்களும் அறிந்தவராகவும், அதை அழகாக மற்ற அய்யப்ப சாமிகளுக்கு விளக்குபவராகவும் குரு சாமி விளங்கினார். கோயில் உள்ளே ஒவ்வொரு கடவுளையும் வணங்குவதால் கிடைக்கும் பலன்களை அவர் விளக்கியதை, அய்யப்ப சாமிகள் அல்லாத பொதுமக்களும் நின்று கேட்பதைப் பார்க்க முடிந்தது. மீண்டும் வண்டியில் ஏறும்போது, மாலை 7.30 மணியைத் தாண்டி விட்டது.

***

இரவு சாப்பாடுக்கு புளியங்குடிக்கு அருகே வண்டியை நிறுத்தினார்கள் சாலையோரமாக ஒரு பெட்ரோல் பங்க் இருந்தது. மூன்று, நான்கு சாமிகள் தம்மடிக்க வண்டிக்குப் பின்புறம் சென்றுவிட்டார்கள். பக்கத்தில் எந்த ஒரு கட்டடத்தையும் காணவில்லை. எங்கே உட்கார்ந்து சாப்பிடுவது என்று ஒரு சாமியிடம் கேட்டபோது, பெட்ரோல் பங்கில்தான் என்று பதில் சொன்னார். இரவுச் சாப்பாட்டை மதியமே தயார் செய்து எடுத்து வந்திருந்தார்கள். அந்தப் பாத்திரங்களையும், இலைக்கட்டையும் இறக்கி பெட்ரோல் பங்க் உள்ளே கொண்டு போனார்கள். உள்ளே வரும் வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், ஓரமாக போர்வைகளை நீளவாக்கில் உட்கார வசதியாக விரித்தார்கள். போர்வை கிடைக்காதவர்கள் தரையில் உட்கார்ந்து விட்டார்கள். பத்து பேர் உணவு பரிமாறினார்கள். எல்லோர் முன்னேயும் இலைகள் போடப்பட்டு, இட்லி, சப்பாத்தி பரிமாறப்பட்டது. அய்யப்ப சரணம் சொல்லிவிட்டு, சாப்பிட்டார்கள். உணவு ருசியாக இருந்தது. முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு, அடுத்த பந்தியில் உட்கார்ந்தவர்களுக்கு நானும், சரவணனும் பரிமாறினோம்.

aiyyappa devotees petrol bunk

அந்த இரவுச் சாப்பாடு அனுபவம் வித்தியாசமான ஒன்றாக இருந்தது. இரண்டு வேளை குளித்துவிட்டு, சுத்தபத்தமான இடத்தில் சாப்பிடும் ஆச்சாரத்தை அய்யப்ப பக்தர்கள் பின்பற்றுவார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு பெட்ரோல் பங்கில், திறந்தவெளியில், அதுவும் சுத்தமற்ற கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திறந்தவெளி கட்டாந்தரையில் நான் முதன்முறையாக சாப்பிட்டதும் அன்றுதான். ஆனால் இதைவிட அசுத்தமான இடங்களில்தான் அடுத்த சில நாட்களைக் கழிக்கப் போகிறோம் என்பது எனக்குத் தெரியாததால் அன்றைய அனுபவம் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும், அது தெரிந்த சாமிகளுக்கு இயல்பாகவும் இருந்தது.

பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் கிளம்பின.

