சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு -7

கதை நம் வாழ்வில் எங்கும், எப்போதும் வியாபித்திருக்கிறது என பார்த்தோம். இன்று “கதைசொல்லுதல்” பற்றி பார்ப்போம்.

கதைசொல்லுதல் என்பது மாபெரும் நிறுவனங்களில், வணிகக் கல்வி போதிக்கும் உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களில்கூட ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. காரணம், புள்ளி விவரங் களும் கோட்பாடுகளும் வெறும் விவரங்களாக மனித மூளையைச் சென்ற டைகின்றன. கதையாக சொல்லும்போதுதான் நாம் சொல்ல வந்த கருத்து மனிதனின் மனதைச் சென்றடைகிறது. இதனால் தான் பெரிய நிறுவனங்களில் நாம் செய்ய வேண்டியது எது? என தலைமை அதிகாரி வெறும் புள்ளிவிவரங்களாக, தகவல்களாக அடுக்கினால் கேட்பவர்கள் கொட்டாவி விடுகிறார்கள். ஆனால், அதையே மனதை மயக்கும் கதையாக சொன்னால் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள்.

அடிப்படையில் கதை என்பது என்ன? அடிப்படையில் வாழ்வில் ஒரு மாற்றம் ஏன், எப்படி நிகழ்கிறது என்பதை விளக்குவதுதான் கதை.

நம் வாழ்க்கை ஒரு மாதிரி போய்க் கொண்டிருந்தால், அதை விவரித்தால் அது கதை யாகாது. மாறாக, சீராகப் போய்க் கொண்டிருக்கும் நம் வாழ்வில் திடீரென்று ஒரு நாள் ஏதோ நிகழும். அது நம் வாழ்வையே புரட்டிப் போடும். பின்னர் நம் வாழ்க்கையை மீட்டெடுக்க துணிச்சலான சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும். அப்போது நமக்குள்ளே புதைந்து கிடக்கும் சில சக்திகள் வெளிப்படும். அதைப் படிப்பவர்களைப் பாதிக்கும் வகையில் சொன்னால் அது அற்புத கதையாக வடிவெடுக்கும்.

அடிப்படையில், பண்டைய கிரேக்க கதை களாகட்டும், அல்லது ஷேக்ஸ்பியரின் காவியங் களாகட்டும், அல்லது தற்போதைய நவீன கதை களாகட்டும். எல்லாமே ஒன்றைத்தான் சொல் கின்றன. அது நம் முன்னே நிற்கும் குரூரமான உண்மைக்கும், நம் எதிர்பார்ப்புக்கும் இடையே யான தவிர்க்க முடியாத தொடர்புதான் அது.

ஒரு ஆள், தான் பெரிதும் எதிர்பார்க்கும் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்காக செல்கிறான். அங்கு அவனுக்கு வேலை கிடைக்கிறது. நிம்மதி யாக வாழ்க்கையை கழிக்கிறான் என்று சொன் னால் அது கதையாகாது. மாறாக, அவன் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் வழியில் ஏதாவது விபரீதம் நிகழவேண்டும். அதனால் அவனுக்கு வேலையே கிடைக்காமல் போகிறது. நெருக்கடியைச் சமாளிக்க சில துணிச்சலான முடிவுகளை எடுக் கிறான். அது அவன் முற்றிலும் எதிர்பாராத வேறொரு திசையில் வாழ்க்கையைப் பயணிக்க வைக்கிறது என்று சொன்னால் அது கதை.

ஒருவன் தன் பணக்கார நண்பனின் தங்கை திருமணத்திற்குச் செல்கிறான். திருமணம் நன்றாக நடக்கிறது. திருமணம் முடிந்து அவன் திரும்பி வருகிறான் என்று சொன்னால் அது கதையல்ல. மாறாக, திருமணத்திற்குச் சென்ற இடத்தில் ஏதோ சில காரணங்களால் நண்பனின் தங்கை திருமணம் தாலி கட்டும் நேரத்தில் நின்று போகிறது. அப் போது நண்பனின் வேண்டுகோளின்படி அவனே நண்பனின் தங்கையைத் திருமணம் செய்ய நேரிடுகிறது என்று சொன்னால் அது கதையாகிறது. நண்பனின் தங்கை மாபெரும் அழகியாக இருந்து விட்டால் கதை இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே நடந்தால் அது கதையாக இருக்காதா? ஏன் எப்போதும் ஏதாவது விபத்தோ, விபரீதமோ நிகழவேண்டும்? எல்லாமே நல்லபடியாக நடந்தால் அது கதையாக இருக்காதா? என்று சிலர் கேட்கலாம்.

