பேராண்மை இயக்குனருடன் ஒரு நேர்காணல்
நேர்கண்டவர் : அன்புத்தென்னரசன்

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் வரிசையில் திரு. எஸ். பி. ஜனநாதன் அவர்கள் தனக்கென்று ஒரு தனி பாணியையும், தனி இடத்தையும் பிடித்திருக்கிறார். அவர் தன்முதல் படமான இயற்கை மூலம் அழகான கடல்சார் வாழ்வியலையும், முக்கோணக் காதலையும் நயம்பட எடுத்தியம்பி, சிறந்த மாநில மொழிப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்று, தமிழ்த் திரை உலகிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது இரண்டாவது படமான ஈ படத்தின் மூலம் சிங்காரச் சென்னையின் குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், உயிரி தொழில்நுட்ப யுத்தத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச அரசியலை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தார். தனது மூன்றாவது படமான பேராண்மையின் மூலம் கூடுதல் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை, உயர்சாதி அதிகார வர்க்கம் எப்படித் தனதாக்கிக் கொள்கிறது என்பதை அழகாகவும், அருமையாகவும், துணிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.

பேராண்மை படத்துல நீங்க சொல்ல நெனச்சதெல்லாம் சொல்லீட்டீங்களா?

பதில் : இல்ல. சொல்ல முடியல. நெறய சென்சார்ல மாட்டிருச்சு. படம் இடைவேளைக்கு அப்புறம் மட்டுமே 12,000 அடி இருந்துச்சு. அத 6500 அடியா எடிட் பண்ண வேண்டிய தாயிருச்சு. நான் நெனச்சத கொஞ்சங் கொஞ்சமா சொல்வேன், என்னோட அடுத்தடுத்த படங்கள்ல.

கணபதிராம் கதாபாத்திரம் மூலமா நீங்க சில செய்திகளை சொல்ல முற்பட்டிருக்கீங்க. . அத சென்சார்ல தடுத்திருக்காங்க. . . அதப்பத்தி உங்க கருத்து என்ன?

பதில்: ஆமாமா. தமிழ்நாட்டுல இந்த மாதிரி மாறுபட்ட திரைப்படம் எடுக்குறதுங்கறது ஒரு போராட்டம்தான். வழக்கமான படம் எடுக்கனும்னா தயாரிப்பாளர் மட்டும் போராடுனா போதும், படத்துல என். சி. சி. மாணவர்கள காட்டி யிருக்கேன். அவங்களோட உறுதிமொழி ஹிந்தியில் மட்டுந்தான் இருக்கு. ஆங்கிலத்துல கூட இல்ல. நான் தமிழ்ல உறுதிமொழிய சொல்லியிருந்தா அதுவே சென்சார்ல தடைபட்டிருக்கும். உண்மைக்கு மாறாவும் இருந்திருக்கும்.

படத்துல ஒரு காட்சியில ஒரு வசனம் ‘தமிழனோட வீரத்த உலகமே பாத்துகிட்டுதான் இருக்கு நீங்களும் அத நிரூபிங்க’ன்னு இருக்கு. இது யார மனசுல நெனச்சு எழுதுனீங்க?

பதில்: நான் ரொம்ப வெளிப்படையா,ஒளிவு மறைவு இல்லாம சொல்றேன். இது நீங்க சொல்ற அந்த அர்த்தத்துலதான் எழுதுனேன். ஏன்னா நான் அப்ப அந்த அளவுக்கு சூடா இருந்தேன். அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமா இருந்தேன். பொதுவா மத்த இடங்கள்ளயும், சினிமாவுலயும் தமிழன் வீரமானவன். தமிழர்கள் வீரமானவங்கன்னு கடந்த காலத்துலயே சொல்லியிருப்பாங்க. இது இன்னிக்கும் ஈழத்துல நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், நிகழ்காலத்துல சொல்லனும்னு அப்படி எழுதுனேன்.

மே 17 சம்பவத்தைப் பத்தி என்ன நெனைக்கிறீங்க? அவங்க ஆயுதங்களை மவுனிக்கிறோம்னு சொன்னாங்க. அதப்பத்தி உங்க கருத்து. .