***

அடர்ந்த காட்டுப் பாதையில் வண்டிகள் பயணித்துக் கொண்டிருந்தன. மரங்களுக்கு இடையே கிடைத்த இடைவெளியில் தேய்பிறை காலத்து நிலா எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அய்யப்ப பாடல்கள் நிறுத்தப்பட்டு, சாமிகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அதிகாலை 4 மணிக்கு முன்னரே எழுந்து, இருமுடி கட்டி, பயணம் செய்ததில் சாமிகள் களைத்திருந்தனர். உண்ட மயக்கமும் சேர்ந்து கொள்ள சுகமான நித்திரையில் இருந்தனர். நானும் சரவணனும் அருகருகே உட்கார்ந்திருந்தோம். இருவரும் தாட்டியமான உடல்வாகு கொண்டவர்கள். உறங்குவதற்கு வசதியான அளவு இருக்கை இல்லை. அதையும் மீறிய களைப்பு இருந்ததால் சரவணன் உறங்கிவிட்டான். போகிற இடத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்று இருட்டை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.

இரவு 11 மணி வாக்கில் வண்டிகள் ஓரிடத்தில் நின்றன. எல்லோரும் இறங்கி, தங்குமிடத்திற்குச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தால், யாரும் இறங்கவில்லை. எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். மற்ற வண்டிகளில் இருந்த சாமிகளும் அதே நிலையில்தான் இருந்தார்கள். எங்கே தூங்குவது, யாரைக் கேட்பது என்று தெரியாமல் நான் மட்டும் விழித்துக் கொண்டிருந்தேன்.

சமையல்காரர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி, சாமான்களை இறக்கி மறுநாள் காலை சாப்பாட்டுக்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கினார்கள். வண்டியிலிருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தேன். எந்த இடம் என்று தெரியவில்லை. கண்ணுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பெயர்களும் மலையாளத்தில் இருந்தன. எங்களுக்கு முன்னதாக வந்திருந்த சாமிகள் எல்லாம் ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சொரசொரப்பான சிமெண்ட் தரையில் தூசியும், மண்ணும் மண்டிக் கிடந்தது. சுத்தம் பார்ப்பவர்கள் அங்கு உட்காரக் கூட முடியாது. ஜனவரி மாதக் குளிர் ஒரு மழை போல் உடல் எங்கும் ஊடுருவிக் கொண்டிருந்தது.

பயணக் களைப்பும், குளிரும் வாட்டியெடுக்க, எங்கே தூங்குவது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். ஏதாவது கடை திறந்திருந்தால், சூடாக ஒரு தேநீர் குடிக்கலாம் என்று அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் அலைந்தேன். ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. மீண்டும் வண்டிப் பக்கம் வந்தேன். ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் இருந்த படுக்கை காலியாக இருந்தது. ஓடிப் போய் அந்த இடத்தைப் பிடித்தேன். எந்த நொடியில் தூங்கினேன் என்று தெரியாத வேகத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்குள் விழுந்தேன்.

“சாமி! எழுந்திருங்க சாமி” என்று குரல் கேட்டு, ‘அட.. அதுக்குள் விடிந்துவிட்டதா’ என்று ஆச்சரியத்துடன் எழுந்தேன். வண்டி ஓட்டுனர் நின்றிருந்தார். “சாமி! நான் கொஞ்ச நேரம் தூங்கணும்.. அப்பத்தான் நாளைக்கு வண்டி ஓட்ட முடியும்” என்றார். படுக்கையிலிருந்து எழுந்திருக்கச் சொல்கிறார் என்பது புரிந்தது. மவுனமாக எழுந்து மணியைப் பார்த்தேன். அரைமணி நேரம்தான் ஆகியிருக்கிறது. இயற்கை உபாதைக்காக ஓட்டுனர் போயிருப்பார் போலும்… அந்த இடைவெளியில் அவரது சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றியிருக்கிறேன். நல்லபிள்ளையாக மீண்டும் அவரிடமே அதை ஒப்படைத்தேன்.

வண்டிக்குள் பார்வையைச் செலுத்தினேன். இருபக்க இருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் சில சாமிகள் படுத்திருந்தார்கள். சரவணன் கால்மாற்றி, வசதியாக இரண்டு இருக்கைகளையும் ஆக்கிரமித்து தூங்கிக் கொண்டிருந்தான். கொஞ்சூண்டு இடத்திற்காக அவனது தூக்கத்தைக் கலைக்க விருப்பமில்லாமல் வண்டியிலிருந்து இறங்கினேன்.

காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த சமையல்காரர்கள் பக்கம் போனேன். அவர்கள் பொட்டலம் பிரித்து வைத்திருந்த ஒரு செய்தித்தாளை விரித்து, அதில் உட்கார்ந்தேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.

“இங்க தூங்குறதுக்கு இடம் கிடையாதா?”

“இல்லைங்க.. முதல்ல வர்றவங்க இந்த ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் இடத்தைப் பிடித்துக் கொள்வார்கள். அடுத்து வர்றவங்க வண்டியிலேதான் தூங்கணும்.”

“இந்த இடம் சுத்தமா இல்லையே”

“இலட்சம் பேர் வந்து போற இடம் இப்படித்தான் இருக்குங்க... சுத்தம் பார்த்தா தூங்க முடியாதுங்க…”

அவர் சொன்னது சரிதான் என்பதுபோல் அய்யப்ப பக்தர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் விரிப்பதற்கு என்னிடம் போர்வையும் இல்லை. போகிற இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வார்கள், போர்வை எல்லாம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், தங்குமிடமே இல்லை… போர்வைக்கு எங்கே போக?

குளிர் அதிகமாகவே, வண்டிக்குள் போய் சரவணனின் போர்வையையும், எனது துண்டையும் எடுத்து வந்தேன். ஓர் ஓரமாக துண்டை விசிறியதில், கொஞ்சம் சுத்தமானது. அதில் துண்டை விரித்து, உட்கார்ந்தேன். போர்வையை உடல் முழுக்க சுற்றிக் கொண்டேன். அப்படியே ஒரு அரைமணி நேரம் கழிந்தது. அப்போது, படுத்துக் கொண்டிருந்த ஒரு சாமி எழுந்து, கொட்டகையை விட்டு வெளியே போனார். போகும்போது அவரது போர்வையையும் எடுத்துக் கொண்டு போனார். ‘சரி, தூக்கம் கலைந்து போகிறார், இனி வரமாட்டார்’ என்று அந்த இடத்தைப் பிடித்தேன். இரண்டு பேருக்கான பாய் அது. அவருடன் வந்த சாமி தூங்கிக் கொண்டிருந்தார். நான் நெடுநாள் நண்பர்போல் அவரருகே படுத்துக் கொண்டேன். என்ன செய்ய? வேறு வழியில்லை.

***

அதிகாலை நான்கு மணிக்கு குரு சாமி எழுப்பி விட்டார். “இந்நேரம் போனால், பாத்ரூம் காலியாக இருக்கும். கொஞ்சம் லேட்டாப் போனால், கூட்டம் அதிகமாகி விடும்.” என்று சொன்னார். இரண்டு மணி நேரம் கூட முழுதாகத் தூங்கியிருக்க மாட்டேன். நான் இந்தக் கொட்டகைக்குள் தூங்கியது குரு சாமிக்கு எப்படித் தெரிந்தது? குரு சாமி எல்லாம் தெரிந்த ஞானஸ்தர் என்று சரவணன் சொன்னது உண்மைதானோ?

‘அவரது ஞானத்தில் இடி விழ’ என்று புலம்பியபடி, தூங்கியவாறே வண்டிப் பக்கம் போனேன். சரவணனும், இரவி மாமாவும் தூக்கம் கலைந்து, டூத்பேஸ்ட், பிரெஷ், துண்டு ஆகியவற்றுடன் நின்றிருந்தார்கள். நானும் அவர்களைப் பின்பற்றினேன்.

வரிசையாக பத்து, பதினைந்து கழிவறைகளும், குளிப்பறைகளும் இருந்தன. வெளியே ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் விழுந்தபடி இருந்தது. காலைக் கடன்களை முடித்துவிட்டு, அந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றினேன். முதல் வாளி ஊற்றும்போதுதான் குளிர் உறைத்தது. பின்பு தெரியவில்லை.

