தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு அழகர் தான் பொது தெய்வம். அந்த அழகருக்கு திருவிழா எடுப்பது மூன்றாண்டுகளாக ஒவ்வொரு காரணத்தால் தடைப்பட,இந்த ஆண்டு எப்படியும் நடத்திவிடவேண்டுமென ஊரார் முடிவெடுக்க, அழகர்சாமியின் மரக்குதிரை காணாமல் போகிறது. காணாமல் போன குதிரை கிடைக்காவிடில் கெடுதல் நிகழும் என நம்பும் கிராமத்தார், அது கிடைக்காமல் திருவிழா நடத்த இயாலமல் திகைக்க, அந்த நேரம் அந்த ஊருக்கு வந்து சேர்கிறது அழகிய வெள்ளை நிறக்குதிரை. உயிருடன் வந்த குதிரை அழகர்சாமியின் குதிரை தான் என சந்தோசப்படும் ஊரார் திருவிழாவை முன்னெடுத்து நடத்த முயல, வருகிறான் குதிரைக்குச் சொந்தக்காரன் அழகர்சாமி என்னும் பெயருடனே. அவனுக்கு நிச்சயித்த பெண்ணுடன் திருமணம் நடக்க அவன் குதிரையுடன் ஊர் செல்ல வேண்டும் என்ற கட்டாயம். ஆனால் திருவிழா முடியாமல் குதிரையைத் தர மறுக்கும் ஊர்கூட்டம். என்னவாகிறது என்பதே பாஸ்கர் சக்தி எழுதிய சிறுகதைக்கு சுசீந்திரன் திரைக்கதை எழுதி இயக்கி வெளிவந்திருக்கும் அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தின் கதை.

azhagarsamyin_kuthiraiமேலோட்டமான நகைச்சுவை, எளிமையான கதை சொல்லல், திருப்பங்களற்ற கதைப்போக்கு, நட்சத்திர பலமின்மை என இடர்களை risk factors தமது பலமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். என்ன நடக்குமென்பது கதை படித்தவர்களைப் போலவே படிக்காமல் படமாக பார்க்க வந்தவர்களுக்கும் சமமாக புரியக்கூடிய அளவிற்கு வெகு நேரான கதை. இதை பார்க்க வைப்பது கதை சொன்ன விதமும் உறுத்தாத நடிகர்களின் பங்களிப்பும்தான்.

மலையாளத்தில், வங்காளத்தில், ஈரானில் சாத்தியப்படும் சினிமாக்கள் நம் தமிழில் சாத்தியக்குறைவு எனவும் அது போன்ற முயற்சிகள் இங்கே வெற்றி பெறாது காரணம் வெகுஜனங்களின் பார்வையும் ரசனையும் அவற்றை விரும்புவதே இல்லை எனவும் இருந்த பழைய சொல்லாடல்களை எல்லாமும் திரும்பிப் பெற்றுக்கொள்ள வைத்திருக்கும் கதை சொல்லல் அழகர்சாமியின் குதிரை.

வெளிநாட்டு சி.டி.க்களை தேடுவதற்கு மாற்றாக தமிழ் இலக்கியத்தின் முகடுகளில் ஒளிந்திருக்கும் சிறுகதைகளை, நாவல்களை நாடினால் போதும் என்பதும் இந்தப் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது நமக்குத் தோன்றுகிறது.

அப்புக்குட்டி, சரண்யா மோகனில் தொடங்கி அருள்தாஸ், சூரி, கிருஷ்ணமூர்த்தி, மைனர்-செல்வசேகர், பன்னீர்செல்வம் பிரபாகரன், கீர்த்தி, அழகன் தமிழ்மணி, தவசி என எல்லோருமே நிறைவாக நடித்து இருப்பது கண்களை நிறைக்கிறது.

இளையராஜாவின் இசை தனியாவர்த்தனம். உலகக்கோப்பையை வென்ற டோனி அதை சச்சினுக்கு கொடுத்தாற்போல இந்த குதிரையை இளையராஜாவிற்கு கொடுத்து இருக்கிறார் இயக்குநர். அவரும் பின்னணி இசையில் தனி அத்தியாயத்தை எழுதி இருக்கிறார். மூடுபனி, மௌனராகம், ஜானி, மெட்டி படங்களுக்கு அடுத்து அழகர்சாமியின் குதிரை படத்தின் தீம் இசையையும் இறுதிக்காட்சி இசையையும் சொல்லலாம். அவரது நத்திங் பட் விண்ட் ஆல்பத்தில் சில நோட்ஸ்களில் இளையராஜா காட்டிய அதே எள்ளலிசை இந்த படத்தின் இடைக்காட்சிகளில்  வருவதும் குறிப்பிடத்தகுந்தது. பாடல்கள் இளையராஜாவின் பாடல்களாகவே இதிலும் உள்ளன. அவை நேர்கிற இயல்போடு ஒத்திசைவதும் ராஜாவின் பங்களிப்பை பறைசாற்றுகின்றன.

