எப்போதுமே மலையாளப் படங்கள் மேல சினிமா விரும்பிகளுக்கு ஒரு காதல் இருக்கவே செய்யும். இப்போ ரிலிசாகுற மலையாளப் படங்களை தியேட்டர்லயோ அல்லது டவுன்லோடியோ பாத்துரலாம். ஆனா 1980 காலகட்டங்கள்ல வெளியான மோகன்லால் மற்றும் மம்முட்டியுடைய வளர்ச்சியடைந்த காலங்கள்ல வெளிவந்த மலையாளப் படங்களையெல்லாம் பார்க்கனுங்குற ஆவல் இருந்தாலும் பாக்குறதுக்கு முடியாம இருந்தது. அந்த ஆவலுக்குத் தீனி போடுற மாதிரி கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட க்ளாசிக் மலையாளப் படங்கள் ஹாட்ஸ்டார் ஆப்ல ஆங்கில சப்டைட்டில்களோட காணக் கிடைக்குது. அப்படிப் பாத்ததுதான் மம்முட்டியுடைய "ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு". இது ஒரு மர்டர் மிஸ்டரி. சாதாரணமா ஆரம்பிக்கிற படம் சாதாரணமான ஒரு இடைவேளை முடிஞ்சி சிறு சிறு டிவிஸ்ட்களோட மெல்ல மெல்ல முன்னேறி அசாதாரணமான ஒரு க்ளைமாக்ஸ்ல போய் முடியும். ரிலிசான நேரத்துல சென்னையில மட்டும் டப்பிங் செய்யப்படாமலயே ஒரு வருடத்துக்கும் மேல ஓடிருக்கு. சரி இப்போ ஏன் இதெல்லாம் சொல்லிட்டிருக்கேன்... விக்ரம்வேதா படமும் கிட்டத்தட்ட இதே திரைக்கதை அமைப்புடைய ஸ்லோ பாய்சன் வகையறாப் படம்தான்.

madhavan and vijay sethupathi

புஷ்கர்-காயத்ரி இரட்டை இயக்குனர்களின் வியக்க வைக்குற திரைக்கதை மற்றும் மேக்கிங். இறுதிச்சுற்றுல காட்டுன அதே நேர்மையான கோவத்தோட மாதவன். ஜிகர்தண்டாவுல விட்டதைப் புடிக்குற வெறியில விஜய் சேதுபதி. மூனும் சந்திக்குற இடம் ஒரு க்ளாஸ் மூவியை உருவாக்கிடுச்சு.

வேதாளமான விஜய்சேதுபதி போடுற புதிர்களுக்கான விடையை விக்ரமாதித்யனான மாதவன் எப்படிக் கண்டுபுடிக்குறார்ங்குறதுதான் கதை. அது விறுவிறுப்பா இல்லைன்னாலும் படத்தோட முக்கியக் கதாபாத்திரங்களோட கெத்தான நடிப்பு, நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு அவிழ்ந்து விழுற முடிச்சுகள் இந்த வருடத்தின் பெஸ்ட் மூவியா விக்ரம்வேதாவை மாத்துது.

மாதவன் விஜய்சேதுபதி ரெண்டு பேரோட ஸ்க்ரீன் பிரசன்ஸே போதுமானதா இருக்கு. விஜய்சேதுபதியோட பெஸ்ட் இன்ட்ரோ இன்னிக்கு தேதி வரை இதுதான். இறுதிசுற்றுல விதைச்ச நம்பிக்கையை மாதவன் ஒருபடி மேல கொண்டுபோய்ட்டாரு (இந்த நேரத்துல "வேட்டை" நினைவுக்கு வந்து பீதியாவதையும் தவிர்க்க முடியல). இரண்டு பெரிய நடிகர்கள் நடிச்சிட்டாங்கங்குறத விட அவங்களைத் தவிர்த்தும் கவனிக்கிறதுக்கு நுணுக்கமான நிறைய விசயங்கள் இருக்கு. அதுதான் படம் முடிஞ்சு வெளிய வரும்போது முழுமையான திருப்தியைக் கொடுக்குது.

மாதவனுடைய மனைவியா வர்ற கன்னட நடிகை ஸ்ரதா. கதிரின் காதலியான வரலட்சுமி. ரெண்டுபேருமே ரெண்டுவிதமான ஒரே அன்பை வெவ்வேறு தளங்கள்ல இருந்து வெளிப்படுத்துறாங்க. அதோட விவேக் பிரசன்னாவை பாத்தாலே காண்டாவுது. அப்படி பெர்ஃபாமன்ஸ்.

ஒரு சின்ன உறுத்தல் என்னன்னா வடசென்னை அடுக்குமாடி குடியிருப்புகள்ல வாழுற மக்களை, குழந்தைகளையும் கூட ரவுடிகளுக்கு துணைபோற மாதிரியும் போதைக் கடத்தலுக்கு உதவுற மாதிரியும் சில காட்சிகள்ல காட்டுனதுதான்.

மாதவனுடைய மனைவியை வேதா உபயோகிக்குற விதம் வேதா ஒரு இன்டலிஜன்ட்டான ரவுடிங்குறதுக்கு ஒரு ஷேம்பிள். இயக்குனர்களோட திறமைக்கும் அது ஒரு ஷேம்பிள்.

பி. கு :நல்ல சினிமாவை சப்போர்ட் பண்ணனும்ங்குற எண்ணமெல்லம் தூள் தூளா உடைஞ்சி போய்டுச்சி. ஜிஎஸ்டிக்கு அப்புறம் பார்த்த முதல் படம் இதுதான். டிக்கெட் விலை 70 ரூபாய்.

- சாண்டில்யன் ராஜூ

Pin It