“அறிவைவிட கற்பனையே மனித குலத்தை மேம்படுத்தும்’’ என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

“தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் சினிமாவில் கதை சொல்ல எனக்கு உதவுவதில்லை’’ என்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் சொல்லியிருக்கிறார்.

அறிவு - அறிவியல் - தொழில்நுட்பம் - கற்பனை இவற்றுக் கிடையேயான உறவை ஆய்வது ஆர்வத்துக்குரிய ஒன்றாகும். இதை ஆய்வதற்குச் சினிமாவை விட சிறந்த சாதனம் ஏதும் இருக்க முடியாது.

எனக்கு கணினி திரையிலோ அல்லது நவீன கைபேசி திரை யிலோ ஒரு படம் பார்ப்பது என்பது முடியாத ஒன்று. சினிமா அரங்கம் இல்லையென்றாலும்கூட முடிந்த அளவு பெரிய திரை, துல்லியமாக ஒலியை வெளிப்படுத்தும் அமைப்பு இவை யிரண்டும் இருந்தால்தான் என்னால் திரையிடப்படும் படத்தில் ஒன்றவே முடியும். பல நேரங்களில் இளைஞர்களும், குழந்தை களும் கைக்கு அடக்கமான குட்டித் திரைகளில் படங்களைப் பார்க்கும்பொழுது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இவர்களால் இத்தனைக் குட்டித் திரைகளில் காட்டப்படும் படங் களோடு ஒன்ற முடிகிறது. அதிலிருந்து வெளிப்படும் ஒலியை எப்படி அவர்களால் ரசிக்க முடிகிறது.

இன்று தொழில்நுட்பம் சினிமாவை பெருமளவு மாற்றி யுள்ளதோ இல்லையோ, சினிமா ஒரு நுகர்பொருள் எனும் அடிப் படையில் பெருமளவு மாற்றியுள்ளது.

சினிமாவை நுகர்வதற்குதான் இன்று எத்தனை உபகரணங் கள். திரைப்பட கொட்டகைகள் மட்டுமே சினிமாவை நுகர் வதற்கான இடமாக இருந்தது போய், வீடு, அலுவலகம், தெரு, வாகனங்கள் என்று எல்லா இடங்களும் சினிமாவை நுகர்வதற் கான இடங்களாக மாறிவிட்டன. அதற்கேற்ப பல டிஜிட்டல் உபகரணங்களும் வந்துவிட்டன.

சினிமா தன் இரண்டாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்து பதினைந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்த பதினைந்து ஆண்டுகளில்தான் சினிமா காற்று புகாத இடங்களில் கூட புகுந்துவிட்டது. காரணம், தொழில்நுட்பம்தான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவனாய் இருந்த போது, ஃபிலிம் சொஸைட்டியை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது உலகப்படங்களைப் பூனாவிலுள்ள திரைப்பட ஆவண பாதுகாப்பகத்திலிருந்துதான் தருவிப்போம். பெரும்பாலும் 35 எம்.எம். படச் சுருள்கள்தான் வரும். பெரிய பெட்டியாக வரும். ரயில் நிலையத்திலிருந்து நேராக திரைப்பட அரங்கத்திற்கும், பின்னர் அங்கிருந்து திரையிடல் முடிந்த பின்பு ரயில் நிலையத் திற்கும் கொண்டு செல்வோம்.

ஒரு முறை பெர்க்மெனின் மூன்று படங்கள் சிறிய பெட்டியில் 16 எம்.எம். படச்சுருளாக வந்தது. சொஸைட்டியில் திரையிடுவதற்கு முன்பாக, நாங்கள் சில பேர் அப்படங்களை தனிப்பட்ட முறையில் பார்க்க விரும்பினோம். சென்னை பல்கலைக்கழக மாணவி ஒருவரின் வீட்டில் சுவரில் திரையிட்டு பார்த்தோம். திரையிடலுக்குப் பின் படச்சுருள்களை வீட்டிற்கு கொண்டு வந்து மேiஜையில் வைத்திருந்தேன். அந்தப் படச்சுருள் பெட்டியையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந் தேன். ‘பெர்க்மென் படைப்புகள் என் மேஜை மீது...’ எனக்குள்ளே ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. ‘என் வாழ்வின் மறக்க முடியாத நாள்...’ என்று என் நாட்குறிப்பில் எழுதினேன்.

