அரசியல் சாசனமும் - குற்றவியல் சட்டங்களும் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகளை - விசாரணை முறைமைகளை காற்றில் பறக்க விட்டு - நீதி மன்றங்களை புறக்கணித்து விட்டு - காவல் துறையினர் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் - சித்திரவதை செய்யலாம் என்னும் மோசமான - மனிதத்துக்கு விரோதமான - ஜனநாயகத்துக்கு எதிரான காவல் துறை சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தும் அப்பட்டமான பாசிசப் படமாக சிங்கம் 2 வெளிவந்திருக்கிறது.

surya_singam2_560

முதன்மை வில்லனாக ஒரு கறுப்பின ஆப்பிரிக்க நடிகரை நடிக்க வைத்து விட்டு - அவரை "ஆப்பிரிக்க குரங்கு", "ஆப்பிரிக்க விலங்கு" என்றெல்லாம் சூர்யா பேசும் கடுமையான கண்டனத்திற்குரிய இன வெறி வசனங்கள் இப்படத்தில் உள்ளன. ஒரு கறுப்பின ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியான பிறகும் தமிழ் சினிமாவில் கறுப்பின ஆப்பிரிக்கர்களை இழிவுபடுத்தும் போக்கு தொடர்கிறது.

இது மட்டுமல்லாமல், சூர்யா கதாபாத்திரத்தால் சகட்டு மேனிக்கு சுட்டு கொல்லப் படுபவர்களாக - குற்றம் புரிபவர்களாக கறுப்புத் தோல் நிறம் கொண்ட உழைக்கும் இளைஞர்களைக் காட்டுகிறார்கள்! கறுப்புத் தோல் கொண்ட திராவிட உழைக்கும் மக்களை "சூத்திரர்களாக" இழிவுபடுத்தி அவர்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் மனுஸ்மிருதி பார்ப்பனியமே "சிங்கம் 2" படத்தில் இவ்வாறு வெளிப்படுத்தப் படுகிறது என்று கருத வேண்டியுள்ளது. கருப்பாக இருக்கும் - அடியாட்களை எல்லாம் இஷ்டப்படி அரிவாளால் வெட்டியோ - துப்பாக்கியால் சுட்டோ கொன்று குவித்து - சட்டம் - நீதி- விசாரணை - வழக்கு மன்றம் என்று எதையும் மதிக்காமல் செயல்படும் காவல் துறை அதிகாரி, இன்னொரு வில்லனாக நடிக்கும் நடிகர் ரஹ்மானை மட்டும் சுட்டுக் கொல்லாமல் அவரை கைது செய்து சிறையில் அடைப்பது ஏன்? ரஹ்மான் வெளிர் தோலுடன் - மேட்டுக் குடியைச் சேர்ந்தவராக காணப்படுவதாலா?

மேலும், இன்னொரு வில்லனை இஸ்லாமியராக சித்தரித்து விட்டு - அவரை சூர்யா திட்டும் வசனத்தில் "ஐந்து முறை தொழுகை செய்பவன் இப்படி கயமைத்தனம் செய்கிறாயே" என்ற பொருள்படி இஸ்லாமியரை அவமதிக்கும் வசனங்களும் படத்தில் உள்ளன. இந்துவாக உள்ள ஒருவன் வில்லன் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் போது "இந்துவாக இருந்து கொண்டு கயமைத்தனம் செய்கிறாயே" என்று இந்து மதத்தையும் - வில்லன் குணத்தையும் தொடர்புபடுத்தி சிங்கம் 2 படத்திலோ வேறு படங்களிலோ ஏன் வசனங்கள் இடம் பெறுவதில்லை? இஸ்லாமியர்கள் மட்டும் நடிகர் சூர்யா - இயக்குனர் ஹரி குழுவினருக்கு இளக்காரமா? இன்னொரு இஸ்லாமியக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் இன்ஸ்பெக்டர் கரீம் என்ற பாத்திரத்தில் நடிக்கும் மன்சூரலிகானை மூளையற்ற - கோமாளியாக சித்தரித்து இருக்கிறார்கள்.

