Ellis-R-Dungan_400"சில சமயங்களில் நல்ல சினிமாப் படங்களுக்குச் சென்றால் பல கஷ்டங்கள் அனுபவிக்க நேரிடும். முதலாவதாக டிக்கட் வாங்குவது. இதற்குப் பணம் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்.குஸ்தி போட்டு,பலரை இடித்துத் தள்ளியோ அல்லது மற்ற மனிதர்களின் தோளில் ஏறி நின்றோ டிக்கட் வாங்க வேண்டும். இந்த  முயற்சியில்   சிலர்  சட்டையைக் கிழித்துக் கொள்வார்கள். சிலர் மணி பர்ஸை இழப்பார்கள். ஆனால், சினிமா பார்க்க வேண்டுமென்ற உற்சாகத்தை யாருமே இழக்கமாட்டார்கள்.

பட்டப் பகலிலே, காயும் வெயிலிலே, தகரக் கொட்டகையில், ஓடாத விசிறிகளுக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு, மணிக்கணக்காகச் சினிமாவைப் பார்ப்பதென்றால்சுலபமான காரியமல்ல.இவ்வளவு கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு மக்கள் சினிமாவைப் பார்ப்பதிலிருந்து,சினிமாவுக்கு ஜனங்கள் மனதை வசீகரிக்கும் அபார சக்தி இருக்கிறது என்பது நன்கு விளங்குகிறது.

சினிமா லட்சக்கணக்கான மக்களுடைய கவலையை மாற்றுகிறது.கோடிக்கணக்கான மக்களுக்குச் சந்தோஷமான பொழுதைக் கொடுக்கிறது.சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான தொழில்களுக்கு ஆதரவளிக்கிறது.லட்சக்கணக்கான மக்களுக்கு வேலையைக் கொடுக்கிறது. பல கலைகளை வளர்க்க உதவுகிறது. ஒரு நாட்டுக் கலையை மற்ற நாடுகளுக்கு எடுத்துக் காட்டுகிறது.

சினிமா அதிர்ஷ்டவசமாக மனித சமூகத்துக்குக் கிடைத்த ஒரு நல்ல சாதனம்.அந்தச் சாதனத்தை ஒரு சிலர் தீய வழியில் உபயோகிப்பதைப் பார்த்து சினிமாவே வேண்டாமென்று கூறுவது அறிவுடைமையாகாது.மிகக் கேவலமான புத்தகங்கள் வெளியாவதால்,புத்தகமே படிக்கக் கூடாது என்று கூறுவது நியாயமாகுமா? அதைப்போலவேதான் சினிமாவும்.நல்ல சாதனத்தைச் சிறந்த வழியில் உபயோகித்துக்கொள்வது நமது கடமை.அதை விடுத்துக் குறை கூறுவதில் அர்த்தமேயில்லை."

சினிமா குறித்து உலகம் சுற்றும் தமிழன் என்று போற்றப்பட்ட ஏ.கே.செட்டியார் கூறியவைதாம் இவை. "கலைகளிலே நமக்கு சினிமா மிக முக்கியமானது" என்றார் லெனின். தனித்துவமான இந்திய சினிமா -அதிலும் குறிப்பாக நமது தமிழ் சினிமா தனித்த வரலாற்றைக் கொண்டது. வாயில்லா ஜீவனாக இருந்த தமிழ் சினிமா 1931 அக்டோபர் மாத இறுதியில் பேசத்தொடங்கியது.அந்த ஆரம்ப நாட்களில் சினிமாவை நோக்கி நாடகத்துறையினர்தான் படையெடுத்து வந்தனர். அதனால் சினிமாவுக்கு நாடகத்தில் புழங்கி அனுபவம் பெற்ற "ரெடிமேட்" கலைஞர்கள் கிடைத்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக காட்சி ஊடகமான சினிமா எனும் இந்த அற்புதக் கலையானது நாடகத்தின் மறுபதிப்பாகவே வளரத் தொடங்கியது.

ஆனாலும் இந்தக் கலையே இறக்குமதியானது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மேற்குலக பாதிப்புகளையும் நம் சினிமா பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.அப்படித்தான் அமெரிக்காவிலிருந்து இங்கே தமிழ் சினிமாவில் பணியாற்ற வந்த ஒரு மகத்தான கலைஞன் அன்றைக்கே பலவிதமான புதுமைகளை நம் சினிமாவில் புகுத்தினார். அவர்தான் எல்லிஸ் ஆர்.டங்கன்.

