புகழ் பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் சூசன் சோன்டாக் புகைப்படம் பற்றிய தன் புத்தகத்தில் பின் வருமாறு எழுதினார்.

"உலகில் உள்ள எல்லா பொருட்களுமே புத்தகத்தில் முடிவதற்காகத்தான் இருக்கின்றன என்று மலார்மே சொன்னார். ஆனால் இன்றோ எல்லாமே புகைப்படத்தில் முடிவதற்காகத்தான் இருக்கின்றன" ஒரு வேளை, சூசன் சோன்டாக் இன்று இதே வரிகளை எழுத நேர்ந்தால்.

"... இன்று எல்லாமே சினிமாவில் முடிவதற்காகத்தான் உலகில் உள்ளது" என்று தான் எழுதியிருப்பார்.

கேட்டுணர்தல், படித்துணர்தல் என்பது போய், இன்று எல்லாமே ஒலி ஒளியாய் பார்த்துணர்தல் என்றாகிவிட்டது. அந்த அடிப்படையில் உலகில் உள்ள ஒவ்வொன்றும் சினிமாவில் முடிவதற்காகத்தான் உள்ளது என்று சொன்னால், அது நிச்சயம் மிகையாகாது. இங்கு சினிமா என்று சொல்லும் பொழுது டெலிவிஷன் உட்பட ஒலியோடு கூடிய எல்லா அசையும் பிம்பங்களையும் குறிக்கிறது. புகழ் பெற்ற கலை விமர்சகர் ஜான் பெர்கர் (துடிhn க்ஷநசபநச) சொல்கிறார் "ஓவியங்களும்  வரைபடங்களும் பார்வையாளன் தான் உலகின் மையப்புள்ளி எனும் கண்ணோட்டத்தில் வரையப்படுகின்றன. ஆனால், கேமராவோ குறிப்பாக திரைப்பட கேமராவோ அப்படி ஒரு மையப்புள்ளியே இல்லை என்பது போல் செயல்படுகிறது"

என்னைப் பொறுத்தவரை கேமராவும், லென்ஸூம் பார்வையாளனை மையப்புள்ளியாக வைத்துதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சினிமாவைப் பொறுத்தவரை அந்த மையப்புள்ளி எப்போதும் நகர்கின்ற மையப்புள்ளியாக உள்ளது.

கேமராவும், லென்சும்தான் அடிப்படையில் சினிமாவை உருவாக்குகிறது. ஆனாலும், அது வெறும் கலையாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ உருவாகவில்லை. மாறாக, சினிமா என்பது ஒரு மாயம், ஒரு விநோதம், ஒரு புதிர், கிளர்ச்சியூட்டும் புதிர். இதுதான் பிரத்யேகமாக, சினிமாவை மற்ற கலைகளிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. சினிமா நம் உணர்வுகளினூடாக புதிய ஞாபகங்களை உருவாக்குகிறது.

சினிமா தனது இரண்டாவது நூற்றாண்டில், டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு அடுக்குகளை கொண்ட காட்சி ஊடகமாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படித்தான் இன்று சினிமா உள்ளது.

"எங்கள் காலத்தில் எல்லாம் சினிமா இப்படி இல்லை. நல்ல கதை இருந்தது.  வன்முறை கிடையாது.  பெண்கள் உயர்வாக சித்தரிக்கப்பட்டனர். இன்று எல்லாமே மாறிவிட்டது..." என்று புலம்புபவர்கள் இன்றும் உள்ளனர்.

