மதுபானக் கடை என்கிற திரைப்படத்தைப் பார்க்கும் படி, சில நண்பர்கள் எனக்கு குறுந்தகவல் அனுப்பினார்கள்.சமீப காலமாக திரைப்படம் பார்ப்பது என்பது, குளிரூட்டப் பட்ட அறையில்,சித்ரவதைக்கு உட்படுத்தப் படுவதைப் போன்று உள்ளது. பில்லா-2 போன்ற திரைப்படங்கள், அதற்கான மோசமான அனுபவத்தை எனக்கு தந்தது. இத்திரைப்படத்திற்கு துணிந்து செல்லலாம் என்றால், எதை நம்பி செல்வது? நட்சத்திரங்கள் என்று தெரிந்த முகங்கள் யாருமே இல்லை.புதுமுகங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள்.இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என்று யாருமே, பிரபலங்கள் இல்லை.நண்பர்களின் வற்புறுத்தலால் மட்டுமே, திரையரங்கம் சென்றேன். மதுக்கடைக்கு வருகிற வாடிக்கையாளர்கள் மட்டுமே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியன் கதையின் நாயகன். பெட்டிசன் மணி என்கிற கதாபாத்திரத்தைப் பார்த்து, எல்லோரும் பயப்படுகிறார்கள். அவர் ஒன்றும், பார் முழுவதையும் அடித்து நொறுக்கி விடும், ரெளடி இல்லை. கண் முன்னால் நடக்கும் தவறுகளை, கடும் சொற்களால் விமர்சிப்பவன். மனதில் பட்டதைப் பட்டென்று போட்டு உடைக்கும் ஒரு யதார்த்தவாதி.அவ்வளவு தான்.

madhubana_kadai_641

கவிஞர்.என்.டி.ராஜ்குமார் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தின் நாயகனுக்கு, வழக்கம் போல, முதலாளியின் மகள் மீது காதல் வருகிறது. ஆனால், வழக்கம் போல, டூயட் பாடும் அபத்தம் ஏதும் நிகழவில்லை.படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும், மதுவின் பெருமை குறித்தும், பொதுவுடமை தத்துவம் சார்ந்தும் வருகிறது. பாடல்களையும் என்.டி.ராஜ்குமார் எழுதியுள்ளார். “கட்டிங்” கிடைப்பதற்காகப் பாடும் பார் பாடகனாக பூ ராம், தன் இயல்பான உடல்மொழியால் வசீகரிக்கிறார்.மதுவுக்கு அடிமைப் பட்ட ஒருவனின் வாழ்க்கை, எப்படி எல்லாம் பாதிக்கப் படுகிறது? என்பதை நகைச்சுவை ததும்ப, அழகியல் குறையாமல் சொல்லியிருக்கிறார்கள். ஏழ்மையானவன் குடிக்கப் பழகி விட்டு, அதை தொடர முடியாமல், பிச்சையெடுப்பதும், ஓசிக்குடிக்கு அலைவதுமாக,, நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் எளிய மனிதர்களை அசலாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

படம் முழுக்க குடியை எதிர்த்தோ, ஆதரித்தோ, பிரச்சாரம் ஏதும் இல்லை.இரகசியமாக கடையின் பின் வாசலில், வந்து இறங்கும் கலப்பட சரக்கும், சாதிய வன்மமும் மட்டுமே, கதையில் எதிமறைப் பாத்திரங்களாக உள்ளன. முதலாளியின் மகளை காதலிக்கும் ரபீக்கிற்கு, நேர போகும் வன்முறையை, அவனோடு முறைத்து கொண்டு திரியும் சக ஊழியன் தடுப்பது, எதிர்பாராத திருப்பம். காதலர்கள் மதம் கடந்து, வர்க்க வன்முறையில் இருந்து தப்பிச் செல்லும் முடிவு, பார்வையாளனின் பதட்டத்தைத் தணிக்கிறது.இத்திரைப்படத்தில் பெண்களின் உலகம் காட்டப் படவே இல்லை. குடிப்பவனின் மனைவி, குழந்தைகள் எப்படியெல்லாம் அவமானப் படுகிறார்கள் என்கிற துயரத்தைப் பதிவு செய்து இருக்கலாம். பெட்டிசன் மணியை கலங்கடிக்கும் கவிதை எழுதும் கதாபாத்திரத்தின் காதல் விளக்கம், நகைச்சுவையின் உச்சமாக உள்ளது. ஒரே மாதிரியான காட்சிகள், திரும்ப திரும்ப வருவதைப் போன்ற சூழலை தவிர்த்து இருக்கலாம். எதிர்பாராமல், அவசரத்திற்காக தண்ணீர் கேட்டும் ஒருவன், கீழ்ச்சாதிக்காரன் என்று கோபம் கொள்ளும் சாதியத்தின் இருப்பை, சண்டைக்காட்சிக்கு பயன் படுத்தியிருக்கிறார்கள். கொண்டாட்டத்திற்காக குடிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், சாக்கடை அள்ளும் தொழிலாளி குடிப்பது, நாற்றமடிக்கும் வாழ்க்கையில் இருந்து தன்னை மறக்கும் தருணத்திற்காகவே,என்பது இறுதிக்காட்சியில் நம்மை நெகிழச்செய்கிறது.

சமூக அக்கறையும், முற்போக்கு சிந்தனையும், படம் முழுக்க நிறைந்து கிடக்கிறது. அய்யப்பனின் திரைக்கதை, வசனம், கதையை தொய்வின்றி நகர்த்தி செல்கிறது. தமிழில் திரைக்கதை ஆசிரியர்கள் என்கிற ஜாதியில்லை. எழுத்தாளர்களை முதன்மைப் படுத்தும் போக்கு உருவாகவில்லை. அந்த குறையை இது போன்ற திரைப்படங்கள் உடைத்து, மாற்று சினிமாவிற்கு வழியமைத்து தந்திருக்கிறது..ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது. அறிமுக இயக்குநர் கமலக்கண்ணன், முதல் படத்திலேயே, முத்திரை பதித்துள்ளார். குடியின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலை, இத்திரைப்படம் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது. பார்க்க வேண்டிய படம்.

Pin It