இன்று பெர்க்மெனின் மொத்தப் படைப்பு களும் என் வீட்டில் ஒரு விஷேச பெட்டியில் 47 அடர் தகடுகளாக உள்ளன. அவை எனக்கு இன்று எந்த விஷேச உணர்வையும் தர வில்லை. இன்றைய தொழில்நுட்ப வசதியில் அது சாதாரண விஷய மாகி விட்டது. (இன்றுள்ள பெரிய பிரச்சினை எல்லாப் படங்களையும் பார்ப்பதற் கான நேரத்தை கண்டெடுப்பதுதான்.)

25 ஆண்டுகளுக்கு முன் மூன்று பெர்க்மென் படைப்புகளை ஒரு நாள் என் வீட்டில் வைத்திருந் தேன். ஏதோ மேகத்தில் மிதப்பது போன்ற ஓர் உணர்வைத் தந்தது. இன்று அதை நினைத்துப் பார்க்கும்பொழுது அது ஏதோ போன ஜன்மத்து உணர்வுபோல தோன்றுகிறது. அந்த அளவுக்குத் தொழில்நுட்பங்கள் சினிமாவையும் சினிமா நுகர் தலையும் மாற்றியுள்ளது.

இன்று தொழில்நுட்பத்தின் தாக்கம் சினிமா தயாரிப்பில் ஒரு பங்கு என்றால், சினிமா நுகர்தலில் பல மடங்கு ஆகிவிட்டது. இரண்டுமே நாம் அக்கறைப்பட வேண்டிய விஷயங்கள்.

சினிமா தயாரிப்பில் உள்ள தொழில்நுட்பம், கதை சொல்ல உதவுகிறது. இதுவரை சாத்தியப் படாத கற்பனைகளை காட்சிகளாக்க உதவுகிறது. சினிமாவிற்கு அழகையும் மெருகையும் கூட்டு கிறது. இதுவரை உணராத மெல்லிய ஒலிகளை நமக்கு உணர்த்துகிறது.

சினிமா நுகர்தலில் உள்ள தொழில்நுட்பத் தாக்கம்தான் இன்று சினிமாவை பெருமளவில் பாதித்துள்ளது. சினிமாவின் பொருளாதாரத்தில் இந்தத் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

சென்ற ஆண்டு வெளியான 144 தமிழ்ப்படங் களில் வெறும் 14 படங்கள் மட்டுமே லாபத்தை ஈட்டியுள்ளன. 130 படங்கள் நஷ்டத்தை அடைந் துள்ளன. ஏன் இந்த நிலைமை என்று துல்லியமாக ஆராயப்போனால், வளர்ந்துவிட்ட டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கும் அதில் பங்கு உண்டு என்பதை காணமுடியும்.

 

வெளியாகும் புதுப்படங்களின் அடர்தகடுகள் ஓரிரு நாட்களில் சந்தையில் 20 ரூபாய்க்கும் 30 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. இப்படங்கள் வெளியான அன்றே இணையத்தில் காணவும், இறக்கிக் கொள்ளவும் கிடைக்கின்றன. இதனைக் குறித்து தினசரிகளிலும், பத்திரிகைகளிலும் செய்தி வந்தாலும் பாதிக்கப்பட்ட படத்தின் தயாரிப்பாளர் கள் தவிர மற்றவர் யாரும் இது குறித்து கவலைப் படுவதில்லை.

இந்தியா போன்றதொரு நாட்டில், வீடியோ பைரஸியை ஒழிப்பது என்பது கிட்டதட்ட முடியாத ஒன்று. காரணம், இதற்கு பெருமளவில் மக்கள் ஆதரவு இருப்பதுதான். மக்களுக்குப் படம் பார்க்க அதிக ஆர்வம். ஆனால், குறைந்த செல வில், வேறு கஷ்டங்கள் இல்லாமல் வீட்டிலேயே பார்க்க ஆசை. அதற்கு ஏதுவாக குறைந்த செலவி லான தொழில்நுட்பம் இப்படி இருக்கும்பொழுது திருட்டு டிவிடி-ல் படம் பார்க்காதீர்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்வதோ, எச்சரிக்கை விடுவதோ கேலிக்கூத்தான ஒன்று. இருபது ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்றதொரு வசதியும், தொழில்நுட்பமும் இருந்திருந்தால், அப்போதும் மக்கள் அதைத்தான் நாடியிருப்பார் கள்.