இதுபோன்ற புலம்பல்களில் எந்த அர்த்தமும் இல்லை. துவக்கத்தில் சினிமா பல விஷயங்களை அறிந்து கொள்வதற்கான கருவியாக இருந்தது. அது ஒரு காட்சிரீதியான ஊடகமாக இருந்ததால் சினிமா பல விஷயங்களை அறிந்து கொள்ளும் கருவியாகத்தான் இருந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட சினிமா அப்போது அறிவியல், மருத்துவத்துக்கு நிகராக பல விஷயங்களை கற்றுத் தந்தது. கேமரா தன் லென்ஸின் மூலம் மிக நுணுக்கமான விஷயங்களைக் காட்டியது.  மிகப் பிரம்மாண்டமான விஷயங்களைக் காட்டியது. கடலின் சீற்றத்தைக் காட்டியது. கண் ஓரம் மெல்லத் ததும்பும் கண்ணீர்த் துளியை காட்டியது. யுத்தக் காட்சிகளை காட்டியது, அதே நேரம் தொண்டைக் குழியின் வலியையும் காட்டியது.

இதனால்தான் சினிமாவை மக்கள் துவக்கத்திலேயே இரத்தினக் கம்பளம் கொண்டு வரவேற்றார்கள். வேறு எந்த கலை வடிவத்திற்கும் இத்தகைய வரவேற்பை மக்கள் கொடுத்ததில்லை. இதன் காரணமாக சினிமா இயற்கையாகவே அடுத்தக் கட்டமான பிரம்மாண்டத்தை அடைந்தது. அதன் தொடர்ச்சியாக, சினிமா என்பது சந்தைக்கான தயாரிப்பு என்ற தவிர்க்க முடியாத கட்டத்தை அடைந்தது.

இன்று சினிமாவைப் பார்க்க மக்கள் இருபது ரூபாயிலிருந்து இருநூற்றி ஐம்பது ரூபாய் வரை செலவழிக்க தயாராகயிருக்கிறார்கள். காரணம், சினிமாவின் அற்புதம் அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. அதே நேரத்தில் சினிமாவின் ஒவ்வொரு படைப்பிலும் இன்னொரு அற்புதம் புதைந்துள்ளது. ஆனால், அந்த புதைந்துள்ள அற்புதத்தைப் பார்ப்பதற்கு பெரும்பாலான மக்களுக்கு நேரமோ, கட்டாயமோ, ஆர்வமோ இருப்பதில்லை. டெலிவிஷன் நிகழ்ச்சிகளே அவர்களுக்கு போதுமானதாக உள்ளது. சினிமா மற்றும் ஒளி-ஒலி ஊடகத்திற்கு இன்று பிரதான வாயிலாய் இருப்பது டெலிவிஷன்தான். எந்த ஒரு நேரமும் உலகில் கிட்டத்தட்ட 100 கோடி பேர் டெலிவிஷனில் எதையாவது பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக உலகில் ஒரே நேரத்தில் 100 கோடி பேர் படித்துக் கொண்டிருப்பதில்லை அல்லது எழுதிக் கொண்டிருப்பதில்லை. நிச்சயமாக உலகெங்கும் 100 கோடி பேர் ஒரே நேரத்தில் நாடகத்தையோ, இசை நிகழ்ச்சியையோ, ஓவியங்களையோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதனால்தான் சினிமாவிற்கும், ஒளிஒலி  ஊடகத்திற்கும் இவ்வளவு பெரிய சக்தி உள்ளது.

 தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நேரம். தேர்தல் என்பது நேர்மையாக நடத்தப்படும் பட்சத்தில் ஜனநாயகத்தின் மிக சக்திவாய்ந்த சாதனம் அது. ஆனால் இன்று டெலிவிஷன் என்கின்ற சாதனம் இந்த ஜனநாயகத் தன்மையை சற்றே ஆட்டிப்பார்க்கிறது. இன்று தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டெலிவிஷன் சேனல்களை சொந்தமாக வைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் சொந்தமாக டெலிவிஷன் சேனல்களை வைத்திருக்கும் கட்சிகளின் சக்தி, டெலிவிஷன் சேனல் இல்லாமல் இருக்கும் கட்சிகளின் சக்தியைவிட பலமடங்கு அதிகரிக்கிறது. பண பலமும், அதிகார பலமும் உள்ள கட்சிகள் சுலபமாக சொந்த சேனல்களை வைத்துள்ளன. ஒவ்வொரு கட்சியும் தங்களின் தொலைக்காட்சிகளில் தங்களுக்கு சாதகமான விஷயங்களை செய்திகளாகவும், விவாதங்களாகவும், பேட்டிகளாகவும் ஒளிபரப்புகிறது. ஒரு விதத்தில் இவையெல்லாம் அந்த கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யும் செலவில் சேர்க்க வேண்டியவை. ஆனால் இவற்றின் பண மதிப்பை  சரியாக கணக்கிடுவதும், பின்னர் கணக்கில் சேர்த்துக் கொள்வதும் சற்றே கடினமான காரியம்.