நிச்சயமாக இருக்காது. எல்லாமும் எதிர்பார்த்தபடியே நல்லதாய் நிகழ்ந்தால் கதைக்கு அங்கு என்ன வேலை? முரண்பாடுகள் இல்லை யெனில் கதை மாத்திரம் இல்லை, வாழ்க்கையும் இல்லை. வாழ்வின் மாபெரும் வினோதமே, வாழ்க்கைக்கான சக்தி எப்போதும் அதன் ஒளி மயமான பக்கத்திலிருந்து கிடைப்பதில்லை. மாறாக, அதன் இருண்ட பக்கத்திலிருந்தே கிடைக்கிறது. நம்மைத் துன்பப்படுத்தும் நிகழ்ச்சி கள்தான் நமக்கு சக்தியைத் தருகின்றன. எதிர்மறை சக்திகள்தான் நமக்கு ஆற்றலைத் தருகின்றன. அதன் மூலமே நாம் ஆழமாக, அர்த்தத்தோடு வாழ் கிறோம்.

முரண்பாடுகள்தான் நம்மை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றன. கதையும் முன்னோக்கி நகர முரண்பாடுகள் அவசியம். கதையைக் காட்டிலும் திரைக்கதை வேகமாக முன்னோக்கி நகர வேண்டும். அதற்கு இன்னமும் முரண்பாடுகள் வேண்டும். ஒரு காட்சியில் உள்ள முரண்பாடுகள் அடுத்த காட்சிக்கு இழுத்துச் செல்லவேண்டும். அதில் உள்ள முரண்பாடுகள் முந்தைய காட்சியில் உள்ள முரண்பாடுகளோடு சேர்ந்து புதிய காட்சியை உருவாக்கவேண்டும்.

ருமேனிய நாட்டு திரைப்பட இயக்குநர் கிறிஸ்டியான் மிஞ்சு ‘பொற்காலத்திலிருந்து சில கதைகள்’ என்றொரு படத்தை சமீபத்தில் தயாரித் தார். இவருடைய முந்தைய படம் ஏற்கெனவே பல உயரிய விருதுகளைப் பெற்று உலக அளவில் பேசப்பட்டது. 80களில் ருமேனியாவை ஆண்ட செஸஸ்கோவின் தலைமையிலான அரசில் மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கருகலைப்பு செய்வது அப்போது சட்ட விரோத மான விஷயம். அதற்குக் கடும் தண்டனையும் உண்டு. ஒரு திருமணமாகாத இளம்பெண், தன் சிநேகிதியின் உதவியோடு தன் கருவைக் கலைக்க படும் அவஸ்தைதான் அப்படத்தின் கதையாக இருந்தது.

இப்படத்தின் வெற்றி காரணமாக அதே 80களில் ருமேனியாவில் நிலவிய கடும் உணவுப் பற்றாக்குறை, அடக்குமுறை, விநோதமான கட்டுப்பாடுகள் போன்றவற்றை வைத்து அருமை யான கதைகளாக்கி ஆறு குறும்படங்களைத் தொகுத்து ‘பொற்காலத்திலிருந்து சில கதைகள்’ என்ற படத்தை எடுத்துள்ளார்.

எப்படி சாதாரண நிகழ்வுகள் கதைகளாக மாறுகின்றன என்பதற்கு இப்படம் ஓர் அற்புதமான உதாரணம்.

