தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் வளர்ச்சி பெறாததற்கு அரசின் புறக்கணிப்பு முதன்மைக் காரணம் என்றாலும் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் ஆசிரியர்களின் அலட்சியத்தாலும் கற்பித்தலின் குறைபாட்டாலும் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகி விட்டன. இதனைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிற படம் சாட்டை.

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மெத்தனப்போக்கை சொல்வதோடு மட்டுமின்றி அரசுப் பள்ளிகளின் செயலற்ற தன்னமையையும், செயல்வழிக் கற்றல் முறையின் அவசியத்தையும், இப்படத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் அன்பழகன்.

மாணவர்களின் தயக்கத்தைக் களையவைக்கும் கருத்துகள், கற்றலின் நோக்கத்தை புரியவைக்கும் நேர்த்தி என ஆசிரியர், மாணவர், பெற்றோர், மூன்று தரப்பினரையும் நோக்கி சுழன்றிருக்கிறது சாட்டை. பள்ளியைச் சுற்றிலும் நிகழும் காட்சிகள் யாவும் ஒவ்வொரு வருக்கும் தம் பள்ளியின் நினைவுகளை கொண்டுவந்து நிறுத்தும்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம், ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையால் வளர்ச்சியின்றி இருக்கிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வரும் இளம் ஆசிரியர் தயாளன். (சமுத்திரகனி) மிகவும் தேர்ச்சியில் பின்தங்கியிருக்கும் அந்த ஊர் பள்ளிக்கூடத்திற்கு இயற்பியல் ஆசிரியராக வருகிறார், திருத்த வேண்டியது அந்தப்பள்ளி மாணவர்களை மட்டுமல்ல அல்ல, ஒழுக்க கேடான ஆசிரியர்களையும் என்பதை உணர்ந்துகொண்ட ஆசிரியர் தயாளன், பள்ளி வளர்ச்சிக்கு பெரிதும் இடையூறாக இருக்கிற அந்த பள்ளி ஆசிரியர் சிங்கபெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்களின் கெட்ட நோக்கத்தை முறியடித்து, மாணவ மாணவிகளின் ஒத்துழைப்போடு ஒரே ஆண்டில், அந்த பள்ளியை கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மேன்மை பெற்ற பள்ளியாக மாற்றிக்காட்டுகிறார்.

நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, சமூகப் பற்று, பொது அறிவைக் கற்பித்தல், என நேரிய சிந்தனை கொண்ட பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே அவர்கள் கற்றுத் தருதலின் ஆர்வத்தை பெறுவது என, படம் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளன் போன்ற ஆசிரியர்களை சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரும்பாலும் அரசுப் பள்ளிக்கூடத்திற்கு பணிக்கு வரும் உள்ளூர் ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்; நான் படித்த காலங்களிலும் எங்கள் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் அதை கண்டிருக்கிறேன், மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வுகள் காட்டுவது, தன் சொந்த பணிக்காக மாணவர்களை அடிமைபோல் நினைத்து வேலைவாங்குவது, அரசுப் பள்ளிக்கூட மேசை நாற்காலிகளை திருமணம், காதணி விழா என ஊர்பொதுவிழாக்களுக்குப் பயன்படுத்துவது, பள்ளிக்கூடத்தில் இருந்து கொண்டே வீட்டு வேலை பார்ப்பது,சக ஆசிரியர்களுக்கு வட்டிக்கு பணம் தருவது, அவர்களை கிண்டலடிப்பது, மிரட்டுவது என தாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் பள்ளிக்கூடத்தை வைத்துக்கொள்வது, தலைமை ஆசிரியரைக் கூட தன் கைப்பிடிக்குள்ளே வைத்திருப்பது எல்லாமே நான் தான் என கொக்கரித்துக்கொண்டு உலவும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் இருப்பார்கள் அதை அப்படியே இம்மியளவு மாறாமல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இந்த படத்திலும் அப்படி ஒரு ஆசிரியராக நடித்திருப்பவர்தான் தம்பி இராமைய்யா. கதாப்பாத்திரத்தோடு ஒன்றிவிட்டார்.

தன் காலத்திலாவது பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா... என்ற ஆதங்கமும், ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் எப்போதும் சோகமுகத்தில் இழையோட நடமாடும் தலைமை ஆசிரியர் ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.