அமெரிக்காவிலும், பிற மேற்கத்திய நாடுகளிலும் வேட்பாளர்கள் விளம்பரப் படங்களை எடுத்து அவற்றை பல தொலைக்காட்சிகளில் பணம் கொடுத்து ஒளிபரப்புகின்றனர். இதற்காக அவர்கள் செலவு செய்யும் தொகை மிகப்பெரிய ஒன்று. சென்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டெலிவிஷன் விளம்பரங்களுக்காக மட்டும் செலவு செய்யப்பட்ட தொகை ஆயிரம் கோடி ரூபாயை தாண்டுகிறது. தேர்தலுக்கான விளம்பரப் படங்கள்  அமெரிக்காவில் 1952 ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. 1952ம் ஆண்டு ஐஸன்ஹோவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, வெறும் 20 வினாடிகள் ஓடும் விளம்பரப் படத்தை வெளியிட்டார்கள். அந்த 20 வினாடிகளில் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஐஸன்ஹோவர் ஒரு தேர்ந்த நடிகரை போல் பேசுகிறார். இன்னொரு ஒரு நிமிட விளம்பரப் படத்தில் "எல்லோரும் விரும்புவது ஐ (ஐஸன் ஹோவர்)" என்ற விளம்பரப் பாடலுக்கு பல்வேறு அனிமேஷன் கதாபாத்திரங்கள் நடந்து செல்கின்றன. ஒபாமாவின் அதிபருக்கான தேர்தல் விளம்பரப் படம் நான்கு நிமிடம் ஓடுகின்றது. இதில் ஒபாமாவின் கதையே சொல்லப்படுகிறது. எப்படி அவர் தாயார் ஒற்றை ஆளாக அவரை வளர்த்தார். உழைப்பு, நேர்மையில் எப்போதும் நம்பிக்கை வைத்த குடும்பம் அவருடையது.. என்று அவரின் வாழ்க்கை கதை நான்கு நிமிடங்களில் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இன்னமும் தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பரப் படங்கள் என்பது அரிதான ஒன்றாகவே உள்ளது.

கட்சிகளுக்கான விளம்பரப் படங்களைத்தான் கட்சிகள் தங்கள் சொந்த தொலைக்காட்சிகளில் தேர்தலின் நெருக்கத்தில் வெளியிடும். அந்த விளம்பரப் படங்களை பார்த்தால் பெரும்பாலும் தங்களின் பிரலாபங்களை சொல்லிக் கொள்வார்கள் அல்லது பிரதான எதிர்க்கட்சியை மோசமாகக் காட்டுவார்கள். இந்த கட்சி விளம்பரப் படங்களை பார்த்தாலே, இவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பற்றியோ, இந்த ஊடக மொழி மக்கள் மனதில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து தெளிவில்லை என்பது தெரியும்.

