காலத்தில் தவற விட்ட பாடலையெல்லாம் தொழில்நுட்பம் இழுத்து வந்து விதைப்பதை வியப்பென்பதா.. வாய்ப்பென்பதா.
இந்த பாடல் கடந்த நான்கு நாட்களாக போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பாட்டு கிடைத்தால்... காதல் தோல்வி கூட வரம் தான் போல.
இந்தாளு தான் இப்படி ஆளை காலி பண்றார்னா..... இதை பாடின அந்தாளு... அடிச்சு ஓட விடறாரு. என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க என்று தான் கேட்க தோன்றுகிறது. ஒரு சோக பாட்டை இந்த குத்து குத்தி வெச்சிருக்காங்க. சரி இதுங்க ரெண்டு தான் திட்டம் போட்டு நம்மை கட்டம் கட்டுதுனா... அந்த மனுஷன்.... அவர் தான்.... ஹீரோ... ஒரிஜினலா காதலுக்கு ஏங்குகிறவனை கண் முன்னால நிறுத்தறார். சரி அந்தம்மா.... அதான் ஹீரோயின்... அது அதுக்கு மேல.. பார்த்தே ஒப்பாரி வைக்குது.
சரி இதெல்லாம் சரி... அந்தாளு... அதான் இயக்குனர்... என்னனு சொல்றது... நைட் எபெக்ட்... மலை அடிவாரம்... நீர் தேக்கம்... இரவும் நெருப்பும்... பாட்டுக்கும் வசனம் போல தான். சக் சக் னு காட்சி மாறிக்கிட்டே இருக்கு. இதுல முன்னாள் மாளவிகா மாதிரி ஒருத்தி இறங்கி கிறங்கி ஏத்துறா. பனி விழும் இரவுக்கு முந்தின வெர்சன் இந்த பாட்டு தான் போல. ஆளாளுக்கு இப்பிடி வெச்சு செஞ்சா... இன்னும் நாலு நாளைக்கும் இதே நிலைமை தான் போல எனக்கு.சோகத்தின் ஆழம் கை கால் உதைத்துக் கொண்டு அழும் சிறு பிள்ளையாக்கும். அது இப்படி ஆடி பாடி தன் சோகத்தை வெளிக்காட்டும். காதலர்களுக்குள் சண்டை. காதலுக்கு தான் கொண்டாட்டம். இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கலான்னு ஒத்திகை அது. அனல் அடிக்கும் தகிப்பை முகத்தில் பூசிக் கொண்டு... ஒரு மலைவாழ் மனுஷன்...பாட்டை ஆரம்பிக்கிறார்.
"ஏ கட்டில் இல்ல மெத்தை இல்ல.. பாய போடு….
நான் கண் உறங்க பக்கம் வந்து ராகம் பாடு….
ஏ ராத்திரிக்கு நீ இருந்தா குளிர் போகும்….
நீ ஆதரிச்சா சொர்க்கம் இங்க வந்து போகும்....."
(சங்கதிக்கு தான் ஆரம்பிக்கிது பாட்டு. ஆனா சங்கதியில் சிங்கி அடிக்கிறது காதல்)
என்று எதற்கோ இழுக்க... எப்பயா இழுத்து முடிப்ப... போட்டு தாக்கலான்னு இந்த மாளவிகா புள்ள காத்திருக்கா. அங்க விட்ட அடுத்த நொடி.. சும்மா ஜிவ்வுனு.. இறக்கத்துல இருந்து நேரா மேலே குதிக்கறா. வெடி வெடிக்குது.
"நீ அப்போது பார்த்த புள்ள.....ஆஹாஹா....இப்ப அடையாளம் தெரியவில்லை... ஆஹாஹா...
அட என்னமோ சொல்லுற... அட என்னமோ சொல்லுற.... எங்கயோ கிள்ளுற....."
