பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம்களை புதிய கல்வி மரபிற்கு தயார் செய்வது, ஆங்கில மொழிக்கு எதிரான மனோபாவத்தை மாற்றுவது, கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவது முதலிய பணிகள் சவால் மிக்கதாக இருந்தன. அச்சூழலில் சித்திலெப்பை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டார்.

Siddilebbeமேலும், சமூக மாற்றமும், புதிய கல்வியின் அறிமுகமும் இன்றி முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுகளும், பழமைப்போக்குகளும் தடுத்த நிறுத்த முடியாது என்பதை தீவிரமாக வலியுறுத்தினார். அதனால் சித்திலெப்பை இலங்கை முஸ்லிம் மக்களின் ‘மறுமலர்ச்சித் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.

எம்.சி. சித்திலெப்பை 11.06.1838 அன்று கண்டியில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் எம்.எல். சித்திலெப்பை.

எம்.சி. சித்திலெப்பையின் தந்தை சட்டக் கல்வியில் பயிற்சி பெற்று, 1833ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசினால் வழங்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

எம்.சி. சித்திலெப்பை திண்ணைப் பள்ளியிலும் குர்ஆன் மத்ரஸாவிலும் தமது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் ஆர்வத்துடன் கற்றார். தமது மூத்த சகோதரர் முகம்மது லெப்பை ஆலிமிடம் தமிழ், அறபு, சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

எம்.சி. சித்திலெப்பை 1871 ஆம் ஆண்டு செய்யிதா உம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

கசாவத்தை ஆலிம் புலவரிடம் இஸ்லாமிய மார்க்க ஞானங்களையும், அறபு மொழியையும் கற்று தேர்ச்சி பெற்றார்.

பொது கல்வி, உலக அறிவு, உலகின் சமகால சிந்தனை, சமகால நிகழ்வுகள், இலக்கியம், சட்டம் ஆகிய பல துறைகளில் ஆர்வம் கொண்டு கற்றறிந்தார். சட்டத்துறையில் தந்தைக்கிருந்த பயிற்சியும் நிபுணத்துவமும் மகன் சித்திலெப்பைக்கும் இருந்தது. 1862 ஆம் ஆண்டு மாவட்ட நீதி மன்றத்திலும், 1864 ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்திலும் எம்.சி. சித்திலெப்பை வழக்கறிஞராக கடமையாற்றினார். மேலும் 1874 முதல் 1878 வரை கண்டி மாநகர சபையின் நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றினார். கண்டி மாநகரசபையின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் செயற்பட்டார்.

“இலங்கையில் வாழும் முஸ்லிம் மதத்தவர்கள் கல்வித்துறையில் பின்தங்கியவர்களாகவும், பொருளாதாரத்துறையில் தேக்கமடைந்தவர்களாகவும், சமயத்துறையில் மாறாத மரபாளர்களாகவும், ஆய்வறிவாற்றலில் ஆர்வங்குன்றியவர்களாகவும், அரசியல் துறையில் கணக்கில் எடுக்கப்படாதவர்களாகவும் இருப்பதைக் கண்டு சித்திலெப்பை மனம் வெதும்பினார்” என அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் குறிப்பிட்டுள்ளார்.

சித்திலெப்பை ‘நவீன நோக்கிலான சமூக மேம்பாடு’ என்ற இலட்சியத்துடன் தமது பொதுப் பணிகளை தொடங்கினார். முஸ்லிம் மக்கள் மேம்பாட்டுக்குப் பாடுபட தமது வழக்கறிஞர் தொழிலையும், மாநகர சபை உறுப்பினர் பதவியையும் உதறித் தள்ளினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் பொருளாதார மாற்றங்களும், கல்வித்துறை வளர்ச்சிகளும், அரசு வேலை வாய்ப்புகளும், கல்வி சார்ந்த தொழில்துறைகளும் உருவாகி வளர்ச்சி பெறும் நிலை ஏற்பட்டது. அதை அறிந்து கொண்டு சித்திலெப்பை மேல்நாட்டுக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