சரியாக எடுக்கப்பட்ட கட்சி மற்றும் வேட்பாளருக்கான விளம்பரப் படங்கள், செய்திகளைக் காட்டிலும் சரியான பாதிப்பை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இந்தியாவில் தொழில்ரீதியான தேர்தல் விளம்பரப் படங்கள் என்பது இன்னும் துவங்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விளம்பரப் படங்களை தயாரிக்கவோ அல்லது பல சேனல்களில் ஒளிபரப்பவோ அல்லது அதற்கான பணத்தை செலவு செய்யவோ கட்சிகளுக்கு ஒரு போதும் பிரச்சனையில்லை. மாறாக இந்த தொழில்நுட்ப சக்தியின் வீச்சை பல கட்சிகள் உணராததுதான் பிரச்சனை.

பெரிய அளவிலான தேசிய கட்சிகள் இப்போதுதான் இந்த தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளன. சென்ற மகாராஷ்டிரா தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி டெலிவிஷன், ரேடியோ விளம்பரங்களுக்காக நான்கு கோடி ரூபாயை செலவழித்தது.

தமிழ்நாட்டில், பிரதான அரசியல் கட்சிகள் ஏழை மக்களுக்கு பலவற்றை இலவசமாக வழங்குவதை ஏதோ பெரிய பொருளாதார, சமூக திட்டங்கள் போல செயல்படுத்துகின்றன. இந்த திட்டங்கள் அடிப்படையில் ஏழை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் எதிர்மறையானது. மக்கள் வரிப்பணத்தில் அரசியல் கட்சிகள் வெட்கமே இல்லாமல் சுயத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. இந்த திட்டங்களுக்கு செலவிடப்படும் பெருந்தொகையில் பெரும் ஊழல் நடைபெறுகிறது.... போன்ற விஷயங்களை அறிவியல் பூர்வமாக ஆதாரத்தோடு எல்லா மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விளக்குவது சற்றே கடினமான காரியம். அப்படி ஒரு சிலர் செய்தாலும் அவை மிகச் சிலர் படிக்கும் பத்திரிகைகளில்தான் வெளியாகிறது.

சினிமாவையும், அரசியலையும், சமூகத்தையும் சரியாக புரிந்து கொள்ளும் நபர்களால், இது குறித்து ஒரு ஐந்து நிமிட படம் எடுக்கலாம். அப்படம் மக்கள் பேசும் மொழியில் தொலைக்காட்சிகளில் விளம்பரமாக ஒளிபரப்ப படுமேயானால் அதன் பாதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவு இருக்கும்.

நம்நாட்டில் டெலிவிஷன், சினிமாவை சக்திவாய்ந்த வெகுஜன ஊடகம் என்று பலரும் சொல்கின்றனர். வெகுஜன ஊடகம் என்றால் என்ன அர்த்தம்? பெரும்பாலான மக்களை சென்றடைகின்ற ஊடகமா? பெரும்பாலான மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகின்ற ஊடகமா? அல்லது பெரும்பாலான மக்களை பற்றி கவலைப்படாமல், ஒரு சிலர் லாபம் அடைவதற்காக பெரும்பாலான மக்களை ஏமாற்றுகின்ற ஊடகமா? ... இப்படி பல கேள்விகள் என மனதில் எப்போதும் எழும்.

"தி ஹிந்து" பத்திரிகையின் கிராமப்புற நிகழ்வுகளின் ஆசிரியரான பி.சாய்நாத் தெள்ளத் தெளிவாக சொல்கிறார்- "எந்த வெகுஜன ஊடகத்திற்கும் பெரும்பாலான மக்களின், குறிப்பாக கிராமப்புற ஏழை விவசாயிகளை பற்றி எந்த கவலையும் இல்லை". அவர் இதை ஏதோ பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. இந்திய கிராமப்புற விவசாயிகளைப் பற்றி கடந்த பத்தாண்டுகளாக ஆய்வு செய்து எழுதிய பின்பு இதை சொல்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கிராமங்களில் 2 லட்சம் விவசாயிகள் கடன் தொல்லை மற்றும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து எத்தனை இந்தியர்கள் அறிவர்? குறிப்பாக படித்த நகர்ப்புற இந்தியர்களில் எத்தனை பேர் அறிவர்? இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே இது குறித்து ஓரளவு அறிவர்.. இதற்கு முக்கிய காரணம், வெகுஜன ஊடகங்கள் இந்தப் பிரச்சனை குறித்து எந்த கவலையும் படவில்லை. அதன் காரணமாக இது குறித்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை. சாய்நாத்தின் கட்டுரைகளை படித்தவர்களும், அவர் உரையை கேட்டவர்கள் மட்டுமே இப்பிரச்சனையின் தீவிரத் தன்மையை அறிவர்.

