மயக்க வைக்கும் பின்னணி இசையுடன் ஒரு பொன் மாலைப்பொழுது, நேர்மறையாக எல்லாவற்றையும் முடித்து வைத்த பொன் மாலைப்பொழுது..வெளியே மழை,உள்ளே ராஜா’வின் இசை, கையில் கோல்ட் காஃபி,எதிரே ஒரு அழகான பெண், வேறென்ன வேண்டும்?! இதுவே மாலைப்பொழுதின் மயக்கத்திலே..!

ஒரு திரைப்படத்தை இயக்கிவிட நினைக்கும் ஆசையில் ஒரு இளம் இயக்குநர். அதை எப்பாடுபட்டாவது சாத்தியமாக்கி விட நினைக்கும் ஒரு ஆத்மார்த்த நண்பன்.

7 Year Itchல் ஒரு சிறுவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் தம்பதியினர். வாங்கிய கடனைக்கொடுக்க இயலாத Coffe Shop Owner, அந்த காஃபி டே’யில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு மேலே படிக்க நினைக்கும் ஒரு இளைஞன்,அதே கடையில் வரும் பெண்களை மடக்கி அனுபவிக்க நினைக்கும் நம்மைப்போன்ற ஒரு சாதாரண இளைஞன்,கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஒரு காஃப்பியை மட்டும் வைத்துக்கொண்டு நாள் பூராவும் குடிக்கும் என்னைப்போன்ற ஒரு எழுத்தாளன். இவர்கள் யாவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் படி அந்த Coffe Day’விற்கு வரும் இளம்பெண் , இப்படி எல்லோரையும் வெளிக்கிளம்ப விடாமல் உள்ளேயே தடுத்து வைக்கும் மழை...! ஆஹா..கேட்கவே சுகமாக இருக்கிறதே.

கதைக்கென ஒன்றும் மெனெக்கெடவில்லை இயக்குநர்.போகிற போக்கில் மேற்கூறிய அனைவரையும் குழப்பாது அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் நாராயண். சலித்தபடி வெகு தூரம் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் ஒரு துருதுருவென இருக்கும் கைக்குழந்தையுடன் ஒரு தாய் ஏறியவுடன் ஏற்படும் மாற்றங்கள் போல அனைவரின் பார்வையும் கதாநாயகி மேல் படிகிறது ..நம் பார்வையுந்தான்.

அவரவர்க்கான பிரச்னைகள். யாருக்குத்தான் பிரச்னையில்லை என்று கூறுகிறான் , அந்த டாவடிக்கும் பேர்வழி.அவன் மூலமாக “பிரச்னையே இல்லன்னா வாழ்க்கையே வாழமுடியாது மச்சி” என்று அறிவுரையை வலிக்காமல் பிரச்சார நெடியின்றி கூறுகிறார் இயக்குநர். ஐயா இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது ? ஹ்ம்.!

தெரிந்த முகங்களோ, இல்லை பெரிய நடிகர்களோ, ஏன் பிரபல இசையமைப்பாளரோ கூட இல்லாமல் படம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது.மனதை அள்ளிச்செல்லும் காட்சிகள் , ஒரு Coffe Day’க்குள்ள தான் படம் முழுக்கன்னே முடிவான பிறகு என்னதான் காண்பித்து விட முடியும் என்று எல்லோரையும் போலத்தான் முதலில் நானும் நினைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். பின்னர் தான் தெரிகிறது அந்த மழைக்கு ஒதுங்கி நானும் அவர்கள் கூடவே காஃபி அருந்த அமர்ந்து விட்டேனென்று..!.

நமக்கு அன்றாடம் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை வைத்துக்கொண்டு ,, அந்தக்கோபத்தை காட்ட வேண்டியவர் மேல் காட்ட இயலாது பிறர் மேல் காட்டுவது என்பது இயல்பு. அதே அந்த 7Year Itch பெண்மணி Waiter மேல் காட்டுகிறாள். Green Tea கொண்டு வரச்சொன்னா Lemon Tea ஏன் கொண்டு வந்தேன்னு எரிஞ்சு விழுகிறார்.அதனால் இன்னொரு Customerஐ என்னால் இழக்க முடியாதுன்னு Manager அந்த Waiterஐ வேலை விட்டுப்போகச்சொல்கிறார். சற்று முந்தைய காட்சிகளில் அந்தப்பையனுக்குத் தான் தன் செலவில் மேற்படிப்பிற்கான Application Form வாங்கிக்கொடுத்த அதே Manager. மனமொடிந்து போகிறான் அவன். Managerக்கு அவருடைய கஷ்டம் , இந்த Coffe Day Shop ல் வருவதைக் கொண்டு பணம் திருப்பித்தர வேண்டுமே என்று.