தொழில்நுட்பம் வளர வளர திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்குக்கு செல்வது என்பது குறைந்துகொண்டே போகும். அதன் காரணமாகத்தான் மால்கள் நாளுக்கு நாள் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும் பெருகிக் கொண்டு வருகின்றன.

முன்பெல்லாம் திரைப்படத்தைப் பார்ப்பது என்பது மட்டுமே பொழுதுபோக்காய் இருந்தது. இன்று திரைப்படத்தை திரையரங்குக்குச் செல்லா மல் பார்ப்பதற்கு பல சாத்தியக்கூறுகள் வந்து விட்டதால் தியேட்டருக்குச் சென்று திரைப்படம் காண மக்கள் கூடுதலான பொழுதுபோக்கு அம்சங் களை எதிர்பார்க்கின்றனர். திரை அரங்கமே ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால்தான் பெரும் ஷாப்பிங் மால்களின் அங்கமாக திரையரங்குகள் மாறிவருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் தனிப்பட்ட திரையரங்குகள் குறைந்த வருவாய் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே இருக்கும்.

சினிமா முதன்முதலாய் வந்தபோது, அது தனிப்பட்ட பொழுதுபோக்காய் காண்பிக்கப்பட வில்லை. பல்வேறு கேளிக்கைகள் நிறைந்த கேளிக்கை அரங்கின் ஒரு பகுதியாகத்தான் காண்பிக்கப்பட்டது. பின்னர் சினிமா தன் ஆதீத சக்தி காரணமாய் தனிப்பட்ட பொழுதுபோக்காய் வளர்ந்தது. அதன் விளைவாக திரையரங்குகள் தோன்ற ஆரம்பித்தன. இன்று சினிமா தன் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தன் பயணத்தில் ஒரு முழு வட்டத்தை முடித்ததுபோல் மீண்டும் பல்வேறு கேளிக்கைகள் நிறைந்த கேளிக்கை அரங்கின் ஒரு பகுதியாய் மாறிப் போனது.

இன்று சினிமா தயாரிப்பில் தொழில்நுட்பம் பல்வேறு மட்டங்களில் செயல்படுகிறது. முப்பரி மாண அனிமேஷன் படங்கள் உலகெங்கும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே இன்று மீண்டும் பிரபலமாகியுள்ளது. காரணம், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிதான். ஆரம்ப கால முப்பரிமாண படங்களைப் போல் அல்லா மல் தற்போதைய முப்பரிமாண படங்கள் கிட்ட தட்ட கேமரா கொண்டு எடுப்பதுபோல் தத்ரூப மாக முழுக்க முழுக்க கணினி மென்பொருளில் உருவாக்கப்படுகிறது. பூமிக்கு அப்பாற்பட்ட உலகங்களும் உயிரினங்களும் இதே கணினி மென்பொருளில் மிக தத்ரூபமாக உருவாக்கப் படுகின்றன. இத்தகைய படங்களின் திரையிடலும் பெரும்பாலான திரையரங்குகளில் டிஜிட்டல் முறையிலேயே திரையிடப்படுவதால் அவை ஆரம்பகால முப்பரிமாண படங்களைப் போல் அல்லாமல் கண்களுக்கு இதமாக உள்ளன.

இன்னொரு புறம், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை முழுக்க முழுக்க கதை சொல்வதற்கும், கருப்பொருளுக்காக மட்டுமே உபயோகப்படுத்தும் இயக்குநர்களும் உண்டு. இத்தகைய படங்களில் தொழில்நுட்பம் உபயோகப்படுத்தியிருப்பதே தெரியாது.

அப்படிப்பட்ட ஒரு படத்தை நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. சென்ற ஆண்டின் (2010-ன்) இறுதியில் எடுக்கப்பட்ட ஜப்பானியப் படம் அது. படத்தின் பெயர் ‘கேட்டர் பில்லர்’. தமிழில் ‘கம்பளிப்பூச்சி’ என சொல்லலாம்.