ஆனால் கடந்த ஒரு ஆண்டில் பல ஆயிரம் மக்கள் இந்தப் பிரச்சனைக் குறித்து இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் பேசிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பல்கலைக் கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இப்பிரச்சனைக் குறித்து அக்கறையோடு விவாதிக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் ஒரு ஆவணப்படம்.

அந்த ஆவணப்படத்தின் பெயர் "சூநசடி'ள ழுரநளவள"-நீரோவின் விருந்தாளிகள். தீபா பாட்டியா இயக்கிய இந்த ஆவணப்படம் சாய்நாத்தை தொடர்ந்து செல்கிறது. சாய்நாத் விவசாயிகள் பிரச்சனை குறித்தும், விவசாயிகள் தற்கொலை குறித்தும் ஆய்வதற்காக மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும் பல கிராமங்களுக்கும் பயணம் செய்கிறார். பலரை சந்திக்கிறார். பிரச்சனையின் ஆணி வேர் குறித்து பேசுகிறார். பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பல நேரங்களில் கொப்பளிக்கும் கோபத்தோடு பதிலளிக்கிறார். பொருளாதாரம் படித்துவிட்டு இப்பிரச்சனை குறித்து கவலைப்படாமல் இருக்கும் மேதாவிகளை தகாத வார்த்தைகளால் கூட திட்டுகிறார். படத்தில் ஒரு இடத்தில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இப்பிரச்சனை குறித்து பேசுகிறார். நிரம்பி வழியும் கூட்டம். கூட்டம் மொத்தமும் அவர் பேச்சில் ஆழ்ந்து அதிர்ச்சியில் அமைதியாய் இருக்கிறது. அவர் பேச்சைக் கேட்கும் ஒரு பெண்ணுக்கு அவளையறியாமல் கண்ணீர் வழிந்தோடுகிறது. சமீப காலத்தில் நான் பார்த்த ஆவணப் படங்களில் மிக முக்கியமான படம் எனச் சொல்வேன். இப்படம் ஆங்கிலத்தில் இருந்தாலும் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் இதை பல இடங்களில் திரையிட்டு விவாதிக்க வேண்டும். இணையத்தில், யூ ட்யூப்பில் இப்படத்தை முழுமையாக பார்க்கலாம்.

இப்படத்தை குறித்து மக்கள் மற்றும் பண்பாட்டு இயக்கத்தில் உள்ள பலரிடம் பேசினேன். யாருமே இப்படத்தை பற்றி அறிந்திருக்கவில்லை. எனக்கு ஒரே ஆச்சரியம். எல்லா விஷயங்களும் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் நம் தேடலின் உக்கிரம்தான் நமக்கு தேவையான விஷயங்களை அடையாளங் காட்டுகிறது.

ஊடகம் குறித்தும், அதன் தொழில் நுட்பம் குறித்துமான தேடலின் உக்கிரம் நம்மிடையே பலருக்கு போதுமான அளவில் இருப்பதில்லை. அதன் காரணமாகவே இது போன்ற மிக முக்கியமான  ஆவணப்படங்களை கூட  நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை.