நாமளும் இப்படித்தானே இருந்தோம் , 7வருஷத்துக்கு முன்னால, ஏன் இப்ப எதுவுமே ஒத்துப்போக மாட்டேங்குது என்று தம் மனைவியுடன் சலித்துக்கொள்ளும் கணவன்.

“சும்மா Love Marriage , அப்புறம் Divorce இவ்வளவுதானா வாழ்க்கை” என்று மனதில் பட்டதை வெளிப்படையாகச்சொல்லும் கதாநாயகி. “உங்க மனதுக்குப் பிடித்தவரிடம் அதைச் சொல்லித்தான் அவருக்குத் தெரிய வேண்டுமா” என்று கேட்கும் கதாநாயகன் என யாரிடமும் போலி முகங்கள் இல்லை.பகட்டு, பிறர் பார்க்கிறார்களே நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற குற்றவுணர்வு எதுவும் இல்லாத கதா பாத்திரங்கள் படம் முழுக்க.! நாம அப்படி இருப்பதில்லை , மனதில் பட்டதை சொல்ல இயலாமல் , மூடி மறைத்து போலி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள்.

தொடர்ந்தும் பெய்துகொண்டிருக்கும் மழையில் அனைவரின் சஞ்சலப்பட்ட மனமும் மாறத்தான் செய்கிறது. வலுக்கட்டாயமாக பெய்து கொண்டிருக்கும் மழை இன்னொரு கதாபாத்திரமாகவே உருவெடுத்து படம் முழுக்க வியாபித்திருக்கிறது.கரைக்கும் சக்தி மழைக்கு உண்டு , கலங்கிய மனங்களை கழுவித் துடைக்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு. சில நேரங்களில் மட்டுமே பல படங்களில் மழை பெய்யும், காட்சிக்கு வலுவூட்ட , இங்கு படம் முழுக்கவும் பெய்து நம்மையும் சேர்த்தே குளிர்விக்கிறது.

சரி மழை வலுத்துவிட்டது , இனி வெளிக்கிளம்பினாலும் போகத்தான் முடியாது என்ற நினைப்பிலேயே கதாநாயகி தொடர்ந்தும் அவன் முன் அமர்ந்து இருக்கிறாள்.ஏதேனும் பேச்சுக்கொடுப்போம் என்று ஆரம்பிப்பவளுக்கு அவனின் பேச்சில் ஆர்வம் பற்றிக்கொள்ள உரையாடல் தீராது தொடர்கிறது, காதல் ,கல்யாணம், குழந்தைகள், 7Year Itch, Divorce என்று அனைத்தையும் கொஞ்சு தமிழில் பேசித்தீர்க்கிறாள், சளைக்காது ஈடு கொடுக்கிறான் அந்தக்கதாநாயகன். சின்னதாக French Beard வைத்துக்கொண்டு நம்மில் ஒருவன் போல இருக்கிறான் அவன்.

எதையும் முடிவு செய்யவேண்டும் என்றோ இல்லை முடிவு கிட்டும் என்று நம்பியோ அங்கு யாரும் வரவில்லை அந்த CoffeDayவுக்கு, ஆனால் அனைத்தும் அங்கு ஒரு நல்லதொரு முடிவை எட்டுகிறது. எந்தப் பிரச்னையானாலும் பேசித்தீர்த்து விடலாம் என்பது மிகவும் சரி.அதற்கு விடாது பெய்யும் மழையும் துணை நிற்கிறது.