இப்படத்தில் தொழில்நுட்பம் உபயோகப் படுத்திய விதத்தை இரண்டு வரிகளில் சொல்லி விடலாம். ஆனால், அதற்கு முன் படத்தைப் பற்றியும், படத்தின் கதைப் பற்றியும் சொன்னால் தான் அதன் தொழில்நுட்பம் பற்றி சொல்லவரும் போது அதன் மகத்துவம் புரியும்.

கேட்டர்பில்லர் படத்தின் இயக்குநர் ‘கோஜி வாக்கமட்சு’ இவரின் பெரும்பாலான படங்கள் சர்ச்சைக்குரிய படங்களாகவே இருந்தன. காரணம், இவர் படங்களின் கருப்பொருள் சமூக வன்முறை மற்றும் பாலியல் சம்பந்தப்பட்டதாக இருந்தது. பாலியல் பிரச்சினைகளைக் கையாளும் படங்களை ஜப்பானில் ரோஸ் படங்கள் என்றழைப்பதுண்டு. இவரின் பெரும்பாலானப் படங்கள் அந்த வகையைச் சார்ந்ததாகவே இருந்தது.

ஆனால், இவரின் இந்த கேட்டர் பில்லர் படம் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. பெர்லினில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகப் பட விழாவில்தான் முதன் முதலாக காண்பிக்கப்பட்டது. அப்போதே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற் போது அமெரிக்காவில் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தை பார்த்த போது, மிகுந்த பாதிப்புக் குள்ளானேன். முதன் முறை இப்படத்தைப் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி பலருக்கு உணர்வுகளில் நீண்ட நாட்கள் புதைந் திருக்கும்.

இப்படம் அடிப்படையில் யுத்தத்துக்கு எதிரான படம். யுத்தத்தை, யுத்தத்தின் வெற்றி, தோல்வி என்று நாம் சொல்பவற்றையெல்லாம் மிக ஆழமாக எள்ளி நகையாடுகின்ற படம்.

இது உலக யுத்தங்களையும், ‘ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சையும் ஓரளவு அறிந்த வர்கள்கூட, மனிதகுல வரலாற்றில் யுத்தம் போன்ற கொடூரமான பைத்தியக்காரத்தனம் ஏதும் இருக்காது என்றுதான் சொல்வர்.

இப்படத்தைப் பார்த்து முடித்ததும், என் மனதில் யுத்தத்தைப் பற்றிய பல கருத்துகள் உறுதிப்படுத்தப்பட்டன. நாடுகளுக்கிடையே யுத்தம் மூளும் அபாயம் இருக்கும் வரையிலும், நிமிடங்களில் மனித குலத்தின் கணிசமான பகுதியை அழிக்கக்கூடிய யுத்த ஆயுதங்கள், குறிப் பாக அணுஆயுதங்கள் உள்ளவரை இந்த உலகம் நிச்சயமாக கொடூரமான பைத்தியக்கார உலக மாகத்தான் இருக்க முடியும்.

இன்றளவும், பெரும்பாலான நாடுகள் தங்களின் விடுதலை நாள் கொண்டாட் டங்களின்போது தங்களின் பெருமையை பறை சாற்றிக்கொள்ள யுத்த தளவாடங்களைத்தான் அணிவகுக்குகின்றன.

நம் நாட்டில் ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும் நம் நாட்டின் யுத்த தளவாடங்கள் பெருமையாக அணிவகுத்து செல்லும் குளிர் அகலாத ஜனவரி மாத காலைப்பொழுதில் அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஒருபோதும் அது எனக்கு இந்திய நாட்டின் பெருமையாக தெரிந்ததில்லை. மாறாக, பைத்தியக் கார உலகின் பாகமாவே தெரிந்தது. எத்தனை எத்தனை பதக்கங்களை ஒரு ராணுவ அதிகாரி அணிந்திருக்கிறாரோ அத்தனை அத்தனை எதிரி ராணுவத்தினரை கொன்றிருக்கிறார் என்பதுதான் அர்த்தம்.