எகிப்தில் சமூக அரசியல் மாற்றத்திற்காகப் பாடுபட்ட, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற அஹ்மத் ஒறாபி பாஷா போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். சுமார் இருபது ஆண்டுகள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்;. அவருடன் சித்திலெப்பை தொடர்பு கொண்டு ஆங்கில மொழிக்கல்வி, நவீன கல்வி, சமூக மாற்றம் போன்றவற்றில் முஸ்லிம்கள் பிற்போக்கானவர்களாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி முஸ்லிம் மக்களை விழிப்படையச் செய்திடபாடுபட்டார். மேலும், இலங்கை முஸ்லிம்களின் தொடக்கக்கால கல்வி வளர்ச்சியில் அஹமத் ஒறாபி பாஷாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கொழும்பு புதிய சோனகத் தெருவில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் 1884 ஆம் ஆண்டு ‘மத்ரஸ்த்துல் கைரியத்துல் இஸ்லாமியா’ பாட சாலையை சித்திலெப்பையும், அஹமத் ஒறாபி பாஷாவும், ஏ.எம். வாப்ச்சி மரைக்காயரும் முக்கிய பங்கு வகித்தனர். ஆங்கிலேயரால் இது ‘ஆங்கிலோ முஹமதியன் பாடசாலை’ என்று அழைக்கப்பட்டது.

பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்த போதும் சித்திலெப்பை தமது நவீன கல்விக்கான முயற்சியிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. சித்திலெப்பை 1891 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் கருத்து பேதங்களையும் போட்டி பொறாமைகளையும் கைவிட்டு ஒற்றுமையை கடைபிடிக்குமாறும், சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்குப் பாடுபட முன்வர வேண்டும் எனவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பில் 1891-ஆம் ஆண்டு ‘முஸ்லிம் கல்விச் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1892-ஆம் ஆண்டு கொழும்பு மருதானைப் பள்ளிவாசல் வளாகத்தினுள் ‘அல்-மத்ரஸத்துஸ் ஸஹிரா’ என்ற பாடசாலை தோற்றம் இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியில் மைல்கல்லாக அமைந்தது.

அறபு, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இலங்கை முஸ்லிம்கள் போதிய அறிவைப் பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். “நாம் பேசும் மொழி தமிழ், அதை அறியாதவன் குருடன் போல் ஆவான்” என்று கூறினார். மேலும், இலங்கை முஸ்லிம்கள் தமிழ் அறிவைப் பெற்றிருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

சித்திலெப்பையின் தீவிர முயற்சியால் ஆண்களுக்கான பல பாடசாலைகள் திறக்கப்பட்டன. 1891 ஆம் ஆண்டு குருணாகலையில் மொஹமடன் பெண்கள் பாடசாலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. 1892 ஆம் ஆண்டு ஸாஹிறாக் கல்லூரி கொழும்பில் தோற்றுவிக்கப்பட்டது.

‘முஸ்லிம் நேசன்’ என்னும் வார இதழ் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி சித்திலெப்பையின் முயற்சியால் வெளிவந்தது.

‘முஸலிம் நேசன்’ முஸ்லிம் மக்களின் விருப்பங்களையும், குமுறல்களையும் அரசாங்கத்திற்கு எட்டச் செய்யும் போராட்டக் கருவியாக விளங்கியது. “எழுத்தின் வேகத்தை மக்களோடிணைந்து மக்களை முன்னிறுத்தித் தனது எழுதுகோலை வன்மையுடன் பங்கு கொள்ளச் செய்த முஸ்லிம் எழுத்துக்களின் முன்னோடித் தலைவர் சித்திலெப்பை” என்று ஏ.இக்பால் பாராட்டியுள்ளார்.