கொடுத்த பணத்தை மிரட்டி மீள வாங்க நினைக்கும் வில்லனைக்கூட மழை மாற்றி விடுகிறது. ‘தம்பி எடுக்குறேன்னு சொல்லுதில்ல, பரவால்ல விட்டுறலாம்’ என்று கையெழுத்து வாங்கிக்கொண்டு செல்கிறான். கொடுக்கவே இயலாது என்று அவர்கள் பார்வையிலிருந்து தப்பித்து CoffeDayவுக்கு வரும் கதாநாயகனின் மனதும் கூட , இப்போது கிடைத்த அந்தப்பெண்ணின் நட்பு, மழை காரணமாக வலுக்கட்டாயமாக இருந்தே ஆகவேண்டிய சூழல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனையும் மாற்றித்தான் விடுகிறது.!

திரும்பத்திரும்ப அதே Coffe Shop-க்குள்ளேயே காட்சிகள் நிகழவேண்டிய நிர்ப்பந்தம்,அதையும் சலிக்காது நம்மைப்பார்க்க வைக்கவேண்டிய கட்டாயம் இயக்குநருக்கும் , ஒளிப்பதிவாளருக்கும் இருப்பது நன்றாகவே தெரிகிறது.இருப்பினும் ஒரு காட்சியில் கூட ஆயாசமோ, சலிப்போ வரவில்லை என்பதே ஒரு மகிழ்ச்சி.! Castawayல் Tom Hanks பெயர் தெரியாத தீவில் விமானம் வெடித்து சிதறி ஒதுங்கவேண்டிய நிலையில் , எங்கு பார்த்தாலும் கடல், இல்லையானால் சில தென்னை மரங்கள் என்று எப்போதும் அதைச்சுற்றியே கதை/காட்சிகள் நகர்ந்தாக வேண்டிய சூழல் போல , நல்லவேளை அது போல இங்கு ஏதும் இல்லை , ஐந்தாறு கதாபாத்திரங்கள் இருப்பதால் போரடிக்காமல் செல்கிறது படம்! அதில் FedEx க்கான விளம்பரம் போலவே தோன்றுவது போல , இங்கும் CoffeDayக்கான விளம்பரமாகவே தோணுகிறது, எனினும் உறுத்தவில்லை.

இசை பற்றிச்சொல்லித்தான் ஆகவேண்டும். Coffe Day Shop என்றால் எப்போதும் Western Music அல்லது இப்போதைய Hindi Songs/Instrumental Music இசைப்பது என்றில்லாமல் இறங்கி உழைத்திருக்கிறார் மனிதர்.புதிய இசையமைப்பாளர் “அச்சு”(Achu).

கதாநாயகியின் அறிமுகக்காட்சி , அவர் நடந்து வருவது , பின் இருக்கை தேடி அமர்வது, பிறகும் Waiter வரத்தாமதிப்பது, பின்னர் புத்தகம் புரட்டிக்கொண்டே எதிரில் அமர்ந்திருக்கும் கதாநாயகனை அவன் கவனியாது ஓரக்கண்ணால் பார்ப்பது என்றும் கிட்டத்தட்ட ஒரு 4-5 நிமிடங்களுக்கு ஒரு இசைக்கோவை இழையோடுகிறது. அத்தனை இசைக்கருவிகளையும் குறிப்பாக Piano மற்றும் Violin கொண்டு இசைத்து நம் மனதை கொள்ளை கொள்கிறார். பல இடங்களில் வரும் Lead Guitar Solo Piece Class மச்சி. இறங்கி உழைத்து அடித்துக் கலக்கியிருக்கிறார். பின்னரும் காட்சிகளுக்குத் தகுந்தவாறு ராஜா சாரின் அத்தனை பாடல்களும் , Guitar based ஆக இசைத்திருப்பது அருமை.அதற்காக முழுமையும் ராஜா சாரின் பாடல்களையே பயன்படுத்தாது தாமும் இசைத்திருக்கிறார் புதிய இசைக்கோவைகளோடு,பின்னணி இசையில்.