மேலும், சட்டப்படி "மேஜர்" வயது அடையாத பள்ளி மாணவியாக நடிக்கும் ஹன்சிகா மோத்வானி அவரது பள்ளி என்.சி.சி. ஆசிரியராக உள்ள சூர்யாவை காதலிப்பதாக சித்தரிக்கப்படும் காட்சிகள் பள்ளி மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கக் கூடாத - முறையற்ற - பாலியல் - காதல் உணர்வை சித்தரித்து, - ஆசிரியர் - மாணவி உறவைக் கொச்சைப் படுத்தி - பள்ளி மாணவ - மாணவியரின் மனத்தைக் கெடுப்பதாக உள்ளன.

ஒரு காட்சியில் சூர்யா நடிக்கும் கதா பாத்திரத்தின் சாதியை மேற்போக்காக குறிப்பிடும் வகையில் - ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடும் சாதியினர் என்று தன்னைக் கூறிக் கொண்டு அந்தத் தெய்வ வழிபாடு காரணமாக வாரத்தின் சில நாட்களில் அசைவமும் சாப்பிடுவதில்லை என்று சூர்யா கூறுவது - இயக்குனரின் சுயசாதிப் பற்றையும் - இந்துத்துவ உளவியலையும் வெளிப்படுத்துகிறது.

மேற்கூறப்பட்டுள்ள காரணிகளைத் தவிர, ஒரு திரைப்படமாகவும் - திரைப்பட மொழி அடிப்படையிலும் "சிங்கம் 2" காணச் சகிக்காத மொக்கைப் படமாகும். ஒரு வரியில் சொல்வதென்றால் பல படங்களில் பார்த்துப் புளித்துப் போன - "போதை மருந்துகளைக் கடத்தும் கும்பலை" ஒரு காவல் துறை அதிகாரி சுட்டுக் கொன்று அழிப்பதுதான் படத்தின் கதை! படத்தில் கோர்வையான கதையும் இல்லை - காட்சிகளும் இல்லை. சூர்யா ஒவ்வொரு காட்சியிலும் கத்து - கத்து என்று கத்துகிறார்! "சூப்பர் மேனை" விட அதிக சக்தி உள்ளவர் போல - துப்பாக்கி கூட இல்லாமல் - அரிவாளுடன் வெட்ட வரும் கும்பலை ஒரே ஆளாக கொன்று குவிக்கிறார்! வில்லன்களை உளவு பார்க்க ஒரு பள்ளியில் "என்.சி.சி. ஆசிரியராக" சூர்யா கதாபாத்திரம் இருப்பதாக ஆரம்பக் காட்சிகளில் சித்தரிக்கப்படுகிறது! பள்ளியிலும் வில்லன்களை அடித்துத் துவைக்கிறார்! "சூர்யாவின் காட்டுக் கத்தல்" மற்றும் நம்ப முடியாத "சூப்பர் மேன்" அடி உதைகளே படம் முழுவதும்!

"சிங்கம் 1" படத்தில் கதாநாயகியாக வந்த அனுஷ்கா இந்த படத்தில் ஓரங்கட்டப்படுள்ளார். வெகு சில காட்சிகளே படத்தில் அனுஷ்கா வருகிறார் - இரண்டு பாடல்களில் அரை குறை ஆடைகளுடன் சூர்யாவுடன் ஆட்டம் போட்டு விட்டு செல்கிறார்! மற்றபடி "சிங்கம் 2" படத்தில் காதல் காட்சிகளும் இல்லை, நல்ல காதல் பாடல்களுமில்லை! தேவி ஸ்ரீ பிராசாத்தின் இசை மிக மோசம்! பாடல்கள் கேட்கும்படி இல்லை - பின்னணி இசை காது பிளக்கும் சத்தம்!

தலைமை வில்லனாக வரும் ஆப்பிரிக்க கதாபாத்திரம் "கப்பலிலே நடுக்கடலிலேயே இருப்பாராம்!" அவரைப் பிடிக்க சூர்யா தென் ஆப்பிரிக்கா சென்று சிறிய சண்டைக் காட்சியை அரங்கேற்றுவது - தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு மட்டுமில்லாமல் படம் பார்ப்பவர்களுக்கும் தலைவலி!

surya_singam2_400ஆனால், படத்தில் மிக மோசமான அம்சமாக நான் கருதுவது, இந்திய அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்து விட்டு -காவல் துறை சீருடை அணிந்தவர்கள் - யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம் என்ற அப்பட்டமான - தேச விரோத - எதேச்சதிகார பாசிசம் கொண்டாடப்படுவதுதான்!

