கடந்த நான்கு தினங்களாக திரையரங்கங்கள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. திரையரங்கிற்குள் வர மறுத்த பெண்கள் கூட்டம் வேறு அலைமோதுகிறது. ஏதேனும் வித்தியாசமான படைப்பாக இருக்கக்கூடுமோ? என்று எதிர்பார்ப்புடன் சசிக்குமார் நடித்த “குட்டிப்புலி” திரைப்படம் பார்க்க சென்றேன். இயக்குநராக இருந்து நடிகராக சமகாலத்தில் சசிக்குமார் மட்டுமே, பெருவெற்றிப் பெற்றுள்ளார். அவரின் வெற்றி எத்தகையது என்கிற கேள்வியும் மிக முக்கியமானது. ஆராயப்பட வேண்டியுள்ளது. குட்டிப்புலியின் கதைச்சுருக்கம் இது தான்.

தன் சாதிக்காரப்பெண்ணை பாலியல் சொற்களால் சீண்டிய, இன்னொரு சாதியைச் சேர்ந்தவனை, தாக்கப்போன இடத்தில் உயிர்ப்பலியாகி குலசாமியாகிறார், சசிக்குமாரின் தந்தை கதாபாத்திரம். அவரின் மகன் சசிக்குமார் சண்டியராக வலம் வருகிறார். தன் சண்டியர்த்தனத்திற்கு ஆபத்து வந்து விடக்கூடாது என திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவர் காதல் வசப்படுவதும், திருமண வாழ்க்கைக்கு தயார் ஆவதும், அதற்கு தடையாக இருக்கும் வில்லனை தன் தாயான சரண்யா பொன்வண்ணன், தன் சக பெண்ணுடன் சேர்ந்து, படுகொலை செய்வது தான் கதையின் முடிவு.

முழுக்க முழுக்க சாதியப் பெருமை பேசுகிற கதாபாத்திரமாக பருத்தி வீரன் சாயலில் சசிக்குமார் நடித்துள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் ஏற்ற அதே கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். இடைநிலைச்சாதியான ஆதிக்க சாதியின் வன்முறை வெறியாட்டத்தை வீரம் என்று பாராட்டுவதும், வெளிப்படையாகவே, சின்ன மருது, பெரிய மருது என்று பேசுவதுமாக, கதைப்போக்கை வடிவமைத்துள்ளார்கள். தேவர் குருபூஜைக்கு போய் வந்த அனுபவத்தைத் தருவதாக, நண்பர் ஒருவர் பெருமையாக சொல்லிக்கொண்டார்.

”சாதிப்பெயரைச் சொல்லி, என்னை முண்டச்சியாக்கிப் புட்டிய. அது மாதிரியே, எம்புள்ளையோட வாழ்க்கையையும் கெடுத்துப்புடாதியடா..!” என்று ஊர்க்காரர்களைப் பார்த்து, சரண்யா பொன்வண்ணன் கெஞ்சுவது போல, ஒரு வசனம் வருகிறது. அதே கருத்தையே இயக்குநருக்கும் சொல்ல வேண்டியுள்ளது. தன் மகனை வன்முறையிலிருந்து காக்க வேண்டும் என ஒரு தாய் விரும்புவதைக் காட்சிப்படுத்திய இயக்குநர், பார்வையாளருக்கு மட்டும், இரத்தத்தை காட்டி, காசுப் பறிப்பது ஏன்? திரைப்படத்தின் தலைப்பு காட்டப்படும் போதே, இரத்தம் தெறிக்கிறது. தணிக்கைத்துறை என்று ஒன்று உண்மையில் இருக்கிறதா? என்று சந்தேகமாக இருக்கிறது.

வீரம் என்பது ஈகையைப்போல ஒரு தனிப்பட்ட குணாதிசயம். குறிப்பிட்ட பிறப்பு அடிப்படையில் தான், வீரம் உருவாகுகிறது என்கிற தவறான கருத்து, வருணாசிரமத்திற்கு துணைப்போகிற செயல். பார்ப்பனீயம் உழைக்கும் மக்கள் பிளவுப் படுவதையே விரும்புகிறது. அதை இடைநிலைச்சாதியாக இருக்குகிறவர்கள் உணர வேண்டும். சாதிகளைப் பார்த்து, சமமாக இருங்கள் என்பது, படிக்கட்டுக்களைப் பார்த்து, சமமாக இருங்கள் என்று சொல்வதைப்போன்று உள்ள சமூக அமைப்பை, இந்துத்துவம் உருவாக்கி வைத்துள்ளது.

"சாதி தான், சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்றார் அண்ணல் அம்பேத்கர்.அந்த விஷ விதைகளை காட்சி வடிவத்தில் விதைப்பது நியாயமா? தர்மபுரிகளும், மரக்காணமும், கீழ வெண்மணிகளும் உருவாகாமல் தடுக்கும் பொறுப்பு, கலைஞனுக்கு இல்லையா? தவறான முறையில் வழிப்பறி செய்து பிழைப்பவர்களைப் போல, பொறுப்புள்ள ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் நடந்து கொள்ளலாமா? நம் குழந்தைகளுக்கு வன்முறையற்ற ஒரு வாழ்வை விட்டுச் செல்ல வேண்டாமா? சசிக்குமார் போன்ற நல்ல கலைஞர்கள், சமூக அக்கறையுள்ள வெற்றிப்படங்களைத் தர முன்வர வேண்டும்.

- அமீர் அப்பாஸ்

Pin It