கொஞ்சம் மூச்சு விட நேரம் வேணாமா... உடனே அடுத்த அடி... மத்தள வெடி...
"என் போதை தெளியவில்லை... ஆஹாஹா... அட என்னன்னு விளங்கவில்லை"
என்று எகிறினால் என்ன தான் செய்வது.. எனக்கும் கூட போதை தெளியத்தான் இல்ல. ராகதேவன் எனும் இசை போதை எப்படி தெளியும். இந்தாளு என்ன பண்ணினாலும்.. நமக்கு ஏன் கோபம் வர்றது இல்லன்னா... இது தான். இந்தா... இந்த அடி தான். தோத்து போறத கூட சகட்டுமேனிக்கு...கொண்டாட கத்து குடுக்கிற இந்த சித்து தான்.
"ஆஹாஹா.... நீ அப்போது பார்த்த புள்ள.... ஆஹாஹா.... இப்ப அடையாளம் தெரியவில்லை..."
என்று மீண்டும் முதல் வரியில் மூச்சடைக்கும் வித்தை முழி பிதுங்க செய்து கிறுக்கு புடிக்க வைக்கிறது. இடையிடையே ஆடுகிற அந்த புள்ளைங்க கூட்டம்... புள்ளைங்களா அது... புஷ்பங்கள். மணி ரசனையா.. மண்டையை ஒரு பக்கம் ஆட்டி... கழுத்தை இன்னொரு பக்கம் ஆட்டி பிரபு தேவாவுக்கு முன்னால கால் பிடற கலை செஞ்ச... அந்த ஆட்டக்கார மாஸ்டர் ரசனையான்னு தெரியல.. மத்தளம் தட்டிருப்பானுங்க. வளையப்பட்டி தவில் தோத்திரனும்.
உடையும் இடையும்... இரவும் குளிரும்... ஒளிப்பதிவு பெட்டிக்குள்ள கொண்டு போன அந்தாளு... மகா கெட்டிக்காரன். மணிக்கு ஏத்த மகராசா. எடிட்டிங் விரல்களை மெச்சாம இருக்கவே முடியாது. எந்திரகதில நடக்கற கூத்தை... இதயத்துக்கு கடத்தற வேலைய பார்த்துட்டாப்ல.
திரையில் பாவாடை சுத்துது. பாக்கற நமக்குள்ள பாறாங்கல்லு நொறுங்குது. ஒரு முடிவுக்கு ஏங்குகிற வரிகள்ல... அந்தாளு... யாரு... அவர் தம்பி... இது தாண்டா சான்ஸுன்னு கொல்லு கொல்லுனு கொன்னெறிஞ்சிட்டாப்ல.
மவுத் ஆர்கனை மடக்கி வாயில் வெச்சு... காதலின் கீதத்தை கொஞ்சிக் கொண்டு.... இப்ப தான் ஹீரோ கருப்பு சூரியன் என்ட்ரி.
விரக்தியின் உச்சியில் உச்சந்தலை சுழற்சியில்... இளமை கொப்பளிக்க இமையும் தத்தளிக்க.... நடிப்பா அது... நர்த்தனம் செய்றான் மனுஷன். இதய வலியை ஆர்கனில் கசிய விட... நெருப்பின் ஜுவாலை அவரை சூழ... காதலியின் கண்களில் கலவரம். காதலின் கண்களில் விரக தாபம். தரமான மேக்கிங்- ல் தாரை தப்பட்டை.... அடித்து தூள் கிளப்புகிறது. ஆட்டத்தின் லாவகத்தில் கூட ஆடும் அத்தனையும் பொம்பள லாரன்ஸ்கள்.
நெருப்புக்கு கை காட்டி சுத்து போடும் போதெல்லாம்... அய்யயோ அடுத்த வரில என்ன பண்ண போறானோ அந்தாளுனு திக் திக். அதே மாதிரி திடும்மென கிளம்பிய ராக்கெட்டின் வேகத்தில் இலக்கில்லாமல் சுழலும் காதலின் தேசத்தை மட்டை அடி அடிக்க தொடங்குகிறது இந்த வரி.