இப்படத்தின் முதல் கதை “காற்றைப் பிடிப்பவர்கள்’’ என்றழைக்கப்படும். இந்தப் படத்தில் வரும் இளம்பெண்ணும், பையனும் கொஞ்சம் காசு சம்பாதிப்பதற்காக செய்யும் வினோதமான ஏமாற்று வேலைதான் படத்தின் கதையாகும். நம் நாட்டைப் போலவே நல்ல காலி பாட்டில்களை அதை வாங்கும் கடைகளில் கொடுத்தால் காசு கொடுப்பார்கள். ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் என்றால் 2000 பாட்டில் களைக் கொடுத்தால் 10,000 ரூபாய் கிடைக்கும். அது அவர்களுக்குப் பெரிய தொகை. ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள எல்லா வீடுகளிலிருந்தும் எப்படி அவர்கள் பாட்டில்களை ஏமாற்றி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை.

ஒருவித நகைச்சுவையோடு கூடிய அவர் களின் ஏமாற்று வேலைகள் நம்மை புன்முறுவல் பூக்கச் செய்தாலும் கதையினூடே அப்போதைய பெரும்பாலான ருமேனியர்களின் வறுமையை, சிறிது காசு சாம்பாதிப்பதற்காக அவர்கள் என்ன வெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தான் படத்தின் கதை அற்புதமாக காட்டுகிறது.

இன்னொரு கதையில் (பேராசை பிடித்த போலீஸ்காரன்) போலீஸ்காரன் ஒருவனுக்கு அவனது உறவினர் ஒருவர் பன்றி கறி தருவதாக உறுதியளித்திருப்பார். அந்த உறவினரோ நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர். அதனால்தான் அவரால் அவ்வாறு உறுதியளிக்க முடிந்தது. அப்போது பன்றி கறிக்கு எப்போதும் ஏக கிராக்கி. மாமிசம் விற்கும் அரசு கடைகளில் (எல்லா கடைகளுமே அரசு கடைகள்தான்) எப்போதா வதுதான் பன்றிக்கறி வரும். அதற்கு ஏக அடிதடி நடக்கும். போலீஸ்காரனின் பள்ளி பயிலும் மகன் தன் நண்பனிடம்கூட சொல்லி விடுவான் “அடுத்த நாள், தான் பள்ளிக்கு மதிய உணவுக்குச் சமைத்த பன்றிக்கறியைக் கொண்டு வருவதாக’’.

அன்றிரவு போலீஸ்காரன், அவன் மனைவி, மகன் எல்லோரும் உறவினர் கொண்டுவரப் போகும் பன்றிகறிக்காக காத்திருப்பர். இரவு சற்று தாமதமாக மற்ற வீடுகளில் எல்லாம் அடங்கிய பின், உறவினரின் கார் வரும். பன்றிகறியை எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி. உறவினர் ஒரு பெரிய பன்றியை உயிருடன் காரின் டிக்கியில் அதன் வாயைக் கட்டி கொண்டு வந்திருப்பார். அவரின் அதிகாரத்தைப் (தவறாக) பிரயோகப் படுத்தி அவரால் செய்ய முடிந்தது அதுதான். இருவரும் அந்தக் கறியை சமமாகப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான் திட்டம். உயிரோடு பன்றியைக் குடியிருப்பில் பார்த்து விட்டால் அது பெரிய குற்றமாகி விடும். பன்றியைக் கத்தவிடாமல் தங்கள் குடியிருப்புக்குள் யாருக்கும் தெரியாமல் கொண்டு செல்வர். கூடவே மகன் விழித்துக் கொண்டிருப்பான். அவன் கவலையெல்லாம் அடுத்த நாள் பள்ளிக்கு பன்றிக் கறியை எடுத்துச் செல்லவேண்டுமே என்பதுதான். பன்றியைக் கொடுத்துவிட்டு உறவினரான அதிகாரியும் போய்விடுவார்.