***

எல்லோரும் குளித்து முடித்து, குரு சாமியின் பின்னே போனோம். அவர் அந்த இடத்தைப் பற்றி சொன்னார்.

achankovil temple 600

அச்சன்கோவில், அய்யப்பனின் ஐந்து சரவீடுகளில் ஒன்று. ஐந்து கோயில்களையும் பரசுராமன் கட்டியதாக கூறுகிறார்கள். அய்யப்பன் பாலகனாக குளத்துப்புழையிலும், இளைஞராக புஷ்கலா தேவியுடன் ஆரியங்காவிலும், இரண்டு மனைவிகள் பூர்ணா, புஷ்கலா தேவியருடன் தம்பதி சமேதராக அச்சன்கோவிலிலும், துறவியாக சபரிமலையிலும் காட்சி தருகிறார். மற்ற அய்யப்பன் கோயில்களில் தற்போது இருக்கும் விக்கிரங்கள், கோயில் உருவானபோது தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. சிதிலங்கள் ஏற்பட்டதால், பிற்பாடு மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவிலில் மட்டும் பழைய விக்கிரகம் அப்படியே இன்றும் உள்ளது. இக்கோயில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது.

அமர்ந்த நிலையில் அய்யப்பன் ஒரு கையில் அமுதமும், மற்றொரு கையில் கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தியிருக்கிறார். அவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலா தேவியர் பூக்கள் தூவுவதுபோன்று வீற்றிருக்கின்றனர். அய்யப்பனுக்கு இருக்கும் பல பெயர்களில் ‘சாஸ்தா’ என்ற பெயரும் ஒன்று. தம்பதி சமேதராய் காட்சியளிப்பதால் அச்சன்கோவில் அய்யப்பனை 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். திருமணம் தள்ளிப் போகிறவர்கள் இங்கு வந்து வேண்டினால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

அய்யப்பன் கோயில்களிலேயே சபரிமலைக்கு அடுத்தபடியாக 10 நாட்கள் திருவிழா நடப்பது இங்குதான். கார்த்திகை  மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அய்யப்பனுக்கு திருஆபரணங்கள் கொண்டு வரப்படும். மார்கழி முதல் நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். 9ம் நாள் தேரோட்டம் நடைபெறும். மற்ற அய்யப்பன் கோயில்களில் தேரோட்டம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாண சமேதராய் இருப்பதால் இக்கோயிலுக்கு பெண்களும் செல்லலாம். அதேபோல் இருமுடி கட்டி, விரதமிருந்துதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை; எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எல்லோரையும் போல பாலகன், இளைஞன், நடுத்தர வயது முதலான பருவங்கள் அய்யப்பனுக்கும் இருந்திருக்கிறது. மற்ற கடவுள்களைப் போல், அய்யப்பனும் ஒன்றுக்கு இரண்டாகவே கல்யாணம் முடித்திருக்கிறார். இரண்டு பேரையும் சமாளிக்க முடியாமலோ, அல்லது வேறேதும் பிரச்சினைக்காகவோ கடைசிக்காலத்தில் துறவறம் மேற்கொள்கிறார். இப்படி வீட்டை விட்டு காட்டுக்குப் போனவர்களை துறவிகள் என்றுதான் சொல்வார்களே தவிர, பிரம்மாச்சாரிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை தனியாக இருப்பவர்களுக்குத் தானே பிரம்மச்சாரி என்று பெயர். பிறகு அய்யப்பன் எப்படி பிரம்மச்சாரி ஆனார்? இந்த சின்னக் கேள்விகூட எழாமலா, ‘அய்யப்பன் பிரம்மச்சாரி’ என்று அவரது பக்தர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? என்ன கொடுமை அய்யப்பா இது!!

(தொடரும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)