வாக்கமட்சுவின் ‘கேட்டர் பில்லர்’ படம் அதைத்தான் சொல்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் சீனப் பகுதியில் நடத்திய யுத்தத்தில் பங்குபெற்று தன் கிராமத்துக்குத் திரும்பும் ஒரு ராணுவ வீரன்தான் படத்தின் நாயகன். அவன் யுத்தத்தில் பல எதிரிகளைக் கொல்கிறான். பல பெண்களைக் கற்பழித்து கொல்கிறான். போரில் அடிபட்டு அங்கங்கள் இழந்து கிராமம் திரும்புகிறான். படம் அங்கிருந்து தான் தொடங்குகிறது. மன்னருக்காக போரிட்டு சாதனைகள் செய்த அவனை கிராமமே வரவேற் கிறது. அவனை யுத்தக் கடவுள் என்று கிராமம் அழைக்கிறது. அவனை வரவேற்க காத்திருக்கும் கூட்டத்தில் அவனின் நடுத்தர வயது மனைவியும் காத்திருக்கிறாள். அந்த வீரனை இதுவரை காமிரா காண்பிக்கவில்லை. வீரனை சக ராணுவ வீரர்கள் வீட்டில் விட்டுச் செல்கின்றனர். அப்போதும் காமிரா அவனைக் காண்பிக்கவில்லை. அவனைப் பார்க்க மனைவி வருகிறாள். அவளின் முகத்தில் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி பீதியாகி அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடுகிறாள். அப்போதும் காமிரா அவனை நமக்கு காண்பிக்கவில்லை. அவள் ஓடி ஓடி ஊரின் எல்லையில் தன் வயலின் நடுவில் கிடந்து அழுகிறாள். அவள் பின்னாலேயே ஓடிவரும் கணவனின் தம்பிதான் அவளை சமாதானப்படுத்துகிறான். பின்னர் அவள் மெல்ல தன்னிலை திரும்பி, வீட்டுக்கு வந்து கணவனைப் பார்க்கிறாள். இப்போதுதான் காமிரா அவனை நமக்கு முதன் முறையாக காட்டுகிறது. மனைவிக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சி நமக்குள்ளும் உறைகிறது. அவன் இரு கைகளையும், கால்களையும் முற்றிலும் இழந்தவனாக வெறும் தலையும் இடுப்புவரை உடலுமாக மனித ஸ்டம்பு போல் இருக்கிறான். மனைவி மீண்டும் கதறுகிறாள் “இது என் கணவன் இல்லை’’ என்று. அஃறிணையில் அவனை நிராகரிக்கிறாள்.

மன்னனுக்காக, நாட்டுக்காக தியாகம் செய்த அந்த யுத்தக் கடவுளை (ஊர்மக்கள் அவனை படம் முழுக்க அப்படித்தான் அழைக்கிறார்கள்) பாதுகாத்து பராமரிக்க வேண்டியது மனைவியின் கடமை என்கின்றனர். அவனுக்குச் செய்யும் சேவை நாட்டுக்குச் செய்யும் சேவை என்கின்றனர்.

இப்போது அவனுக்குப் பேசமுடியாது. காது கேட்காது. சில ஒலிகள் மட்டும் எழுப்புவான். அவன் தன் உணர்வுகளையெல்லாம் கண்களிலும், எழுப்புஒலியில் மட்டுமே காட்ட முடியும்.

அவன் மனைவி மெல்ல அவனின் சிதைந்த உருவத்துக்கும், குரூரத்துக்கும் பழகிப் போகிறாள். அவன் அந்த நிலையிலும் தனக்கு செக்ஸ் வேண்டும் என்று அவளுக்கு உணர்த்துவான். அவளும் இணங்குவாள். பின்னர் அவன் (அந்த உருவம்) அவளை எப்போதும், தினமும் செக்ஸ்க்காக வற் புறுத்தும். அவளால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மனதில் கோபம் பீறிட்டு எழும். அப் போதெல்லாம் அவனை பழிவாங்குவதற்காக அவனுக்கு ராணுவ உடையை உடுத்தி, பதக்கங் களை அணிவித்து, யுத்தக் கடவுள் என்ற பட்டத்துடன் ஒரு தள்ளுவண்டியில் வைத்து கிராம தெருக் களில் அழைத்துச் செல்வாள். கிராம மக்கள் எல்லாம் அவனை யுத்தக் கடவுள், யுத்தக் கடவுள் என்று சொல்லி வழிவிட்டுச் செல்வர்.