பாஸ்கர் சக்தியின் வசனம், கதையின் நகர்வுக்கேற்றாற்போல் வளர்வதும் சுருங்க வேண்டிய இடங்களில் சுருங்கிக்கொள்வதுமாக செதுக்கினாற்போலிருக்கிறது. கலை இயக்குநர் சந்தானம் நேர்த்தி.

இனி குறிப்பிட்டாக வேண்டியவர் தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவு. ஒளிப்பதிவில் மிகையற்ற, குளுமையான அனுபவத்தை களிப்பாக்கித் தருவதென்பது ஒரு கலை. அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் ஆரம்பக் காட்சி தொடங்கி இறுதி வரை இயல்பாக ஏதோ நாமே நம் கண்களால் தொடர்வது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அப்புக்குட்டியின் ஃப்ளாஷ்-பேக் காட்சிகளில், குறிப்பாக அப்புக்குட்டியும் குதிரையும் மற்றும் பெண் பார்க்கும் படலங்களில் எல்லாம் இன்னொரு குதிரையாகவே மாறி இருக்கிறது கேமிரா. நினைவில் அழியாத புகைப்படங்களாக இந்தப் படத்தின் பல செவ்வகங்கள் நமக்குள் நிற்பதுவும் அதற்கான பங்கேற்பும் ஈஸ்வரை தேர்ந்த ஒளிப்பதிவாளராக முன்-நிறுத்துகின்றன. இன்னமும் எதிர்பார்க்க வைக்கிற ஒளிப்பதிவு.

இளையராஜாவின் இசை என்பது மாயங்களை போகிற போக்கில் நிகழ்த்தக் கூடியது. அவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து இணைக் குதிரையாக ஓடியிருக்கிறது ஈஸ்வரின் கேமிரா.

இந்தப் படத்தின் குதிரை... அதற்கும் பாராட்டு சொல்ல வேண்டும். நன்றாக நடித்திருக்கிறது அதுவும். மூட நம்பிக்கைகளை நகையாடுகிறார், பகுத்தறிவுக்கூட்டத்தை இணைக்கோடாக காட்டிக்கொண்டே வரும் இயக்குநர். அந்த கூட்டத்தை பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் தருணமொன்றில் பக்த வேசம் போடவைக்கிறார். ஏற்றுக்கொள்ள முடிகிறது.

குறைகள் என்று சொல்லியே ஆக வேண்டுமா..? குறைகள் என்றில்லை.. சில குறிப்பிடல்கள் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

1.படத்தின் கதை நிகழும் காலம் 1982 என்பது படத்தின் பின் புலத்தில் (back drop) தொடர்ந்து தெரிகிறது. ஆனாலும் எல்லாருக்கும் புரியுமா என்றால் புரிவது கடினமே. ஒரு சின்ன டைட்டில் போட்டிருக்கலாம். வெள்ளை பஸ், அலைகள் ஓய்வதில்ல்லை படம், ஏழு புரோட்டா மூன்று ஆம்லேட் 19.5 ரூபாய் விலை, சாராயம், ரத்தினம் பட்டினம் பொடி விளம்பரம், எம்.ஜி.ஆர் சுவர் விளம்பரம் என ஏகப்பட்ட டீடெய்லிங் இருந்தபோதிலும்.

2.அப்புக்குட்டி கடைசியில் மூட்டை கட்டப்பட்டிருப்பவன் தப்பித்தது தாஸ் சொல்லும் ஒரு டைலாக் வரை எந்த சலனமும் இன்றி இருப்பது ஒரு கதை சொல்லும் உத்தி தான் என்றாலும் கூட பழைய காலகட்டக் கதையில் அது ஒட்டவில்லை என தோன்றுகிறது.

3.ஊர் கூடி அப்புக்குட்டியை அடிக்கிற மாதிரியே மீண்டும் ஒரு திருடனைக் கட்டி வைத்து அடிக்கிறது அப்புறம் போலீசுக்கு அனுப்புகிற அந்த காட்சி எந்த முக்கியத்தன்மையுமின்றி நிகழ்கிறது.

இனி....

இந்த படத்தை எடுத்த சுசீந்திரனுக்கு...

மிகச் சிறப்பான ஒரு படம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள எத்தனிக்கும் திரைப்பட இயக்குநர்களை நாம் குறை சொல்ல முடியாது. என்றாலும் கூட முதல் படத்தில் தன்னை நிரூபித்து, இரண்டாவதாக ஒரு சூப்பர்ஹிட் படத்தை இளைய நடிகர் ஒருவர் கூட்டணியில் கொடுத்துவிட்டு அதற்கடுத்த படத்தை ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டியலுடன் செய்திருக்க வேண்டிய ஒரு இயக்குநர்.... கண்ணில் ஒத்திக் கொள்ளும் வண்ணம் படமெடுத்திருக்கிறீர்கள்......

கல்வெட்டு மாதிரி காலங்களைக் கடக்கும் படமாகவும்.... அழகர்சாமியின் குதிரை....வென்றெடுக்கும் மனதை.

Pin It