நமது மக்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த புராண - இதிகாசக் கதைகளையே மௌனப்பட காலத்திலிருந்து எடுத்துவந்தனர் நமது சினிமா பிரம்மாக்கள்.சினிமா எனும் புதிய மொந்தையில் நாடக பாணி என்னும் பழைய கள்ளே ரசிகர்களுக்குப் பரிமாறப்பட்டு வந்தது. நாடகங்களில் கத்திக் கத்திப் பேசவேண்டிய நிர்பந்தத்தில் பழகிய, உச்சஸ்தாயியில் பாடிய நடிகர்கள்தாம் முன்னணியில் இடம்பிடிக்க முடிந்த காலம் அது.அந்த விசித்திரச் சூழலில் வந்துசேர்ந்தவர்தான் டங்கன். தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பினைக் குறித்தும் அவரது உருவாக்கத்தில் வந்த சதி லீலாவதி படத்தின் சிறப்புகள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பார்டன் நகரில் பிறந்த எல்லிஸ் ஆர்.டங்கன் (1909 - 2001) தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமாடோகிராபியில் பட்டம் பெற்றவர் 1935ல் அவர் இந்தியா வந்து சேர்ந்தார்.அவரை அழைத்தது அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பைக்காரர். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் உடன் வந்தார். கல்கத்தாவில் நந்தனார் படத்தை எடுத்துக்கொண்டிருந்தார் டான்டன்.அங்கே சதி லீலாவதி படத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன்.அந்தப் படத்தை டங்கன் இயக்குவதற்கு ஒப்பந்தமானது.தமிழ் சினிமாவில் புதுமை சகாப்தத்தின் துவக்கமாக டங்கனின் அந்த நுழைவு அமைந்துபோனது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் உருவாக்கிய சிறப்புப் பெருமை பெற்ற படம் சதி லீலாவதி. எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா போன்ற நட்சத்திரங்களை அறிமுகம் செய்துவைத்தது இந்த சதி லீலாவதி.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான எம். கந்தசாமி முதலியார் இந்தப் படத்தின் வசனத்தை எழுதினார். சுந்தர வாத்தியார் பாடல்களை இயற்றினார். கதை எஸ்.எஸ்.வாசன். வாசன் தனது ஆனந்த விகடன் இதழில் தொடாராக எழுதி வந்த நாவல்தான் இந்தப் படத்தின் கதை.கோவை மருதாசலம் செட்டியார் இந்தப் படத்தைத் தயாரித்தார்.மெத்தம் 18ஆயிரம் அடி நீளம் கொண்ட இந்தப் படத்தின் சில காட்சிகள் இலங்கையிலும் எடுக்கப்பட்டன.

அந்த நாளில் பல புதுமைகளைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்ததில் சதி லீலாவதி முக்கியத்துவம் பெற்றது. எல்லாவற்றுக்கும் காரணமானவர் அதன் இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன். அவர் ஒரு நல்ல ஜனநாயகவாதியாக இருந்தார். சதி லீலாவதி படத்தின் நடிகர்கள் எல்லோரையும் கூட்டி வைத்துக்கொண்டு படத்தை எப்படியெல்லாம் எடுப்பது என்று விவாதித்துக்கொண்டிருந்தார்.

அப்போது நகைச்சுவைக் காட்சி பற்றி விவாதம் வந்தது.அங்கே கூட்டத்தோடு உட்கார்ந்திருந்தவர்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் ஒருவர்.அவர் எழுந்து ஏதோ சொல்ல முயன்றார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள் அவரைப் பேச விடாமல் சட்டையைப் பிடித்து இழுத்து உட்காரச் சொன்னார்கள்.கலைவாணரோ தன் முயற்சியை விடாமல் பேச முற்பட்டார்.

இதனைக் கவனித்துவிட்ட டங்கன் அவர் என்ன சொல்லவருகிறார் என்று அருகிலிருந்தவரிடம் கேட்டார்.கலைவாணர் தான் கூறவந்த கருத்தை இப்படி உரக்கச்சொன்னார், "நகைச்சவைக் காட்சிகளை நான் சொல்லுகிறபடிதான் எடுக்கவேண்டும்". அடடா,தனக்கு ஒரு சினிமா வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று அத்தனை கலைஞர்களும் அமைதியாக இருந்த அந்தச் சூழலில் ஒரு தனிக் குரலாக -உரிமைக்குரலாக ஒலித்தது கலைவாணருடைய குரல்.டங்கனின் விரிந்த மனசும் அறிவும் கலைவாணரைக் கண்டு வியந்தது.

கலைவாணரின் தன்னம்பிக்கைமீது முழு நம்பிக்கைகொண்ட டங்கன் இப்படிப் பதில் தந்தார்:"நகைச்சுவைக் காட்சியை இவர் சொல்லுகிறபடியே எடுப்போம்".சினிமாவில் நகைச்சுவைக்குத் தனி டிராக் எனும் முறையை ஒரு தனி உரிமையாகக் குரல் கொடுத்துப்பெற்றவர் கலைவாணர், தன் முதல் படத்திலேயே. எல்லிஸ் ஆர். டங்கனின் சதி லீலாவதி இந்த வகையிலும் பெருமை பெற்ற படமானது.