போலீஸ்காரன் குடும்பத்தின் கவலை யெல்லாம், சத்தம் வராமல் அதை எப்படி கொல் வது என்பதுதான். அதற்காக பல வழிகளில் யோசிப்பர். இறுதியில் சமையலறையில் பன்றியை அடைத்து, எரிவாயுவைத் திறந்து அதன் மூலம் அதனை மூச்சடைத்து இறக்கச் செய்வதுதான் வழி என தீர்மானிப்பர். எரிவாயுவைத் திறந்து வைத்திருக்கும்போது சிறு மின்கசிவு இருந்தாலும் பெரும் தீவிபத்து நேர்ந்துவிடும் என்பதால், மின்சார இணைப்பைத் துண்டித்து விடுவர். கடைசியில் அவர்களின் சிலிண்டரில் எரிவாயு தீர்ந்து போயிருக்கும். பின்னர் அடுத்த குடியிருப்பில் இருப்பவரிடம் பொய்க்காரணம் சொல்லி சிலிண்டரை போலீஸ்காரன் வாங்கி வருவான். சமையலறையில் எல்லா கதவுகளையும் அடைத்து, கதவு, சன்னல் இடுக்குகளில் எல்லாம் டேப் கொண்டு அடைத்து, பன்றியை உள்ளே வைத்து, எரிவாயு சிலிண்டரைத் திறந்து வைத்து, சமைய லறையை அடைத்துவிடுவர்.

போலீஸ்காரன் குடும்பமே பன்றி இறப்ப தற்காக இருளில் காத்துக் கொண்டிருக்கும். சிறிது நேரத்துக்குப் பின், போலீஸ்காரன் சமைய லறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்வான். எல்லா சன்னல் கதவுகளையும் திறந்து விடுவான். எரிவாயு எல்லாம் வெளியேறுவதற்காக காத்திருப்பான். பன்றி அசைவற்றிருக்கும். அது இறந்துவிட்டதை உறுதி செய்தபின், மெல்ல மின் இணைப்பை வீட்டுக்குத் தருவான். ஒளி வெள்ளத் தில் பன்றி இறந்திருப்பதை உறுதிசெய்து கொள் வான். பின்னர் எரிவாயு மொத்தம் வெளியேறி விட்டதா என சோதித்துப் பார்க்க, ஒரு தீக்குச்சியை உரசுவான். ஒன்றும் நிகழாது. எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி. இப்போது பன்றியின் உடலில் உள்ள உரோமத்தை எரிப்பதற்காக சந்தோஷமாக தீயைக் கொளுத்துவான். காமிரா குடியிருப்பு அடுக்குமாடியை வெளிப்புறமாக காட்டும். போலீஸ்காரனின் குடியிருப்பில் பெரும் சப்தத்தோடு ஏதோ வெடிக்கும். மற்ற குடியிருப்பு களில் மெதுவாக விளக்கு எரியும். அடுத்த நாள் போலீஸ்காரன் மகன் சிறு தீக்காயங்களோடு பள்ளிக்கு வருவான். மற்ற மாணவர்கள் அவன் வீட்டில் பன்றி வெடி வெடித்து விட்டதாக கிண்டல் செய்வர். இத்தோடு அந்தக் குறும்படத்தின் கதை முடியும்.

ஒரு சாதாரண பன்றி இறைச்சிக்காக, ஒரு போலீஸ்காரன் குடும்பம் இத்தனை மெனக்கட்டு கஷ்டப்படவேண்டியிருக்கிறது என்பது கதையாக இருந்தாலும், கதையின் மூலம் பார்வையாளன் தெரிந்துகொள்வதெல்லாம், எத்தனை மோசமான காலகட்டத்தில் அப்போதைய ருமேனிய மக்கள் வாழ்ந்தார்கள் என்பதுதான்.

பின்னர் ருமேனிய மக்களால் சேஸஸ்கோ வும், அவனது மனைவியும் பொது சதுக்கத்தில் தூக்கிலிடப்பட்டதை வரலாறு தெரிந்தவர்கள் அறிவர். செஸஸ்கோ, தன் காலகட்டத்தை ருமேனி யாவின் பொற்காலம் என்று சொல்லிக் கொண்டி ருந்தான். அதனால்தான் படத்தின் இயக்குநர் கிரிஸ்டியான் மிஞ்சு படத்திற்கு ‘பொற்காலத் திலிருந்து சில கதைகள்’ என்று தலைப்பிட்டிருந் தார்.

இந்த ருமேனிய படத்தில் கதை மக்களின் வாழ்க்கையாக இருக்கிறது. மக்களின் வாழ்க்கை யே கதையாக பரிணமிக்கிறது. இதைத்தான் தத்துவமேதை அரிஸ்டாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வியாக தன்னுடைய புத்தகத்தில் கேட்டார், “மனிதன் எவ்வாறு வாழ்க்கையை நடத்தவேண்டும்?’’ பல நூற்றாண்டுகளாக இதற் கான விடையைத்தான் மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். தத்துவம், அறிவியல், மதம், கலை என்ற நான்கு வழிகளில் இதற்கான விடை யைப் பல நூற்றாண்டுகளாக தேடிக் கொண்டி ருக்கிறான்.