முறையான நீதிமன்ற விசாரணை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள "உயிருக்கு - வாழ்க்கைக்கு உரிமை" (Right to Life) என்ற அடிப்படை மனித உரிமையை மீற எந்த காவல் அதிகாரிக்கும் உரிமை இல்லை. மேலும், யாரை கைது செய்தாலும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கைதானவரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் கொணர வேண்டும். மேலும், சில காரணங்களைத் தவிர, ஒருவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றால் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்திலோ - மற்ற நீதிமன்றங்களிலோ முறைப்படி காவல் துறையினர் "வாரண்ட்" (பிடியாணை) பெற்றிருக்க வேண்டும். இத்தகைய குற்றவியல் சட்ட முறைமைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, அரசியல் சாசனம் அளித்திருக்கும் "உயிருக்கு - வாழ்வுக்கு உரிமை" என்ற அடிப்படை மனித உரிமையை துச்சமாக எண்ணி, இந்திய அரசியல் சாசனத்தை கழிவைத் துடைக்கும் காகிதமாகக் கருதி, "அவசர நிலை" (எமர்ஜென்சி") பிரகடப்படுத்தினால் கூட இல்லாத அதிகாரங்களை - தனியொருவரான சூர்யா நடிக்கும் "துரை சிங்கம்" கதாபாத்திரத்துக்கு அரசு அளிப்பதாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது! மன்னராட்சி காலத்தில் கூட இல்லாத வகையில் சர்வாதிகாரமும் கொண்டவராக "துரை சிங்கத்தை" அரசு அறிவிக்கிறதாம்! சூர்யா (துரை சிங்கம்) யாரை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு போய் சித்திரவதை செய்து - துப்பாகியால் சுட்டு கொல்லலாமாம்! இந்திய அரசியல் சாசனமும் - குற்றவியல் சட்டங்களும் - மனித உரிமைச் சட்டங்களும் அவரைக் கட்டுப்படுத்தாதாம்! இது "தேச பக்தியாம்"!

ஒரு காட்சியில், "ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது போல் செய்யப் போகிறேன்" என்று கூறி விட்டு சூர்யா (துரை சிங்கம்) காவல் அதிகாரி கதாபாத்திரமும் மற்ற காவல் அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களை "ரவுண்டு" கட்டி அடித்து வெளுப்பது போன்று ஒரு காட்சி வருகிறது! இது காவல் துறையின் வீரமாம்! இதைக் கண்டு நாம் கை தட்ட வேண்டுமாம்! ஜெனரல் டயர் காலத்தின் காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை காவல் துறை அமைப்பே - இன்றும் நாடு விடுதலை பெற்ற பிறகும் மாற்றமில்லாமல் தொடர்கிறது என்று தன்னையும் அறியாமல் படத்தின் இயக்குனர் இக்காட்சி மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னொரு காட்சியில், பள்ளியில் தேசிய கீதம் பாடப்படும் போது உள்ளே நுழைந்து ஆசிரியர் ஒருவரை மிரட்டுபவர்களை சூர்யா அடித்து துவைக்கிறார்! காரணம்: "தேச பக்தியாம்"! உண்மையான தேச பக்தி என்பது வெளிப்போக்காக "கொடி" போன்ற சின்னங்களுக்கு மட்டும் சல்யூட் அடிப்பது அல்ல! நாட்டின் அரசியல் சாசனம் தந்துள்ள மனித உரிமைகளை கட்டிக் காத்து அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதே உண்மையான - அறிவார்ந்த தேச பக்தியாகும்!

இந்திய அரசியல் சாசனத்த்தைக் கேலிக் கூத்தாக்கி மன்னராட்சியில் கூட இல்லாத வகையில் சர்வாதிகாரத்தை காவல் துறைக்கு வழங்கி - ஒரு காவல் அதிகாரி யாரை வேண்டுமானாலும் நீதிமன்ற விசாரணை இல்லாமல் வரைமுறையின்றி கொன்று குவிக்கலாம் என்று அரசியல் சாசனத்திற்கு எதிரான - அப்பட்டமான தேச விரோத - பாசிச நச்சுக் கருத்தைப் பரப்பும் "சிங்கம் 2" போன்ற படங்களைத் தடை செய்ய வேண்டிய சென்சார் அமைப்பினர் ஒன்றும் செய்யாமல் வாளாவிருப்பதால், மக்கள் அனைவரும் "சிங்கம் 2" போன்ற மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சமூக விரோத திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும்.

- மருத்துவர் இனியன் இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It