தனக்குத் தெரியாமலேயே ஏ.டி.எம். இயந்திரத்தின் வாயிலாக, தனது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது என கடந்த சில ஆண்டுகளாக வங்கி அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் புகார் கொடுத்தவர்கள் பலர். ஆனால் பெரும்பாலும் புகார்தாரர்களையும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களையுமே குற்றவாளிகளாகப் பார்க்கும் நிலைதான் நீடித்து வந்தது. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை போன்ற பிரதான நகரங்களில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த அறிவிப்புகள், இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அப்படி கொடுக்கப்படும் புகார்கள் கூடுதல் கவனம் செலுத்தி விசாரிக்கப்பட வேண்டியவைகள் என்று புரியவைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

ஏ.டி.எம் (Automated Teller Machine)

தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கருவிகளின் தொடர்சியாக, ஏ.டி.எம் (ATM) (Automated Teller Machine) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்னணுசார் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழில், “தானியங்கி காசளிப்பு இயந்திரம்” என அழைக்கப்படுகிறது. இந்த ஏ.டி.எம். இயந்திரத்தின் வாயிலாக ஒருவர் வங்கியில், தான் வைத்துள்ள கணக்கிலிருந்து பணம் எடுத்தல், பணம் மற்றும் காசோலைகளை வைப்பீடு செய்தல், ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு பண பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை ஏ.டி.எம். இயந்திரம் மூலமாக செயல்படுத்தலாம். மேலும் ஏ.டி.எம். முறையானது, வழக்கமான வங்கி பரிவர்த்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு வங்கிக்கு நேரில் செல்வது, தொடர்புடைய படிவங்களைத் தேடி எடுப்பது, அதை நிரப்புவதற்கு அருகிலுள்ளவர்களிடம் அல்லது வங்கி அலுவலர்களிடம் சந்தேகம் கேட்பது, அதன்பிறகு வரிசையில் நின்று பணம் எடுப்பது அல்லது பணம் வைப்பீடு செய்வது மற்றும் அது தொடர்புடைய இதர பணிகளை மேற்கொள்வது என்பதில்லாமல் வாடிக்கையாளர்களுக்கும், வங்கிக்கும் எவ்விதமான நேரடித் தொடர்பும் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. பெருமளவில் நேர விரயம் தவிர்க்கப்பட்டது. இதன்காரணமாக இன்று நாட்டில் வங்கிகணக்கு வைத்துள்ளவர்களில் 95 விழுக்காட்டினர் ஏ.டி.எம். அட்டைகளை வைத்துள்ளார்கள்.

ஏ.டி.எம். வாயிலாக மோசடி:

ஏ.டி.எம். இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக, பண பரிவர்த்தனைகள் இரகசியமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது என துவக்க காலங்களில் வங்கிகளால் பெருமிதமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த பெருமிதத்தில் சமீப காலங்களாக ஆங்காங்கே ஓட்டைகள் விழ ஆரம்பித்துள்ளன. தனக்கு தெரியாமலேயே தனது வங்கி கணக்கிலிருந்து ஏ.டி.எம். வாயிலாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாட்டில் பல்வேறு இடங்களிலுள்ள பொதுமக்களிடமிருந்து மத்திய ரிசர்வ் வங்கிக்கும், சைபர் குற்றப் பிரிவுக்கும்(Cyber Crime Branch) புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து, (அ). ஏ.டி.எம். தொடர்பாக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஊடுருவல் செய்வது, (ஆ). தபால் மூலமாக அனுப்பப்படும் ஏ.டி.எம். அட்டைகளை கையாளுதல், (இ). வங்கி ஊழியர்களாலேயே பணம் களவாடப்படுதல் போன்ற மூன்று வழிகளில் பொதுவாக மோசடிகள் நடைபெறுவதாக கண்டறியப்பட்டன. மேலும், அட்டை மோசடி, SKIMMING (LEBANESE LOOP FRAUD, SHOULDER SURFING, WEB SPOOFING AND PHISHING, POD SLURPING) மற்றும் அடையாள திருட்டு போன்ற வழிகளிலும் பரவலாக மோசடிகள் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்கி நடைமுறைகள் தொடர்பான சட்டங்கள்:

இந்திய தண்டனை சட்டம்1860,இந்திய ஒப்பந்த சட்டம்1872, இந்திய சாட்சிய சட்டம்1872, மாற்றுமுறை ஆவண சட்டம்1881, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்1986, மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 போன்றவை வங்கிகள் நடைமுறைகள் தொடர்பான சட்டங்களாகும். மேலும் இந்திய தண்டனை சட்டம்,1860ல் ஏற்கனவே உள்ள பிரிவுகளான 378 (திருட்டு), 425 (சொத்து அழித்தல்) போன்றவைகளைத் தவிர்த்து, கூடுதலாக 417-A(வஞ்சித்தல்), 419-A(ஆள் மாறாட்டம் செய்து வஞ்சித்தல்), 198-B (பொய்யான அத்தாட்சி)போன்ற பிரிவுகள் ஏ.டி.எம். மோசடி உள்ளிட்ட, தகவல் தொழில் நுட்ப மோசடி குற்றங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளதும், அதற்கான தண்டனைகள் முன்னிலும் அதிகமாக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்திய சாட்சிய சட்டம்1872லும் இது தொடர்பான சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ஆம்புட்ஸ்மன் திட்டம்,2006ன் கீழ் செயல்படும், மாற்று குறைதீர் திட்டத்தை ஏ.டி.எம். வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி தீர்வு காணலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தண்டனையும் இழப்பீடும்:

தகவல் தொழில்நுட்ப சட்டம்,2000ல் பிரிவு6 ஆனது, ‘தகவல் தொழில் நுட்ப சாதனங்களின் வாயிலாக செய்யப்படும் மோசடிக் குற்றங்கள் தொடர்பாகவும், அப்படியாக பயப்படும் குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்’ என்பது தொடர்பாகவும் விவரிக்கிறது. பிரிவு 43 ஆனது, ‘தனிப்பட்ட ஒருவரது விபரங்களை பாதுகாப்பதில் கவனக்குறைவாக செயல்பட்டதற்கு சம்பந்தப்பட்ட வங்கிக்கும் பொறுப்பு உள்ளது’ என்று கூறுகிறது. அப்பிரிவில், கடந்த2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் வாயிலாக பிரிவு 43-Aசேர்க்கப்பட்டு, ‘அப்படியாக கவனக் குறைவாக செயல்படும் வங்கியானது, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு செலுத்த வேண்டும்’ என்று கூறுகிறது.

ஏ.டி.எம். மோசடியும் திரைப்படங்களும்:

ஏ.டி.எம். இயந்திரங்களின் மூலமாக நடத்தப்படும் மோசடிகள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2009ஆம் ஆண்டில் ‘ராபின்ஹூட்’ என்ற மலையாள மொழி திரைப்படம் வெளிவந்தது. இதே திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘நான் நினைத்ததை முடிப்பவன்’ என்ற பெயரில் 2010ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் கணிப்பொறியைக் கையாள்வதில் வல்லவரான ஒரு இளைஞர், தனது திறமை தனது மேலதிகாரி ஒருவரால் மதிக்கப்படாமல் போனதோடு மட்டுமின்றி, அந்த மேலதிகாரியால் தன்மீது சுமத்தப்பட்ட வீண்பழியின் காரணமாக, தனக்கு நேர்ந்த அவமானங்களுக்காகவும், அந்த அதிகாரியைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். எனவே, அந்த மேலதிகாரிக்குச் சொந்தமான வங்கிக்கு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை உருவாக்கும் எண்ணம்கொள்கிறார்.

 தனது கணிப்பொறித் திறனைப் பயன்படுத்தி, புதியதொரு இயந்திரத்தை கண்டுபிடித்து, skimmingவழிமுறையில் செயற்கைக்கோள் உதவியுடன், அந்த குறிப்பிட்ட வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்கள் தொடர்பான அடிப்படை வடிவமைப்பிற்குள் ஊடுருவல் (Hack)செய்து, கோடிக்கணக்கான ரூபாய்கள் மோசடி செய்யப்படுவது குறித்து தெளிவாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். அட்டையை வைத்திருப்பவரால் மட்டுமே அதனை பயன்படுத்தி, பணம் தொடர்பான பரிமாற்றங்களில் ஈடுபடமுடியும் என அசைக்கமுடியாத அளவுக்கு நம்பிக்கை கொண்டுள்ள சாமானியர்களால் மட்டுமின்றி மெத்தப்படித்தவர்கள், வங்கி மேலதிகாரிகள், காவல்துறையினர் போன்றவர்களாலேயே நம்பமுடியாத அளவுக்கு தத்ரூபமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏ.டி.எம். மோசடி தொடர்பான வழக்கு:

      கடந்த2002 ஆம் ஆண்டு ஜுன் மாதம் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த தீபக் பிரேம் மன்வானி என்பவரை சென்னையில் காவல்துறையினர் கைது செய்தபோது மட்டும், அவரிடமிருந்து ஏழரை இலட்சம் ரூபாய் கைப்பற்றினார்கள். அவர் செய்த குற்றம் ஏ.டி.எம். இயந்திரம் வாயிலாக மற்றவர்களுடைய கணக்கிலிருந்து, மோசடியாக பணம் திருடியதுதான். அக்குற்றத்திற்காக அவர் மீது வழக்குபதிவு செய்தார்கள். இதுவே ஏ.டி.எம். மோசடி தொடர்பாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்காகும்.

வாடிக்கையாளரே விழித்திரு:

      இப்படியாக கணிப்பொறி யுகத்தில் கண்டுபிடிக்கப்படும் புதிய புதிய கருவிகள் மனிதர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் விதத்திலும் அமையும் அதே நேரத்தில், அதனை மோசடிசெய்வதற்கான நோக்கத்தில் கையாளுவோருடைய எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. சிறுக சிறுக சேர்த்த பணத்தை பாதுகாப்பான இடம் என்பதற்காக வங்கியில் சேமித்துவைத்து, அங்கிருந்து அதனை இழப்பதன் மூலமாகவும், அதனைத் தொடர்ந்து மன உளைச்சலை அனுபவிப்பது, உள்ளிட்ட மொத்த இழப்பையும் தாங்க வேண்டியதிருப்பதால் வாடிக்கையாளர்களே விழித்திருக்க வேண்டிய தேவை உள்ளது. பணம் திருடு போவதை முன்கூட்டியே தடுக்க முடியாது என்றாலும், ஏ.டி.எம். இயந்திரம் மூலமாக தனக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்படுகிறது என்பதை உணர ஆரம்பித்த உடனேயே, கணக்கு வைத்திருக்கும் வங்கியிலும், சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினரையும் அணுகி அந்த மோசடி தொடர்பாக புகார் செய்தல் அவசியமாகும். அந்த நடவடிக்கையானது மேற்கொண்டு தனது கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படுவதையும், தன்னைப் போல மற்ற வாடிக்கையாளர்களது பணம் மோசடி செய்யப்படுவதையும் தடுக்க உதவியாக அமையும்.

- இ.இ.இராபர்ட்சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It