மதுவினால் வரும் தீமைகள் பற்றிய படமாக சதி லீலாவதி அமைந்தது.அத்துடன் இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படும் இன்னல்களையும் பதிவு செய்தது இந்தப் படம். 1936 லேயே வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி டங்கன் சாதனை புரிந்தார்.அத்துடன் சமூகப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதனை இந்தப் படத்தின் வாயிலாக அலசினார். படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எங்கும் சதி லீலாவதி என்பதே பேச்சானது.அப்போது வந்துகொண்டிருந்த ஆடல் பாடல் எனும் சினிமா பத்திரிகை தனது 1937ஜனவரி மாத இதழில் சதி லீலாவதி படத்தை வெகுவாகப் பாராட்டி எழுதியது.

எல்லிஸ்.ஆர்.டங்கனின் வருகைக்கு முன்னர் இங்கே காமிராவைக் கையாளும் கலை அவ்வளவாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.பெரும்பாலும் நாடகங்களை பிலிம் சுருளில் பதிவுசெய்வதுதான் நடந்துகொண்டிருந்தது.அதிலும் காமிராவை ஒரு இடத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு நடிகர்-நடிகைகள் இரண்டு பக்கங்களிலிருந்தும் காமிரா முன் வந்துவந்து நடித்துவிட்டுப் போவதாகவே காட்சிகள் இருந்தது.டங்கன்தான் இந்த வழக்கத்துக்கு முதன்முதலில் அழுத்தமாக ஒரு முடிவு கட்டினார்.

காமிராவை காட்சிகளுக்கேற்ப பக்கவாட்டில் திருப்பவும்,நகர்த்தவும் முடியும் என்று சொல்லித் தந்தார்.பல அரிய புதிய கோணங்களில் எல்லாம் படம் பிடித்தார்.இது ரசிகர்களை உண்மையிலேயே பிரமிப்பில் ஆழ்த்தியது.முன்னெப்போதும் தாங்கள் கண்டிராத புது அனுபவமாக உணர்ந்தார்கள்.இருந்தபோதிலும் சில காட்சிகளை முதன்முதலாகப் பார்க்க நேர்ந்ததால் ரசிகர்களால் புரிந்துகொள்ளவும் முடியாமலிருந்ததாக பத்திரிகைகள் எழுதின. குறிப்பாக மது போதை மயக்கத்திலிருக்கும் கதாநாயகனின் பார்வையின் கோணத்திலிருந்து நடன மங்கையைக் காட்டினார் டங்கன்.

இந்தக் காட்சியில் சற்றே குறைவான ஒளியைப் பயன்படுத்தியிருந்தார் அவர்.இதைப் புரிந்துகொள்ள இயலவில்லை அன்றைய ரசிகர்களுக்கு.அதனால் அவர்கள் விசிலடிக்கத் தொடங்கினராம்.அதேபோல,கதாநாயகன் பயப்படுவதாகக் காட்டவேண்டிய இடத்தில் அவனது கை விரல்கள் நடுங்குவதாகவும்,அடுத்து அவனது பாதங்கள் நடுங்குவதாகவும் மாற்றி மாற்றிக் காட்டினார் டங்கன்.

இந்தக் காட்சியைப் புரிந்துகொள்ள இயலாமல் ஏதோ பிலிம் சிக்கிக்கொண்டுவிட்டதாக நிலைத்துக் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்களாம் ரசிகர்கள். ரசிகர்களின் இந்தப் போக்கை அவர்களின் அறியாமை என்று கண்டித்து ஆகஸ்ட் 1,1936தேதியிட்ட சில்வர் ஸ்கிரீன் இதழில் மணிக்கொடி எழுத்தாளர் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) எழுதினார். இப்படி பாமர ரசனையில் திகைப்பையும்,படித்த அறிவு ஜீவிகளின் ரசனையில் புதிய உற்சாகத்தையும் லேசாகவேனும் இந்த சதி லீலாவதி ஏற்படுத்தியதென்றே சொல்லவேண்டும்.