அவன் கை, காலோடு நன்றாய் இருந்த சமயத் தில் எப்படியெல்லாம் அவளை கொடுமைப் படுத்தினான் என்று நினைத்துப் பார்ப்பாள். அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்று பல முறை அவளை அவன் அடித்து துன்புறுத்தி யிருக்கிறான்.

இப்போது அவளுக்கு இப்படி அவனை காட்சிப் பொருளாய், ராணுவ அலங்காரத்தோடு கிராமத் தெருக்களில் வண்டியில் இழுத்துச் செல்லும்போது, அவள் மனதில் பழி தீர்த்த திருப்தி இருக்கும். படிப்படியாக அவனை எள்ளி நகையாடுகின்ற இந்த காட்சிகளை யுத்தத்தையே, யுத்தத்தின் அடிப்படையையே எள்ளி நகையாடும் விதமாய் பார்வையாளன் மனதில் பதியும். அது தான் இப்படத்தின் சிறப்பு.

படிப்படியாக அவனுக்கும் குற்ற உணர்வு மனதை ஆட்டிப் படைக்கும். அவன் போரில் கற்பழித்த பெண்களின் காட்சிகள் நினைவில் தொடர்ந்து வந்து அவனை சீர்குலைக்கும். அப் பொழுதெல்லாம் விரக்தியோடும் கோபத்தோடும் தனக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களையும் பட்டத்தை யும் பார்ப்பான்.

இறுதியில் மனைவி இல்லாத நேரத்தில் கம்பளிப் பூச்சி போல் ஊர்ந்து ஊர்ந்து சென்று வீட்டின் பின் உள்ள குட்டையில் விழுந்து உயிர் துறப்பான். இறந்து போன கம்பளிப் பூச்சு போல நீரில் மிதப்பான். இறுதியில் படத்தின் பின்னுரை யாக யுத்த அவலம் பற்றிய ஆவணப்பட காட்சிகள் படத்தில் ஓடும்.

எத்தனையோ யுத்த எதிர்ப்பு படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், ‘கேட்டர்பில்லர்’ போல நினைவில் உறைந்த யுத்த எதிர்ப்பு படத்தை பார்த்ததில்லை.

சினிமாத் தயாரிப்பில் தொழில்நுட்பம் என்று சொல்ல ஆரம்பித்து இப்படத்தைக் குறித்து ஏன் இத்தனை விரிவாக சொன்னேன் என்ற கேள்வி படிக்கும் உங்கள் மனதில் எழலாம்.

இப்படத்தில் கை, கால்களை முற்றிலுமாக இழந்த அங்க‘ஹீன குரூரமாக படத்தின் நாயகன் வந்தாலும், பல பின்னோட்ட காட்சிகளில், அதே கதாபாத்திரம் கை, கால்களோடு சாதாரண மனித னாக வருகிறான். இரண்டும் தத்ரூபமாக, நம்பும்படி உள்ளன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படத்தை எடுத்திருந்தால் அவன் அங்க‘ஹீனத்தை, அவன் கை, கால்களை மடித்து கட்டி, ஒருவிதமான ஒப்பனை மூலம்தான் காட்டியிருக்க முடியும். அது இந்த அளவு தத்ரூபமாக இருந்திருக்காது. இப்படிப்பட்ட ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக, அவன் கை கால்களை முற்றிலுமாக அழித்து அத்தனை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள்.

கேமராவால் படம் பிடித்தால் கிடைக்க முடியாத தத்ரூபத்தை இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் கொண்டுவர முடியும். வெறும் பிரம்மாண்டத்திற்கும், கற்பனை உலகை உண்டாக்க மட்டுமே இன்று பெரும்பாலும் உயர் மட்ட அளவில் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.