"நேத்து பாத்தேன்... கொஞ்சி போன புள்ள... இப்ப பாத்தா நெஞ்சு தாளவில்லை
வார்த்தையால சொல்ல ஏதும் இல்ல.... வாரி போட்டா ஏதும் சேதம் இல்ல
எடுத்து போன என்னோட நெஞ்சு....இன்னும் வந்து சேரவில்லை
கொடுத்து போன பூவான காயம்....கொஞ்சம் கூட ஆறவில்லை"
ஒரு சிறுவனை போல இதயத்துக்கு ஏங்கும் இளைஞன்... ஐயோன்னு ஆகிடும். அத்தனை துயரத்தையும் தூர் வாரி காட்டுவது போல முகம் கோணுகையில் மூச்சு முட்டுகிறது நமக்கு.
"நீரோட சேர்ந்த ஹே.....நீரோட சேர்ந்த நீராக நாங்க சேர்ந்தாச்சு பிரியவில்லை...
அட நீ உள்ள மனசே இல்லாம பிரிக்க என்னால முடியவில்லை"
இந்த வரிக்கு லாங் ஷாட்டில் நீலம் பூத்த இரவை காட்டுகிறார்கள். தூரத்தில் ஆடுவது ஆட்டமா... அவிழ்ந்து கொண்ட இசையின் ஓட்டமா. நீலவானம் காதல் பூத்திருக்க... நீருங்கூட நேர்ந்து விட்டிருக்க... அந்த சோகம் ஆடி துடிக்கிறது. பார்க்கும் நாமோ வாடி தவிக்கிறோம். ஹீரோயின் புள்ள பார்வையில் காட்சி முடிய... அதுவரை இசைக்கு தக்க வேகத்தில் கையில் சரக்கு பாட்டிலோடு நடக்கும் பாட்டு. அதுக்கு அப்புறம் அது மென் சோக தாலாட்டு.
எப்படா அந்தாளு கொஞ்சம் இடைவெளி விடுவா... விட்ட இடத்த புடிக்கலானு அந்த மாளவிகா புள்ள.... இருவருக்கும் இடையே வந்து... ஜம்மென்று தாவி முதல் வரியில் தொற்றுகையில்... நாம் பாதி கிறுக்கு.
"நீ எப்போது பார்த்த புள்ள... ஆஹாஹா... இப்ப அடையாளம் தெரியவில்லை...ஆஹாஹா"
இந்த "ஆஹாஹா" க்கே அப்லாஸ் அள்ளி அள்ளி குடுக்கணும். அந்த பக்கம் இந்த பக்கம் திரும்ப விடு மாட்டேங்குது. அர்த்த ராத்திரிக்கு அரூபத்தை பூசி யாருனு பாருங்குது.
இப்போ ரெண்டு பெரும் அர்த்தத்தோடு ஆழமாய் பார்த்துக் கொள்கிறார்கள். இரவின் சிவப்பில் சோகத்தின் நிழல். சேர்ந்திட துடிக்கும் தாபத்தை அனலில் பிரிந்து கிடக்கும் தேகத்தின் நகல்.
போதும் போதும் பார்த்தது என்று மாளவிகா கூட்டணி குனிந்து குனிந்து கும்மி அடிக்க... சத்தமே இல்லமா பின்னால இருந்து மலையை சாய்ச்சிட்டு இருக்காப்ல... நம்ம மேஸ்ட்ரோ.