Ellis_Dungan_Santhanalakshmதொழில்நுட்ப வசதிகள் குறைந்த அந்த நாட்களில் சினிமாவில் பல புதுத் தடங்களைப் பதித்த எல்லிஸ் ஆர். டங்கன் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இந்தியிலும் படங்களை இயக்கி அப்போதே வியப்பை ஏற்படுத்தினார். சதி லீலாவதியைத் தொடர்ந்து சீமந்தினி (1936), இரு சகோதரர்கள் (1936), அம்பிகாபதி (1937), சூர்யபுத்திரி (1940), சகுந்தலா (1940), காளமேகம் (1940), தாசிப் பெண் (1943), வால்மீகி (1945), மீரா (1945), பொன்முடி (1950), மந்திரிகுமாரி (1950) போன்ற படங்களைத் தமிழிலும்,மீரா (1947)படத்தை இந்தியிலும் இயக்கிய டங்கன் தி ஜங்கிள் (1952), தி பிக் ஹன்ட், ஹாரி பிளாக் அண்ட் தி டைகர் (1958), வீல்ஸ் டு ப்ராகிரஸ் ( 1959), டார்ஜான் கோஸ் டு இன்டியா( இரண்டாவது யூனிட் தயாரிப்பாளர்) (1962), ஃபார் லிபர்ட்டி அண்ட் யூனியன் (1977),ஜேசையாஃபாக்ஸ் (1987)ஆகிய படங்களை ஆங்கிலத்திலும் உருவாக்கி அசத்தினார். மேலும் அவர் ஆன்டிஸ் கேங் ( 1955 - 1960) எனும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியையும் இயக்கினார்.

தமிழில் ஒரு வார்த்தையைக்கூட அறியாத எல்லிஸ் ஆர். டங்கன் 1936 தொடங்கி 1950 வரை தமிழ் சினிமா உலகின் தனித்தன்மைகள் நிறைந்த கலைஞராக வலம்வந்தார்.முத்திரை பதித்தார்.இந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பான மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்களில் இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியை நடிக்கவைத்த அரும் பெருமை அவரையே சாரும்.எம்.எஸ்.மொத்தம் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.படமாக்கப்பட்ட விதத்திலும் மீராவில் பல புதிய தொழில்நுட்ப உத்திகளை டங்கன் கையாண்டார். ஒளியமைப்பில் அன்றைக்கே பல புதிய சோதனைகளை முயன்றார் டங்கன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இயல்பான அழகை அவரது காமிரா விதம் விதமாக படம்பிடித்து ரசிகர்களுக்கு வழங்கியது.

துவாரகையில் மீரா படப்பிடிப்பு.துவாரகை கிருஷ்ணன் கோயிலில் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருந்தபோது ஒரு சிக்கல் வந்தது. டங்கன் இந்துமதத்தைச் சேர்ந்தவரில்லை என்பதால் கோயிலுக்குள் நுழையமுடியாத நிலை.ஆனால் சுப்புலட்சுமியோ படப்பிடிப்பின்போது டங்கன் தன்னோடு இருக்கவேண்டும் என்று விரும்பினார்.அப்போது ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதன்படி டங்கனுக்கு காஷ்மீர் பண்டிட் போல வேடம் அணிவிக்கப்பட்டது. அவருக்கு இந்தியில் சலோ, ஜல்தி, காம்கரோ போன்ற வார்த்தைகள் மட்டுமே தெரியும். அவற்றை வைத்துக்கொண்டு சமாளித்தார் டங்கன்.

ஒரு இந்து அல்லாத ஐரிஷ் அமெரிக்கரான டங்கன் மாறு வேடத்தில் இந்துக் கோயிலுக்குள் சென்று படப்பிடிப்பை நடத்தினார். கூடியிருந்த மக்களுக்கு அவரின் அடைபட்ட மூக்கினால் பேசிய ஆங்கிலம் வித்தியாசமாகத் தெரியவில்லை, சந்தேகத்தையும் உண்டாக்கவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் இப்படித்தான் மூக்கால் பேசுவார்கள்போல என்று அவர்கள் நினைத்தார்களாம்.

இந்து அல்லாத வேற்று மனிதன் ஒரு இந்துக் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதால் தெய்வக் குற்றமாகி,அங்கே எந்தவிதமான பூகம்பமும் வந்துவிடவில்லைதான்.ஆனால் அதற்கு மாறாக டங்கனின் படைப்புத் திறனால் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் குறிப்பிட்டு நினைவுகூரத் தக்க கலைப்படைப்பாக இந்த மீரா திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டுவருகிறது.

1945ல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு, மௌண்ட்பேட்டன், சரோஜினி நாயுடு போன்றவர்களெல்லோரும் சுப்புலட்சுமியின் பரம ரசிகர்களாகிப்போயினர். இந்தப் படத்தால் எம்.எஸ். உலகப்புகழ் எய்தினார். எல்லாமே டங்கனின் கலைத்திறனாலும் படைப்பு மனதாலும் விளைந்தது என்றால் மிகையாகாது.

சதி லீலாவதியில் தொடங்கிய அந்த சாதனைச் சரித்திரப் பயணி எல்லிஸ் ஆர்.டங்கன் தனது 92வது வயதில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாள் அமெரிக்காவில் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.அதுவரையிலும் அங்கேயும் கலைப் பணியையே தனது மூச்சாகக்கொண்டிருந்தார் அந்த அருங்கலைஞர்.

- சோழ.நாகராஜன்

Pin It