இங்கு இன்னொரு மிக முக்கியமான ஆவணப்படத்தை பற்றியும் நான் சிறு அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. அப்படம் இந்த ஆண்டு மிகச் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் பெயர் "இன்ஸைட் ஜாப் (iளேனைந துடிb)". சார்லஸ் ஃபெர்குஸன் என்பவர் இயக்கிய படம் இது. இவர் இதற்கு முன்பு இராக் யுத்தத்தை பற்றி பெரிய அளவில் பேசப்பட்ட "சூடி நனே in ளiபாவ" என்ற ஆவணப் படத்தை எடுத்தவர். "இன்ஸைட் ஜாப்" படம் 2008 ம் ஆண்டு உலகையே உலுக்கிய அமெரிக்க பொருளாதார நெருக்கடியைப் பற்றிய படம். எப்படி அமெரிக்க தனியார் வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டு, பல லட்சக்கணக்கான மக்களை வீடு, வாசல், பணம் இல்லாமல் அதோ கதியாய் விட்டது. அதற்கு அமெரிக்க அரசும் துணை போனது என்பதை அதிர்ச்சியூட்டும் வகையில் இப்படம் சித்தரிக்கிறது.

இப்படத்தைப் பற்றி சார்லஸ் பெர்குஸன் அழகாகச் சொல்கிறாh. "இப்படம் அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய வங்கிக் கொள்ளையைப் பற்றியது. இந்தக் கொள்ளையை நடத்தியது துப்பாக்கியோடு வந்த கொள்ளைக்காரர்கள் அல்ல. மாறாக இந்த வங்கிகளின் தலைவர்களே இந்த கொள்ளையை நடத்தினர்".

இப்படத்திற்காக ஆஸ்கார் விருதை வாங்க மேடைக்கு வந்த போது மிகத் துணிச்சலாக சார்லஸ் பெர்குஸன் பின்வருமாறு பேசினார்:

"இத்தனை பெரிய கொள்ளையை நடத்திய வங்கி அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ, பொருளாதார வல்லுநர்களோ யாருமே இது வரை தண்டிக்கப்படவில்லை. கைது செய்யப்படவில்லை என்பது மோசமான நிலைமை. மிக மோசமான நிலைமை"

இத்தனை சிக்கலான பிரச்சனை குறித்து கூட ஒருவர் படம் எடுக்க முடியுமா என பலர் வியக்கலாம். முடியும் என வியக்கும் வகையில் சார்லஸ் பெர்குஸன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த மாபெரும் கொள்ளைக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய பல்கலைக் கழக பேராசிரியர்கள் கூட துணைபோயிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நமக்கு நம்ப முடியவில்லை.

ஆயிரம், ஆயிரம் பக்கங்கள் படித்தாலும் அத்தனை எளிதில் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனையை  இந்த 100 நிமிட படம் மிக அற்புதமாக விளக்குகிறது. இது போன்ற படங்களை எடுக்க சினிமாவின் தொழில் நுட்பத்தில் விற்பன்னர் இருப்பது மட்டுமல்லாமல், படத்தின் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவும், அதை வெளிக் கொணர கடும் உழைப்பும் தேவைப்படுகிறது.

நம்நாட்டின் எரியும் பிரச்சனையான விவசாயிகள் தற்கொலை பற்றிய ஆவணப் படத்தையே கண்டு கொள்ளாத நம் மக்கள், அமெரிக்க பொருளாதார நெருக்கடிப் பற்றிய ஆவணப்படத்தை பற்றியா கவலைப்பட போகிறார்கள் என்ற விரக்தி ஒரு கணம் மனதில் எழுந்தாலும், முற்போக்கு பார்வை கொண்ட பண்பாட்டு ஊழியர்கள் சினிமாவின் மீதான தங்கள் ஆர்வத்தை புதுப்பித்துக் கொள்ளும் போக்கில், இது போன்ற ஆவணப்படங்கள் மீதும், அப்படங்கள் அக்கறைக் கொள்கின்ற பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன்.

(செம்மலர் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

Pin It