பதில்: அந்த சம்பவத்தப் பத்தித் தெளிவா பேசுற அளவுக்கு நான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி கிடையாது. என்னோட படங்கள்ல அரசியல் இருக்கும். அவ்வளவுதான். ஏன்னா நான் ஒரு சினிமாக்காரன். என்னோட கருத்துப்படி, நான் இதுக்காகத்தான் படத்தில ஒரு காட்சி வச்சிருக்கேன். அதாவது ஒரு நாட்டோட - இனத்தோட மொழி, கலாச்சாரம், இலக்கணம், இலக்கியம் எதையுமே அரசியல் பொருளாதாரம் தெரியாம காப்பாத்த முடியாதுன்னு சொல்லியிருப்பேன். இதுவரைக்கும் நடந்தது, இனி நடக்க இருப்பது எல்லாத்துலயும் இந்தக் கூறு உள்ள இருக்குன்னு நான் நெனைக்கிறேன். நான் உணர்வுப்பூர்வமா, என் மொழி, இனம் மேல என்னதான் பற்று இருந்தாலும் அரசியல் பொருளாதாரம் தெரியாம ஒண்ணும் பண்ண முடியாதுன்னு உணர்ந்தேன். ஏன்னா அரசியல் பொருளாதாரம் பல விசயங்களைத் தீர்மானிக்குது. என்னோட உணர்வு உண்மையானது. நான் படப்பிடிப்புத் தளத்துல இருக்கும் போது, எனக்கு கிடைக்கக் கூடிய தகவல்களால நான் ரொம்ப மனசு நொந்து படப்பிடிப்பை நிறுத்துற அளவுக்கு போயிருக்கு. அப்ப நான் சிந்திக்கிறதெல்லாம் இதான். இதோட அடிப்படையை நாம இன்னும் ஆழமா தெரிஞ்சுக்கனும் போலன்னு நெனைப்பேன். கண்டிப்பா சர்வதேச அரசியல் பொருளாதாரத்த தெரிஞ்சுக்கனும்கிறது எனது எண்ணம்.

ஒரு காட்சியில, சர்வதேச அரசியலப் படிங்க பொதுவுடைமை அரசியலப் படிங்கன்னு சொல்றீங்க. இப்போ தமிழ்நாட்டுல பொதுவுடைமை அரசியலைப் பின்பற்றக்கூடிய சி. பி. ஐ., சி. பி. எம் போன்ற கட்சிகளின் நிலைப்பாடு சரியானதா?

பதில்: என்னால பொதுவுடைமைத் தத்துவங்கள மட்டுந்தான் சொல்ல முடியுமே தவிர, அத பின்பற்றக்கூடியவங்க எப்படிப்பட்டவங்க, அவங்க நிலைப்பாடு என்னங்கறத பத்திச் சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு அதுக்கான தகுதி இல்ல. அதப்பத்திச் சொல்லவும் நான் விரும்பல. பொதுவா நாடுங்கறது, உழைக்கும் மக்கள்தான். நல்லா கவனிங்க, வெறும் மக்கள் இல்ல. தமிழனா இருந்தாலும் உழைக்க வேண்டும்கிற என்னோட பொதுவுடைமைக் கருத்துல எந்த மாற்றமும் இல்ல. ஏன்னா இந்த கருத்து ரொம்ப சிறந்ததுன்னு கூடச் சொல்வேன்.

கிளைமாக்ஸ் காட்சி சில விமர்சனங்களுக்குள்ளாகியது. சினிமா இலக்கணத்த மீறின மாதிரி தெரியுது. இத நீங்க வேணும்னே வெச்சீங்களா?

பதில்: திட்டமிட்டுத்தான் வச்சேன். வழக்கமான சினிமா மாதிரி அந்தத் துருவன் கேரக்டர மேடை ஏறி விருது வாங்க வெச்சிருந்தேன்னா, இந்த இந்தியாவப் பொறுத்தவரையில எந்த ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவனோ தாழ்த்தப்பட்டவனோ இந்த நாட்டுக்காக உண்மையாக உழைத்தால் அவன் மிகப் பெரிய கெளரவத்திற்கு உள்ளாவான் என்ற பொய்யான நம்பிக்கையை நான் கொடுத்த மாதிரி ஆயிரும். அந்த மாதிரி இல்லை என்பதானால்தான் நான் அப்படிச் சொல்ல வேண்டியதாகி விட்டது. உண்மையிலேயே அப்படி இருந்திருந்தால் நான் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தப் படமும்கூடத் தேவையில்லை. சினிமாவ வச்சு என்னால இவ்வளவுதான் உணர்த்த முடியும்.

(கருஞ்சட்டைத் தமிழர் நவம்பர்16, 2009 இதழில் வெளியான கட்டுரை)

Pin It