மென்மையாக அதிரும் Guitar ஒலியுடன் ஆரம்பிக்கும் “என் இனிய பொன் நிலாவே” இசைக்கிறது , அதைக்கதாநாயகன் பின்னோக்கி தலை சாய்த்து, கைகளை சோஃபாவின் இருபுறமும் முழுக்க நீட்டி Relaxed ஆக அமர்ந்துகொண்டு தமக்குள் ரசித்துக் கொண்டிருக்கிறான், பின்னால் சன்னமாக மழையின் ஓசை, அப்போது உள்ளே நுழைகிறாள் கதாநாயகி. ஆஹா...Hats Off Director Sir !.. அதைக்காண அனுபவிக்க கண் கோடி வேண்டுமய்யா..! மழையுடன் சேர்ந்து நமக்குள்ளும் இறங்குகிறது பாடல் ,,,ஹ்ம் ..! பாடல் மட்டுமா ? :-) எழுத என்னிடம் சொற்கள் இல்லை...!!

படத்தில் பாடல்கள் செருகப்பட்டிருப்பது போலத்தோன்றினாலும் உறுத்தவில்லை, எனினும் இசையமைப்பாளர் “அச்சு” அனைத்துப்பாடல்களையும் “ரஹ்மானின்” ஸ்டைலிலேயே அமைத்திருப்பது ஒரு குறை. எந்தப்பாடலும் முந்தைய பாடல்களை நினைவுபடுத்தவில்லை என்றாலும் அவற்றின் பாணி அப்பட்டமாக ரஹ்மானை நம் கண் முன் , மன்னிக்கவும் காதுகளின் :-) முன் கொண்டு வந்து நிறுத்துவது குறைதான்.தனக்கென ஒரு பாணியை அவரால் அமைத்துக்கொள்ள இயலும் அதற்கான பின்புலங்கள் அவரிடம் இருக்கிறது என்பதும் தெள்ளத்தெளிவு. படத்தின் உச்சக்கட்டக்காட்சியில் ஒலிக்கும் “பாம்பே ஜெயஸ்ரீ”யின் குரலில் ஒலிக்கும் “என் உயிரே” இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது என் மனதில்..!

“அவங்களுக்குப் பிடிச்சதப்பண்ணினா எல்லாருக்கும் பிடிக்கும்ங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சது, அவங்களுக்குப் பிடிக்காதத பண்ணாம இருக்குறதும் எல்லாருக்கும் பிடிக்கும்ங்கறது இன்னிக்கு தான் தெரிஞ்சுது” “ ஒருத்தர ஒருத்தர் Daily பார்த்துப்பேசினாலே சரிவர்றதில்ல , என்னால மத்த பொண்ணுங்க மாதிரி எதுவும் சொல்லாம உன்னையும் அழவிட்டு எனக்குள்ளயே உன்னை நினைச்சிக்கிட்டிருக்க முடியாது, Long Distance Relationships , never work, படிப்பு விட்டுட்டு உன்னை பத்தி யோசிப்பேன்னு பயமாயிருக்கு “ “திரும்பிப்பார்த்தா நான் மட்டுமே தனியா இருப்பனோன்னு பயமா இருக்கு சார்” “ ஒரு நொடி சந்தோஷத்துக்காக லைஃப் பூரா கஷ்டப்படணுமா “ பேசினா பிரச்னை தீரும்னு சொல்லுவாங்க, ஆனா பேசப்பேசத்தானே பிரச்னை வளருது” “ காதல் ஒரு ஆதங்கம் , அதைக் காப்பாற்றிக்கொள்வது என்பது அதைவிடப்பெரிய ஆதங்கம் “ “வேலை பார்க்கும் கம்பெனியின் கஸ்ட்டமருக்காக எவ்வளவோ உழைக்கிறோம் , அங்க வெறும் பணம் மட்டுந்தான் கிடைக்கும் , அதையே, இல்ல அதுல பாதியாவது வீட்டில் காமிச்சா என்ன?” என்பன போன்ற வெளிப்படையான கருத்துகளை முன் வைக்கிறார்கள் அனைவரும் இந்தப்படத்தில்..! 

தொடர்ந்தும் பெய்யும் மழை அனைவரையும் குளிர்விக்கிறது , பார்ப்பவர் மனதையும் சேர்த்து.!..மனத் தடைகளையும் ,ஏன் எந்த ஒரு மலையையும் கூடப் பெய்தே கரைத்து விடும் மழை என்பது இந்தப் பொன்மாலைப்பொழுதின் சங்கதி..!

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It