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் எத்தனை பேர் தத்துவத்தை வாழ்க்கையின் அர்த்தத் திற்காக நாடுகிறார்கள்? பல நேரங்களில் ஏதாவது தேர்வு எழுத வேண்டுமென்றால்தான் ஒரு சிலர் தத்துவத்தைப் படிக்கிறார்கள்.

அறிவியலின் பயனால் விளைந்த பலன்களை அனுபவிக்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, அடிப்படை அறிவியல் கோட்பாட்டில் புத்திசாலி மாணவர்கள்கூட ஆர்வம் காட்டு வதில்லை. பெரிய அறிவியல் கல்வி நிறுவனங் களில் அடிப்படை அறிவியலைப் படிக்க மாணவர் களுக்குப் பல சலுகைகள் தரவேண்டியுள்ளது.

மதம் - இன்று மதம் கேவலமான அரசியல், வியாபாரப் பொருளாக மாறிவிட்டது.

கலை - மனிதன் தன் தேடுதலை, வாழ்க்கைக் கான பசியை இன்றளவும் கலையின் மூலமே தணித்துக் கொள்ள முயற்சிக்கிறான். இன்று உலகில் மக்களின் பெரும்பாலான நேரம் சினிமா, தொலைக்காட்சி, நாவல், நாடகம் என்று செலவிடப்படுவதைப் பார்த்தால், கதை எனும் கலைதான் பிரதான உந்துதலாய் இருப்பதுபோல் தெரிகிறது. கதையின் மீதுள்ள தணியாத ஆர்வம் என்பது, வாழ்க்கை முறையைப் பற்றிய ஆர்வமாக உள்ளது. கதையின் மீதுள்ள ஆர்வம் என்பது வெறும் அறிவு சார்ந்த ஆர்வம் அல்ல. மாறாக, உணர்வுரீதியான அனுபவம் மற்றும் தனிப்பட்ட ஆர்வம் ஆகும்.

நாடக ஆசிரியர் ழான் அனொய்ல் சொல்வதுபோல், இன்று கதைதான் வாழ்விற்கு வடிவத்தைத் தருகிறது.

கதையின் மீதான இந்த ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்கின் மீதான ஆர்வமாக கருதக் கூடாது. வாழ்க்கையின் கவலைகளை மறக்கவே மக்கள் பொழுதுபோக்கை நாடுகிறார் கள், சினிமா பார்க்கிறார்கள், கதை படிக்கிறார்கள் என பொதுவாக சொல்வதுண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. அப்படி சொல்வது ஒரு விதத்தில் படைப்பாளியைப் பொறுப்பற்றவன் என சொல் வதற்கு ஒப்பாகும். வாழ்வின் உண்மைகளிலிருந்து ஓடி ஒளிய உதவுவது கதையின் நோக்கமல்ல. மாறாக, குழப்பமான இந்த உலகில் உண்மையைத் தேடிச் செல்ல உதவும் வாகனமே கதையாகும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் இன்று அசுர வளர்ச்சி அடைந்திருப்பதால், கதை என்பது தேசங் களைக் கடந்து மொழிகளைக் கடந்து எங்கும் வியாபித்திருக்கிறது. ஆனாலும் கதையின் தரம், கதை சொல்லும் திறனின் அளவு இன்று மங்கிக் கொண்டுதான் வருகிறது. “கையிலெடுத்த புத்தகத்தை முழுதும் படித்து முடிக்காமல் என்னால் கீழே வைக்கமுடியவில்லை’’ என எத்தனைப் புத்தகங்களைப் பற்றி நம்மால் இப்போது சொல்ல முடிகிறது. தொலைக்காட்சியிலும், டி. வி. டி. யிலும் எத்தனைப் படங்களை நாம் கவனம் சிதறாமல் முழுமையாகப் பார்க்கிறோம். சினிமா தியேட் டரில்கூட பல நேரங்களில் படம் பிடிக்கவில்லை என்று இடைவேளையின்போது எழுந்து வந்து விடுகிறோம்.