இந்தக் கதையில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் - மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே மாணவர்களுக்கே உரிய மெய்ப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

“கபடி கபடியை எழுதி, அதனை படி படி என்று மாற்றுவது. ஆங்கில வகுப்புகளில் ஆங்கிலம் மட்டுமே பேசிப் பழகுங்கள் என்பது, தோப்புக்கரணத்திலும், உடற்பயிற்சிலும் இருக்கும் அறிவியலை வெளிப்படுத்துவது, குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல மாணவர்களை ஊக்கப்படுத்துவது, “ஏணியை கூரை நோக்கி போடாதீங்க.. வானத்தை நோக்கிப் போடுங்க” என்று சொல்லி நம்பிக்கையை விதைப்பது இப்படி பல இடங்களில் எதார்த்த காட்சிகள் மனதைத் தொடவைத்திருக்கிறார் இயக்குநர்.

தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவர்க்கு மட்டும் பலவிதங்களில் விட்டுக்கொடுத்து ஆசிரியர்கள் போவது, குறிப்பாக செய்முறை (record note) ஏட்டில் கையெழுத்து வாங்க வரும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்யும் தாவரவியல் ஆசிரியர் ஒரு கட்டத்தில் கண்டறிந்து மக்களே அவரை அடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பது என பள்ளிகள் ஆசிரியர்கள் குறித்த பல உண்மைகள் இப்படத்தில்.

குறிப்பாக பெற்றோர்களுக்களுக்கு அறிவுறுத்தும் செய்தி, "பசங்க நம்மள நம்புறாங்க ஸார்.. ஆனா பெத்தவங்க நாமதான் பிள்ளைகளை நம்புறதில்லை" என்று பெற்றோர்களிடமும் "எவனோ எப்படியோ போய்ட்டு போறான்னு நெனைக்கிறீங்களே, நம்ம பசங்களா இருந்தா இப்படி விட்டுவமா?" என்று தன்னோடு பணி புரியும் ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பவதும் "திறமையான ஸ்டூடண்ட்ஸ மட்டும் ஸ்கூல்ல சேர்த்து நூறு விழுக்காடு ரிசல்ட் காட்டுறதுதான் நல்ல ஸ்கூலுக்கான இலக்கணமா?" என்று அந்த ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி) உணர்ச்சிப் பொங்கி பேசும் போது, நம்மைச் சுற்றியுள்ள பளபளப்பாகும் தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, தேர்வில் தோல்வியுற்றால் தூக்கு மாட்டிக் கொள்வது ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவால் தீக்குளிப்பது என அண்மைக் காலங்களில் நடந்த நிகழ்வுகளும் கண்முன் நிழலாடுகின்றன.

கற்பித்தலில் தொய்வுற்று கிடந்த பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றியமைத்து, அடுத்த ஊருக்கு மாற்றலாகி போகும் தயாளன் ஆசிரியர், அடுத்தக்கட்டமாக இது போன்ற பள்ளிகளை நோக்கி நகர்கிறார் என்பது புரிகிறது. படம் முடிகிறது.

ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் மிகையானது. பள்ளிக்கூடத்தை சுற்றியே காட்சிகள் அமைக்கப்பட்டதால் கொஞ்சம் ஆவணப்படத்தன்மை, கதாநாயகன் தவிர மற்றவர்களெல்லாம் ஒன்றுமே தெரியாது போல் காட்டியிருப்பது, எதிரிகளால் தாக்கப்பட்ட தயாளன் ஆசிரியரின் மனைவி திடீரென்று வந்து வீர வசனம் பேசுவது, இப்படி அங்காங்கே சாட்டையில் சில ஓட்டைகள் இருந்தாலும் இன்றைக்கு பரிதாப நிலையில் கிடக்கும் ஒவ்வொரு அரசுப் பள்ளியும் இந்தப் படத்தில் வரும் பள்ளி போல திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், பார்வையாளர்களை நினைக்க வைக்கும்.

கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காது அரசுப்பள்ளிகளின் அவல நிலையையும், அதன் ஆசிரியர்களின் அலட்சியபோக்கையும் சுட்டிக்காட்டி சமூக உணர்வோடு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கு, மாணவர்களுக்கும் பாடமெடுத்து படமெடுத்த இயக்குநர் அன்பழகன் பாராட்டப்பட வேண்டியவர். இமானின் இசை, யுகபாரதியின் பாடல் வரிகள், அழகொளிரும் ஜீவனின் ஒளிப்பதிவு, கதைக்கு கூடுதலாக வலுசேர்த்திருக்கின்றன.

(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 16, 2012 இதழில் வெளியானது)

Pin It