சாதாரண அளவில் வண்ணத்தை, ஒளியமைப் பைச் சீர்படுத்தி படத்திற்கு மெருகூட்ட மட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கதைக்காக, கதாபாத்திரங்களுக்காக தொழில் நுட்பம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒரு துளியும் உணராவண்ணம் தொழில் நுட்பங் களை உபயோகப்படுத்துவது வெகு அபூர்வமாகத் தான் உள்ளது.

உண்மையில் பார்க்கப் போனால், சினிமா என்பதே தொழில் நுட்பம்தான். அதன் பிறப்பே ஒரு தொழில்நுட்பம்தான். பல நேரங்களில் சினிமா வைப் பற்றி, குறிப்பாக சினிமாவின் தொழில் நுட்பம் பற்றி ஒன்றுமே அறியாத சிலர் சினிமாவில் ஒரு நல்ல கதையைச் சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சினிமாவில் நுழையும்பொழுது, அவர்கள் முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர் களை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

பல நேரங்களில், நல்ல கதைகளை உண்மை யான ஆர்வத்தோடு எடுக்கும் அறிமுக இயக்குநர் கள், தங்கள் அனுபவமின்மையை ஈடுகட்ட சாதாரண தொழில்நுட்ப கலைஞர்களை நம்பி செல் கின்றனர். அவர்கள் மனதில் எப்போதும் ஒருவித பயமும் பதட்டமும் குடிகொண்டிருக்கும். இதன் காரணமாக தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

சினிமாவின் அடிப்படை தொழில் நுட்பங் களை ஒரு கலையின் தொழில்நுட்பங்களாக புரிந்து கொள்வது கடினமான பணி அல்ல. சினிமாவின் மீதான ஆர்வம், சினிமாவின் அடிப்படை தொழில் நுட்பத்தின் மீதான ஆர்வமாகத்தான் மிளிர முடியும்.

தங்களுக்குச் சினிமாவில் மிகுந்த ஆர்வம் என்று சொல்லிக்கொண்டு பலர் எடுத்த குறும்படங்கள், ஆவணப் படங்களை பார்க்கும்போது, அவர்களின் சினிமா மீதான ஆர்வத்தையே சந்தேகிக்கும் அளவுக்கு அடிப்படையான தொழில்நுட்ப தவறு களைச் செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு பகல் நேரத்தில், திறந்த வெளியில் ஒருவர் பேசுவது போலவோ அல்லது ஒருவரின் பேட்டியையோ எடுத்திருப்பார்கள். பேசுபவரின் முகத்தில் ஒளியே இருக்காது. இருட்டாக இருக்கும். பேசுபவரின் பின்புறம் வெளிச்சம் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும். பேசுபவரின் முகம் இருட்டாக இருந்தால் பேசுபவரின் முகபாவம் தெரியாது. படத்தை பார்ப்பவர்களுக்கு அது எரிச்சலை ஊட்டும்.

மாறாக, கேமராவையும் பேசுபவரையும் இடம் மாற்றியிருந்தால், பேசுபவரின் முகத்தில் போதுமான ஒளியிருந்திருக்கும். எப்போதுமே படம் பிடிக்கப்படும் நபர் அல்லது பொருளின் மீது ஒளி வேண்டுமெனில் ஒளியின் மூலம் கேமராவின் பின்புறம் இருக்க வேண்டும். சினிமாவில் இறங்குபவர்களுக்கு இது அடிப்படை பொது அறிவு. இது ஒன்றும் பெரிய தொழில்நுட்ப அறிவல்ல. ஆனால், அந்த சூரிய ஒளியை தான் விரும்பும்படி படம் பதிவாக வேண்டும் என்பதற் காக நுணுக்கமாக கட்டுப்படுத்துவது, அதற்கு எத்தகைய உபகரணங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பது தொழில்நுட்ப அறிவாகிறது.

கடந்த 115 ஆண்டுகளில் சினிமாவின் வளர்ச்சி என்பது சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சி யுமாகும். சினிமா கடந்து வந்த பாதையை அதன் தொழில் நுட்பங்களும் கடந்து வந்திருக்கிறன. அந்த அடிப்படையில் சினிமாவுக்கும் தொழில் நுட்பத்திற்குமான உறவை வரும் இதழ்களில் பார்ப்போம்.

(செம்ம‌லர் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It