‘முஸ்லிம் நேசன்’ இதழ் பொது மக்களுக்கு செய்திகளை தெரிவிக்கும் விதம், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கும் அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. ஆசிரியர் தலையங்கம் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. மேலும் முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், சமூகச் சீர்திருத்தங்களுக்கும் தூண்டுதல் தரும் ஆயுதமாக விளங்கியது. அரசியல், கலாசாரம், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம் முதலியவைகள் குறித்தும் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. உலகச் செய்திகள், இந்தியா குறித்த செய்திகள், வியாபாரம், கல்வி, சமயம், அரசியல், சமூகம், வழக்கு முதலியனவற்றோடு உலகச் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் விரிவாக வெளியிடப்பட்டது,

இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றை எழுத்தில் பதிவு செய்யும் பணிகளை ஊக்கப்படுத்துவதிலும் ‘முஸ்லிம் நேசன்’ இதழ் முக்கியப் பங்கு வகித்தது.

இலங்கையில் தேசிய அளவிலான சட்ட நிரூபண சபையில் முஸ்லிம்கள் இடம் பெற வேண்டும் என்பதற்காக சித்திலெப்பை குரல் கொடுத்தார்.

தமிழிலக்கிய வரலாற்றில் அக்காலத்தில் எவரும் துணிந்து கைவைக்காத முயற்சியில் சித்திலெப்பை ‘அஸன் பேயின் கதை’ எனும் நாவலை எழுதி வெளியிட்டு உள்ளார்.

“தொடக்ககாலத் தமிழ்நாவல் மரபைச் சேர்ந்த ‘அசன்பே சரித்திரம்’ ஒரு வரலாற்றுக் கற்பனை நாவல். சாகசங்களும் மர்மங்களும் தீடீர் திருப்பங்களும் கிளைக்கதைகளும் கொண்டு விரியும் ஒரு புனைவு. வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்துடன் ஒப்பிடக் கூடியது” என இலங்கைத் தமிழிலக்கிய விமர்சகர் எம்.ஏ.நுஃமான் குறிப்பிட்டு உள்ளார்.

“கதாநாயகன் மத்திய கிழக்கு, இந்தியா, ஜரோப்பா ஆகிய நாடுகளுக்கெல்லாம் செல்கிறான். தமிழ்க் கதைக்குப் புதிதான பாத்திரங்களும் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றன. அதே சமயத்தில் சித்திலெப்பை ஒழுக்கம் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.” என சித்திலெப்பையின் ‘அசன்பேயுடைய கதை’ என்னும் நாவில் குறித்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க.கைலாசபதி மதிப்பீடு செய்துள்ளார்.

சரித்திரப் பின்னணியும், திகைப்பூட்டக் கூடிய சாகசங்களும் கொண்டதாக இந்நாவல் இருந்த போதும் சித்திலெப்பையின் அஸன்பே கதையில் முஸ்லிம் சமூக சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்ட ஒரு சமூக நாவல் என்ற மகுடத்திற்கு ஏற்றதாக சில சம்பவ அமைப்புக்களும், கருத்துக்களும் அமைந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.

சித்திலெப்பை 1892 ஆம் ஆண்டு ‘ஞானதீபம்’ என்னும் மெய்ஞ்ஞானம் குறித்த மாத இதழை வெளியிட்டார். இந்த இதழ் பன்னிரெண்டு மாதங்கள் வெளிவந்தன.

தமிழ் முதற் புத்தகம் என்றும் பாட நூலையும், அறபு மொழி இலக்கணம் சுருக்க நூல், கிதாப் அல் ஹிஸாப், அபூநவாசின் கதை, இலங்கைச் சோனகர் சரித்திரம், துருக்கி கிரேக்கர் யுத்த சரித்திரம், ஹிதாயத்துல் காஸிமிய்யா, அஸ்றாநுல் ஆலம். அவ்லா துர்றசூலும் உலமாக்களும் முதலிய நூல்களை எழுதி அளித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் அறிவிற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட சித்திலெப்பை 05.02.1898 அன்று தமது 60ஆவது வயதில் காலமானார். 

- பி.தயாளன்

Pin It