"தண்ணி அடிச்சும் சோகம் காயவில்லை... என்ன நினைச்சும் பாசம் தேயவில்லை
கண்ண மறைச்சேன் காதல் செஞ்ச தொல்லை...கடைசி வரைக்கும் பாதை மாறவில்லை
விளங்கிடாத பெண்ணோடு மனசு....வேலி போட்ட மாயம் என்ன
கலங்கிடாத என்னோட நெனப்பு.....காஞ்சு போகும் மர்மம் என்ன"
அத்தனை அடியிலும் மெல்லியிசையை புகுத்தும் வலிமை...." விளங்கிடாத பெண்ணோடு மனசு....வேலி போட்ட மாயம் என்ன" வரியில். அப்படியே தடவ சொல்லி தலையை காட்டும் காதல் மனம்...." கலங்கிடாத என்னோட நெனப்பு.....காஞ்சு போகும் மர்மம் என்ன...." வரியில். வரிக்கு வரி இப்படி வாரினா மனுசன் வேற வேலை பாக்க வேண்டாமா.
கேமரா சுற்றி நாயகனிடம் வந்து அவனுக்கு பக்கத்தில் இருக்கும் கூடாரத்தின் வழியே தெரியும் நாயகி மீது குவியும். என்ன நினைச்சு எடுத்தாங்களோ... இத்தனை வருஷம் கழிச்சு நம்மை வதைச்சு தீராம ஆக்குது. ஒரு ஆணின் காதலில் இருக்கும் கையேந்தல்... மிக கொடியது. அதுவும் துக்கத்தை அவள் முன்பே பூசிக் கொண்டு நிற்பது தளுதளுப்பு. ஒரு தொழுதலை போல ஒப்புக்கொடுத்தலாகத்தான் படுகிறது அது. ஆனாலும் நம்மாளு விடுவாரா... அடுத்த வரிக்கு அரக்கு பூசி அலற விட்டு... சோகத்தை மறைச்சு பவுடர் பூசும் வித்தை அல்லவா அது.
"அன்பான நெஞ்சே ஹே….அன்பான நெஞ்சே... கண்ணாடி போல...... தூளாக்கி போட்ட புள்ள"
என்று கையிலிருக்கும் சரக்கு பாட்டிலை கோபத்தோடும் இயலாமையோடும் கீழே போட்டுடைக்க.. அவள் முகத்தில் சிறு சலனம். நமக்கு கூட ஆமா இப்பென்னடி என்று கேட்கும் அசரீரி.
"நீ இல்லாம எனக்கு...சந்தோசம் ஏது...என் கண்ணு தூங்கவில்லை….நீ அப்போது பார்த்த புள்ள... ஆஹாஹா....இப்ப அடையாளம் தெரியவில்லை... ஆஹாஹா அட என்னமோ சொல்லுறா... அட என்னமோ சொல்லுறா....என்னையே தள்ளுறா.... என் போதை தெளியவில்லை... ஆஹாஹா.... அட என்னன்னு... விளங்கவில்லை"
அது வரை நடந்து கொண்டே சோகம் கொண்டாடியவன் இப்போது நின்ற இடத்திலிருந்தே ஆடவும் தொடங்குகிறான். முன்பே சொன்னது போல சோகத்தின் ஆழம் ஆட்டத்தில் முடியும். கை கால்கள் உதைத்து கொண்டு அழும் சிறு குழந்தையின் சிருங்காரம் மீசை கொண்டும் மருளும். காதல் அப்படித்தான். இந்த காதலே அப்படித்தான்.
"ஆஹாஹா....தன்னனா தானான....தன தன்னனா தானானா.....தன்னனா தானானா.......தன தன்னான தானனனா"
நான் எழுந்து ஆடவே தொடங்கி விட்டேன். ஒரு காதல் தோல்விக்கு ஏங்க செய்யும் இந்த ஆளை மன்னிக்க தயாராக இல்லை. மறுபடியும் பார்க்கிறேன்.
தோண்ட தோண்ட கிடைக்கற புதையல்தான் இந்தாளு. மறுக்கறவங்க... மறுக்கா வாசிங்க.
- கவிஜி