“படம் நன்றாகத்தான் உள்ளது. நல்ல நடிப்பு, அற்புதமான படப்பிடிப்பு . . . ஆனால், கதைதான் கொஞ்சம் சுவாரஸ்யமாக இல்லை. . . ’’ என்று பேசுவது சாதாரணமாகிவிட்டது.

சலிப்பிலிருந்து மீள்வதற்காக நாம் மேற் கொள்ளும் பொழுதுபோக்கே நமக்கு சலிப்பைத் தருகிறது என்றால், அது எதைக் காட்டுகிறது? பொதுவாக கதை எனும் கலையின் தரம் குறைந்து போவதைத்தான் காட்டுகிறது. இதைத்தான் அரிஸ்டாட்டில் அப்போதே சொன்னார், “கதையின் வீழ்ச்சி சமூகத்தின் வீழ்ச்சி. ’’

இன்று சினிமாவில் கதையின் வீழ்ச்சியை மறைக்க படாத பாடு படுகிறார்கள். பெரும் பாலும் பிரம்மாண்டத்தையும், தொழில் நுட்பத் தையும் கொண்டு கதையின் வீழ்ச்சியை மறைக்கப் பார்க்கிறார்கள். பல கோடிகளை செலவு செய்து யாருமே இதுவரை படம் பிடிக்காத இடம் என்று பெருமையாய் சொல்லிக்கொண்டு அங்கு போய் ஒரு பாடல் காட்சியை எடுக்கிறார்கள். ஆழமான உண்மையைத் தேடுவதற்குப் பதிலாக, அலங்காரங் களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நடிகர், நடிகைகள் அற்புதமான கலைஞர்களாய் இருந்த காலம் போய், மண்டை வீங்கிப் போய், சமூகத் திலிருந்து அந்நியப்பட்டு, வினோத மனிதர்களாய் திரிகிறார்கள். மனதிற்கு இதமும் உற்சாகமும் தருகின்ற இசை மற்றும் ஒலிக்குப் பதிலாக, நம் நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும் அலறல் கள் இன்று இசையாகவும், ஒலியாகவும் வருகிறது. நம்மை, நம் பண்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில் உன்னதமான, உற்சாகமான கதைகளைக் கேட்டு எத்தனை காலம் ஆகிறது. ஒரு பண்பாட்டின் வளர்ச்சிக்கு, உன்னத மான, சக்திவாய்ந்த கதை சொல்லல் அத்தியாவசி யமாகிறது.

உலக சினிமாவிற்கு அற்புதமான திரைப் படங்களை தந்த ஐரோப்பிய சினிமாகூட இன்று, மக்களை நம்புவதற்குப் பதிலாக, உலக சந்தை மற்றும் விநியோகஸ்தர்களை நம்புகிறது. சினிமா வின் மேதைகள், விற்பன்னர்கள் என்றழைக்கப் பட்ட இயக்குநர்களின் தலைமுறையே முடிந்து போனது போல் உள்ளது. ரெனுவார், ஃபெல்லினி, பெர்க்மென், வாய்தா, க்ளுசோ, ஆண்டொணி யோனி, டி சிகா, ரெனே. . . போன்ற இயக்குநர் களின் அடுத்த தலைமுறை உருவாகுமா என்பதே சந்தேகத்திற்குரியதாய் உள்ளது. மேற்கூறிய இயக்குநர்களும் சந்தைக்காகத்தான் படம் எடுத்தார் கள். அவர்களின் படம் உலகம் முழுதும் திரையிடப் பட்டதால்தான் அவர்கள் உலக சினிமாவின் மேதை களாய் திகழ்ந்தனர். சினிமா அன்று, இன்று, எப்போதுமே சந்தைக்காகத்தான் எடுக்கப்படுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அப் போதைய தலைமுறை இயக்குநர்களுக்கு இருந்த கதை சொல்லும் திறன் இப்போதைய இயக்குநர் களுக்கு ஏன் இல்லாமல் போனது என்பதுதான் கேள்வி. இதற்கான பதிலை அடுத்த இதழில் தேட முயற்சிப்போம்.

(செம்மலர் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It